`தி.மு.க வேட்பாளர் தேர்வில் அ.தி.மு.க தலையீடு!' - 4 தொகுதி நிலவரத்தால் கொதிக்கும் உடன்பிறப்புகள் | dmk cadres shocked for choosing candidates in assembly seats

வெளியிடப்பட்ட நேரம்: 15:11 (12/04/2019)

கடைசி தொடர்பு:15:22 (12/04/2019)

`தி.மு.க வேட்பாளர் தேர்வில் அ.தி.மு.க தலையீடு!' - 4 தொகுதி நிலவரத்தால் கொதிக்கும் உடன்பிறப்புகள்

4 தொகுதிகளின் வேட்பாளர் தேர்வை நியாயமாக நடத்தாமல் சில மாவட்டச் செயலாளர்கள் உள்ளடி வேலைகளில் ஈடுபட்டுள்ளனர். அவர்களின் பரிந்துரைகளைக் கவனத்தில் எடுத்துக் கொள்ளாமல் இருந்தாலே போதும்.

`தி.மு.க வேட்பாளர் தேர்வில் அ.தி.மு.க தலையீடு!' - 4 தொகுதி நிலவரத்தால் கொதிக்கும் உடன்பிறப்புகள்

மிழகத்தின் ஆட்சி மாற்றத்தைத் தீர்மானிக்கக்கூடிய விஷயமாக 22 சட்டமன்றத் தொகுதிகளின் தேர்தல் பார்க்கப்படுகிறது. "தி.மு.க வேட்பாளர்களைத் தேர்வு செய்வதிலும் ஏகப்பட்ட உள்ளடிகள் நடந்துகொண்டிருக்கின்றன. சிலரது தூண்டுதலுக்குத் தலைமை செவிசாய்த்துவிடக் கூடாது" என அச்சப்படுகின்றனர் அறிவாலய நிர்வாகிகள். 

இந்திய அரசியல் வரலாற்றில் பல்வேறு விநோதங்களை எதிர்கொள்ளும் மாநிலமாக இருக்கிறது தமிழகம். நாடாளுமன்றத் தேர்தலோடு 18 சட்டமன்றத் தொகுதிகளுக்கான தேர்தல் நடக்க இருக்கிறது. சட்டப் பேரவையில் 21 தொகுதிகள் காலியாக இருந்த நிலையில், 18 தொகுதிகளுக்கு மட்டுமே தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டது. திருப்பரங்குன்றம், அரவக்குறிச்சி, ஒட்டப்பிடாரம் ஆகிய தொகுதிகளில் தேர்தல் வழக்கு இருப்பதை சுட்டிக்காட்டியது தேர்தல் ஆணையம். இந்த நிலையில், சூலூர் எம்.எல்.ஏ கனகராஜ் மறைவால் அந்தத் தொகுதியும் காலியானதாக அறிவிக்கப்பட்டது. தேர்தல் வழக்குகளை வாபஸ் பெற்றுவிட்டதால், காலியாக உள்ள 4 தொகுதிகளுக்கும் தேர்தல் தேதியை அறிவித்துள்ளது ஆணையம். இந்தத் தொகுதிகளுக்கு ஏப்ரல் 22 அன்று வேட்புமனுத் தாக்கலும் மே 19 அன்று வாக்குப்பதிவும் நடக்க இருக்கிறது. மே 23 அன்று 22 தொகுதிகளுக்கான முடிவுகள் அறிவிக்கப்பட இருக்கின்றன. 

ஸ்டாலின் பிரசாரம்

தேர்தல் பிரசாரத்தின் இடையில் புதிதாகத் தேதி அறிவிக்கப்பட்ட 4 தொகுதிகளுக்கும் வலுவான வேட்பாளர்களைக் கண்டறிய வேண்டிய பணியில் தி.மு.க, அ.தி.மு.க, அ.ம.மு.க உள்ளிட்ட கட்சிகள் உள்ளன. தி.மு.க தரப்பில் இன்னும் 2 நாள்களில் வேட்பாளர்கள் பட்டியல் வெளியாக உள்ள நிலையில், ``வேட்பாளர் தேர்வை நியாயமாக நடத்தாமல் சில மாவட்டச் செயலாளர்கள் உள்ளடி வேலைகளில் ஈடுபட்டுள்ளனர். அவர்களின் பரிந்துரைகளைக் கவனத்தில் எடுத்துக்கொள்ளாமல் இருந்தாலே போதும்" என்கின்றனர் அறிவாலய நிர்வாகிகள் சிலர். தொடர்ந்து நம்மிடம் பேசியவர்கள், ``தி.மு.க வேட்பாளர்கள் தேர்வில்கூட அ.தி.மு.க-வின் மறைமுகத் தலையீடு இருப்பதாகச் சந்தேகிக்கிறோம். ஒட்டப்பிடாரம் தொகுதியின் மேற்கு ஒன்றிய செயலாளராக இருக்கிறார் சண்முகையா பாண்டியன். இவர் புதிய தமிழகம் கட்சியிலிருந்து தி.மு.க-வுக்கு வந்தவர். 

ஸ்டாலின்

`இவருக்கு சீட் கொடுக்க வேண்டும்' எனத் தவம் கிடக்கிறார் அ.தி.மு.க-விலிருந்து தி.மு.க-வுக்கு வந்த அனிதா ராதாகிருஷ்ணன். இதற்காக எ.வ.வேலு மூலமாக அவர் முயற்சி செய்துகொண்டிருக்கிறார். இதே தொகுதியின் கிழக்கு ஒ.செ-வாக இருக்கும் காசி விஸ்வநாதன் தொகுதியில் நீண்டகாலமாகக் கட்சிப் பணி செய்து வருகிறார். `இவருக்கு சீட் கிடைத்துவிடக் கூடாது' என்பதில் அனிதா உறுதியாக இருக்கிறார். இதே தொகுதியில் அ.தி.மு.க வேட்பாளராக முருகேசு பாண்டியன் களமிறக்கப்பட வாய்ப்பிருக்கிறது. இவரும் சண்முகையாவும் அண்ணன், தம்பிகள். இவர்கள் இருவரும் பேசி வைத்துக்கொண்டு செயல்பட்டால், தி.மு.க-வின் வெற்றி பாதிக்கப்படும். இதைப் பற்றியெல்லாம் அனிதா ராதாகிருஷ்ணன் கவலைப்பட்டதாகத் தெரியவில்லை" என விவரித்தவர்கள், 

அனிதா ராதாகிருஷ்ணன்

``அரவக்குறிச்சி தொகுதியின் வேட்பாளராகச் செந்தில் பாலாஜி அறிவிக்கப்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம். திருப்பரங்குன்றத்தில் டாக்டர் சரவணன் களமிறங்கவிருக்கிறார். இந்தத் தொகுதிகளில் தி.மு.க-வுக்கான வெற்றி வாய்ப்புகள் அதிகம். அதேநேரம், சூலூர் தொகுதியில் எப்படியாவது சீட் வாங்கிவிட வேண்டும் எனத் தீவிரமாக முயற்சி செய்து வருகிறார் பொங்கலூர் பழனிச்சாமி. இதன்மூலம், `கட்சிக்குள் ரீ என்ட்ரி கொடுக்க முடியும்' என அவர் நம்புகிறார். இவர் ஏற்கெனவே வெற்றி பெற்ற பொங்கலூர் தொகுதிக்குள் சுல்தான்பேட்டை ஒன்றியம் வருகிறது. 

பொங்கலூர் பழனிசாமி

இந்தத் தொகுதியில் பழனிச்சாமிக்கு எதிராக அவரது உறவினர்களே வேலை பார்ப்பார்கள். அந்தளவுக்கு அவர்களின் சொத்துகளை மிரட்டி வாங்கியிருக்கிறார். நில ஆக்கிரமிப்பு சர்ச்சையும் உள்ளது. இதே பகுதியில் இரண்டு ஒன்றிய செயலாளர்கள் இருக்கிறார்கள். அதில் ஒருவர் மகாலிங்கம். மற்றொருவர் சி.என்.ராஜன். இவர்களில் ராஜன் தகுதிவாய்ந்த வேட்பாளராகப் பார்க்கப்படுகிறார். பொங்கலூர் பழனிச்சாமிக்கு உள்ள எதிர்ப்புகளையும் மற்ற ஒன்றிய செயலாளர்களுக்கு உள்ள நற்பெயரையும் கணக்கில் கொண்டு தலைமை முடிவு செய்ய வேண்டும். இல்லாவிட்டால், சூலூர் தொகுதியை இழக்க வேண்டிய சூழல் ஏற்படும்" என்கின்றனர் வேதனையோடு.