Published:Updated:

`நீட் தேர்வால் இன்னொரு அனிதா இறப்பதை காங்கிரஸ் விரும்பவில்லை!' - ராகுல் காந்தி பேச்சு

`நீட் தேர்வால் இன்னொரு அனிதா இறப்பதை காங்கிரஸ் விரும்பவில்லை!' - ராகுல் காந்தி பேச்சு
`நீட் தேர்வால் இன்னொரு அனிதா இறப்பதை காங்கிரஸ் விரும்பவில்லை!' - ராகுல் காந்தி பேச்சு

`தமிழ்நாட்டில், நீட் தேர்வின் காரணமாக அனிதா தற்கொலை செய்துகொண்டு இறந்தது, தமிழக மக்களின்  உணர்வை வெளிப்படுத்தியது. அதனால் நீட் தேவையா... தேவையில்லையா என்பதை மாநில அரசு முடிவுசெய்ய வேண்டும். நீட் தேர்வால் அனிதாவைப் போல வேறு ஒரு மாணவி இறப்பதை காங்கிரஸ் விரும்பவில்லை'' என்று சேலம் பிரசாரத்தில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி பேசினார்.

17-வது மக்களவைத் தேர்தலில் மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணி சார்பாகப் போட்டியிடும் சேலம், கள்ளக்குறிச்சி, நாமக்கல், ஈரோடு, கரூர் வேட்பாளர்களை ஆதரித்து வாக்கு சேகரிப்பதற்காக, அகில இந்திய காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியும், தி.மு.க தலைவர் ஸ்டாலிலும் சேலத்தில் ஒரே மேடையில் பிரசாரம் மேற்கொண்டார்கள்.

இக்கூட்டத்தில் பேசிய ராகுல் காந்தி, ``இந்த 2019 மக்களவைத் தேர்தலில்  2 கொள்கைகளுக்கு இடையேயான தேர்தலாக நடைபெறுகிறது. ஒன்று, பி.ஜே.பி தலைமையிலான ஒரே நாடு, ஒரே மொழி, ஒரே வரலாறு, ஒரே பண்பாடு முன்னிறுத்தும்  பி.ஜே.பி ஆளவேண்டும். இன்னொரு பக்கம் காங்கிரஸ், தி.மு.க தலைமையில் பல்வேறு மொழி, பல்வேறு கலாசாரம், பல்வேறு பண்பாடு என அனைத்து சிந்தனைகளையும் ஒருங்கிணைத்துச் செயல்பட நினைக்கிறோம்.

தமிழ்நாட்டை நாக்பூர் ஆளவேண்டும் என்றும், தமிழ்நாட்டின் தலையெழுத்தை பிரதமர் அலுவலகம் தீர்மானிக்க வேண்டும் என்றும் நினைக்கிறார்கள். நாங்கள், தமிழ்நாட்டை தமிழர் ஆளவேண்டுமென நினைக்கிறோம். தலைவர் கலைஞர் தமிழக மக்களின் குரலாக ஒலித்தவர். கலைஞருக்கு நினைவிடம் அமைப்பதில் அவமானப்படுத்தியதாக ஸ்டாலின் கூறினார். இது, உங்கள் தந்தைக்கு இழைக்கப்பட்ட அவமானம் அல்ல. ஒட்டுமொத்த தமிழகத்திற்கும் ஏற்பட்ட அவமானம். தமிழ் மக்களை மதிக்கத் தெரிந்தவர்கள் ஆட்சிக்கு வர வேண்டுமென நாங்கள் நினைக்கிறோம்.

அவர்களுடைய தேர்தல் அறிக்கை, இருண்ட கண்ணாடி அறையில் தயாரிக்கப்பட்டது. காங்கிரஸின் தேர்தல் அறிக்கை, மக்களின் உணர்வுகளைப் பிரதிபலிப்பதுபோல இருக்கிறது. இதில் ஒரு உதாரணத்தைச் சொல்ல விரும்புகிறேன். தமிழ்நாட்டில் நீட் தேர்வின் காரணமாக அனிதா தற்கொலை செய்துகொண்டு இறந்தது, தமிழக மக்களின்  உணர்வை வெளிப்படுத்தியது. அதனால் நீட் தேவையா... தேவையில்லையா என்பதை மாநில அரசு முடிவுசெய்ய வேண்டும். நீர் தேர்வால் அனிதாவைப்போல வேறு ஒரு மாணவி இறப்பதை காங்கிரஸ் விரும்பவில்லை.

நாங்கள் கருத்துப் பரிமாற்றத்தால் தீர்வு காண முடியும் என நம்புகிறோம். மோடிக்கு கருத்துப் பரிமாற்றத்தில் நம்பிக்கையில்லை. ஒரே இரவில் திடீரென 500, 1000 ரூபாய் செல்லாது என்று அறிவித்தார். இந்த பணமதிப்பு இழப்பு பற்றி யாரிடமும் கருத்து கேட்கவில்லை. 12 வயது குழந்தையிடம் கேட்டிருந்தால்கூட பணமதிப்பிழப்பு வேண்டாம் என்று கூறி இருக்கும்.

ஜிஎஸ்டி நடவடிக்கை மூலம் திருப்பூர் ஜவுளி உற்பத்தியையும் காஞ்சிபுரம் பட்டு உற்பத்தியையும் அழித்துவிட்டார். தமிழ் நாட்டு விவசாயிகள், டெல்லியில் ஆடையின்றிப் போராடினார்கள். மோடி, அவர்களை அழைத்துப் பேசவில்லை.  அனில் அம்பானி, நிரவ் மோடி, விஜய் மல்லையா உட்கார்ந்து பேசி இருப்பதை வீடியோவில் பார்த்திருப்பீர்கள். ஆனால், ஏழைகளோடு உட்கார்ந்து பேசியதைப் பார்த்திருக்க மாட்டீர்கள்.

காங்கிரஸ், ஒரேவரி, குறைந்த வரி, எளிய வரி எனப் பல திட்டங்களை வகுத்திருக்கிறோம். காங்கிரஸ், ஒரு புரட்சிகரமான முடிவை எடுத்து வறுமையை ஒழிப்போம். காங்கிரஸ் ஆட்சிக்கு வந்ததும் 20% ஏழை மக்களை அடையாளம் கண்டு, அவர்களுக்கு வருடம் 72,000 கொடுப்போம். பெண்களே இந்தியாவின் பலம். அவர்களுக்கு மத்திய அரசுப் பணிகளில் 33% இடஒதுக்கீடு வழங்கப்படும்.

மோடியின் மேக் இன் இந்தியா என்பது வெற்று அறிக்கையாக இருக்கிறது. உண்மையில், நாங்கள் மேக் இன் இந்தியா, மேக் இன் தமிழ்நாடு உருவாக்குவோம். சுயதொழில் செய்வோருக்கு கடன் உதவி வழங்கப்படும். மத்திய அரசு நிர்வாகத்தில் உள்ள 22 லட்சம் காலிப் பணியிடங்கள் நிரப்பப்படும். தமிழ்நாட்டின் பண்பாடு, வரலாற்றைப் பாதுகாக்கவே இந்தக் கூட்டணி அமைந்திருக்கிறது. இந்தியாவை கிராமங்களும் நகரங்களும், மாநகரங்களுமே ஆள வேண்டும். பிரதமர் அலுவலகம் ஆளக் கூடாது என நினைக்கிறோம். அதனால், நாம் அனைவரும் சேர்ந்து மோடியைத் தோற்கடிப்போம்'' என்றார்.

பின் செல்ல