முதலில் நல்ல எம்.பி-யை தேர்ந்தெடுங்கள். அப்புறம் நல்ல முதல்வரைத் தேர்ந்தெடுக்கலாம் என மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் தெரிவித்தார்.
விருதுநகர் மக்களவைத் தொகுதியில் போட்டியிடும் மக்கள் நீதி மய்ய வேட்பாளர் முனியசாமியை ஆதரித்து அதன் தலைவர் கமல்ஹாசன் பிரசாரம் செய்தார். அப்போது பேசிய அவர், ``மக்களின் அன்பு தான் எங்களுக்குக் கிடைக்கும் விருது. இந்த தேர்தலில் எங்களுக்கு வாய்ப்பு தாருங்கள் நாங்கள் கண்டிப்பாக மாற்றத்தை உருவாக்குவோம். அப்படி உருவாக்கத் தவறினால் பதவியை ராஜினாமா செய்வோம். கல்வியில் சிறந்த மாவட்டமான விருதுநகருக்கு தி.மு.க, அ.தி.மு.க கட்சிகள் இதுவரை மருத்துவக் கல்லூரி கொண்டு வரவில்லை. வெளிநாட்டில் பணம் எப்படிப் பதுக்குவது என்றே சிந்திக்கிறார்கள். தமிழகத்தைப் போன்று எந்த மாநிலமும் முறையாக வரி செலுத்துவதில்லை. தமிழகத்தை நம்பி தான் டெல்லி உள்ளது.
தமிழக மக்கள் செலுத்தும் வரியைத் தமிழக விவசாயிகளுக்குச் செலவு செய்யாமல் ஓட்டு வாங்குவதற்காகப் பிற மாநில விவசாயிகளுக்கு வழங்கி ஓட்டு வாங்க நினைக்கும் முயற்சி நடக்காது. தி.மு.க அ.தி.மு.க இரண்டு கழகமும் அந்த கழகத்தை சார்ந்தவர்களும் அகற்றப்பட வேண்டியவர்கள். பிற கட்சிகள் பணம் கொடுத்து ஆள் சேர்க்கின்றன. ஆனால் நமக்கு வந்த கூட்டம் தானா சேர்ந்த கூட்டம். ஒட்டுக்குப் பணம் பெற்று ஏமாந்தது போதும் என மக்கள் முடிவெடுத்தால் நமக்கே வெற்றி.
பிரதமர் யார் என்பதை நிர்ணயிக்க வேண்டாம். உங்கள் தொகுதிக்கு யார் குரல் கொடுப்பார்கள் என்பதைச் சிந்தித்து வாக்களியுங்கள். தமிழ்நாடு முக்கியமா டெல்லி முக்கியமா எனப் பார்த்தால் தமிழ்நாடு தான் முக்கியம். காமராஜர் போன்று விருதுநகர் மக்கள் கிங் மேக்காரக வர வேண்டும். நான் சீக்கிரம் அரசியலுக்கு வராமல் ஒரு தலைமுறையை வீணடித்து விட்டேன். தற்போது அதற்காக நான் மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன். இந்த ஆட்சி நீங்கும் காலம் நெருங்கிவிட்டது. தற்போது நல்ல எம்.பியை தேர்ந்தெடுங்கள். அதன் பின்னர் நல்ல முதல்வரைத் தேர்ந்தெடுங்கள். யார் ஆட்சிக்கு வர வேண்டும் என்பதை மக்கள் தான் முடிவு செய்ய வேண்டும்" என்றார்.