Published:Updated:

`ஸ்பீச் தெரபி; ஒத்திகை' - பிரசாரத்துக்கு விஜயகாந்த்தைத் தயார்படுத்தியது யார்? 

`ஸ்பீச் தெரபி; ஒத்திகை' - பிரசாரத்துக்கு விஜயகாந்த்தைத் தயார்படுத்தியது யார்? 
`ஸ்பீச் தெரபி; ஒத்திகை' - பிரசாரத்துக்கு விஜயகாந்த்தைத் தயார்படுத்தியது யார்? 

நீண்ட இடைவெளிக்குப் பிறகு, தே.மு.தி.க பொதுச் செயலாளர் விஜயகாந்த் சென்னையில் வேனில் அமர்ந்தபடியே மூன்று வேட்பாளர்களுக்கு நேற்று வாக்குகளைச் சேகரித்தார். அப்போது அவரின் பேச்சில் முன்னேற்றம் தெரிந்தாலும் அவர் என்ன பேசுகிறார் என்பதைப் புரிந்துகொள்ள கட்சியினரும் பொதுமக்களும் சிரமப்பட்டனர். 

இந்தியா முழுவதும் நாடாளுமன்றத் தேர்தல் களைகட்டியுள்ளது. முதற்கட்ட வாக்குப்பதிவு முடிந்த நிலையில் அடுத்தகட்ட வாக்குப்பதிவுக்கு தேர்தல் ஆணையம் தயாராகிவருகிறது. தமிழகம், புதுச்சேரியில் 40 தொகுதிகளிலும் 18 சட்டமன்றத்துக்கும் ஏப்ரல் 18-ம் தேதி தேர்தல் நடக்கிறது. இதனால் இன்றோடு தேர்தல் பிரசாரம் முடிவடைகிறது. இறுதிக்கட்ட பிரசாரத்தில் அரசியல் கட்சித் தலைவர்கள் ஈடுபட்டுள்ளனர். கருணாநிதி, ஜெயலலிதா இல்லாத இந்தத் தேர்தலில் அரசியல் வெற்றிடம் ஏற்பட்டுள்ளது. அ.தி.மு.க-வில் முதல்வரும் துணை முதல்வரும் தி.மு.க-வில் மு.க.ஸ்டாலினும் பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளனர். முதல் முறையாக மக்கள் நீதி மய்யம் இந்தத் தேர்தலைச் சந்திக்கிறது. இதனால் நடிகர் கமல்ஹாசனும் தமிழகம் முழுவதும் பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளார். 
 
அ.தி.மு.க கூட்டணியில் அங்கம் வகிக்கும் தே.மு.தி.க சார்பில் கூட்டணிக்கட்சி வேட்பாளர்களை ஆதரித்து பிரேமலதா, அவரின் மகன் விஜயபிரபாகரன் ஆகியோர் பிரசாரத்தில் ஈடுபட்டுவருகின்றனர். எப்போது கேப்டன் பிரசாரத்துக்கு வருவார் என்ற கேள்வியை பிரேமலதாவிடம் கட்சியினர் கேட்டனர். அதற்குக் கேப்டன், பிரசாரத்துக்குத் தயாராகிக்கொண்டிருக்கிறார். இந்தத் தேர்தலில் நிச்சயம் அவர் பிரசாரம் செய்வார் என்று பிரேமலதா கூறியிருந்தார். அவர் கூறியபடி வடசென்னையில் நேற்று விஜயகாந்த் பிரசாரத்தில் ஈடுபட்டார். நீண்ட இடைவெளிக்குப் பிறகு, பிரசாரத்துக்குப் புறப்பட்ட விஜயகாந்த்தை அவரின் மனைவியும் கட்சியின் பொருளாளருமான பிரேமலதா புன்னகையுடன் வழியனுப்பி வைத்தார். உதவியாளரின் கைத்தாங்கலோடு வீட்டிலிருந்து கிளம்பிய விஜயகாந்த், பிரசார வேனில் கம்பீரமாக ஏறி அமர்ந்தார். அவரின் உடையிலும் கெட்டப்பிலும் சில மாற்றங்கள் தெரிந்தன. கட்சியின் கரை வேட்டிக்குப் பதில் ஜீன்ஸ் பேன்ட், கண்ணீரிலிருந்து வழியும் நீருக்காக அணியும் கறுப்பு கூலிங் கிஸாஸ் இந்த முறை மிஸ்ஸிங். 

மத்திய சென்னையின் பா.ம.க வேட்பாளர் சாம்பால், வடசென்னை தே.மு.தி.க வேட்பாளர் மோகன்ராஜ், தென்சென்னை அ.தி.மு.க வேட்பாளர் ஜெயவர்தன் ஆகியோரை ஆதரித்து வேனில் அமர்ந்தபடி விஜயகாந்த் பிரசாரம் செய்தார். பிரசார வேனில் அமர்ந்தபடி வந்த விஜயகாந்த்துக்கு வழிநெடுக வரவேற்பு அளிக்கப்பட்டது. தொண்டர்களைப் பார்த்து அவர், கையசைத்தார். அதனால் தொண்டர்களும் கட்சியினரும் உற்சாகமடைந்தனர். 

வில்லிவாக்கம் பஸ் நிலையத்தில் பிரசாரத்தை விஜயகாந்த் தொடங்கினார். மாலை 4 மணிக்கு வருவதாக அவர் அறிவிக்கப்பட்டது. ஆனா,ல் மாலை 6 மணிக்கு மேல்தான் அவர் அங்கு வந்தார். பா.ம.க வேட்பாளர் சாம்பாலை வெற்றி பெற வைக்க வேண்டும் என ராமதாஸ் என்னிடம் கூறினார். அதற்காக ஓட்டுக்கேட்டு வந்துள்ளேன் என்று சில நொடிகளில் அவர் பிரசாரத்தை முடித்துக்கொண்டார். அவரின் பேச்சு பலருக்கு புரியவில்லை. இதனால் அவர் என்ன பேசினார் என்பதை அருகில் உள்ளவர்களிடம் கேட்டு மற்றவர்கள் தெரிந்துகொண்டனர். இதையடுத்து, பெரவள்ளூர் பகுதியில் விஜயகாந்த் பிரசாரம் செய்தார். அப்போது தி.மு.க தலைவர் ஸ்டாலினை நம்பி யாரும் வாக்களிக்க வேண்டாம். அவரை நம்பி வாக்களித்தால் ஏமாந்து போவீர்கள் என்று தி.மு.க-வை கடுமையாக விமர்சித்தார். 

 வடசென்னை தே.மு.தி.க வேட்பாளர் மோகன்ராஜை ஆதரித்து விஜயகாந்த் பிரசாரம் செய்தபோது வேட்பாளருடன் அமைச்சர் ஜெயகுமார் நின்றுகொண்டிருந்தனர். மருத்துவரின் ஆலோசனைப்படி விஜயகாந்த், அதிகமாகப் பேசவில்லை. விரைவாகப் பிரசாரத்தை முடித்துக் கொண்டு அவர் வீடு திரும்பினார். அவரின்  பிரசார வாகனத்தைத் தொடர்ந்து வந்த காரில் பிரேமலதா அமர்ந்திருந்தார். பிரசாரத்தையும் கட்சியினரின் உற்சாகத்தையும் காரில் அமர்ந்தபடி அவர் கவனித்துக்கொண்டிருந்தார். 

 கட்சித் தலைமை கழக நிர்வாகி ஒருவரிடம் பேசினோம். ``உடல் நலம் பாதிக்கப்பட்ட பிறகு, கேப்டன் வீட்டிலேயே இருந்துவந்தார். அமெரிக்க சிகிச்சைக்குப் பிறகு, அவரின் உடல் நலத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. அ.தி.மு.க-வுடன் தே.மு.தி.க கூட்டணி பேச்சுவார்த்தை நடத்தியபோது விஜயகாந்த் பிரசாரத்துக்கு வர வேண்டும் என்ற அன்பு வேண்டுகோள் அ.தி.மு.க கட்சித் தலைமை விடுத்தது. அதை விஜயகாந்த்திடம் கூறியபோது அவரும் ஓகே என்று சொன்னார். 

அமெரிக்காவில் கேப்டனுக்கு  ஸ்பீச் தெரபி அளிக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து வீட்டிலேயேயும் அவருக்கு அந்த சிகிச்சை அளிக்கப்பட்டது. அதற்கென பிரத்தேயகமாக 3 பேர் கொண்ட டாக்டர் குழு உள்ளது. அந்தக் குழுவினர்தான் கடந்த சில நாள்களாக விஜயகாந்த்தின் குரல் வளத்தை மேம்படுத்த கற்றுக் கொடுத்தனர். மேலும், வார்த்தைகள் தடுமாறாமலும் தங்குதடையின்றி தெளிவாக பேசவும் பயிற்சி அளித்தனர். அதோடு அவரின் பேச்சு புரியும்படி இருக்கிறதா என்பதையும் கண்டறிந்து அதற்கேற்ப டிப்ஸ்களை கொடுத்தனர். இதற்காக, குறிப்பிட்ட நேரத்தை ஒதுக்கிய விஜயகாந்த், டாக்டர்களின் அறிவரைப்படி பயிற்சியில் ஈடுபட்டார். அவர் பேச்சை வீடியோவாக எடுத்து அவரிடமே அந்தக் குழுவினர் காண்பித்தனர். 

பிரசாரத்தில் பேச வேண்டிய விஷயங்களை அவர் வீட்டிலேயே பேசி ஒத்திகைப்பார்த்தார். அதில் நல்ல ரிசல்ட் கிடைத்தது. இன்றோடு பிரசாரம் நிறைவு பெற உள்ளதால்,சென்னையில் அ.தி.மு.க கூட்டணிக்கட்சி வேட்பாளர்களை ஆதரித்து விஜயகாந்த் நேற்று பிரசாரம் செய்ய திட்டமிடப்பட்டது. நாங்கள் எதிர்பார்த்தபடியே விஜயகாந்த்தின் பேச்சில் முன்பைவிட மாற்றங்கள் தெரிந்தன. 

அவர் பேசிய வீடியோவை அவருக்கு ஸ்பீச் தெரபி அளித்த டாக்டர்கள் பார்வையிட்டனர். அப்போது அவரின் பேச்சில் நல்ல முன்னேற்றம் இருப்பதாக டாக்டர்கள் தெரிவித்துள்ளனர்.பேச்சில் உள்ள குறைகளைக் கண்டறிந்த டாக்டர் குழு அதற்கேற்ப பயிற்சி அளிக்க திட்டமிட்டுள்ளனர். கடந்த சில ஆண்டுகளாகவே விஜயகாந்த்தின் பேச்சு பலருக்கு புரிவதில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்தது. அவரின் பேச்சு அவருடன் பழகியவர்களுக்கு நன்றாகப் புரியும். நேற்றுகூட அவர் பேசியது எங்களுக்கெல்லாம் நன்றாகப் புரிந்தது. விஜயகாந்த், பிரசாரத்துக்கு வந்த பிறகு கூட்டணி கட்சியினரும், தே.மு.தி.க தொண்டர்களும் உற்சாகத்தில் உள்ளனர். அவரின் பிரசாரம் நிச்சயம் திருப்புமுனையை ஏற்படுத்தும் என்று எதிர்பார்க்கிறோம்" என்றனர். 

நேற்று நடந்த பிரசாரத்தில் விஜயகாந்த் பேசும்போது அவரின் வார்த்தைகள் தெளிவாக இருந்தாகக் கட்சியினர் தெரிவித்தாலும் அங்கு வந்த பலருக்கு புரியவில்லை என்றுதான் சொல்ல வேண்டும். மேலும், சில வார்த்தைகளை இழுத்து இழுத்துப் பேசினார். அதுவும் இன்னும் சில தினங்களில் சரியாகிவிடும் என டாக்டர்கள் தெரிவித்துள்ளனர். பிரசாரத்தை முடித்துவிட்டு வீடு திரும்பிய விஜயகாந்த்திடம் பிரேமலதாவும் கட்சியின் மூத்த நிர்வாகிகளும் `ஸ்பீச்' சூப்பராக இருந்தது என்றுகூறி கைகுலுக்கி வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளனர்.  

அடுத்த கட்டுரைக்கு