`உங்க ஏரியாவுக்கு `ரோஸ்' வந்துருச்சா?'- தஞ்சை அ.தி.மு.க-வின் மெர்சல் ` கோடு வேர்டு' | ADMK uses code word to distribute money to voters in Tanjore

வெளியிடப்பட்ட நேரம்: 16:50 (16/04/2019)

கடைசி தொடர்பு:16:50 (16/04/2019)

`உங்க ஏரியாவுக்கு `ரோஸ்' வந்துருச்சா?'- தஞ்சை அ.தி.மு.க-வின் மெர்சல் ` கோடு வேர்டு'

தஞ்சாவூரில், அ.தி.மு.க-வினர் வாக்காளர்களுக்கு ரூ 2.000 முதல் 5,000 வரை பணம் கொடுத்துவருகின்றனர். 'ரோஸ்' என்ற வார்த்தையைப் பயன்படுத்தியே வாக்காளர்களுக்கு பணப்பட்டுவாடா செய்து முடித்துவிட்டனர். `நாங்க கொடுத்த ரோஸ் எங்களை வெற்றிபெறவைக்கும்' என்று தெம்பாகக் கூறிவருகின்றனர் அ.தி.மு.க நிர்வாகிகள். இது, மற்ற கட்சியினரை கலக்கத்தில் ஆழ்த்தியுள்ளது.

அதிமுக வேட்பாளர் பிரசாரம்

40 நாடாளுமன்றத் தொகுதிகளுக்கான தேர்தல் மற்றும் 18 சட்டமன்றத் தொகுதிகளுக்கான இடைத்தேர்தல், வரும் 18-ம் தேதி நடைபெற இருக்கிறது. இதற்கான பிரசாரம் இன்று மாலை ஆறு மாணியுடன் நிறைவடைகிறது. இறுதிக்கட்ட பிரசாரத்தில் அனைத்துக் கட்சி நிர்வாகிகளும், தொண்டர்களும் சுறுசுறுப்புடன் செயல்பட்டுவருகின்றனர். தஞ்சாவூரில், அ.தி.மு.க சார்பில் நாடாளுமன்றத் தொகுதிக்கு அதன் கூட்டணிக் கட்சியான தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த நடராஜன் போட்டியிடுகிறார். சட்டமன்றத் தொகுதிக்கு அ.தி.மு.க வேட்பாளரான காந்தி போட்டியிடுகிறார்.

அதிமுக வேட்பாளர்

தஞ்சை அ.தி.மு.க நிர்வாகிகள் நாடாளுமன்றத்தைவிட சட்டமன்றத் தொகுதியைக் கைப்பற்றவே அதிக முனைப்புக்காட்டி வருகிறார்கள். இந்தத் தொகுதியில், தினகரன் கட்சியான அ.ம.மு.க-வினர் பலமாக இருக்கின்றனர். தினகரனின் சொந்த ஊர் என்பதால், அ.ம.மு.க-வைச் சேர்ந்த நிர்வாகிகள், தொண்டர்கள் இங்கு வெற்றிபெற்றே தீர வேண்டும் என்ற எண்ணத்துடன் கடுமையாக உழைத்துவருகின்றனர். தி.மு.க வேட்பாளரான  நீலமேகம், கூட்டணி பலத்துடன் தொகுதிக்குள் சூறாவளியாய் சுற்றிவருகிறார். இதனால், தஞ்சாவூர் சட்டமன்றத் தொகுதியில் மும்முனைப் போட்டி நிலவிவருகிறது. இந்த நிலையில், அ.தி.மு.க இங்கு வெற்றிபெற்றே தீர வேண்டும் என வாக்கு ஒன்றுக்கு ரூ.2,000 முதல் 5,000 வரை கொடுத்துவருகின்றனர். பணம் என்ற சொல்லை பயன்படுத்தாமல், 'ரோஸ்' என்ற வார்த்தையைப் பயன்படுத்தி பட்டுவாடா செய்துவருகிறார்கள் என விவரம் அறிந்தவர்கள் தெரிவித்தனர்.

இதுகுறித்து சிலரிடம் பேசினோம். `18 தொகுதி இடைத்தேர்தலில், குறிப்பிட்ட தொகுதிகளையாவது கைப்பற்றினால்தான் அ.தி.மு.க ஆட்சி நீடிக்கும் என்ற நிலை உள்ளது. இதனால், இந்தத் தொகுதிகளில் பணத்தை தண்ணீராக இறைத்து செலவுசெய்துவருகின்றனர் அ.தி.மு.க-வினர். தஞ்சாவூரை பொறுத்தவரை வேட்பாளரான காந்தி, வைத்திலிங்கத்தால் வளர்க்கப்பட்டவர். வைத்திலிங்கம் சிபாரிசில்தான் காந்திக்கு சீட் கிடைத்தது. எனவே, காந்தி வெற்றிபெற்றால்தான் தனக்கும் செல்வாக்கு என வைத்திலிங்கம் கடுமையாக உழைக்கிறார். மேலும், வாக்கு ஒன்றுக்கு ரூ.2,000 முதல் 5,000 வரை வாக்காளர்களுக்குக் கொடுக்கின்றனர். தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் கண்ணில் விளக்கெண்ணெய் ஊற்றிக்கொண்டு செயல்பட்டுவருகின்றனர். பல இடங்களில், இவர்கள் நடத்திய சோதனையில் லட்சக்கணக்கில் பணம் பறிமுதல் செய்யப்பட்டன. இந்த நிலையில், தொடக்கத்திலேயே அ.தி.மு.க-வினர் யார், மாற்றுக் கட்சியைச் சேர்ந்தவர்கள் யார் நமக்கு வாக்களிப்பார்கள் என பூத் வாரியாகக் கணக்கெடுத்தனர்.

வாக்கு சேகரிக்கும் அதிமுக வேட்பாளர்

அதன்படி, அ.தி.மு.க-விற்கு சாதகமாக உள்ள இடங்களில் ரூபாய் இரண்டாயிரமும், வீக்காக உள்ள இடங்களில் மூன்றாயிரமும் பணம் கொடுக்க முடிவுசெய்தனர். அதாவது, ரூ.1.000 நாடாளுமன்றத்திற்கு என்றும் மீதி, சட்டமன்றத்திற்கு என்கிற கணக்கில் கொடுத்து வருகின்றனர். இரண்டாயிரம் ரூபாய் நோட்டாகவே பணம் தருவதால், பணம் என்ற வார்த்தையைப் பயன்படுத்தாமல்' ரோஸ்' கலரில் பணம் இருப்பதால் ரோஸ் என்ற வார்த்தையைப் பயன்படுத்துகின்றனர். தேர்தல் பறக்கும் படை அதிகாரிகளிடம் இருந்து தப்பிக்கவே ரோஸ் என்ற வார்த்தையைப் பயன்படுத்துகின்றனர். அ.தி.மு.க-வினர்  ஒருவருக்கு ஒருவர் பேசும்போது, உங்க ஏரியாவிற்கு ரோஸ் வந்துவிட்டதா, நீங்க ரோஸை கொடுத்துவிட்டீர்களா என யாருக்கும் தெரியாத வகையில் பேசிக் கொள்கின்றனர். ரோஸ் என்ற வார்த்தையைக் கொண்டே பட்டுவாடாவைச் செய்துவருகின்றனர். முக்கால்வாசிக்கு மேல் வாக்காளர்களுக்கு ரோஸை கொடுத்து  தங்களது பணியை அ.தி.மு.க-வினர் முடித்துவிட்டனர். ரோஸ் எங்க வேட்பாளரை வெற்றிபெறச் செய்யும் என கூறிவருகின்றனர். அ.தி.மு.க அளவிற்கு மற்ற கட்சிகள் பணம் தருவது சந்தேகம். அ.ம.மு.க பச்சை கலரையும், தி.மு.க ஆரஞ்ச் கலரையும் கொடுக்க இருப்பதாகத் தெரிவித்தனர்.
 

loading...

நீங்க எப்படி பீல் பண்றீங்க