Published:Updated:

` நள்ளிரவில் என் குடும்பமே பயத்தில் நடுங்கியது!' - செந்தில்பாலாஜி மீது கரூர் கலெக்டரின் அதிர்ச்சிப் புகார்

` நள்ளிரவில் என் குடும்பமே பயத்தில் நடுங்கியது!' - செந்தில்பாலாஜி மீது கரூர் கலெக்டரின் அதிர்ச்சிப் புகார்
` நள்ளிரவில் என் குடும்பமே பயத்தில் நடுங்கியது!' - செந்தில்பாலாஜி மீது கரூர் கலெக்டரின் அதிர்ச்சிப் புகார்

` நள்ளிரவில் என் குடும்பமே பயத்தில் நடுங்கியது!' - செந்தில்பாலாஜி மீது கரூர் கலெக்டரின் அதிர்ச்சிப் புகார்

"தி.மு.க மாவட்ட பொறுப்பாளர் செந்தில் பாலாஜியும் காங்கிரஸ் வேட்பாளர் ஜோதிமணியும் தி.மு.க வழக்கறிஞர் செந்தில் மற்றும் தி.மு.க-வினர்களை அனுப்பி, எனக்கும் என் குடும்பத்துக்கும் நேற்று நள்ளிரவில் கொலைமிரட்டல் விடுக்க வைத்தார்கள். மாவட்ட எஸ்.பிக்கு போன் செய்து, அவரே வந்து என்னை அந்தக் கும்பலிடமிருந்து பத்திரமாக மீட்டார். இதுபற்றி, தேர்தல் ஆணையத்துக்குப் புகார் அனுப்பி இருக்கிறேன்" என்று கரூர் மாவட்ட ஆட்சியர் அன்பழகன் கொடுத்த பேட்டியால், கரூரில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

கரூர் மாவட்ட ஆட்சியர் அன்பழகன் தரப்பிலிருந்து இன்று மதியம் திடீரென செய்தியாளர்களுக்கு, பத்திரிகையாளர் சந்திப்பு இருப்பதாக அழைப்பு வந்தது. அரக்கபறக்க ஓடிய செய்தியாளர்களிடம் பேசிய ஆட்சியர் அன்பழகன், "கரூர் நாடாளுன்றத் தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் ஜோதிமணி தரப்பு, இன்று இறுதிக்கட்ட பிரசாரத்தை கரூர் நகர ரவுண்டானா பகுதியில் நடத்த அனுமதி கேட்டது. அ.தி.மு.க வேட்பாளர் தம்பிதுரை தரப்பிலும் கேட்டார்கள். 'இன்று காலை சொல்கிறேன்' என்று இருதரப்பிலும் சொன்னேன். ஆனால், நேற்று நள்ளிரவு 12 மணி அளவில், இருசக்கர வாகனங்களில் வந்த நூற்றுக்கும் மேற்பட்ட நபர்கள், எனது குடியிருப்புக்குள் அத்துமீறி நுழைந்து, எனது உயிருக்கும் உடமைக்கும் ஆபத்து விளைவிக்கும் நோக்கில் செயல்பட்டார்கள். கேட்டை ஆக்ரோஷமாகத் திறக்க முயன்றார்கள். நான், 'காலையில் பேசிக்கொள்ளலாம்' என்று சொன்னேன். ஆனால், தி.மு.க வழக்கறிஞர் செந்தில் என்பவர் என்னிடம் கொலைமிரட்டல் விடுக்கும்விதமாகப் பேசினார்.

செந்தில் பாலாஜியிடமும் ஜோதிமணியிடமும், 'அத்துமீறி இப்படி நடக்கலாமா. இன்று காலை வந்து அலுவலகத்தில் சந்தியுங்கள்'னு சொன்னேன். ஆனா, அந்தக் கும்பலை செந்தில் பாலாஜி அழைக்கவில்லை. இதனால், என் குடும்பமும் பயத்தில் நடுங்கியது. இது சம்பந்தமாக, கரூர் மாவட்டக் காவல் கண்காணிப்பாளருக்குத் தகவல் கொடுத்து, அவரே வந்து என்னை மீட்டார். 'நடுநிலைமையோடு செயல்படுகிறேன்' என்ற காராணத்துக்காக, இதுபோன்ற அச்சுறுத்தல் இருந்தால் எப்படி பணி செய்வது. நடு இரவில் நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் எனது குடியிருப்பில் அத்துமீறி நுழைய முற்பட்டதால், எனக்கும் எனது குடும்பத்தாருக்கும் பாதுகாப்பில்லாத சூழ்நிலை இருந்தது. தேர்தல் நடத்தும் அலுவலர் மற்றும் ஒரு மாவட்டக் கலெக்ட்ரான எனக்கே இப்படி பாதுகாப்பு இல்லை என்றால், எப்படி தி.மு.க-வினரால் பொதுமக்கள் பாதுகாப்பாக இருப்பார்கள்?

நேற்று இரவு தமிழக போக்குவரத்துத் துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் தேர்தல் பிரசார நிறைவை கரூர் நகர் பகுதியில் நடத்திட அனுமதி கோரி மனு அளித்திருந்தார். அதைப் பரிசீலிப்பதாக நான் கூறினேன். அதற்காக, முறையீடு செய்ய கரூர் தொகுதி தேர்தல் அதிகாரி என்ற அடிப்படையில் என்னை சந்திக்க நடு இரவில் வழக்கறிஞர் செந்தில் சந்திக்க அனுமதி கேட்டார். இணைய வழியாக விண்ணப்பிக்கும்போது யார் முன்னர் விரும்புகிறார்களோ அவர்களுக்கு அனுமதி வழங்கப்படும். ஆனால், 'அதை மாற்றித் தர வேண்டும்' என நேற்று முன்தினம் செந்தில் பாலாஜி மற்றும் காங்கிரஸ் வேட்பாளர் ஜோதிமணி ஆகிய இருவரும் சுமார் 6 மணி நேரம் கரூர் வருவாய் கோட்டாட்சியர் சரவண மூர்த்தியை வற்புறுத்தி, அவரை சிறைவைத்தனர். வேறுவழியில்லாமல் சரவணமூர்த்தி கரூர் நகர் பகுதியில் அவர்கள் பிரசாரம் செய்ய அனுமதி கொடுத்தார். ஆனால், அந்த நேரத்தில் அ.தி.மு.க-வும் நேர அனுமதி வாங்கி இருப்பதால், 'பிரச்னை வரும். பரிசீலிப்போம்'னு இரண்டு தரப்புக்கும் சொன்னேன். ஆனால், தி.மு.க தரப்பு எனக்கு கொலைமிரட்டல் விடுத்தது. இதுபற்றி, இந்திய தேர்தல் ஆணையத்துக்கும், கரூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடமும் புகார் அளிக்கப்பட்டுள்ளது. எனக்கும் பாதுகாப்பு கேட்டு மனு செய்துள்ளேன். மேற்கொண்டு, தேர்தல் ஆணையத்தின் அறிவுறுத்தலின்படிதான் நடப்பேன்" என்றார்.

இந்நிலையில், நம்மிடம் பேசிய தி.மு.க-வினர், "கலெக்டரை செந்தில் பாலாஜியோ, வழக்கறிஞர் செந்திலோ யாரும் மிரட்டவில்லை. இன்று கரூர் நகரத்தில் இறுதிக்கட்ட பிரசாரம் செய்ய நாங்க இணையதளம் மூலமா மதியம் 1 முதல் 3 மணி வரை வாங்க பதிவு செய்தோம். ஆனால், முதலில் பதிவு செய்த எங்களுக்கு அனுமதி தராத ஆர்.டி.ஓ, அ.தி.மு.க-வுக்கு நேரம் ஒதுக்கினார். இணையதளத்தை முடக்கி, அவர்கள் முதலில் பதிவுசெய்ததுபோல் டெக்னிக்கலாக மாற்றம் செஞ்சாங்க. இதனால்தான், கடந்த 14-ம் தேதி, 'அனுமதி தரும் வரை செல்லமாட்டோம்' என்று செந்தில் பாலாஜியும் ஜோதிமணியும் உள்ளிருப்புப் போராட்டம் நடத்தினாங்க. ஆறு மணி நேரம் போராட்டம் தொடர்ந்ததால், ஆர்.டி.ஓ எங்களுக்கு இன்று மாலை 4 டு 6 வரையிலும் அ.தி.மு.கவுக்கு 2 டு 4 வரையிலும் அனுமதி கொடுத்தாங்க. அதன்பிறகு, நாங்க வந்துட்டோம். ஆனா, நேற்று இரவு 8 டு 9 மணி வரை கலெக்டரை சந்தித்த போக்குவரத்துத்துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர், கலெக்டரை மிரட்டி, இன்று மதியம் முதல் மாலை வரை தம்பிதுரை பிரசாரம் செய்ய வலுக்கட்டாயமாக அனுமதி வாங்கியதாகத் தெரிகிறது. 

சந்திப்பு முடிந்து வெளியே வந்த அமைச்சர், 'திட்டமிட்டபடி கரூர் நகரத்தில் நாளை (இன்று) 1 மணியிலிருந்து ஆறு மணி வரை பிரசாரம் நடைபெறும்' என்று பேட்டி கொடுத்தார். அதனால்தான், தி.மு.க-வைச் சேர்ந்தவர்கள் மாவட்டக் கலெக்டரிடம் எங்கள் நியாயத்தைக் கேட்க போனோம். ஆனால், விரட்டிவிட்டுட்டாங்க. இந்நிலையில், நேற்று இரவே சென்னை உயர் நீதிமன்றக் கிளையில், 'இன்று பிரசாரம் செய்ய அனுமதிக்க வேண்டும்' என்று வழக்குப் போட்டோம். இதற்கிடையில், கலெக்டர் ஜோதிமணியிடம் பேசி, 'இன்று நீங்கள் கரூரில் பிரசாரம் செய்யக் கூடாது' என்று மிரட்டலாகப் பேசியதாகச் சொல்கிறார்கள். ஜோதிமணியும் அந்தத் தகவலை இன்று காலை புலியூரில் நடைபெற்ற பிரசாரத்தில் பேசியிருக்கிறார். அதன் பிறகுதான், குட்டு வெளிப்பட்டுவிட்டதே என்று கலெக்டர் அவசரம் அவசரமாகச் செய்தியாளர்களை அழைத்து, இப்படி ஒரு டிராமாவை அரங்கேற்றியிருக்கிறார். இரவே ஒரு மாவட்டக் கலெக்டரை மிரட்டி இருந்தால், அவரை மீட்க வரும் மாவட்ட எஸ்.பி சும்மா இருப்பாரா. இவர் சொல்லும் கதையை சின்னக்குழந்தைகூட நம்பாது. அதாவது, அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் சொல்லியதை அப்படியே அரங்கேற்றியிருக்கிறார்" என்றார்கள்.

இதற்கிடையில், விஷயம் பெரிதானதால், கரூர் ரவுண்டானா பகுதியில் அ.தி.மு.க, காங்கிரஸ் என்று எந்தக் கட்சி வேட்பாளரும் பிரசாரம் செய்ய மாவட்ட ஆட்சியர் அன்பழகன் தடை செய்து உத்தரவிட்டிருக்கிறார். ஆனால், இரு தரப்பும் பிரசாரம் செய்யக்கூடும் என்பதால், நூற்றுக்கணக்கான போலீஸாரும், அதிரடிபடை வீரர்களும் குவிக்கப்பட்டுள்ளனர். இதனால், கரூர் நகரில் பதற்றம் நிலவி வருகிறது.

அடுத்த கட்டுரைக்கு