விரல்நுனியில் வேட்பாளர்களின் விவரங்கள்! | Know the details of the candidates through an app

வெளியிடப்பட்ட நேரம்: 19:47 (16/04/2019)

கடைசி தொடர்பு:20:02 (16/04/2019)

விரல்நுனியில் வேட்பாளர்களின் விவரங்கள்!

"இதில் எங்கள் கருத்து என்று எதுவும் கிடையாது. வெறும் தகவல்களை மட்டுமே தெரிவிக்கிறோம். இந்த விவரங்களைப் படித்துப் பார்க்க முடியாது என்ற நிலையில் இருக்கும் பாமர மக்களுக்கு, வீடியோ வடிவில் ஒவ்வொரு வேட்பாளரைப் பற்றிய விவரங்களையும் வெளியிட்டுள்ளோம்."

விரல்நுனியில் வேட்பாளர்களின் விவரங்கள்!

நீங்கள் விரும்பும் வேட்பாளர் குறித்த விவரங்களை அறிந்துகொள்ள வேண்டுமா. இதோ, ஒரே நிமிடத்தில் அறிந்துகொள்ளலாம்.

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடும் ஒட்டுமொத்த வேட்பாளர்களின் சொத்துவிவரங்கள், குற்றப்பின்னணி போன்ற முழு விவரங்களையும் அறிந்துகொள்ளும் வகையில் ஒரு செயலியை (ஆப்) உருவாக்கியுள்ளது அறப்போர் இயக்கம்.

வேட்பாளர் பற்றிய ஆப் வெளியிட்ட அறப்போர் இயக்கம்

கட்சி, சின்னம் போன்றவற்றை மனதில் வைத்து வாக்களிக்கும் நிலைமைதான் நம் நாட்டில் இருக்கிறது. நாம் வாக்களிக்கும் வேட்பாளருக்கு எவ்வளவு சொத்து இருக்கிறது, அவர் குற்றப்பின்னணி கொண்டவரா, அவர்மீது என்னென்ன குற்ற வழக்குகள் உள்ளன, ஏற்கெனவே எம்.பி-யாக அல்லது எம்.எல்.ஏ-வாக இருந்த காலத்தில் அவர் சேர்த்த சொத்துகள் போன்ற விவரங்களைத் தெரிந்துகொள்வதில் பெரும்பாலான மக்கள் ஆர்வம் காட்டுவதில்லை. காரணம் அதுகுறித்து போதிய விழிப்புணர்வு இங்கு இல்லை.

தேர்தலில் போட்டியிடும் ஒவ்வொரு வேட்பாளரும் தங்களின் சொத்துவிவரம், கடன் விவரம், கிரிமினல் வழக்குகள் குறித்த விவரங்கள் போன்றவற்றை வெளியிட வேண்டுமென்று 2003-ல் உச்ச நீதிமன்றம் ஒரு தீர்ப்பு வழங்கியது. அதையடுத்து ஒவ்வொரு வேட்பாளரும் இத்தகைய விவரங்களை வெளியிடுகிறார்கள். பிரமாண பத்திரமாகத் தேர்தல் ஆணையத்திடம் சமர்பிக்கிறார்கள். அவை ஆணையத்தின் இணையதளத்தில் வெளியிடப்படுகின்றன. ஆனாலும், அதையெல்லாம் படித்தவர்களில்கூட எத்தனை பேர் பார்க்கிறார்கள் என்பது கேள்விக்குறியே?

இந்நிலையில்தான், வேட்பாளர்களின் சொத்துவிவரங்கள், கிரிமினல் பின்னணி போன்ற விவரங்களை ஒரே செயலியில் அறப்போர் இயக்கம் கொண்டு வந்திருக்கிறது. அந்தச் செயலியை செல்போனில் டவுன்லோடு செய்ய ஒரு நிமிடம்தான் ஆகிறது. பா.ம.க-வின் தர்மபுரி நாடாளுமன்றத் தொகுதி வேட்பாளர் அன்புமணியின் சொத்து, கடன் மற்றும் அவர் மீதான கிரிமினல் வழக்குகள் பற்றிய விவரங்களைத் தெரிந்துகொள்வதற்காக, செயலியைச் சொடுக்கினோம். அவர் மீது 12 கிரிமினல் வழக்குகள் இருக்கும் விவரம் அதில் இருந்தது. இதுபோல எல்லா வேட்பாளர்களின் விவரங்களையும் அதில் அறிந்துகொள்ள முடிகிறது.

அன்புமணி

இதுகுறித்து அந்தச் செயலியை உருவாக்கும் பணியில் முக்கியப் பங்காற்றிய அறப்போர் இயக்கத்தைச் சேர்ந்த தீபாவிடம் பேசினோம். “ஊழல்வாதிகள், கிரிமினல் பின்னணி கொண்டவர்கள் எனப் பலரை அரசியல் கட்சிகள் நிறுத்துகின்றன. அதனால் நேர்மையான சுயேச்சை வேட்பாளர்கள் நம்பிக்கை இழந்துவிடுகிறார்கள். வேட்பாளர்கள் தாக்கல்செய்யும் பிரமாணப் பத்திரங்களைத் தேர்தல் ஆணையம் தனது இணையதளத்தில் அப்படியே பதிவேற்றம் செய்கிறது. அதைப் போய் யாரும் பார்ப்பதில்லை. அப்படியே பார்த்தாலும் எளிதாகப் புரிந்துகொள்ளும் வகையில் அது அவ்வளவு தெளிவாக இருக்காது. எனவேதான், அந்தப் பிரமாண பத்திரங்களைப் பதிவிறக்கம் செய்து ஒரு செயலியில் போட்டிருக்கிறோம்.

தீபாபுதுச்சேரியையும் சேர்த்து மொத்தம் 863 வேட்பாளர்கள் பற்றிய மொத்த விவரங்களையும் போட்டுள்ளோம். இதற்காக, 200 தன்னார்வலர்கள் இரண்டு வாரக் காலமாக இதற்கான பணியில் தங்களை ஈடுபடுத்திக்கொண்டார்கள். பொதுமக்கள் இந்தச் செயலியை இலவசமாக டவுன்லோடு செய்து, தங்கள் தொகுதியில் எத்தனை பேர் போட்டியிடுகிறார்கள் என்பதையும் அவர்களின் பின்னணியையும் இரண்டே நிமிடங்களில் தெரிந்துகொள்ள முடியும். இதன்மூலம் முழு விழிப்புணர்வுடன் அவர்கள் வாக்குச்சாவடிக்குச் செல்லலாம்.

வழக்கமாக வெளியிடப்படும் ஏ.டி.ஆர் (Association for Democratic Reforms) ரிப்போர்ட்டிலும் இந்த விவரங்கள் இருக்கும் என்றாலும், அது ஆங்கிலத்தில் மட்டுமே இருக்கும். செயலியாகவும் கிடைக்காது. ஆனால், செயலியில் கொண்டுவந்திருப்பது மட்டுமல்லாமல், முழுக்க முழுக்க தமிழிலும் கொண்டுவந்திருக்கிறோம். இதில் எங்கள் கருத்து என்று எதுவும் கிடையாது. வெறும் தகவல்களை மட்டுமே தெரிவிக்கிறோம். இந்த விவரங்களைப் படித்துப் பார்க்க முடியாது என்ற நிலையில் இருக்கும் பாமர மக்களுக்கு, வீடியோ வடிவில் ஒவ்வொரு வேட்பாளரைப் பற்றிய விவரங்களையும் வெளியிட்டுள்ளோம். 863 வேட்பாளர்களைப் பற்றிய விவரங்களையும் தன்னார்வலர்கள் அந்த வீடியோவில் சொல்வார்கள். அதைப் பார்த்துத் தெரிந்துகொள்ளலாம்” என்றார் தீபா.

வேட்பாளர்கள் குறித்த விவரங்களை அறிவதற்கு அறப்போர் இயக்கம் வெளியிட்டுள்ள லிங்க் இதுதான்.... https://bit.ly/KnowYourCandidates-Arappor

வாக்காளர்கள் விழிப்புடன் செயல்படுவதுடன், தங்களுக்கான வாக்கையும் தவறாமல் செலுத்த வேண்டும்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்