தேர்தல் நடத்தை விதியைக்காட்டி, நிகழ்ச்சிக்கு அனுமதி மறுத்த ஐ.ஐ.டி! | IIT cancels an event organised by Kerala Kala samithi due to election code of conduct

வெளியிடப்பட்ட நேரம்: 20:18 (16/04/2019)

கடைசி தொடர்பு:21:10 (16/04/2019)

தேர்தல் நடத்தை விதியைக்காட்டி, நிகழ்ச்சிக்கு அனுமதி மறுத்த ஐ.ஐ.டி!

தேர்தல் நடத்தை விதியைக்காட்டி, நிகழ்ச்சிக்கு அனுமதி மறுத்த ஐ.ஐ.டி!

யர்கல்வி என்பது வெறும் கல்வி கற்பது என்பதோடு மட்டுமல்லாமல், அனைத்துவிதமான ஜனநாயக நடவடிக்கைகளுக்குமான இடமாக இருக்க வேண்டியது அவசியம். ஆனால், கடந்த சில ஆண்டுகளாக இந்திய உயர்கல்வி நிலையங்கள் அவ்வாறு ஜனநாயக ரீதியில் இயங்குகின்றனவா என்பது மிகப்பெரிய கேள்வியாக உருவெடுத்துள்ளது. 

உயர்கல்வி நிலையங்களில் மாணவர்களின் நிகழ்ச்சிகளுக்கு அனுமதி கொடுத்துவிட்டு, பின்னர் தடை, எழுத்தாளர்கள் பேசுவதற்குத் தடை, புத்தகங்களுக்குத் தடை, பாடத்திட்டங்களுக்குத் தடை, விமர்சகர்கள் கல்வி நிறுவனங்களில் பணியாற்றுவதற்கு மறைமுக எதிர்ப்பு எனத் தொடர்ந்து பல்வேறு நெருக்கடிகளுக்கு உள்ளாகி வருகின்றன கல்வி நிறுவனங்கள். மத்திய அரசின் கட்டுப்பாட்டில் இயங்கும் கல்வி நிலையங்கள் அல்லது பி.ஜே.பி. ஆளும் மாநிலங்களில் உள்ள கல்வி நிலையங்களில் இதுபோன்ற சம்பவங்கள் தொடர்ச்சியாக நடைபெற்று வந்த சூழலில் தற்போது தமிழகத்தில் கடந்த சில ஆண்டுகளாக, குறிப்பிட்ட நிகழ்ச்சிகளுக்குத் தடைவிதிப்பது அதிகரித்து வருகிறது.

சென்னைப் பல்கலைக்கழகத்தில் இதுபோன்று பல்வேறு சம்பவங்கள் நடைபெற்றதைத் தொடர்ந்து, தற்போது சென்னை ஐ.ஐ.டி-யில் செயல்படும் 'கேரள கலா சமிதி' என்கிற அமைப்பின் சார்பில் நடைபெறவிருந்த நிகழ்ச்சிக்கு அனுமதி அளிக்கப்பட்டு, நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகள் நடைபெற்றன. இந்தநிலையில் கடைசிநேரத்தில் ஐ.ஐ.டி நிர்வாகம், அந்த நிகழ்வுக்கு அனுமதி மறுத்துள்ளது. கேரளாவைச் சேர்ந்த பேராசிரியர் சுனில் பி இலாய்டம் 'புதிய கேரளாவின் கலை, கலாசாரம் மற்றும் அரசியல்' என்கிற தலைப்பில் அதில் பேசவிருந்தார். 

தேர்தல் நடத்தை விதிகளைக் காட்டி அனுமதி ரத்து

இந்த நிகழ்ச்சிக்கு அனுமதி மறுக்கப்பட்டிருப்பது பற்றி ஐ.ஐ.டி மாணவர் ஒருவர் நம்மிடம் பேசுகையில், “நிகழ்ச்சிக்கான தலைப்பு, பேச்சாளர் யார், என்ன பேசப்போகிறார்கள் என்பது குறித்த அனைத்து விவரங்களையும் பரிசீலித்த பின்னரே அந்த நிகழ்வுக்கான அனுமதி அளிக்கப்படுகிறது. வளாகத்துக்குள் நாங்கள் ஒட்டுகிற சுவரொட்டிகளில் இடம்பெறுகிற வாசகங்கள் உள்பட அனைத்தையும் நிர்வாகம் ஒப்புதல் அளித்த பிறகுதான் நாங்கள் பகிர முடியும். அதுபோன்று அனைத்தையும் தணிக்கை செய்கிற சூழல்தான் இங்கு நிலவி வருகிறது. முறையான முன்அனுமதி பெற்ற பின்னரும் நிகழ்ச்சி நடைபெறவிருந்த நாளன்று காலையில் அனைத்து சுவரொட்டிகளையும் ஒப்படைக்குமாறு, ஐ.ஐ.டி நிர்வாகத்தில் இருந்து கேட்டுக்கொண்டனர்.

பின்னர், தேர்தல் நடத்தைவிதிகள் அமலில் இருப்பதால் தேர்தல் ஆணையத்தின் அறிவுறுத்தலின்பேரில், அந்த நிகழ்ச்சிக்கான அனுமதி மறுக்கப்படுவதாகத் தெரிவித்தனர். ஆனால், நிகழ்ச்சி நடைபெறுவதற்கு முந்தையதினம் அதில் பங்கேற்கவிருந்த பேச்சாளரைப் பற்றி அவதூறு நிறைந்த பெயர் குறிப்பிடாத மின்னஞ்சல் ஒன்று எங்களுக்கும் நிர்வாகத்தினருக்கும் வந்தது. அதன் தொடர்ச்சியாகவே அந்த நிகழ்ச்சிக்கான அனுமதி மறுக்கப்பட்டிருக்கலாம் என்று தோன்றுகிறது. இது ஒரு அரசியல் நிகழ்வல்ல; பேச்சாளர் அரசியல்வாதியும் அல்லர். தவிர, பொது வெளியிலும் நிகழ்ச்சி நடைபெறவில்லை. காவல்துறையை ஐ.ஐ.டி நிர்வாகம் வலியுறுத்தி, நிகழ்ச்சிக்கான அனுமதியை ரத்து செய்யக் கோரியதாகத் தெரியவந்துள்ளது” என்றார்.

நிகழ்ச்சிக்கான அனுமதி ரத்து செய்யப்பட்டதோடல்லாமல் காவல் துறையினர், கேரள கலா சமிதி அமைப்பின் ஆசிரியர் பொறுப்பு வகிப்பவரிடம் எழுத்துபூர்வமாக இந்த நிகழ்ச்சி நடத்தப்படவில்லை என எழுதி வாங்கிச் சென்றிருக்கின்றனர். இதைப் பற்றி அந்தப் பேராசிரியரிடம் பேச முற்பட்டபோது, அவர் கருத்து கூற மறுத்துவிட்டார். ஐ.ஐ.டி நிர்வாகதரப்பில் கருத்துகளைக் கேட்க பலமுறை தொடர்புகொண்டபோதிலும், அது முடியவில்லை. 

தேர்தல் நடத்தை விதிகள் தொடர்பாகத் தேர்தல் ஆணையத்தில் ஏதேனும் புகார் வந்துள்ளதா எனத் தேர்தல் அலுவலரிடம் விசாரித்தபோது, ஐ.ஐ.டி நிகழ்ச்சி குறித்து நேரடியாகவோ, மறைமுகமாகவோ எந்தவொரு புகாரும் வரவில்லை என்றும், அதைப்பற்றி தங்களுக்கு எதுவும் தெரியாது எனவும் குறிப்பிட்டனர். ஐ.ஐ.டி அமைந்துள்ள பகுதியின் தேர்தல் கண்காணிப்பு அதிகாரி மணிமேகலையிடம் பேசியபோது, “இதைப் பற்றி எந்தவொரு தகவலும் கிடைக்கவில்லை. பொதுவாகத் தேர்தல் நடத்தை விதிகள் தொடர்பான புகார்கள் அனைத்தும் எங்களுக்குத்தான் முதலில்வரும். நாங்கள்தான், பின்னர் காவல் துறையினரைத் தொடர்புகொண்டு உரிய நடவடிக்கை எடுக்குமாறு உத்தரவிடுவோம். தேர்தல் நடத்தை விதிகளைக் காரணம்காட்டி, இந்தக் குறிப்பிட்ட நிகழ்வு ரத்துசெய்யப்பட்டது தொடர்பாக எங்களிடம் எந்தத் தகவலும் இல்லை. அதுபற்றி விசாரிக்கிறோம்” என்றார்.

பேச்சாளர் சுனில் கேரளாவிலிருந்து அந்த நிகழ்ச்சிக்காக வந்த பேச்சாளர் சுனில், அனுமதி ரத்து என்றதும் மீண்டும் கேரளாவுக்குத் திரும்பினார். நம்மிடம் சுனில் பேசுகையில், “இந்த நிகழ்ச்சிக்கு அனுமதி ரத்துசெய்யப்பட்டது வலதுசாரிக் குழுக்களின் செயல்தான். நான் கேரளாவில் பி.ஜே.பி, ஆர்.எஸ்.எஸ் சித்தாந்தங்களுக்கு எதிராக தீவிரமாகப் பணியாற்றி வருகிறேன். அதனால் என்னைக் குறிவைத்து, இதுபோன்று பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறார்கள். ஐ.ஐ.டி போன்ற உயர் கல்வி நிறுவனங்களும் அதற்கு இசைந்துபோவது துரதிர்ஷ்டவசமானது. இந்துத்துவ சக்திகள், நம் சமூகத்தின் அனைத்துத் தளங்களிலும் ஊடுருவி வருகின்றனர்.

அவர்களால் கல்வியில் நுழைய முடியாமல் இருப்பதற்குக் காரணம் வலதுசாரிகளுக்குச் சரியான சித்தாந்த பின்புலமோ, அறிவுஜீவிகளோ கிடையாது. அதனால்தான் அவர்களுடைய சித்தாந்தங்களை கேள்விக்குள்ளாக்குகிற ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகம் உள்ளிட்ட கல்வி நிலையங்களைச் சிதைக்கிற நடவடிக்கைகளில் அவர்கள் ஈடுபட்டு வருகிறார்கள். அதைத்தான் மற்ற இடங்களிலும் முயன்று கொண்டிருக்கிறார்கள். கேரளாவில் அதற்கு வலுவான எதிர்ப்பு இருந்துவருகிறது. உயர்கல்வி நிலையங்களை பல்வேறு வழிகளிலும் அழித்து வருகின்றனர். மாணவர்களின் எண்ணிக்கையைக் குறைக்கும் முயற்சியில் ஈடுபடுவது ஒருபுறம் என்றால், மற்றொருபுறம் அவர்களின் ஜனநாயக வெளிக்கான வாய்ப்புகளையும் மொத்தமாக அழிப்பது குறிப்பிட்ட ஒருசாராரின் முதன்மையான நோக்கமாக உள்ளது” என்றார்.

தேர்தல் ஆணையத்தின் நடத்தை விதிகள் என்ற காரணத்தைக்காட்டி, அதிகாரபூர்வமாகத் தேர்தல் ஆணையத்துக்குப் புகார் வராமலேயே, ஐ.ஐ.டி நிர்வாகம் ஆணையத்தின் பெயரை முறைகேடாகப் பயன்படுத்தி ஜனநாயக ரீதியான நிகழ்ச்சிக்கு அனுமதியை மறுத்திருப்பது மிகப்பெரும் சர்ச்சையை எழுப்பியுள்ளது. காவல் துறையிடம் வேண்டுமென்றே நிகழ்ச்சிக்கு அனுமதியை மறுக்க ஐ.ஐ.டி நிர்வாகம் கேட்டுக் கொண்டதும், தேர்தல் ஆணையத்தின் பெயரைப் பயன்படுத்தி கொடுத்த அனுமதியை மறுத்ததும் உள்நோக்கம் கொண்டது என ஐ.ஐ.டி. மாணவர்கள் பரவலாகப் பேசிக்கொள்கின்றனர். இதுபோன்ற யூகங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டுமானால் ஐ.ஐ.டி நிர்வாகம் உரிய விளக்கத்தைத் தர வேண்டும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பு.

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்