Published:Updated:

`உங்க மேல கேஸ் பாேடுவேன், தேர்தலை நிறுத்துவேன்!' - ஜோதிமணியை மிரட்டினாரா கரூர் கலெக்டர்?

`உங்க மேல கேஸ் பாேடுவேன், தேர்தலை நிறுத்துவேன்!' - ஜோதிமணியை மிரட்டினாரா கரூர் கலெக்டர்?
`உங்க மேல கேஸ் பாேடுவேன், தேர்தலை நிறுத்துவேன்!' - ஜோதிமணியை மிரட்டினாரா கரூர் கலெக்டர்?

``தேர்தல் ஆணையத்தில் புகார் பண்ணி, கரூர் நாடாளுமன்றத் தேர்தலை நிறுத்திவிடுவேன்" என்று காங்கிரஸ் வேட்பாளர் ஜோதிமணியிடம், கரூர் மாவட்ட ஆட்சியர் அன்பழகன் போனில் எச்சரித்ததாக பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

கரூர் நாடாளுமன்றத் தொகுதி அ.தி.மு.க வேட்பாளராக தம்பிதுரை போட்டியிடுகிறார். தி.மு.க கூட்டணி சார்பில் காங்கிரஸ் கட்சியின் ஜோதிமணி வேட்பாளராக்கப்பட்டிருக்கிறார். கடந்த இரண்டுமுறையாக தொடர்ச்சியாக எம்.பி-யாக இருக்கும் தம்பிதுரை, இந்தமுறையும் ஜெயித்தால், `ஹாட்ரிக் வெற்றி'யைப் பெறுவார். ஆனால், `தொகுதிக்கு எதுவும் செய்யவில்லை' என்று தொகுதி முழுக்க மக்கள் மத்தியில் அவருக்கு கடும் எதிர்ப்பு கிளம்பி இருக்கிறது. கூடவே, அனைத்துவிதமான சர்வேக்களும், ஜோதிமணிக்கு சாதமாக இருப்பதாகவும் சொல்லப்படுகிறது.


 

இந்த நிலையில், நேற்று இறுதிக்கட்ட பிரசாரத்தை கரூர் பேருந்துநிலைய ரவுண்டானா பகுதியில் செய்ய மதியத்துக்குப் பிறகு நேரம் ஒதுக்கீடு கேட்பதில், இரண்டு தரப்பும் முட்டி மோதியது. அப்சர்வர் மற்றும் கோர்ட்டு ஆர்டர்படி காங்கிரஸ் தரப்பு பிரசாரம் பண்ண அனுமதி வழங்கப்பட்டது. அ.தி.மு.க தரப்புக்கு பகல் 1 மணியில் இருந்து 3 மணி வரை நேரம் ஒதுக்கி இருந்தார்கள். ஆனால், கடந்த 15-ம் தேதி இரவு மாவட்ட ஆட்சியர் அன்பழகனை சந்தித்த போக்குவரத்துத் துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர், சந்திப்புக்குப் பிறகு பத்திரிகையாளர்களைச் சந்தித்தார். 


 

அப்போது, ``நாங்கள் குறிப்பிட்டபடி நாளை (நேற்று) மதியம் 1 மணியில் இருந்து மாலை 6 மணி வரை ரவுண்டானா பகுதியில் பிரசாரம் செய்வோம்" என்று பேட்டியளித்தார். இதனால், தி.மு.க தரப்பு அன்று இரவே கலெக்டரை சந்தித்து, முறையிட முயன்றது. ஆனால், முடியவில்லை. இந்த நிலையில், நேற்று மதியம் பத்திரிகையாளர்களைச் சந்தித்த மாவட்ட ஆட்சித்தலைவர் அன்பழகன், ``தி.மு.க மாவட்ட பொறுப்பாளர் செந்தில் பாலாஜியும் வேட்பாளர் ஜோதிமணியும் தி.மு.க வழக்கறிஞர் செந்தில்குமார் என்பவர் தலைமையில் 100 பேர்களை அனுப்பி, எனக்கு கொலைமிரட்டல் விடுத்தார்கள். என் குடும்பமே நடுங்கியது. மாவட்ட எஸ்.பி வந்துதான் என்னை மீட்டார். இதுபற்றி, தேர்தல் ஆணையத்துக்குப் புகார் அனுப்பியுள்ளேன். எனக்கும் பாதுகாப்புக் கேட்டுள்ளேன்" என்று பேட்டியளித்து, அதிர்ச்சியை ஏற்படுத்தினார். தொடர்ந்து, மாலை, `இரண்டு தரப்புக்கும் குறிப்பிட்ட பகுதியில் பிரசாரம் செய்ய அனுமதியில்லை' என்று அவரே தடை போட்டார். இந்த நிலையில், வெங்கமேடு பகுதியில் பிரசாரம் செய்த ஜோதிமணியையும், நாஞ்சில் சம்பத்தையும் கற்களை எறிந்து தாக்க முயன்றனர். ஜோதிமணியின் வாகனத்தையும் உடைத்தனர். செந்தில் என்ற போலீஸ்காரருக்கு இந்த களேபரத்தில் தலையில் காயம் ஏற்பட்டது.


 

இந்த நிலையில், காங்கிரஸ் வேட்பாளர் ஜோதிமணிக்கு போன் செய்த மாவட்ட ஆட்சித்தலைவர் அன்பழகன், ``தேர்தல் ஆணையத்தில் புகார் செய்து, கரூர் நாடாளுமன்றத் தேர்தலை நிறுத்திடுவேன்" என்று பேசிய ஆடியோ ஒன்று சமூகவலைதளங்களில் உலாவருகிறது. அந்த ஆடியோவில் ஜோதிமணியிடம் பேசும் ஆட்சியர், ``நீங்கள் நேஷனல் அளவில் அரசியல்வாதி. நேர்மையான அரசியல்வாதி. உங்களை எனக்கு ரொம்பப் பிடிக்கும். ஆனால், நீங்களும், செந்தில் பாலாஜியும், செந்தில்குமார்ங்கிற வக்கீல் தலைமையில் 100 பேரை அனுப்பி, எனக்கு கொலைமிரட்டல் விடுக்கிறீங்க. இது நியாயமா?. நடுநிலைமையாக செயல்படும் எனக்கு நீங்க தரும் பரிசா?" என்று கேட்கிறார். 


 

அதற்கு ஜோதிமணி, ``சார், நீங்கள் தேர்தல் நடத்தும் அலுவலர். ஆரம்பத்தில் இருந்து தம்பிதுரைக்கும், எம்.ஆர்.விஜயபாஸ்கருக்கும்தான் சாதகமாக செயல்படுறீங்க. நாங்க ஏன் சார் உங்களை மிரட்டப்போறோம். நாங்க முறைப்படி இறுதிக்கட்ட பிரசாரத்தை பண்ண அனுமதி வாங்கின நேரத்தில், `நாங்கள் பிரசாரம் பண்ணுவோம்'னு அமைச்சர் தரப்பு வெளிப்படையாக பேட்டி தருகிறார். நடுவில் ஒரு இரவுதான் டைம் இருக்கு. அவசர நிலை கருதி, உங்களிடம் பெட்டிஷன் கொடுத்து, முறையிடதான் அவர்கள் வந்தார்கள். அவர்கள் உங்களை மிரட்டவெல்லாம் இல்லை. நீங்க அனுமதி கொடுத்த நேரத்தில் அமைச்சர் தரப்பு வம்படியாக பிரசாரம் பண்ணுவோம்னு சொல்றார். அதை தட்டிக் கேட்கலை நீங்க. அதுபற்றி உங்களிடம் முறையிட வந்தா, ஏன் சார் இப்படி மிரட்டுனாங்கனு பொய் சொல்றீங்க. ஆரம்பத்துல இருந்தே நீங்க ஆளுங்கட்சிக்கு சார்பாக நடக்கிறீங்கங்கிறது தெரிஞ்சு போச்சு. தம்பிதுரைக்கு தான் தோத்துறோம்னு பயம். அதான், அமைச்சரை வச்சு, கலாட்டா பண்ண வச்சு, தேர்தலை நிறுத்த முயற்சி செய்கிறார். ஆனா, நாங்க எல்லா விஷயத்திலும் பொறுமையாதான் இருக்கோம்" என்கிறார்.


 

ஆனால், அதை காதில் வாங்காத ஆட்சியர், ``நீங்க நூறு பேரை அனுப்பி என்னை மிரட்டுவீங்க. நான் சும்மா இருப்பேனா? எனக்கு யார் ஜெயிச்சா என்ன, தோத்தா என்ன?. என்னை நூறு பேரு வந்து மிரட்டியதற்கு ஆதாரம் இருக்கு. வழக்கறிஞர் செந்தில்குமார் மீது வழக்கு போடுவேன். தேர்தல் ஆணையத்துல புகார் பண்ணி, கரூர் நாடாளுமன்றத் தேர்தலை நிறுத்துவேன்" என்று மிரட்டலாகச் சொல்கிறார். அதற்கு ஜோதிமணி, ``நாங்க நினைச்சது சரியா போயிட்டு. தேர்தலை நிறுத்த நினைக்கும் ஆளுங்கட்சிக்கு நீங்க உதவுறதா நினைச்சோம். அதை நீங்களே உங்க வாயால ஒத்துக்கிட்டீங்க. தேர்தல் ஆணையத்துக்கே நாங்க நேர்மையா, அமைதியா இருப்பது புரிஞ்சுப்போச்சு. உங்களை நம்பி தேர்தல் நடத்துற பொறுப்பை ஒப்படைச்சுருக்காங்க. நேர்மையா இருங்க சார். மத்தபடி, செந்தில்குமார் மேல என்ன, என்மீதுகூட வழக்கு போடுங்க. நாங்க அதை சட்டப்படி சந்திக்கிறோம். மக்கள் எங்க பக்கம் இருக்காங்க. நேர்மையாக, அமைதியாக இந்தத் தேர்தலை நடத்த நினைக்கிறோம்" என்று முடிக்கிறார்.

கலெக்டர் ஜாேதிமணியிடம் பேசியதாக சாெல்லப்படும் ஆடியாே குறித்து ஜாேதிமணியிடம் பேசினாேம். ``ஆமாம். அந்த ஆடியாே உண்மைதான். என்னிடம், `நூறு பேர் வந்தார்கள், மிரட்டினார்கள்' என்று கலெக்டர் சாென்னதையே சாென்னாரேயாெழிய, அமைச்சரின் அராஜகப்பாேக்குக்கு அவர் பதிலே சாெல்லலை. `உங்க மேல கேஸ் பாேடுவேன், தேர்தலை நிறுத்துவேன்'னு சாென்னார். நான், 'கேஸ் பாேட்டுக்குங்க சார். உண்மை எங்க பக்கம் இருக்கு, மக்கள் எங்கள் பக்கம் இருக்காங்க. அவங்க துணையாேட, நாங்க சட்டப்படி அதை எதிர்காெள்கிறாேம்'னு சாென்னேன். தம்பிதுரைக்கும்,  எம்.ஆர்.விஜயபாஸ்கருக்கும் தாேல்விபயம் வந்துட்டு. தேர்தலை நிறுத்த ஐடியா பண்றாங்க. அதுக்கு கலெக்டர் துணைபாேகிறார். நடந்த உண்மைகள் மக்களுக்கு தெரியட்டும்னுதான் சமூகவலைதளங்களில் அந்த ஆடியாேவை வெளியிட்டாேம்" என்றார்.

ஜோதிமணியிடம் கலெக்டர் பேசிய விவகாரம் கரூரில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.