`அது அ.தி.மு.க காம்ப்ளக்ஸ், அங்கு பணம் வைப்போமா?!'- கொதிக்கும் தங்க தமிழ்ச்செல்வன் | There is no connection between the custodial money and ammk, says thangathamilselvan

வெளியிடப்பட்ட நேரம்: 13:40 (17/04/2019)

கடைசி தொடர்பு:15:47 (17/04/2019)

`அது அ.தி.மு.க காம்ப்ளக்ஸ், அங்கு பணம் வைப்போமா?!'- கொதிக்கும் தங்க தமிழ்ச்செல்வன்

``ஆண்டிபட்டியில் நேற்று பிடிபட்ட பணத்துக்கும் எங்களுக்கும் எந்தவித சம்பந்தமும் இல்லை '' என தங்க தமிழ்ச்செல்வன் தெரிவித்தார்.

தங்க தமிழ்ச்செல்வன்

ஆண்டிபட்டி பேருந்து நிலையம் அருகே உள்ள தனியார் காம்ப்ளக்ஸில் அ.ம.மு.க-வினர் பணம் வைத்திருப்பதாக கிடைத்த தகவலின் அடிப்படையில், உதவி ஆட்சியர், மாவட்ட வருவாய் அலுவலர் தலைமையில் காவல்துறையினரும் தேர்தல் பறக்கும் படையினரும் நேற்று இரவு அதிரடி சோதனையில் ஈடுபட்டனர். அப்போது கட்சியினருக்கும் அதிகாரிகளுக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டு, ஒரு கட்டத்தில் அதிகாரிகளை கட்சியினர் தாக்க முற்பட்டனர். அதிகாரிகளைப் பாதுகாக்க, தற்காப்புக்காக காவல்துறையினர் வானத்தை நோக்கி துப்பாக்கியால் நான்கு முறை சுட்டனர்.

இச்சம்பவத்தை அடுத்து 5 பேர் அதிரடியாக கைது செய்யப்பட்டனர். 150 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. பின்னர், வருமானவரித்துறை அதிகாரிகள், மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர், மாவட்ட ஆட்சியர், காவல்துறையின் தென் மண்டல ஐஜி ஆகியோர் சம்பவ இடத்துக்கு நேரில் வந்து ஆய்வு செய்தனர். 1 கோடியே 46 லட்சம் ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டதாக வருமானவரித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர். இச்சம்பவம் தேனி மாவட்ட அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது.

பணம் பறிமுதல் குறித்து தங்க தமிழ்ச்செல்வன் விளக்கம்

இச்சம்பவம் குறித்து பேசுவதற்காக ஆண்டிபட்டியில் இன்று பத்திரிகையாளர்களைச் சந்தித்த தங்க தமிழ்ச்செல்வன், ``நேற்றோடு பிரசாரம் முடிந்துவிட்டது. தேர்தல் பணிகள் இருக்கிறது. நேற்று நடந்த சம்பவத்தில் எங்கள் மீது குற்றச்சாட்டு வைக்கப்படுகிறது. அதற்கான தன்னிலை விளக்கம் கொடுக்கவே உங்களைச் சந்தித்திருக்கிறேன்" என்று பேச ஆரம்பித்தவர், ``நேற்று கைப்பற்றப்பட்ட பணத்துக்கும் எங்களுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. பணம் இருந்ததாகச் சொல்லப்படும் காம்ப்ளக்ஸ், அ.தி.மு.க பிரமுகருக்குச் சொந்தமானது. அதில் எந்த முட்டாளும் பணத்தை வைக்கமாட்டான். இது திட்டமிட்டு ஜோடிக்கப்பட்ட நாடகம். வருமானவரித்துறை திட்டமிட்டு நாடகமாடுகிறது. கைது செய்யப்பட்ட அ.ம.மு.க நிர்வாகிகள் திட்டமிட்டு அப்ரூவர் ஆக்கப்பட்டிருக்கிறார்கள். வழக்கு பதிவு செய்யும்போது, அடையாளம் தெரியாத 150 பேர் என குறிப்பிட்டிருக்கிறார்கள். தேர்தலின்போது பூத்களில் இருக்கும் எங்கள் ஆட்களைக் கைது செய்யக்கூட திட்டமிடப்பட்டிருக்கலாம்" என்றார்.