`ஓட்டு போட வந்தோம்; இப்படிப் பண்ணிட்டாங்களே!'- தேர்தல் ரத்தால் குமுறும் வேலூர் மக்கள் | 'The last time the election was canceled!' -Vellore voters shouting

வெளியிடப்பட்ட நேரம்: 14:10 (17/04/2019)

கடைசி தொடர்பு:15:46 (17/04/2019)

`ஓட்டு போட வந்தோம்; இப்படிப் பண்ணிட்டாங்களே!'- தேர்தல் ரத்தால் குமுறும் வேலூர் மக்கள்

``வெளியூர்களில் தங்கி வேலை செய்கிறோம். ஓட்டு போடுவதற்காக வேலூருக்கு வந்தோம். திடீரெனத் தேர்தல் ரத்துசெய்யப்பட்டுள்ளதால் ஏமாற்றமடைந்தோம். கடைசி நேரத்தில் தேர்தல் ரத்து தேவையற்ற நடவடிக்கை’’ என்று தேர்தல் ஆணையத்தை வாக்காளர்கள் ஆவேசமாகக் கடிந்துகொண்டனர்.

துரைமுருகன்

வேலூர் நாடாளுமன்றத் தொகுதி தேர்தல் ரத்துசெய்யப்பட்டதற்கு பொதுமக்களில் பெரும்பாலானோர் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். பல்வேறு தரப்பிலிருந்து நம்மிடம் கருத்து கூறிய வாக்காளர்கள், ``தமிழகத்தில் பல இடங்களில் புகார்கள் வந்தும் தேர்தல் ஆணையம் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. துரைமுருகன் மட்டும்தான் பணம் கொடுக்கிறாரா, மற்ற தொகுதிகளில் வேறு எந்தக் கட்சியும் பணம் தரவில்லையா? இறுதிக்கட்ட பிரசாரம் முடிந்த நிலையில், தேர்தல் ரத்து என்பது வேட்பாளர்களுக்கு மட்டுமன்றி எங்களுக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. 

இதன்மூலம் மக்கள் வரிப்பணம்தான் வீணடிக்கப்படுகிறது. வெளியூர்களில் தங்கி வேலை செய்கிறோம். ஓட்டு போடுவதற்காக வேலூருக்கு வந்தோம். திடீரெனத் தேர்தல் ரத்து பண்ணிட்டாங்க. இதனால் நாங்கள் ஏமாற்றமடைந்துள்ளோம். கடைசி நேரத்தில் தேர்தல் ரத்து தேவையற்ற நடவடிக்கையாகக் கருதுகிறோம். தேர்தலை நடத்திய பிறகு வேண்டுமானால் சம்பந்தப்பட்ட வேட்பாளர் மீதான குற்றம் குறித்து விசாரணை நடத்தியிருக்கலாம். வாக்காளர்களாகிய எங்களை அலைக்கழிக்கிறார்கள். தமிழகத்துக்கே தலைக்குனிவு’’ என்றனர் ஆவேசமாக.

மேலும் சில வாக்காளர்கள், ``தேர்தல் ரத்து சரியான முடிவுதான். கட்சியினர் ஓட்டுக்காகப் பணம் கொடுப்பதைத் தடுக்க வேண்டும். தேர்தலை நேர்மையாகவும், நியாயமாகவும் நடத்த வேண்டும். அரசியல்வாதிகளிடம் பிடிபட்ட பணம் குறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும். தேர்தல் நடப்பதற்கு முன்பே இவ்வளவு குளறுபடி என்றால், ஓட்டு போட்டுத் தேர்ந்தெடுக்கப்பட்ட பிறகு என்ன நடக்கும்? தேர்தலை ரத்துசெய்தது ஒரு விதத்தில் நல்லதுதான். ஒரு சிறந்த திறமையான நபர் தேர்தலில் வெற்றிபெற முடியவில்லை. பணம் படைத்தவர்கள்தான் போட்டியிட முடிகிறது’’ என்றனர்.