``லட்சம் செலவானாலும் ஓட்டு போட வந்துடுவோம்!" - வெளிநாட்டில் வேலைபார்க்கும் புதுக்கோட்டை இளைஞர்கள் | "Our duty is to vote!" - Pudukkottai youth group traveled from abroad for elections

வெளியிடப்பட்ட நேரம்: 18:33 (17/04/2019)

கடைசி தொடர்பு:18:33 (17/04/2019)

``லட்சம் செலவானாலும் ஓட்டு போட வந்துடுவோம்!" - வெளிநாட்டில் வேலைபார்க்கும் புதுக்கோட்டை இளைஞர்கள்

"`ஓட்டு போடுவது நமது ஜனநாயகக் கடமை, அதை நாம் செய்யாவிட்டால், அது நம் நாட்டிற்குச் செய்யும் துரோகம்' என்று அத்தா அடிக்கடி சொல்வார். `வாக்காளர் பட்டியலிலிருந்து பெயர் நீக்கப்பட்டுவிட்டால், அது நாம் இறந்துபோனதற்குச் சமம்' என்பார்."

``லட்சம் செலவானாலும் ஓட்டு போட வந்துடுவோம்!

மிழகத்தில் 100 சதவிகித வாக்குப்பதிவு நடைபெற வேண்டும் என்ற இலக்கை முன்னிறுத்தித் தேர்தல் ஆணையம், பொதுமக்களிடம் பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை நடத்திவருகிறது. ஆனாலும், தமிழகத்தில் உள்ள லட்சக்கணக்கான இளைஞர்கள் குடும்ப வறுமை காரணமாக, வெளிமாநிலங்களிலும், வெளிநாடுகளிலும் பணிபுரிந்து வருகின்றனர். இங்குள்ளவர்கள் பெரும்பாலும், தேர்தலன்று வாக்களிக்க முடியாத சூழலினால், 100 சதவிகித வாக்குப்பதிவு என்பது இன்றளவும் கானல் நீராகவே உள்ளது. இது ஒருபுறம் என்றால்... மறுபுறம், எத்தனை தடைகள் வந்தாலும் சரி, எவ்வளவு செலவானாலும் சரி, நாங்கள் கட்டாயம் ஓட்டு போட வந்துவிடுவோம் என்று புதுக்கோட்டையைச் சேர்ந்த இளைஞர்கள் சிலர் வாக்களிப்பதற்காகவே வெளிநாடுகளிலிருந்து விமானத்தில் சொந்த ஊருக்கு வந்து தங்கள் ஜனநாயக கடமையை ஆற்றிவிட்டு மீண்டும் வெளிநாடு திரும்புகின்றனர்.

புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகே மங்களநாடு, அரசர்குளம் கிராமங்கள் உள்ளன. இந்தக் கிராமங்களைச் சேர்ந்த இளைஞர்கள் சிலர்தான் வாக்களிக்க, சொந்த ஊருக்கு வருகின்றனர். வாக்களித்த மறுநாள் மீண்டும் வெளிநாட்டுக்குச் சென்று பணியில் சேர்கின்றனர். சொந்த ஊரில் இருந்துகொண்டே வாக்களிக்கத் தவறும் சில இளைஞர்கள் மத்தியில், வாக்களிப்பதற்காகவே வெளிநாடுகளிலிருந்து கடல் கடந்து லட்சம் ரூபாய் வரையிலும் செலவுசெய்து வாக்களித்துவிட்டுச் செல்லும் இந்த இளைஞர்களைப் பலரும் பாராட்டி வருகின்றனர்.

புதுக்கோட்டை இளைஞர்

அரசர்குளத்தைச் சேர்ந்த சேக் இஸ்மாயில் ஓட்டு போடுவதற்காக முதல் ஆளாக ஊருக்கு வந்துவிட்டார். தொடர்ந்து மங்களநாடு முகமது பாரூக், சையது முகமது, இதயத்துல்லா, குரு அப்துல்லா, பீர் முகமது, காசிம், இதயதுல்லா, ஜபருல்லா என 10-க்கும் மேற்பட்ட இளைஞர்கள் ஓட்டு போடுவதற்காகவே நாடு திரும்பியிருக்கின்றனர்.

மங்களநாடு முகமது பாரூக் கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக வெளிநாட்டில் இருந்தாலும், ஊராட்சிமன்றத் தேர்தல் தொடங்கி நாடாளுமன்றத் தேர்தல் வரையிலும் அனைத்துத் தேர்தல்களிலும் வாக்களிக்கத் தவறுவதில்லை. பாரூக்கின் ஜனநாயக கடமை உணர்ச்சிதான் அந்தக் கிராமத்தினர் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்தியுள்ளது. இவருடைய கடமைதவறாத உணர்வைப் பார்த்து, அக்கிராமங்களில் உள்ள பல இளைஞர்கள் ஓட்டு போடுவதற்காக, சொந்த ஊருக்கு வந்திருக்கின்றனர்.

பாரூக்கிடம் பேசினோம், ``எங்கள் அத்தா காலத்தில் எல்லாம் ஓட்டு போடுறதுக்காக, வெளிநாட்டிலிருந்து வருவது ரொம்ப கஷ்டம். எவ்வளவு கஷ்டம் வந்தாலும், அதையெல்லாம் பொருட்படுத்தாமல், ஓட்டு போடுறதுக்காக, அத்தா ஊருக்குக் கிளம்பி வந்துவிடுவார். அப்ப நான் சின்ன பையன். `ஓட்டு போடுவது நமது ஜனநாயகக் கடமை, அதை நாம் செய்யாவிட்டால், அது நம் நாட்டிற்குச் செய்யும் துரோகம்' என்று அத்தா அடிக்கடி சொல்வார். `வாக்காளர் பட்டியலிலிருந்து பெயர் நீக்கப்பட்டுவிட்டால், அது நாம் இறந்துபோனதற்குச் சமம்' என்பார். அப்படித்தான் ஒரு தடவை ரொம்ப முயன்றும் அவரால் வரமுடியாமல் போய்விட்டது. உடனே வீட்டுக்கு ஒரு கடிதம் எழுதி அனுப்பினார். அதில், `வீட்டில் உள்ளவர்கள் மறக்காமல் ஓட்டு போடுங்கள்' என்று எழுதியிருந்தார். அந்தளவுக்கு அத்தா கடமை தவறாதவர். அத்தாகிட்ட இருந்துதான் எனக்கும் இந்தப் பழக்கம் வந்தது.

புதுக்கோட்டை

அத்தாவுக்கு அப்புறம், இப்ப நான் வாக்களிப்பதைக் கடமையாகக் கொண்டிருக்கிறேன். மலேசியாவில் வேலை செய்து வரும் நான், 20 வருஷமாக உள்ளூர் தேர்தல் தொடங்கி நாடாளுமன்றத் தேர்தல் என அனைத்துத் தேர்தல்களுக்கும் மலேசியாவிலிருந்து ஊருக்கு வந்துவிடுவேன். வாக்களித்த பிறகுதான் மலேசியாவுக்குப் போவேன். அப்படித்தான் ஒரு தேர்தலில், `வெளிநாட்டில் இருக்கிறார்' என்று கூறி என்னுடைய பெயரை நீக்கிவிட்டனர். அப்புறம் போராடி என் பெயரை வாக்காளர் பட்டியலில் சேர்த்து அந்த முறையும் ஊருக்கு வந்து வாக்களித்துவிட்டுச் சென்றேன். அன்றிலிருந்து இன்று வரையிலும் பட்டியலிலிருந்து என்னுடைய பெயரை நீக்காமல் பார்த்துக்கொண்டு வருகிறேன். ஆரம்பத்தில், `ஓட்டு போடுவதற்காக, லட்சக்கணக்கில் செலவு செஞ்சிக்கிட்டு ஊருக்குப் போகிறாயே, நீ பிழைக்கத் தெரியாதவன் என்று எல்லாம் நண்பர்கள் கேலி, கிண்டல் செஞ்சிருக்காங்க. அதையெல்லாம் நான் பொருட்படுத்தியதே இல்லை. சிரிச்சிக்கிட்டே வந்துவிடுவேன். ஆரம்பத்தில் என்னைக் கேலி, கிண்டல் செய்த அந்த நண்பர்கள் எல்லாம் இப்ப ஓட்டு போடுறதுக்காக, சிங்கப்பூர், துபாய் நாடுகளிலிருந்து செலவு செய்து ஊருக்கு வந்து ஓட்டு போட்டுவிட்டுச் செல்கின்றனர். இப்போது, ஒருசில முதலாளிகளும், நிறுவனத்தினருமே ஓட்டு போட விடுமுறை கொடுத்து இந்தியாவுக்கு அனுப்பிவைக்கிறார்கள். ஆரம்பத்தில் ஓட்டு போடுவதற்காக, ஊருக்கு வருவதற்குக் கொஞ்சம் கஷ்டம் இருந்தது. ஓட்டு போட்டுவிட்டு விரலில் வைக்கிற மையைப் பார்த்தால் அனைத்துக் கஷ்டமும் பறந்துபோயிடும்" என்றார், சிரித்தபடியே.

ஓட்டுப்போட வரும் புதுக்கோட்டை இளைஞர்கள்

ஓட்டு போடுவதற்காகத் தாயகம் திரும்பிய மற்ற சில இளைஞர்களிடம் பேசினோம், ``பாரூக் அண்ணனின் கடமை உணர்ச்சிதான் எங்களையும் ஓட்டு போடுவதற்காக வரவழைத்தது. நாளை ஓட்டு போடுவதற்காக மேலும் சில இளைஞர்கள் ஊருக்கு வந்துவிடுவார்கள். வழக்கமாக, தேர்தல்களின் போது, ஆங்காங்கே சுவர் ஓவியம், கட்சிக்கொடிகள், பிரசாரம் என்று ஊரே பரபரப்பாக இருக்கும். தற்போது, அந்தப் பரபரப்பு இல்லை. நம்முடைய ஒவ்வொரு ஓட்டும் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது. எனவேதான் உள்ளூரில் இருந்துகொண்டே ஓட்டு போடாமல் இருப்பவர்கள் நிச்சயம் இனிவரும் காலங்களில் தவறாமல் வாக்களிக்க வேண்டும் என்பதுதான் எங்களது விருப்பம். எங்கள் மாவட்டத்திற்கு நாடாளுமன்றத் தொகுதி இல்லை என்பது வருத்தமளிக்கிறது. விரைவில் புதுக்கோட்டைக்கு நாடாளுமன்றத்  தொகுதி கிடைக்கும் என நம்புகிறோம். வெளிநாடுகளில் நீண்ட வருடம் சுகபோக வாழ்க்கை வாழ்ந்தாலும், நாங்கள் இந்தியர்கள், தமிழர்கள் என்பதுதான் எங்களுக்குப் பெருமை" என்றனர்.

வாக்களிப்பதற்காகவே தாயகத்துக்கு வரும் இளைஞர்களுக்கு ஒரு ராயல் சல்யூட்.


டிரெண்டிங் @ விகடன்