Published:Updated:

தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக்கணிப்பு? - குழப்பத்தில் தேர்தல் ஆணையம்

தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக்கணிப்பு? - குழப்பத்தில் தேர்தல் ஆணையம்
தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக்கணிப்பு? - குழப்பத்தில் தேர்தல் ஆணையம்

அகில இந்திய அளவில் ஏழு கட்டங்களாக மக்களவை தேர்தல் நடக்கிறது. இதன்படி, முதல்கட்ட தேர்தல் வாக்குப்பதிவு ஏப்ரல் 11-ம் தேதியன்று சில மாநிலங்களில் முடிந்துவிட்டது. தமிழகம் இரண்டாம் கட்டத் தேர்தல் நடக்கும் மாநிலங்களின் லிஸ்டில் இடம்பெற்றுள்ளது. நாளை தமிழகத்தில் வாக்குப் பதிவு நாள். இதன்தொடர்ச்சியாக, ஏழாவது கட்ட தேர்தல் வேறு சில மாநிலங்களில் மே 19-ம் தேதியன்று நடக்கிறது.

இந்தநிலையில், தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பு நடத்தலாமா, கூடாதா?... என்பதில் தலைமைத் தேர்தல் கமிஷன் அதிகாரிகள் குழப்பி வருகிறார்கள். இதற்கு முந்தைய தேர்தல்களில், அனைத்துகட்ட வாக்குகளைப் பதிவு செய்துவிட்டு வெளியே வரும் வாக்காளர்களிடம் மீடியாவைச் சேர்ந்தவர்கள் தேர்தலுக்குப் பிந்தைய சர்வேயை நடத்துவார்கள். ரிசல்ட்டை வெளியிட மாட்டார்கள். கடைசி வாக்குப்பதிவு முடியும் நாளன்று மாலை, தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பை மீடியாக்கள் வெளியிடும். இதே முறைதான் இந்தத் தேர்தலில் பின்பற்றப்படுகிறதா என்று கேட்டால்... அதுதான் இல்லை.

தேர்தல் கமிஷனின் குழப்பமான அறிவிப்பால் ஊடகங்கள் குழம்பிக் கிடக்கின்றன. முதல்கட்ட தேர்தல் வாக்குப்பதிவு நடந்த நாள் ஏப்ரல் 11. கடைசிக்கட்ட தேர்தல் நடக்கப்போகும் நாள் மே 19. இடையில் நடக்கும் வாக்குப்பதிவுகளின் போது சர்வே நடத்தி, ரிசல்டை மே 19-ம் தேதியன்று மாலை வாக்குப்பதிவு முடியும் 6 மணிக்குப் பிறகு வெளியிடலாம் என்கிற முந்தைய நடைமுறையை தற்போது மாற்றியுள்ளனர். தேர்தல் கமிஷன் உத்தரவுப் படி, வாக்குப்பதிவு நாளன்று எந்த ஒரு சர்வேயும் நடத்தக் கூடாது. அதாவது, தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக்கணிப்புக்கு முற்றிலுமாக தடா போட்டுவிட்டது. சிக்கிம் மாநிலத்தில் கடந்த ஏப்ரல் 11-ம் தேதியன்று வாக்குப்பதிவு முடிந்துவிட்டது. அதன் பிறகு, வாக்காளர்களிடம் தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக்கணிப்பு சர்வேயை டெல்லியைச் சேர்ந்த ஆய்வு நிறுவனத்தினர் மாநிலத் தலைநகரமான கேங்டாக்கில் நடத்தினர்.

இந்தத் தகவல் கிடைத்து, ஆய்வுக் குழுவினரைப் பற்றி உள்ளூர் தேர்தல் அதிகாரி புகார் செய்ததன் பேரில் அவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். ஆனால், பெரும்பாலான மாநிலங்களில் மீடியாக்கள் கருத்துக்கணிப்பு சர்வேயை நடத்தி வருகின்றன. இதை அங்குள்ள மாநிலத் தேர்தல் கமிஷன் அதிகாரிகளும் கண்டுகொள்ளாமல் இருக்கிறார்கள். இதுமாதிரி குழப்பமான சூழ்நிலையில், தமிழகக் கூடுதல் தலைமைத் தேர்தல் அதிகாரி பாலாஜியிடம் கேட்டோம். அவர் கூறுகையில், `இதுபற்றி டெல்லி தேர்தல் கமிஷன் தலைமை அதிகாரிகளிடம் பேசிவிட்டு பிறகு சொல்கிறேன்' என்றார். அதன்படி, அவர் மீண்டும் நம்மைத் தொடர்புகொண்டார். ``தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக்கணிப்பு சர்வே நடத்த தடை செய்யப்பட்டுள்ளது '' என்று முடித்துக்கொண்டார். ஆக, தமிழகத்தில் இதுதான் நிலைமை.

வாக்குப்பதிவு முடிந்து வெளியே வரும் வாக்காளர்களிடம் மீடியாக்கள் சர்வே நடத்தினால், அங்குள்ள தேர்தல் அதிகாரி புகார் செய்யும்பட்சத்தில் போலீஸ் நடவடிக்கை எடுக்கும். டெல்லி பத்திரிகையாளர்கள் இதுகுறித்து என்ன சொல்லுகிறார்கள் என விசாரித்தோம். ``தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக்கணிப்பு சர்வேயை வெளிப்படையாக நடத்தினால்தானே தடை. உதாரணத்துக்குத் தமிழகத்தில் ஏப்ரல் 18-ம் தேதியன்று வாக்குப்பதிவு நாள். அன்று வாக்குகளைப் பதிவு செய்த வாக்காளர்களிடம் உடனே போகாமல், பிறகு அவர்களின் வீடு தேடிப்போய் ரகசியமாகச் சந்தித்து சர்வே நடத்த முடியும். மே 19-ம் தேதி (கடைசிக் கட்ட வாக்குப்பதிவு நாள்) மாலை நேரத்துக்குள் அவர்களிடம் முழுமையான சர்வே  நடத்தி அதன் ரிசல்டை வெளியிட்டால் தேர்தல் ஆணையம் என்ன செய்யும்?. இதுதான் நடக்கப்போகிறது '' என்கிறார்கள் ஆவேசமாக. ஆக, தேர்தல் கமிஷனுக்கும் மீடியாக்களுக்கும் பனிப்போர் ஆரம்பித்துவிட்டது. மே 19-ம் தேதியன்று என்ன நடக்கும் என்று பொறுத்திருந்து பார்ப்போம்.