Published:Updated:

``என் வாக்கு விற்பனைக்கு அல்ல; செல்ஃபி எடுத்தால் 50 சதவிகிதம் ஆஃபர்” - அசத்திய கரூர் இளைஞர்

``என் வாக்கு விற்பனைக்கு அல்ல; செல்ஃபி எடுத்தால் 50 சதவிகிதம் ஆஃபர்” - அசத்திய கரூர் இளைஞர்
``என் வாக்கு விற்பனைக்கு அல்ல; செல்ஃபி எடுத்தால் 50 சதவிகிதம் ஆஃபர்” - அசத்திய கரூர் இளைஞர்

'Myvotenotforsale' என்ற செல்ஃபி போர்டு முன்பு போட்டோ எடுத்துக்கொள்பவர்களுக்கு, கரம் உணவில் 50 சதவிகிதம் ஆஃபர்' என்று கரூர் இளைஞரின் அறிவிப்பால், அவரது கடைக்கு இளைஞர்களும், இளைஞிகளும் படையெடுத்தனர்.


 

தமிழகத்தில் பரபரப்பு காட்டிவந்த மக்களவை பொதுத்தேர்தல் மற்றும் 18 தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் ஒருவழியாக இன்று நடைபெற்று வருகிறது.  இந்த நிலையில், கடந்த இருபது நாள்களுக்கு மேலாக அனைத்து தொகுதிகளிலும் பிரசாரம் அனல் பறந்தது. அதோடு, பல தொகுதிகளில் வாக்காளர்களுக்கு 500, 1000 என்று பணத்தை வாரிக் கொடுத்தனர் வேட்பாளர்கள். இதற்கிடையில், 'என் வாக்கு விற்பனைக்கு அல்ல' என்று சமூகவலைதளங்களில் இளைஞர்கள் பலர் பதிவுகள் போட்டு, இந்தத் தேர்தலை பணம் பெறாமல், நேர்மையாக எதிர்கொண்டு வாக்களிக்கும் நல்ல முயற்சியை எடுத்திருக்கிறார்கள். அந்த வகையில், கரூர் பேருந்துநிலையம் அருகே கரம் உணவுப்பொருள்களை விற்பனை செய்யும் பட்டதாரி இளைஞரான ஜெய்சுந்தரின் அறிவிப்பு, இளைஞர்களையும், இளைஞிகளையும் வெகுவாக கவர்ந்தது. அதாவது, 'Myvotenotforsale' என்று தேர்தல் விழிப்புணர்வு ஹேஷ்டேக் எழுதப்பட்ட சதிர வடிவ அட்டையால் ஆன போர்டில் நின்று போட்டோ எடுத்துக்கொள்பவர்களுக்கு, கரம் உணவுப்பொருள்கள் 50 சதவிகிதம் ஆஃபர் கொடுக்கப்படும்' என்று வித்தியாசமாக அறிவித்திருந்தார். இதனால், அவரது கடைக்கு நூற்றுக்கணக்கான இளைஞர்களும், இளைஞிகளும் ஆர்வமுடன் குவிந்தனர். அதோடு, ஜெய்சுந்தர் இந்தத் தேர்தல் விழிப்புணர்வு ஹேஷ்டேக்கை தனது வீட்டு கேட்டிலும் ஒட்டி வைத்து, பணம் கொடுக்க வந்த வேட்பாளர்களுக்கு கிலியை ஏற்படுத்தி இருக்கிறார்.


 

இதுகுறித்து, ஜெய்சுந்தரிடம் பேசினோம், ``நான் டிகிரி முடிச்சுட்டு, பிரபல தனியார் கம்பெனிகள்ல வேலை பார்த்தேன். ஆனா, அந்த வேலைகள் எனக்கு போர் அடிச்சுச்சு. அதனால், ஒரு வருஷத்துக்கு முன்னாடி இந்த இடத்துல கரம் உணவுப் பொருள்களை விற்பனை செய்ய தொடங்கினேன். பகல்ல கூல்ட்ரிங்க்ஸ் கடையும் நடத்துறேன். எங்கம்மா ஆசிரியையா இருக்காங்க. அவங்கதான் எனக்குள்ள பல நல்ல விஷயங்களை விதைச்சாங்க. தொடர்ச்சியா எல்லா தேர்தல்களிலும் எங்கம்மா ஓட்டுக்குப் பணம் வாங்கமாட்டாங்க. அதனால், எனக்குள்ளும் அந்த விழிப்புணர்வு வந்துச்சு. அதோட, சகாயம் ஐ.ஏ.எஸ் அவர்களை வழிகாட்டுதலா கொண்டு செயல்படும் மக்கள் பாதை அமைப்பில், கரூர் நகர அமைப்பாளராகவும் இருக்கிறேன். இந்நிலையில்தான், எந்தத் தேர்தலிலும் இல்லாத அளவுக்கு இந்தத் தேர்தலின்போது எல்லா வாக்காளர்களையும் இணைக்கும்விதமா சமூகவலைதளங்கள் பாலமா இருக்கு. அதனால், அதுமூலமா, `ஓட்டை காசுக்கு விக்காதீங்க'னு விளம்பரம் பண்ணினேன். நல்ல ரெஸ்பான்ஸ்.


 

கூடவே, அடுத்த முயற்சியா என் கடையில், `தேர்தல் விழிப்புணர்வு வாசகங்களைக் கொண்ட போர்டு முன்பு நின்று செல்ஃபி எடுத்துக்கொள்பவர்களுக்கு, உணவுப் பொருள்களில் 50 சதவிகிதம். இன்று மாலை முதல் இரவு வரை மட்டும் ஆஃபர் தரப்படும்'னு சமூக வலைதளங்களில் அறிவிப்பு செஞ்சேன். நானே எதிர்பார்க்காத அளவுக்கு நூற்றுக்கணக்கான இளைஞர்கள் வந்தார்கள். பெரியவர்களும் வந்தாங்க. `எங்க வீட்டுல ஓட்டுக்கு காசு வாங்கிட்டோம். எங்களுக்கு ஆஃபர் வேண்டாம்'னு ஒருத்தர் சொன்னார். இன்னும் சிலர், 'தம்பி நான் கண்டிப்பா காசு வாங்குவேன். இதுல நின்னு போட்டா எடுத்தா, அதனால் பணம் ’

கிடைக்காம போயிரும்'னு பதறினாங்க. இன்னும் சிலர், 'நாங்க எந்தத் தேர்தலிலும் ஓட்டுக்குப் பணம் வாங்குறதுல்லை. ஆனா, உங்க சேவையை பாராட்டி, ஆஃபரில் சாப்பிடாம, முழுதொகையையும் தருகிறோம்'னு ஊக்கப்படுத்தவும் செஞ்சாங்க. என் கடையில் சாதா கரம், முட்டை கரம், சம்சா கரம், எள்ளு அடை கரம், அப்பளக்கரம், அப்பள செட்டு, தட்டுவடை செட்டு, முட்டை செட்டு பல உணவுப் பொருள்களை விற்கிறேன். அதுல ரேட்டுல பாதி ஆஃபர் கொடுத்தேன். ஏதோ, நாலு பேருக்கு தேர்தல் சம்பந்தமான விழிப்புணர்வு கொடுத்த திருப்தி ஏற்பட்டிருக்கு" என்றார் மகிழ்ச்சியாக!.

அடுத்த கட்டுரைக்கு