தென்சென்னை தொகுதியில் குறைந்த வாக்குப்பதிவு - என்ன காரணம்? | election status as per noon, low number of people turned out in South chennai constituency

வெளியிடப்பட்ட நேரம்: 15:15 (18/04/2019)

கடைசி தொடர்பு:15:16 (18/04/2019)

தென்சென்னை தொகுதியில் குறைந்த வாக்குப்பதிவு - என்ன காரணம்?

தேர்தல்

வேலூர் தவிர்த்து, தமிழகத்தின் 38 தொகுதிகளும் 17-வது நாடாளுமன்றத்துக்கான தங்களது உறுப்பினரைத் தேர்ந்தெடுக்க மிகவும் பரபரப்பாக வாக்களித்துக்கொண்டிருக்கின்றனர். சென்னையைப் பொறுத்தவரை தென் சென்னை தொகுதியில் தி.மு.க சார்பில் தமிழச்சி தங்கபாண்டியன், அ.தி.மு.க சார்பில் தற்போதைய நாடாளுமன்ற உறுப்பினர் டாக்டர் ஜெயவர்தன், அ.ம.மு.க சார்பில் இசக்கி சுப்பையா, மக்கள் நீதி மய்யம் சார்பில் முன்னாள் ஐஏஎஸ் ரங்கராஜன்  உள்ளிட்டவர்கள்  போட்டியிடுகின்றனர்.

ஆனால், அதிக மக்கள் தொகை உள்ள தொகுதியாகக் கணிக்கப்படும் தென் சென்னைத் தொகுதியில்,  காலையில் இருந்து பதிவான வாக்குகளின் அடிப்படையில், குறைந்த எண்ணிக்கையிலான வாக்காளர்களே வாக்களிக்க வந்துள்ளதாகக் கூறப்படுகிறது. அதிக எண்ணிக்கையிலான முதியோர்கள் வாக்களிக்க வந்திருந்தாலும், முதல்முறை வாக்காளர்களும் நடுத்தர வயதுடைய வாக்காளர்களும் மிகக் குறைவான எண்ணிக்கையிலேயே வந்திருந்தது கவனிக்கத்தக்கதாக இருந்தது.  இதுகுறித்து வாக்களிக்க வந்திருந்த தொகுதி மக்கள் சிலர் கூறுகையில், "கடந்த முறை தேர்தலின்போது நாங்கள் வாக்களிக்க வந்தபோது இருந்த கூட்டத்தைவிட, இந்த முறை வாக்குச்சாவடிகளில் மக்கள் கூட்டம் குறைவாகவே இருக்கிறது. கடந்த முறை தேர்தலின்போது இருந்த ஜெயலலிதா மற்றும் கருணாநிதி மாதிரியான தலைவர்களின் மாஸ் ஈர்ப்பு இந்தத் தேர்தலில் இல்லாதது காரணமாக இருக்கலாம். மேலும், இளைஞர்களுக்கான வேலைவாய்ப்பு உள்ளிட்ட பிரச்னைகளில், கடந்த தேர்தலில் தீர்வு காண்பதாக வாக்குறுதி அளித்த கட்சிகள் மக்களை ஏமாற்றிவிட்டார்கள். அதனால், மக்களிடையே நம்பிக்கை குறைந்துள்ளது. இருந்தாலும் இன்று நாள் முழுக்க கவனித்தால் மட்டுமே தென் சென்னை தொகுதியில்  மொத்தமாக வாக்களிக்க வந்தவர்களின் எண்ணிக்கை விவரம் தெரியவரும்" என்றார்.