Published:Updated:

`இதனால்தான் வாக்குச் சீட்டு முறையை அமல்படுத்தனும்னு வலியுறுத்துறோம்!' - கனிமொழி

இ.கார்த்திகேயன்
`இதனால்தான் வாக்குச் சீட்டு முறையை அமல்படுத்தனும்னு வலியுறுத்துறோம்!' - கனிமொழி
`இதனால்தான் வாக்குச் சீட்டு முறையை அமல்படுத்தனும்னு வலியுறுத்துறோம்!' - கனிமொழி

”மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தில் தொடர்ந்து பழுதுகள் ஏற்படுவதால்தான் வாக்குச்சீட்டு முறையை அமல்படுத்த வேண்டும் என வலியுறுத்தி வருகிறோம்” என தூத்துக்குடி நாடாளுமன்றத் தொகுதி தி.மு.க., வேட்பாளர் கனிமொழி தெரிவித்துள்ளார்.

தூத்துக்குடி நாடாளுமன்றத் தொகுதியின் தி.மு.க., வேட்பாளர் கனிமொழி சென்னை, மயிலாப்பூரில் உள்ள புனித எப்பாஸ் பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் தன் கணவர் அரவிந்தனுடன் தனது வாக்கையும் பதிவு செய்தார். தொடர்ந்து, சென்னையில் இருந்து விமானம் மூலம் தூத்துக்குடி வந்த கனிமொழி, தூத்துக்குடி மில்லர்புரத்தில் உள்ள புனித மரியன்னை ஆண்கள் மேல்நிலைப்பள்ளி வாக்குச்சாவடியை பார்வையிட்டார்.

தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய  அவர்,”தமிழகத்தில் மதச்சார்பற்ற வேட்பாளர்கள் வெற்றி பெறும் சூழலே நிலவுகிறது. தூத்துக்குடியில் பா.ஜ.க., வேட்பாளர் தமிழிசை செளந்தரராஜனும் அமைச்சர் கடம்பூர் ராஜூவும் காவல்துறைக்கு போட்ட உத்தரால் தி.மு.க.,வினருக்கு பல நெருக்கடிகளை ஏற்படுத்தி உள்ளது. தேர்தல் ஆணையம் தொடர்ந்து ஆளும்கட்சிக்கே ஆதரவாகச் செயல்பட்டு வருகிறது. மாற்றுத்திறனாளிகளுக்கும், வயதானவர்களுக்கும் வசதிகளை இன்னும் கூடுதலாக செய்திருக்கலாம் என்ற கருத்து பல பகுதிகளில் இருந்து வந்துள்ளது.

பல வாக்குச்சாவடிகளில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் பழுதாகி உள்ளது. இந்த குறைபாட்டால்தான் மீண்டும் வாக்குச்சீட்டு முறையை அமல்படுத்த வேண்டும் என தி.மு.க., உள்ளிட்ட எதிர்கட்சிகள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றன. வளர்ந்த நாடுகள் கூட்ட வாக்குச்சீட்டு முறைக்குச் சென்றுவிட்டது. வாக்குச்சீட்டு முறையைப் பின்பற்ற தேர்தல் ஆணையம் பரிசீலனை செய்ய வேண்டும்.” என்றார். தொடர்ந்து, பல வாக்குச்சாவடிகளைப் பார்வையிட்டார். ஒவ்வொரு வாக்குச்சாவடியிலும் இளம் வாக்காளர்கள் கனிமொழியுடன் செல்பி எடுத்துக் கொண்டனர்.