Published:Updated:

`சிசிடிவி வேலை செய்யல!' - கோவை வாக்குப் பதிவு இயந்திரங்கள் உள்ள இடத்தில் திடீர் பரபரப்பு

`சிசிடிவி வேலை செய்யல!' - கோவை வாக்குப் பதிவு இயந்திரங்கள் உள்ள இடத்தில் திடீர் பரபரப்பு
`சிசிடிவி வேலை செய்யல!' - கோவை வாக்குப் பதிவு இயந்திரங்கள் உள்ள இடத்தில் திடீர் பரபரப்பு

கோவையில் வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைத்துள்ள மையத்தில் உள்ள சிசிடிவி கேமராக்கள் இயங்கவில்லை என்று எழுந்த புகாரை அடுத்து கோவை கலெக்டர் ஆய்வு மேற்கொண்டுள்ளார்.

கோவை நாடாளுமன்றத்துக்குட்பட்ட கோவை வடக்கு, தெற்கு, சிங்காநல்லூர், கவுண்டம்பாளையம், சூலூர், பல்லடம் ஆகிய
6 சட்டமன்றத் தொகுதிகளில் கடந்த 18-ம் தேதி நடைபெற்ற வாக்குப் பதிவுக்குப் பின்னர், வாக்களிக்கப்பட்ட இயந்திரங்கள் கோவை அரசு தொழில்நுட்பக் கல்லூரிக்கு பலத்த பாதுகாப்புடன் கொண்டு செல்லப்பட்டன. அங்கு வாக்குப் பதிவு இயந்திரங்களுக்கென தனியே ஒதுக்கப்பட்டிருந்த பாதுகாப்பு அறையில் (Strong room) அத்தனை வாக்குப் பெட்டிகளும் பாதுகாப்பாக வைக்கப்பட்டன. இதையடுத்து, கோவை மாவட்ட ஆட்சியர் ராசாமணி, வேட்பாளர்கள், முகவர்கள் முன்னிலையில் அந்த அறைகளுக்கு சீல் வைக்கப்பட்டது.

3 அடுக்கு பாதுகாப்பும், வாக்குப் பதிவு மையத்தில் 144 கண்காணிப்புக் கேமராக்களும் பொறுத்தப்பட்டு 24 மணி நேரம் பாதுகாப்பும் போடப்பட்டிருந்தது. இந்த நிலையில், இன்று காலை 9.45 மணியளவிலிருந்து பெரும்பாலான சிசிடிவி கேமராக்கள் வேலை செய்யவில்லை என அரசியல் கட்சியின் முகவர்கள் கோவை கலெக்டர் ராசாமணியிடம் புகார் அளித்துள்ளனர். இதையடுத்து, வாக்குப் பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள கோவை அரசு தொழில்நுட்பக் கல்லூரிக்கு விரைந்த கலெக்டர் ஆய்வு மேற்கொண்டார். அதையடுத்து, சுமார் 3 மணி நேரத்துக்கும் மேலாக சிசிடிவி கேமராக்களை சரி செய்யும் பணியில் தொழில்நுட்ப பிரிவினர் ஈடுபட்டு சரி செய்தனர்.

இதைத் தொடர்ந்து பத்திரிகையாளர்களைச் சந்தித்த கோவை கலெக்டர், ``வயர்கள் பழுதானதால் கண்காணிப்புக் கேமராவில் காட்சிகள் தெரியாமல் இருந்துள்ளன. தற்போது  பழுதடைந்த நிலையில் உள்ள அனைத்து வயர்களையும் மாற்றம் செய்ய உத்தரவிட்டுள்ளேன். சிசிடிவி கேமராவில் பதிவான அனைத்துக் காட்சிகளும் இருக்கிறது. இந்தப் பிரச்னை தொடர்பாக சிசிடிவி பொறுத்திய ஒப்பந்ததாரர் மீதும் உரிய நடவடிக்கை எடுக்கப்படும்" என்றார்.