Published:Updated:

“ஏன் ஓட்டுப் போடவில்லை?” விளக்கம் கேட்ட அதிகாரிகளுக்கு விருந்து படைத்த மலைக்கிராம மக்கள்!

“ஏன் ஓட்டுப் போடவில்லை?” விளக்கம் கேட்ட அதிகாரிகளுக்கு விருந்து படைத்த மலைக்கிராம மக்கள்!
“ஏன் ஓட்டுப் போடவில்லை?” விளக்கம் கேட்ட அதிகாரிகளுக்கு விருந்து படைத்த மலைக்கிராம மக்கள்!

”எங்களையும் மனிதர்களாக நினைத்து, எங்களைப் பார்த்து, எங்கள் குறைகளைக் கேட்க, இந்த வெயிலிலும், 7 கிலோமீட்டர் மலைப்பாதையில் நடந்துவந்த உங்களுக்கு எங்கள் நன்றிகள்” என ஊரே சேர்ந்து அதிகாரிகளை வணங்கிய நிகழ்வு, நெகிழ்வை ஏற்படுத்தியது.

ழகிய மேற்குத் தொடர்ச்சி மலையில் பாரம்பர்யமாக, தலைமுறை தலைமுறையாக மக்கள் வசிக்கும் மலைக்கிராமங்கள் பல. அடர் வனத்துக்குள் எவ்வித அடிப்படை வசதிகளும் இன்றி, வனவிலங்குகளின் அச்சுறுத்தல்களுக்கு மத்தியில் தினம் தினம் தங்கள் உயிரைக் கையில் பிடித்துக்கொண்டு வாழ்ந்துவரும் இம்மக்களுக்குத் தேவையான மின்சாரம், சாலை வசதி போன்றவை ஏற்படுத்திக்கொடுப்பது அரசுக்கும் ஆட்சி அதிகாரத்தில் மாறிமாறி அமர்ந்துகொண்டு ஆட்சி செய்யும் அரசியல் கட்சிகளுக்குமான கடமை. அக்கடமை மீறப்படும்போது, பெரும்பாலும் அம்மக்களிடமிருந்து அவை மறக்கடிக்கப்படுவது வழக்கம். ஆனால், இங்கு, அக்கடமையை அரசுக்கும் அரசியல் கட்சிகளுக்கும் ஞாபகப்படுத்தி, தங்களின் ஜனநாயகக் கடமையைப் (ஓட்டுப் போடாமல் செய்திருக்கிறது) புறம்தள்ளியிருக்கிறது மலைக்கிராமம் ஒன்று.

சென்ட்ரல் ஸ்டேஷன் :

தேனி மாவட்டம் போடி அருகே உள்ள குரங்கணி மலைப்பகுதியில் அமைந்துள்ள 10-க்கும் மேற்பட்ட மலைக்கிராமங்களில் ஒன்று சென்ட்ரல் ஸ்டேஷன். குரங்கணிவரை செய்யப்பட்டுள்ள சாலை வசதிக்குப் பின்னர், மலையில் சுமார் 7 கிலோமீட்டர் நடந்துசென்றால்தான் சென்ட்ரல் ஸ்டேஷன் மலைக்கிராமத்தை அடைய முடியும். நடந்து முடிந்த நாடாளுமன்றத் தேர்தலுக்காக அங்குள்ள ஆரம்பப் பள்ளியில் வாக்குச்சாவடி அமைத்திருந்தது, தேர்தல் ஆணையம். 169 வாக்காளர்கள் சென்ட்ரல் ஸ்டேஷனில் உள்ளனர். தேர்தலுக்கு முந்தைய நாள், குதிரை மூலமாக, 7 கிலோமீட்டர் மலைப்பாதையில் வாக்குப்பதிவு இயந்திரம் உட்பட தேர்தல் நடத்த தேவையான அனைத்துப் பொருள்களையும் அதிகாரிகள் கொண்டுசென்றனர். மறுநாள் தேர்தலின்போது மதியம்வரை யாருமே வாக்குச்சாவடிக்கு வந்து ஓட்டளிக்கவில்லை. இதனால் சந்தேகமடைந்த அதிகாரிகள் கிராமத்துக்குள் சென்று விசாரிக்க, ``நாங்கள் ஓட்டளிக்க வர மாட்டோம்” எனப் பதில் கிடைத்தது. இவ்விவகாரத்தை மாவட்டத் தேர்தல் அதிகாரியும் மாவட்டக் கலெக்டருமான பல்லவி பல்தேவிடம் அதிகாரிகள் கொண்டுசென்றனர். சென்ட்ரல் ஸ்டேஷன் கிராம மக்களைச் சமாதானம் செய்ய உயர்மட்ட அதிகாரிகள் அடங்கிய குழுவை உடனடியாக கலெக்டர் அனுப்பி வைத்தார். அவர்கள் சமாதனம் செய்தும் அம்மக்கள் ஓட்டுப்போட வரமுடியாது எனக் கறாராகச் சொல்லிவிட்டனர். சென்ட்ரல் ஸ்டேஷன் வாக்குச்சாவடியில் ஓர் ஓட்டுகூடப் பதிவாகவில்லை.

என்ன பிரச்னை சென்ட்ரல் ஸ்டேஷனில்?

சென்ட்ரல் ஸ்டேஷன் மலைக்கிராம மக்கள் தலைமுறை தலைமுறையாக மேற்குத்தொடர்ச்சி மலைப்பகுதியில், காபி, ஏலம், மிளகு, எலுமிச்சை போன்ற மலைப்பயிர்களைப் பயிரிட்டு பாரம்பர்யமாக விவசாயம் செய்துவருகிறார்கள். தங்களின் பொருளாதார ஆதாரமாக விளங்கும் விவசாய விளைபொருள்களைச் சந்தைப்படுத்த வேண்டுமென்றால், மலையிலிருந்து பேருந்து மற்றும் போக்குவரத்து வசதிகள் உள்ள குரங்கணிக்கு அப்பொருள்களைக் கொண்டு வர வேண்டும். ஏதாவது மருத்துவ உதவி தேவை என்றாலும், 7 கிலோமீட்டர் மலைப்பாதையில் நோயாளியை “டோலி” கட்டி தூக்கி வர வேண்டும். அடிப்படையான இந்த இரண்டு விவகாரங்களைத் தீர்க்க, குரங்கணியிலிருந்து சென்ட்ரல் ஸ்டேஷனுக்குச் சாலை வசதி ஏற்படுத்தித் தர வேண்டும் எனப் பல ஆண்டுகளாக சென்ட்ரல் ஸ்டேஷன் மக்கள் கோரிக்கை வைக்கின்றனர். இந்தக் கோரிக்கையை நிறைவேற்றாததால், இந்தத் தேர்தலைப் புறக்கணிப்பதாகத் தெரிவித்தனர். தேர்தலின்போது, காலையில், சென்ட்ரல் ஸ்டேஷனில் வசிக்கும் லெட்சுமி என்பவருக்குப் பிரசவ வலி ஏற்பட்டது. சாலை வசதி இல்லாததால், “டோலி” மூலமாக அவரை குரங்கணி ஆரம்ப சுகாதார நிலையத்துக்குத் தூக்கிவந்தனர். இச்சம்பவத்தால் மேலும் அதிருப்தியடைந்த சென்ட்ரல் ஸ்டேஷன் மக்கள், ``ஓட்டுப்போடச் சொல்லி யாரும் வீட்டுப் பக்கம் வந்துடாதீங்க” என்று சொல்லிவிட்டனர்.

சார் ஆட்சியர் ஆய்வு :

தேர்தலைப் புறக்கணித்த சென்ட்ரல் ஸ்டேஷன் மக்களிடம் தேர்தலன்று சமாதானம் செய்தும் பலனில்லாமல் போனது. அதையடுத்து, அவர்களின் பிரச்னை குறித்து ஆய்வுசெய்ய, உத்தமபாளையம் சார் ஆட்சியர் வைத்தியநாதன் தலைமையில் அதிகாரிகள் அடங்கிய குழுவை தேனி மாவட்டக் கலெக்டர்அனுப்பிவைத்தார். போடி தாசில்தார் மணிமாறன், வனநிலவரி திட்ட துணை தாசில்தார் இளங்கோவன், ஆர்.ஐ ராமர், பி.டி.ஓ சுரேஷ், நெடுஞ்சாலைத்துறை உதவிப் பொறியாளர் செல்வி ஆகியோர் அக்குழுவில் இருந்தனர். அக்குழு, சென்ட்ரல் ஸ்டேஷனுக்குப் பயணமானது. குரங்கணியை அடுத்துள்ள வனத்துறையின் செக்போஸ்ட்டில் இருந்து அமைந்துள்ள இரண்டு கிலோமீட்டர் ஜீப் பாதையில் பயணம் செய்து, பின்னர் நடந்துசெல்லத் திட்டமிட்டிருந்தனர். வனத்துறையின் செக்போஸ்ட்டை அடைந்த அதிகாரிகள், செக்போஸ்ட் பூட்டப்பட்டிருப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்தனர். அங்கு வனத்துறை ஊழியர்கள் யாரும் இல்லை. போன் செய்து வனத்துறை உயர் அதிகாரிகளுக்குத் தகவல் தெரிவிக்க, வாச்சர் அங்கே வந்தார்.

’’செக்போஸ்ட்டைத் திறந்துவிடுங்கள்’’ என அதிகாரிகள் தெரிவிக்க, “சாவி என்னிடம் இல்லை” என்று கூறினார் வாச்சர். இதனால் அதிருப்தியடைந்த சார் ஆட்சியர் உள்ளிட்ட அதிகாரிகள், இரண்டு கிலோமீட்டர் ஜீப் பாதையையும் நடந்தே கடந்தனர். வழியில், ஒரு ஆட்டோ கேஸ் அடுப்பு, கேஸ் சிலிண்டர்களுடன் நின்றுகொண்டிருந்தது. அதைக் கண்ட சார் ஆட்சியர், “எங்களை விடமாட்டேன் என்றீர்கள், இந்த வண்டி மட்டும் எப்படி வந்தது” என வாச்சரிடம் கோபமாகப் பேசினார். 7 கிலோமீட்டர் மலைப்பாதையில் நடந்துசென்ற அதிகாரிகள் சென்ட்ரல் ஸ்டேஷனை அடைந்ததும், அம்மக்கள் அனைவரும் ஒன்றுசேர்ந்து அதிகாரிகளை வரவேற்றனர். ``ஏன் ஓட்டளிக்க வரவில்லை’’ என அதிகாரிகள் கேட்டதற்கு, “எத்தனையோ அதிகாரிகளைப் பார்த்து மனுக் கொடுத்துவிட்டோம். இதுவரை எந்தப் பலனும் இல்லை. நாங்கள் என்ன மாடமாளிகைகளா கேட்டோம். போக்குவரத்துக்கு ஒரு ரோடுதான கேட்டோம். அதைக்கூட இந்த அரசாங்கத்தால் செய்ய முடியாதா. தேர்தல் வந்தால் மட்டும் எங்கள் ஓட்டு வேணும். அதுக்கப்புறம் நாங்கள் யாரோ, எவரோ. அப்படித்தானே... அதனால்தான் தேர்தலைப் புறக்கணித்தோம். இப்போது எங்கள் பிரச்னை வெளியில் தெரிகிறதல்லவா. அதற்காகத்தான் அப்படிச் செய்தோம். எங்களுக்கு அரசும் வேண்டாம். அரசியல் கட்சிகளும் வேண்டாம்” என்று கடுமையாகப் பேசினர். அனைத்தையும் அமைதியாகக் கேட்டுக்கொண்ட சார் ஆட்சியர் வைத்தியநாதன், “35 கோடி ரூபாய் மதிப்பீட்டில் குரங்கணியிலிருந்து சென்ட்ரல் ஸ்டேஷனுக்குச் சாலை அமைத்துத் தர அரசு திட்டமிட்டிருக்கிறது. வனத்துறை அனுமதி கிடைத்ததும் டெண்டர் விடப்பட்டு சாலைப் பணிகள் தொடங்கப்படும்” என உறுதியளித்தார்.

``எங்களையும் மனிதர்களாக நினைத்து, எங்களைப் பார்த்து, எங்கள் குறைகளைக் கேட்க, இந்த வெயிலிலும் 7 கிலோமீட்டர் மலைப்பாதையில் நடந்துவந்த உங்களுக்கு எங்கள் நன்றிகள்” என ஊரே சேர்ந்து அதிகாரிகளை வணங்கிய நிகழ்வு, நெகிழ்வை ஏற்படுத்தியது. அதிகாரிகள் அனைவருக்கும், கோழி அடித்து வயிறு நிறைய சாப்பாடு போட்டு உபசரித்து அனுப்பிவைத்தனர் சென்ட்ரல் ஸ்டேஷன் கிராம மக்கள். தங்கள் கிராமத்துக்குச் சாலை வந்துவிடும் என்ற அவர்களின் நம்பிக்கை நிஜமாகட்டும்!

அடுத்த கட்டுரைக்கு