Published:Updated:

`ஓ.பி.எஸ் அப்செட்; எடப்பாடி எஸ்கேப்!'- திருப்பரங்குன்றத்தில் திருப்புமுனை

எஸ்.மகேஷ்
`ஓ.பி.எஸ் அப்செட்; எடப்பாடி எஸ்கேப்!'- திருப்பரங்குன்றத்தில் திருப்புமுனை
`ஓ.பி.எஸ் அப்செட்; எடப்பாடி எஸ்கேப்!'- திருப்பரங்குன்றத்தில் திருப்புமுனை
`ஓ.பி.எஸ் அப்செட்; எடப்பாடி எஸ்கேப்!'- திருப்பரங்குன்றத்தில் திருப்புமுனை

திருப்பரங்குன்றம் இடைத்தேர்தல் பிரசாரத்தின்போது துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் அப்செட் ஆனதாகவும் முதல்வர் எடப்பாடி பழனிசாமி, மக்கள் கூட்டம் இல்லாததால் சில இடங்களில் பேசாமல் எஸ்கேப் ஆனதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. 

மதுரை மாவட்டம், திருப்பரங்குன்றம் தொகுதி என்றாலே பிரச்னைகளுக்கும் சர்ச்சைகளுக்கும் குறைவு இருக்காது போல. இடைத்தேர்தலைச் சந்திக்கும் இந்தத் தொகுதியின் எம்.எல்.ஏ. போஸ் மரணமடைந்தார். அதன்பிறகு அவரின் வெற்றி செல்லாது என்று நீதிமன்றம் தீர்ப்பளித்தது. தற்போது இந்தத் தொகுதியில் இடைத்தேர்தலில் தி.மு.க சார்பில் டாக்டர் சரவணனும், அ.தி.மு.க சார்பில் யாரும் எதிர்பார்க்காத முனியாண்டியும், அ.ம.மு.க சார்பில் மகேந்திரனும் போட்டியிடுகின்றனர். இவர்கள் மூன்று பேரும் மல்லுக்கட்டிவருகின்றனர். 

திருப்பரங்குன்றம் தொகுதியைப் பொறுத்தவரை அ.தி.மு.க-வில் கடும் கோஷ்டி பூசல் நிலவுகிறது. அமைச்சர் செல்லூர் ராஜு, பரிந்துரை செய்த சினிமா பிரமுகரையும் அமைச்சர் ஆர்.வி.உதயகுமார் பரிந்துரை செய்த நபரையும் மாவட்டச் செயலாளர் ராஜன்செல்லப்பா பரிந்துரை செய்த வழக்கறிஞருக்கும் சீட் கிடைக்கவில்லை. ஆனால், ராஜன் செல்லப்பாவின் ஆதரவாளரான முனியாண்டிக்கு கட்சித் தலைமை சீட் கொடுத்து அமைச்சர்களுக்கும் மதுரை மாவட்ட கட்சியின் நிர்வாகிகளுக்கும் அதிர்ச்சியைக் கொடுத்துள்ளது. இதனால் முனியாண்டியை வெற்றி பெற வைக்க தேர்தல் பொறுப்பாளர்களாக அமைச்சர்களை கட்சித் தலைமை நியமித்தது. 

`ஓ.பி.எஸ் அப்செட்; எடப்பாடி எஸ்கேப்!'- திருப்பரங்குன்றத்தில் திருப்புமுனை

திருப்பரங்குன்றம் அ.தி.மு.க-வின் கோட்டை என்பதை நிரூபிக்க அமைச்சர்கள் நினைத்தாலும் கட்சியினர் முழுமனதோடு தேர்தலில் பணியாற்றவில்லை என்றுதான் சொல்ல வேண்டும். இதனால் வேட்பாளருக்கு ஓட்டு கேட்டுச் செல்வதிலிருந்து, முதல்வர், துணை முதல்வர் என பிரசாரத்துக்கு வரும் தலைவர்களின் கூட்டத்துக்குகூட ஆள் சேர்க்க முடியாத சூழல் நிலவுகிறது. மாவட்டச் செயலாளர் என்பதால் ராஜன் செல்லப்பாவுக்கு முனியாண்டியை வெற்றி பெற வைக்க வேண்டிய நிர்பந்தம் ஏற்பட்டுள்ளது. இதனால் அதற்கான வேலைகளில் அவர் தீவிரமாக ஈடுபட்டுள்ளார். ஆனால் அவருக்கு போதிய ஒத்துழைப்பு கிடைக்கவில்லை. 

தி.மு.க வேட்பாளர் டாக்டர் சரவணன், கடந்த முறை அ.தி.மு.க வேட்பாளர் ஏ.கே.போஸிடம் வெற்றி வாய்ப்பை இழந்தார். போஸின் வெற்றி செல்லாது என்று நீதிமன்றத்தில் படியெறியவர், தொகுதியில் அவருக்கு அறிமுகம் தேவையில்லை. இதனால்தான் மீண்டும் அவருக்கு வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது. சமூக வாக்குகளையும் கட்சியின் வாக்குகளையும் நம்பியிருக்கிறார். ஆனால், அழகிரியின் ஆதரவாளர்களால் வெற்றி வாய்ப்பில் சிக்கல் ஏற்படுமோ என்ற அச்சத்தில் தி.மு.க-வினர் உள்ளனர். இருப்பினும் தேர்தல் வியூகங்களை அமைத்து தொண்டர்கள் முதல் நிர்வாகிகள் வரை அனுசரித்து வேட்பாளர் செல்கிறார். திருமங்கலம் பார்முலாவையும் பின்பற்றியாவது வெற்றியைப் பெற வேண்டும் என்ற கட்டாயத்தில் தி.மு.க-வினர் உள்ளனர். 

`ஓ.பி.எஸ் அப்செட்; எடப்பாடி எஸ்கேப்!'- திருப்பரங்குன்றத்தில் திருப்புமுனை

அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் சார்பில் போட்டியிடும் முன்னாள் எம்.எல்.ஏ. மகேந்திரன், உசிலம்பட்டி தொகுதியின் செல்லப்பிள்ளை. அவரை தங்க தமிழ்ச்செல்வனை நம்பி திருப்பரங்குன்றத்தில் களமிறக்கியுள்ளார் டி.டி.வி.தினகரன். தேர்தல் பொறுப்பாளராக வெற்றிவேலும், தங்க தமிழ்ச்செல்வனும் நியமிக்கப்பட்டுள்ளனர். 15 பூத்களுக்கு ஒரு மாவட்டச் செயலாளர் என்ற கணக்கில் தேர்தல் பணிகள் பிரித்துக் கொடுக்கப்பட்டு தேர்தல் பொறுப்பாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். தமிழகம் முழுவதும் உள்ள அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தினரை திருப்பரங்குன்றம் தொகுதியில் பரவலாகப் பார்க்க முடிகிறது. பரிசுப் பெட்டகத்தோடு தொகுதிகளில் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தினர் உற்சாகத்தோடு வலம்வருகின்றனர். திருப்பரங்குன்றம் தொகுதியில் நிலவும் மும்முனைப் போட்டியில் வெல்லப்போவது யார் என்பது மே 23-ம் தேதி தெரிந்துவிடும். ஆனால் அதற்கு முன், அ.தி.மு.க-வில் நிலவும் கோஷ்டி பூசலால் அ.தி.மு.க-வின் வெற்றி வாய்ப்பில் சிக்கல் ஏற்பட்டுவிடும் என வேதனைப்படுகின்றனர் அ.தி.மு.க-வின் உண்மை விசுவாசிகள். 

இதுகுறித்து நம்மிடம் பேசிய அ.தி.மு.க-வின் தலைமைக் கழக நிர்வாகி ஒருவர், ``திருப்பரங்குன்றம் தொகுதியில் அ.தி.மு.க 1977-ம் ஆண்டு முதல் இதுவரை நடந்த தேர்தல்களில் 8 தடவை வெற்றி பெற்றுள்ளது. அதனால் இந்தத் தொகுதி அ.தி.மு.க-வின் கோட்டை. அதை நம்பிதான் ஜெயலலிதா பாணியில் முனியாண்டியை வேட்பாளராக அறிவித்துள்ளோம். இரட்டை இலை மற்றும் வேட்பாளரின் சிம்பிளிசிட்டி நிச்சயம் எங்களுக்கு வெற்றியைத் தேடித்தரும். ஆனால், தொகுதியில் நிலவும் கோஷ்டி பூசல், உள்ளடி வேலைகளைப் பார்த்தால்தான் வேதனையளிக்கிறது. அது, வெற்றி வாய்ப்பில் சிக்கலை ஏற்படுத்திவிடக்கூடாது என்பதில் கவனமாக இருக்கிறோம். அதிருப்தி நிர்வாகிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தி தேர்தல் பணிகளைச் செய்ய உத்தரவிட்டுள்ளோம். 

`ஓ.பி.எஸ் அப்செட்; எடப்பாடி எஸ்கேப்!'- திருப்பரங்குன்றத்தில் திருப்புமுனை

முதல்வர் எடப்பாடி பழனிசாமியும், துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வமும் இணைந்து பிரசாரத்தில் ஈடுபட்டுவருகின்றனர். துணை முதல்வரின் ஆதரவாளர் ஒருவருக்கு சீட் கிடைக்காததால் அவரும் அதிருப்தியில் உள்ளார். அவரிடம் பேசி சமரசப்படுத்திய பிறகு தேர்தல் பணிகளில் ஆதரவாளர்களுடன் அவர் ஈடுபட்டுவருகின்றார். துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் பிரசாரத்துக்குச் சென்றபோது எதிர்பார்த்த கூட்டம் இல்லை. இதனால் அவர் அப்செட்டாகியுள்ளார். தன்னுடைய மனக்குமுறல்களை ஆதரவாளர்களிடம் வெளிப்படையாகவே தெரிவித்துள்ளார். இதையடுத்து, முதல்வர் எடப்பாடி பழனிசாமி பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளார். கூட்டத்தை காண்பிக்க மக்கள் அழைத்துவரப்பட்டுள்ளனர். ஆனாலும் எதிர்பார்த்த கூட்டம் இல்லை. இதனால் சில இடங்களில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி பிரசாரம் செய்ய முடியாத சூழல் ஏற்பட்டது. 

திருப்பரங்குன்றம் தொகுதியில் அ.தி.மு.க வேட்பாளர் முனியாண்டி அதிக ஓட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற வைக்க வேண்டும் என கட்சித் தலைமை, தேர்தல் பொறுப்பாளர்களிடம் கூறியுள்ளது. அதிக ஓட்டுகள் பெறும் பூத் பொறுப்பாளர்களுக்கு எதிர்பார்க்காத கிப்ட் கொடுப்பதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்பிறகு கோஷ்டி பூசல் குறைந்து காணப்படுகிறது" என்றார். 

தி.மு.க தேர்தல் பொறுப்பாளர்களிடம் கேட்டதற்கு, ``வேட்பாளருக்கு இந்தத் தொகுதி மக்களிடையே நல்ல வரவேற்பு உள்ளது. தி.மு.க-வில் அழகிரியின் செல்வாக்கு என்ன என்பது எல்லோருக்கும் தெரியும். இதனால் திருப்பரங்குன்றத்தில் தி.மு.க வெற்றிக்கு அழகிரியால் எந்தவித பாதிப்பும் இல்லை. திருப்பரங்குன்றத்தில் அ.தி.மு.க சார்பில் தேர்ந்தெடுக்கப்பட்ட மக்கள் பிரதிநிதிகள் மீது மக்கள் மத்தியில் கடும் அதிருப்தி நிலவுகிறது. இந்தத் தொகுதியில் இரண்டு முறை தி.மு.க வெற்றி பெற்றுள்ளது. மூன்றாவது முறையாக தி.மு.க வெற்றி பெறும் என்ற நம்பிக்கை உள்ளது. பிரசாரத்துக்குச் செல்லும் இடங்களில் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்துவருகிறது" என்றனர். 

`ஓ.பி.எஸ் அப்செட்; எடப்பாடி எஸ்கேப்!'- திருப்பரங்குன்றத்தில் திருப்புமுனை

அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் டி.டி.வி.தினகரனுக்கு நெருக்கமான ஒருவரிடம் கேட்டதற்கு, ``திருப்பரங்குன்றம் தொகுதி இடைத்தேர்தலில் தி.மு.க-வுக்கும் எங்களுக்கும்தான் கடும் போட்டி நிலவுகிறது. சீனில் அ.தி.மு.க-வினர் இல்லை. மக்கள் மாற்றத்தை விரும்புகின்றனர். தேர்தல் ஆணையமும் நடுநிலையோடு செயல்பட்டால் நிச்சயம் நாங்கள் வெற்றி பெறுவோம். வேட்பாளரின் அணுகுமுறை எங்களுக்கு கூடுதல் ப்ளஸ்ஸாக உள்ளது. அதோடு, அ.தி.மு.க-வினரே டி.டி.வி.தினகரனின் தலைமையைத்தான் விரும்புகின்றனர். எனவே, இந்தத் தேர்தலின் முடிவு அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தை எல்லோரையும் திரும்பிப் பார்க்க வைக்கும்.

தேர்தல் பொறுப்பாளர்களிடம் எந்தவித பிரதிபலனும் பாராமல் உழைக்கும் நிர்வாகிகளை என்றுமே நான் மறக்க மாட்டேன். அவர்களுக்குரிய முக்கியத்துவத்தைல் கொடுப்பேன் என்று டி.டி.வி.தினகரன் வெளிப்படையாகவே கூறியுள்ளார். ஒருவேளை அ.தி.மு.க-வின் தலைமை டி.டி.வி. தினகரனின் கைக்கு வந்ததால் அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தில் உள்ளவர்களே எதிர்பார்க்காத பதவிகளையும் பொறுப்புகளையும் கொடுப்பதாக டி.டி.வி.தினகரன் உறுதியளித்திருக்கிறார். இதனால் உற்சாகத்தில் தொண்டர்கள் முதல் நிர்வாகிகள் வரை உள்ளனர்" என்றார். 

திருப்பரங்குன்றம் தேர்தல் பிரசாரத்தில் ஓ.பன்னீர்செல்வம், பேசிக் கொண்டிருந்தபோதே கூட்டத்துக்கு வந்திருந்தவர்கள் கிளம்பினர். அவர்களைப் பார்த்து, அம்மா, தங்கச்சி, நான் எவ்வளவு கஷ்டப்பட்டு பேசிக் கொண்டிருக்கிறேன். என்னைப்பார்த்தால் பாவமாக தெரியலையா' என்று ஓ.பன்னீர்செல்வம் கூறினார். 

திருப்பரங்குன்றம் தொகுதி இடைத்தேர்தலின் முடிவு யாருக்கு திருப்புமுனையை ஏற்படுத்தப்போகிறதோ என்பது மே 23-ல் தெரிந்துவிடும்.