``உங்களுக்கு வயது 70.. என்னைவிட மூத்தவர்" - ஸ்டாலினை கலாய்த்த எடப்பாடி பழனிசாமி | Edappadi Palanisamy trolls Stalin in Sulur campaign

வெளியிடப்பட்ட நேரம்: 07:00 (15/05/2019)

கடைசி தொடர்பு:10:20 (16/05/2019)

``உங்களுக்கு வயது 70.. என்னைவிட மூத்தவர்" - ஸ்டாலினை கலாய்த்த எடப்பாடி பழனிசாமி

`ஸ்டாலின் என்னைவிட மூத்தவர் பிறகு ஏன் 25 வயதைப் போல நினைப்பு வருகிறது?' என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி கேள்வி எழுப்பியுள்ளார்.

எடப்பாடி பழனிசாமி

சூலூர் அ.தி.மு.க வேட்பாளர் கந்தசாமிக்கு ஆதரவாக முதல்வர் எடப்பாடி பழனிசாமி இரண்டாவது கட்ட பிரசாரத்தில் ஈடுபட்டார். இதற்காக மாலை 5.30 மணி அளவில் சின்னியம்பாளையம் வந்த எடப்பாடி பழனிசாமிக்கு, பூர்வ கும்ப மரியாதை செலுத்தப்பட்டது. கூட்டணிக் கட்சியினரும் சேர்ந்து தலைக்கு 200 ரூபாய் என்று மக்களை அழைத்து வந்தாலும், அ.தி.மு.க-வினரால் பெரிய அளவிலான கூட்டத்தைச் சேர்க்க முடியவில்லை.

திறந்தவெளி வேனில் எடப்பாடி பழனிசாமி பிரசாரம் செய்தார். அப்போது அவர் பேசியதாவது, ``அ.தி.மு.க வேட்பாளர் கந்தசாமி வெற்றி பெற்றால், உங்களது கோரிக்கை மற்றும் மனுக்கள் என்னிடம் வந்து சேரும். உங்கள் கோரிக்கை நிறைவேற்றப்படும். எதிர்க்கட்சி வேட்பாளர் வெற்றி பெற மாட்டார். ஒரு வேளை அவர் வெற்றி பெற்றால், நீங்கள் வைக்கின்ற கோரிக்கையை எப்படித் தீர்க்க முடியும்?. அவர்கள் எங்களிடம் மனுவும் கொடுக்க மாட்டார்கள். தி.மு.க வெற்றி பெற்றால், ஏற்கெனவே இருக்கும் எம்.எல்.ஏ-க்களில் ஒரு எண்ணிக்கை கூடும். வேறு எந்த நன்மையும் நடக்காது. ஆளும் கட்சியின் தேர்தல் அறிக்கைதான் நிறைவேற்றப்படும். ஸ்டாலின் விடும் தேர்தல் அறிக்கையை நிறைவேற்ற முடியாது. ஸ்டாலின் பொய்யான வாக்குறுதிகளை வெளியிட்டுள்ளார். மக்கள் இதைக் கண்டு ஏமாறக் கூடாது.

எடப்பாடி பழனிசாமி

டி.டி.வி. தினகரனை அடையாளம் காட்டியதே அ.தி.மு.கதான். எந்தச் சின்னத்தில் நின்று வெற்றி பெற்றாரோ, அதே சின்னத்தை முடக்க வழக்கு போடுகிறார். ஆட்சிக்கும், கட்சிக்கும் நெருக்கடி கொடுக்கப் பார்த்தார். தி.மு.க-வும், அ.ம.மு.க-வும் ரகசிய உடன்பாடு வைத்துள்ளனர். ஒடுக்கப்பட்ட மக்களின் நலனுக்காக உருவாக்கப்பட்டது நமது இயக்கம். ஆனால், குடும்பத்துக்காக உருவாக்கப்பட்டது தி.மு.க. அது கட்சி இல்லை, கம்பெனி. அ.தி.மு.க-வில் சாதாரண தொண்டனும் உயர முடியும் என்பதற்கு நானே உதாரணம். தி.மு.க-வில் இது முடியுமா?.

ஆட்சியைக் கலைக்க ஸ்டாலின் நினைத்தார். அது முடியவில்லை. அந்த எரிச்சலில் என்னனவோ பேசிக்கொண்டிருக்கிறார். தான் அழகாய் இருப்பதாகவும், வெயிலில் கருத்து விட்டதாகவும் கூறி வருகிறார். நீங்கள் அழகாகவோ, கவர்ச்சியாகவோ இருக்கிறீர்களா என்று யார் கேட்டார்கள். மக்களுக்கு என்ன நன்மை செய்யப் போகிறோம் என்பதைத்தானே பேச வேண்டும். ஸ்டாலினுக்கு வயது 70 ஆகிறது. என்னைவிட மூத்தவர். பிறகு ஏன் ஏதோ 25 வயதைப் போல நினைப்பு வருகிறது. எம்.ஜி.ஆரை விடவா நீங்கள் அழகாக இருக்கிறீர்கள்?. எம்.ஜி.ஆரே இப்படிப் பேசியதில்லை.

எடப்பாடி பழனிசாமி

ராகுல் காந்தியை ஸ்டாலின் மட்டும்தான் பிரதமர் வேட்பாளராக முன் மொழிந்தார். ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு உட்பட யாரும் அதை முன் வைக்கவில்லை. தற்போது மூன்றாவது அணியை உருவாக்க தெலங்கானா முதல்வர் சந்திரசேகர் ராவை ஸ்டாலின் சந்தித்துள்ளார். நீங்கள் வெற்றி பெற்றால் தானே மூன்றாவது அணியை உருவாக்க முடியும்? யார் பிரதமர் ஆக வேண்டும்? என்பதை மக்கள்தான் முடிவு செய்வார்கள். ஸ்டாலின் இல்லை” என்று பேசினார்.