`கமலுக்குத் தைரியம் கொடுத்து இப்படிப் பேச வைத்து இயக்கும் சக்தி எது?!'- தமிழிசை கேள்வி | Tamilisai slams Kamal hassan

வெளியிடப்பட்ட நேரம்: 15:20 (15/05/2019)

கடைசி தொடர்பு:10:18 (16/05/2019)

`கமலுக்குத் தைரியம் கொடுத்து இப்படிப் பேச வைத்து இயக்கும் சக்தி எது?!'- தமிழிசை கேள்வி

``கமல் முதலில் தான் பேசியது தவறு என்பதைப் புரிந்துகொண்டு, அவர் தன் கருத்துகளைத் திரும்பப் பெற வேண்டும். சின்ன விஷயத்திற்குக்கூட எதிர்ப்புக்குரல் கொடுக்கும் தி.மு.க., கமல் கருத்துக்கு ஏன் எதிர்ப்பு தெரிவிக்கவில்லை?” என தமிழிசை தெரிவித்துள்ளார். 

தமிழிசை


ஓட்டப்பிடாரம் சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தல் குறித்த ஆலோசனைக் கூட்டம் முடிந்து வெளியே வந்தபோது,  ரவிச்சந்திரன் என்பவருடைய மனைவி, அவருடைய கணவர் அரசு மருத்துவமனையில் இதய நோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருப்பதாகவும், மிகவும் கஷ்டத்தில் இருந்து வருவதாகவும் கூறினார். அவரை மருத்துவமனையில் இன்று நேரில் சென்று சந்தித்து ஆறுதல் கூறி மருத்துவ உதவிகளுக்கு ஏற்பாடு செய்வதாக கூறினார்.

தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், ``கமல் முதலில் தான் பேசியது தவறு என்பதைப் புரிந்துகொள்ள வேண்டும். கமல் கூறிய கருத்து தவறானது. அவர், தன் கருத்துகளைத் திரும்பப் பெற வேண்டும். கமல் தொடர்பாக, பிரதமர் மோடி விடுத்துள்ள அறிக்கை சரியானதுதான். கமலின் பேச்சை வீரமணி, அழகிரி எல்லோரும் கொண்டாடிக் கொண்டிருக்கிறார்கள். தீவிரவாதம் என்பதை எவ்விதத்திலும் ஒப்புக்கொள்ள முடியாது. ஆனால், தீவிரவாதத்தைப் பற்றிப் பேசிய பேச்சுக்கு இங்குள்ள அரசியல்வாதிகளும் அமைப்புகளும் அரசியல் கட்சித் தலைவர்களும் ஆதரவு கொடுப்பதுதான் மிகுந்த கவலையாக உள்ளது.

தமிழிசை

ஏனென்றால், தீவிரவாதத்துக்கு ஒரு கட்சி தனது தலைவரையே பறிகொடுத்துவிட்டு உறுதுணையாக பேசிக்கொண்டிருக்கிறார்கள். தீவிரவாதத்துக்கு மதம் கிடையாது. ஆனால், காந்தி கொலையை தற்பொழுது நினைவுபடுத்தி இந்துவை தீவிரவாதி என்று பேசுவதற்கு கமலுக்குத் தைரியம் கொடுத்து இப்படிப் பேச வைத்து இயக்கும் சக்தி எது. இது இடைத்தேர்தலின்போது கமல் பேச வேண்டிய பேச்சு இல்லை. என்னைப் பொறுத்தவரையில், வேண்டுமென்றே இப்படிப்பட்ட ஒரு பிரசாரத்தை செய்ய வேண்டும் என்ற உள்நோக்கத்துடன் கமல் பேசியிருக்கிறார். எனவே, அவருடைய பிரசாரத்தைத் தடை செய்ய வேண்டும். 

மூன்றாவது அணிக்கு வாய்ப்பில்லை எனக்கூறும் ஸ்டாலின், சந்திரசேகரராவை பார்த்தபின் தெளிவாக நான் இந்த நிலைப்பாட்டில்தான் இருக்கிறேன் என ஏன் அவர் கூறவில்லை. ஸ்டாலின் பல முகங்களில் இருக்கிறார் என்பது தெளிவாகிறது. சின்ன விஷயத்திற்குக்கூட எதிர்ப்புக்குரல் கொடுக்கும் தி.மு.க., கமல் கருத்துக்கு ஏன் எதிர்ப்பு தெரிவிக்கவில்லை. தீவிரவாதம் எனச்சொல்லி கமல் ஒரு மதத்தை குற்றம்சாட்டுகிறார். அதில் மற்றவர்கள் குளிர் காய்கிறார்கள். இதுகுறித்து தேர்தல் ஆணையத்தில் புகார் அளித்துள்ளோம். அகில பாரதத்தில் வழக்கும் தொடர்ந்துள்ளோம்” என்றார்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க