`சிறையில் மோசமா நடந்தாங்க; டாய்லெட்டில் தண்ணீரில்லை!' - மம்தா குறித்து மீம் போட்ட பா.ஜ.க நிர்வாகி | "Tortured In Jail," Alleges BJP Activist Who Shared Mamata Banerjee Meme

வெளியிடப்பட்ட நேரம்: 16:05 (15/05/2019)

கடைசி தொடர்பு:10:17 (16/05/2019)

`சிறையில் மோசமா நடந்தாங்க; டாய்லெட்டில் தண்ணீரில்லை!' - மம்தா குறித்து மீம் போட்ட பா.ஜ.க நிர்வாகி

``மம்தா தொடர்பாக நான் போட்ட மீம்முக்கு மன்னிப்பெல்லாம் கேட்கமுடியாது. நான் ஏன் மன்னிப்பு கேட்கவேண்டும்” என்று மம்தா பானர்ஜி குறித்து மீம் போட்ட பா.ஜ.க இளைஞர் அணியைச் சேர்ந்த பிரியங்கா சர்மா கூறியுள்ளார். 

பாஜக நிர்வாகி

நியூசிலாந்தில் மெட்காலா என்னும் ஃபேஷன் நிகழ்ச்சி ஆண்டுதோறும் நடைபெறுவது வழக்கம். இந்த நிகழ்ச்சியில் ஹாலிவுட் பிரபலங்கள் வித்தியாசமாகவும், விநோதமாகவும் உடையணிந்து ஒப்படையுடன் கலந்துகொள்வார்கள். ஒவ்வொரு வருடமும் மே மாதம் முதல் திங்கள்கிழமை இந்நிகழச்சி நடைபெறும். இம்மாத தொடக்கத்தில் நடைபெற்ற விழாவில், பாலிவுட் நடிகை பிரியங்கா சோப்ரா அணிந்திருந்த ஆடை, கலவையான விமர்சனங்களைப் பெற்றது. இந்த நிலையில், மெட்காலாவில் பிரியங்கா சோப்ரா புகைப்படத்தில் அவரது முகத்தை மறைத்துவிட்டு, மம்தா பானர்ஜி இருப்பதுபோல் பா.ஜ.க-வின் மேற்குவங்க இளைஞர் அணியைச் சேர்ந்த பிரியங்கா சர்மா என்பவர் மீம் ஒன்றை ஃபேஸ்புக்கில் பதிவிட்டிருந்தார்.

மம்தா

அவரது இந்தப் பதிவுக்கு சமூக வலைதளங்களில் கண்டனங்கள் குவிந்தன. ஹவுரா மாவட்ட பாரதிய ஜனதா யுவமோர்ச்சாவில் நிர்வாகியான பிரியங்கா சர்மா மீது, திரிணாமூல் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த பிவாஸ் சந்திர ஹஸாரா, காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இதையடுத்து அவர் கைது செய்யப்பட்டார். ஐந்து நாள் சிறைவாசத்துக்குப்பின் அவர் விடுதலை செய்யப்பட்டுள்ளார். நீதிமன்றம் உத்தரவை மீறி 24 மணி நேரம் கூடுதலாக சிறையில் வைத்ததற்காக இழப்பீடு வழங்க அவர் மனு அளித்துள்ளார். சிறையிலிருந்து பெயிலில் வெளியே வந்த பின்னர் அவர். ``நான் மன்னிப்பு கடிதம் எழுத வேண்டும் என வற்புறுத்தபட்டேன். நான் மன்னிப்பு கேட்கவில்லை. மன்னிப்பு கேட்கும் அளவுக்கு பெரிய தப்பு ஒன்றும் நான் செய்யவில்லை.

பிரியங்கா

சிறையில் துன்புறுத்தப்பட்டேன். சிறைக்குள் அவர்கள் மோசமாக நடந்துகொண்டார்கள். யாருடனும் பேச அவர்கள் அனுமதிக்கவில்லை. 5 நாள்களாக நான் யாரிடமும் பேசவில்லை. தண்ணீர்ப் பிரச்னை சிறையில் இருக்கிறது. பெண்கள் டாய்லெட்டில் தண்ணீரே இல்லை. நான் ஏன் மன்னிப்பு கேட்கவேண்டும். என்னை மட்டும் குறிவைக்கிறார்கள். அந்த போஸ்டை ஷேர் செய்த மற்றவர்களை விட்டுவிட்டார்கள். காவல்துறையினர் என் தொலைபேசியைப் பிடிங்கிக்கொண்டனர். அவர்கள் என்னிடம் இது போன்றதொரு செயலை மீண்டும் செய்ய மாட்டேன் எனக் கூற வற்புறுத்தினர். திரிணாமூல் காங்கிரஸின் பயங்கரவாதத்தால் மக்கள் வீட்டை விட்டு வெளியேற பயப்படுகிறார்கள்’ என்றார்.