`எடப்பாடிக்கு எதிராக 6 அமைச்சர்கள்!' - `தனி குரூப்' தகவலால் தகித்த சீனியர்கள் | Edappadi Palanisamy angry over 6 ministers secret meeting

வெளியிடப்பட்ட நேரம்: 16:07 (15/05/2019)

கடைசி தொடர்பு:10:17 (16/05/2019)

`எடப்பாடிக்கு எதிராக 6 அமைச்சர்கள்!' - `தனி குரூப்' தகவலால் தகித்த சீனியர்கள்

ஆட்சிக்கான அஸ்திரமாக இந்தத் தேர்தல் இருப்பதால், தொடர் சுற்றுப் பயணத்தில் இருக்கிறார் முதல்வர். அதேநேரம், அமைச்சர்கள் சிலரின் தன்னிச்சையான செயல்பாடுகளால் மிகுந்த கோபத்தில் இருக்கிறார்.

`எடப்பாடிக்கு எதிராக 6 அமைச்சர்கள்!' - `தனி குரூப்' தகவலால் தகித்த சீனியர்கள்

அ.தி.மு.க அரசுக்கான அக்னி பரீட்சையாக 22 சட்டமன்றத் தொகுதிகளின் தேர்தலைப் பார்க்கிறார் எடப்பாடி பழனிசாமி. `தேர்தல் பணிகளில் சுணக்கம் காட்டும் அமைச்சர்களைத் தனிக் கண்காணிப்பில் வைத்திருக்கிறார். அவர்கள் தனி அணியாகச் செயல்படுவது குறித்த தகவலும் முதல்வர் பார்வைக்கு வந்திருக்கிறது' என்கின்றனர் அ.தி.மு.க தலைமைக் கழக வட்டாரத்தில். 

எடப்பாடி பழனிசாமி

தமிழக சட்டமன்றத்தில் காலியாக உள்ள அரவக்குறிச்சி, திருப்பரங்குன்றம், சூலூர், ஓட்டப்பிடாரம் ஆகிய 4 தொகுதிகளுக்கு வரும் 19-ம் தேதி தேர்தல் நடக்க இருக்கிறது. அ.தி.மு.க அரசைத் தக்க வைப்பதற்கான போராட்டமாக இருப்பதால், வாக்காளர்கள் மனம் குளிரும் வகையில் பணப்பட்டுவாடாவைத் துரிதப்படுத்தியது அ.தி.மு.க. அதற்குச் சற்றும் சளைக்காமல் தி.மு.க-வும் அ.ம.மு.க-வும் பணத்தை வாரியிறைத்தன. தேர்தல் வெற்றிக்காக நான்கு தொகுதிகளிலும் தீவிரமாக வலம் வந்துகொண்டிருக்கிறார் முதல்வர் பழனிசாமி. `நாடாளுமன்றத் தேர்தலில் சரிபாதி தொகுதிகளையும் சட்டமன்றத் தேர்தலில் 13 தொகுதிகளிலும் உறுதியாக வெல்வோம்' என்ற நம்பிக்கையில் இருக்கிறார். நேற்று சூலூரில் பேசும்போது, ``அ.தி.மு.க வேட்பாளர் கந்தசாமி வெற்றி பெற்றால், உங்களது கோரிக்கை மற்றும் மனுக்கள் என்னிடம் வந்து சேரும். உங்கள் கோரிக்கை நிறைவேற்றப்படும். எதிர்க்கட்சி வேட்பாளர் வெற்றி பெற மாட்டார். ஒருவேளை அவர் வெற்றி பெற்றால், நீங்கள் வைக்கின்ற கோரிக்கையை எப்படித் தீர்க்க முடியும்? அவர்கள் எங்களிடம் மனுவும் கொடுக்க மாட்டார்கள். தி.மு.க வெற்றி பெற்றால், ஏற்கெனவே இருக்கும் எம்.எல்.ஏ-க்களில் ஒரு எண்ணிக்கை கூடும். வேறு எந்த நன்மையும் நடக்காது' என விவரித்தார். தேர்தல் பிரசார நேரம் முடிவடைந்த பிறகு, தேர்தல் பணிகள் தொடர்பாகக் கட்சி நிர்வாகிகளிடம் கலந்தாலோசித்தார்.

எடப்பாடி பழனிசாமி

``ஆட்சிக்கான அஸ்திரமாக இந்தத் தேர்தல் இருப்பதால், தொடர் சுற்றுப் பயணத்தில் இருக்கிறார் முதல்வர். அதேநேரம், அமைச்சர்கள் சிலரின் தன்னிச்சையான செயல்பாடுகளால் மிகுந்த கோபத்தில் இருக்கிறார். நாடாளுமன்றம் பிளஸ் 22 சட்டமன்றத் தொகுதிகளின் வெற்றி தோல்விகளை கணக்கிட்டு அமைச்சர்கள் சிலர் மீது நடவடிக்கை எடுக்கும் முடிவில் இருக்கிறார் முதல்வர். சொல்லப் போனால், இந்தத் தேர்தல் அமைச்சர்களுக்கு வைக்கப்பட்ட தேர்வாகத்தான் அவர் பார்க்கிறார். தேர்தல் செலவுகளுக்காகத் தலைமை கொடுத்த பணத்தையும் சில அமைச்சர்கள் பதுக்கிக்கொண்டனர். பல தொகுதிகளுக்கு முறையாகப் பணம் சென்று சேரவில்லை. இதுதொடர்பாக, மத்திய, மாநில அரசுகளின் உளவுத்துறை அறிக்கையையும் அவர் ஆராய்ந்தார்" என விவரித்த அ.தி.மு.க நிர்வாகிகள் சிலர், 

அ.தி.மு.க தலைமைக் கழக கூட்டம்

``உளவுத்துறை அறிக்கையின் அடிப்படையில், பெண் அமைச்சர் ஒருவர் உட்பட 6 அமைச்சர்களைத் தனி வளையத்துக்குள் கொண்டு வந்திருக்கிறார். இந்த அமைச்சர்களில் சிலர் தென்மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள். ஒருவர் கொங்கு மண்டலத்தைச் சேர்ந்தவர். ஒருவர் சென்னையையொட்டியுள்ள பகுதியைச் சேர்ந்தவர். இன்னொருவர் வடக்கு மண்டலத்தைச் சேர்ந்தவர். இவர்கள் தேர்தல் வேலைகளில் தீவிரம் காட்டவில்லை. தலைமை கொடுத்த பணத்தையும் முறையாகக் கொண்டு சேர்க்கவில்லை. அதிலும், கொங்கு மண்டல அமைச்சர் தொடக்கத்திலிருந்தே கட்சிப் பணிகளில் பெரிதாக ஆர்வம் காட்டுவதில்லை. பெண் அமைச்சர் மீது அந்த மாவட்டக் கலெக்டரே மணல் உட்பட பல்வேறு பிரச்னைகளைப் பற்றி முதல்வரிடம் புகாராகத் தெரிவித்திருக்கிறார். சென்னையைச் சேர்ந்த அந்த அமைச்சர் பூந்தமல்லி தொகுதி இடைத்தேர்தலிலும் மக்களவைத் தொகுதி தேர்தலிலும் ஈடுபாட்டுடன் பணியாற்றவில்லை. 

எடப்பாடி பழனிசாமி

இந்த ஆட்சி மீது இவர்களுக்கு நம்பகத்தன்மை இல்லாததையே இது காட்டுவதாகக் கட்சி நிர்வாகிகள் கருதுகின்றனர். தவிர, இந்த 6 பேரும் அடிக்கடி கூடிப்பேசி தனி குரூப் ஒன்றை உருவாக்குவதாகவும் முதல்வருக்குத் தகவல் கிடைத்துள்ளது. `இனியும் இவர்களைப் பதவியில் நீடிக்கவிடுவது நல்லதல்ல' என்ற மனநிலைக்கு வந்துவிட்டார் முதல்வர். தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு வெற்றி, தோல்விகளை அலசி ஆராய்ந்து அதன் அடிப்படையில் இவர்களைக் கழட்டிவிடுவதற்கும் தயாராகி வருகிறார். இவர்கள் ஒவ்வொருவரையும் தீவிரக் கண்காணிப்பு வளையத்துக்குள் வைத்திருக்கிறார். மே 23-ம் தேதிக்குப் பிறகு அதிரடியாக சில நடவடிக்கைகளை எடுக்க இருக்கிறார் எடப்பாடி பழனிசாமி" என்கின்றனர் விரிவாக.