`மோடி செளக்கிதாரா?' அதிகரித்துவரும் குற்றப் பின்னணி பி.ஜே.பி வேட்பாளர்கள் | criminal cases on bjp candidates

வெளியிடப்பட்ட நேரம்: 18:43 (16/05/2019)

கடைசி தொடர்பு:12:03 (17/05/2019)

`மோடி செளக்கிதாரா?' அதிகரித்துவரும் குற்றப் பின்னணி பி.ஜே.பி வேட்பாளர்கள்

''குற்றப் பின்னணி எம்.பி-கள், எம்.எல்.ஏ-கள் மீது நடவடிக்கை பாயும்'' எனச் சொன்ன மோடி, கிரிமினல் பின்னணி வேட்பாளர்களை தேர்தலில் நிறுத்துவதையாவது தடுத்திருக்கலாம்.

`மோடி செளக்கிதாரா?' அதிகரித்துவரும் குற்றப் பின்னணி பி.ஜே.பி வேட்பாளர்கள்

 ''அரசியல், குற்றவாளிகள் மயமாவது வருத்தத்தை அளிக்கிறது. ஆட்சியைக் கைப்பற்ற வேண்டும் என்பதற்காகக் குற்றவாளிகளைக் காங்கிரஸ்காரர்கள் பயன்படுத்தத் தொடங்கினார்கள். குற்றப் பின்னணி மக்கள் பிரதிநிதிகள்மீது எடுக்கப்படும் நடவடிக்கையில், எந்தப் பாகுபாடும் நான் காட்டமாட்டேன். பி.ஜே.பி-யினராக இருந்தாலும் அவர்கள்மீதும் நடவடிக்கை பாயும். குற்றவாளிகளின் பிடியிலிருந்து அரசியலை விடுவிக்க எனக்கு ஒருமுறை வாய்ப்பு தாருங்கள்'' - 2014 நாடாளுமன்றத் தேர்தல் பிரசாரத்தில் (2014 ஏப்ரல் 14) குஜராத் காந்தி நகரில் இப்படி முழங்கினார், பிரதமர நரேந்திர மோடி. தேர்தலில் வென்று, ஆட்சிக்கு வந்த இந்த ஐந்தாண்டுக் காலத்தில் குற்றவாளிகளின் பிடியிலிருந்து அரசியலை விடுவிக்க, எந்த முயற்சியையும் மோடி எடுக்கவில்லை. மாறாகத் தேர்தலுக்குத் தேர்தல், குற்றப் பின்னணிகொண்ட வேட்பாளர்களைத்தான் களமிறக்கினார். மோடி ஆட்சிக்கு வந்த பிறகு, நடைபெற்ற மாநிலச் சட்டமன்றத் தேர்தல்களில் அதிக அளவில் குற்றவியல் பின்னணிகொண்ட வேட்பாளர்களைத்தான் பி.ஜே.பி நிறுத்தியது. இது, இந்த நாடாளுமன்றத் தேர்தலில் விஸ்வரூபம் எடுத்திருக்கிறது.

இப்போது நடைபெற்றுக்கொண்டிருக்கிற நாடாளுமன்றத் தேர்தலில் இந்தியா முழுவதும் போட்டியிட்ட மொத்த வேட்பாளர்கள் 7,928 பேரில், 1,500 பேர்மீது கிரிமினல் வழக்குகள் உள்ளன. அதாவது, மொத்த வேட்பாளர்களில் 19 சதவிகிதம் பேர் குற்றப் பின்னணியினர். இந்த 1,500 பேரில் 1,070 பேர் மீது கொலை, கொலை முயற்சி, கடத்தல், பாலியல் வன்கொடுமை மற்றும் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் உள்ளிட்ட கடுமையான கிரிமினல் வழக்குகள் நிலுவையில் இருக்கின்றன. இதன் சதவிகிதம் 13. இந்தத் தேர்தலில் பி.ஜே.பி. சார்பில் நிறுத்தப்பட்ட 433 வேட்பாளர்களில் 175 பேர் குற்றப் பின்னணி கொண்டவர்கள். பி.ஜே.பி களமிறக்கிய வேட்பாளர்களில் 40 சதவிகிதத்தினர் கிரிமினல் பின்னணியினர். இதில் 124 (29 சதவிகிதம்) பேர்மீது மட்டும் கடுமையான கிரிமினல் வழக்குகள் உள்ளன. ''ஆட்சியைக் கைப்பற்ற வேண்டும் என்பதற்காகக் குற்றவாளிகளைக் காங்கிரஸ்காரர்கள் பயன்படுத்தத் தொடங்கினார்கள்'' என ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு, மோடி சொன்ன குற்றச்சாட்டு இப்போது அவருக்கே பொருந்தும்.

மோடி

2014 நாடாளுமன்றத் தேர்தல் பிரசாரத்தில், அரசியலில் குற்றவாளிகள் கலப்பது தொடர்பாக, நிறைய இடங்களில் மோடி பேசினார். 2014 ஏப்ரல் 21-ம் தேதி உத்தரப்பிரதேசம் ஹர்தோய் என்ற இடத்தில் நடந்த பிரசாரக் கூட்டத்தில் பேசிய மோடி, ''நான் அரசியலையும் நாடாளுமன்றத்தையும் தூய்மைப்படுத்த வந்துள்ளேன். கட்சி வேறுபாடின்றி நாடாளுமன்ற உறுப்பினர்கள் மீதான குற்ற வழக்குகளை விரைந்து விசாரித்து நடவடிக்கை எடுப்பதற்காகக் குழு ஒன்றை அமைப்பேன். இந்தக் குழுவினர், வெற்றிபெற்ற எம்.பி-க்கள், தங்கள் வேட்புமனுக்களில் குறிப்பிட்ட வழக்குகளின் விவரங்களைச் சேகரிப்பார்கள். குற்றம்செய்தவர்கள் இருந்தால் அவர்கள் தண்டனைபெற்று, சிறைக்குச் செல்வார்கள். அவர்களின் தொகுதியில் மறு தேர்தல் நடைபெறும். அதில், குற்ற வழக்குகள் இல்லாத வேட்பாளர்கள் போட்டியிடுவார்கள்'' என முழங்கினார். ஐந்து ஆண்டுகள் ஆட்சியிலிருந்தபோது அப்படி எந்தக் குழுவையும் மோடி அமைக்கவில்லை. குற்றப் பின்னணி எம்.பி-க்கள் யாரையும் சிறைக்கு அனுப்பவும் இல்லை. மறு தேர்தலும் நடக்கவில்லை.

''தண்டிக்கப்பட்ட எம்.பி-க்களின் தொகுதிகளில் மறு தேர்தல் நடைபெறும்போது அதில், குற்ற வழக்குகள் இல்லாத வேட்பாளர்கள் போட்டியிடுவார்கள்'' எனச் சொல்லியிருந்தார் மோடி. அதன் பிறகு, எத்தனையோ இடைத்தேர்தல்கள் நடைபெற்றன. பல மாநிலங்களில் சட்டமன்றத் தேர்தல்கள் நடந்தன. அதில் எல்லாம் கிரிமினல் பின்னணிகொண்ட பி.ஜே.பி வேட்பாளர்கள்தான் அதிக அளவில் நிறுத்தப்பட்டார்கள். அரசியலைத் தூய்மைப்படுத்துவதை வேட்பாளர்களில் இருந்தே ஆரம்பித்திருக்கலாம். அதை, மோடி செய்யவில்லை. குற்றப் பின்னணி மக்கள் பிரதிநிதிகளைத் தண்டிப்பதற்குப் பதிலாக செளக்கிதார் ஆனார், மோடி. அவர் சொன்ன வாக்குறுதிகள் பொய்யாகின.

குற்றப் பின்னணி வேட்பாளர்கள்

2014 ஏப்ரல் 14-ம் தேதி குஜராத், காந்தி நகர் பிரசாரத்தில், குற்றப் பின்னணியினர் பற்றித்தான் அதிகமாகப் பேசினார், மோடி. ''அரசியலைக் குற்றவாளிகளின் பிடியிலிருந்து விடுவிப்பேன். பி.ஜே.பி ஆட்சிக்கு வந்தால், குற்றம்புரிந்த எம்.பி. மற்றும் எம்.எல்.ஏ-க்கள் ஓராண்டுக்குள் சிறைக்கு அனுப்பப்படுவார்கள். பி.ஜே.பி-யினராக இருந்தாலும் அவர்கள்மீதும் நடவடிக்கை பாயும். 'குற்றம் புரிந்த எம்.பி., எம்.எல்.ஏ-க்களுக்கு எதிரான வழக்குகளை விசாரிப்பதற்கு உச்ச நீதிமன்றம் வழிகாட்டுதலின்படி சிறப்பு நீதிமன்றங்களை ஓராண்டில் அமைப்பேன்'' என்றெல்லாம் கர்ஜித்தார் மோடி. அவர் சொன்னபடி, ஓராண்டுக்குள் சிறைக்கு யாரும் அனுப்பப்படவில்லை.

`தண்டனைப் பெற்ற மக்கள் பிரதிநிதிகளுக்குத் தேர்தலில் போட்டியிட வாழ்நாள் தடை விதிக்க வேண்டும்’ என வழக்கறிஞர் அஸ்வினி குமார் உபாத்யா என்பவர் பொதுநல வழக்கு ஒன்றை உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்தார். `குற்றப் பின்னணி கொண்ட எம்.பி, எம்.எல்.ஏ-க்களை விசாரிக்கச் சிறப்பு நீதிமன்றங்கள் அமைக்க வேண்டும். 2018 மார்ச் 1-ம் தேதி முதல் அவை செயல்பட வேண்டும்' எனக் கடந்த 2017 டிசம்பரில் உத்தரவிட்டது உச்ச நீதிமன்றம். இதன்பிறகும் மத்திய அரசு துரித நடவடிக்கை எடுக்காமல் 12 சிறப்பு நீதிமன்றங்களைக் கடந்த ஆண்டு செப்டம்பரில்தான் அமைத்தார்கள். தன்னிச்சையாகச் சிறப்பு நீதிமன்றங்களை அமைக்க முன்வராமல் நீதிமன்றம் உத்தரவிட்ட பிறகு, அதையும் காலம் தாழ்த்திதான் அமைத்தார் மோடி. அந்தக் காந்தி நகர் பிரசாரக் கூட்டத்தில் இன்னொரு கருத்தையும் சொன்னார், மோடி. ''எம்.பி, எம்.எல்.ஏ-க்களைத் தொடர்ந்து, உள்ளாட்சிப் பிரதிநிதிகள்மீதான வழக்குகளை விசாரிக்க, ஊராட்சி அடிப்படையில் சிறப்பு நீதிமன்றங்கள் அமைக்கப்படும்'' என்றார். அதுவும் புஸ்வாணம்தான்.

அதிகரித்து வரும் குற்றப் பின்னணி பி.ஜே.பி. வேட்பாளர்கள்

''குற்றப் பின்னணி எம்.பி-க்கள், எம்.எல்.ஏ-க்கள் மீது நடவடிக்கை பாயும்'' எனச் சொன்ன மோடி, கிரிமினல் பின்னணி வேட்பாளர்களைத் தேர்தலில் நிறுத்துவதையாவது தடுத்திருக்கலாம். மாறாக, தேர்தலுக்குத் தேர்தல் குற்றப் பின்னணிகொண்ட வேட்பாளர்களை அதிகரித்துக்கொண்டே வந்திருக்கிறது பி.ஜே.பி. 2009 நாடாளுமன்றத் தேர்தலில் பி.ஜே.பி நிறுத்திய கிரிமினல் பின்னணி வேட்பாளர்கள் 27 சதவிகிதம். இது, அடுத்து வந்த 2014 தேர்தலில் 33 சதவிகிதமாக உயர்ந்தது. இந்தத் தேர்தலில் குற்றப் பின்னணி பி.ஜே.பி வேட்பாளர்கள் 40 சதவிகிதமாக அதிகரித்திருக்கிறது.

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்