`2014 ஜெயலலிதா நிலைதான் ஸ்டாலினுக்கும்!' - கனிமொழியைக் கலங்க வைத்த தேர்தல் நிலவரம் | Kanimozhi reaction regarding election results

வெளியிடப்பட்ட நேரம்: 12:58 (23/05/2019)

கடைசி தொடர்பு:13:12 (23/05/2019)

`2014 ஜெயலலிதா நிலைதான் ஸ்டாலினுக்கும்!' - கனிமொழியைக் கலங்க வைத்த தேர்தல் நிலவரம்

மக்களவைத் தொகுதிகளில் அதிக இடங்களில் முன்னணி வகித்தாலும், கனிமொழியின் கட்டுப்பாட்டில் விடப்பட்டிருந்த விளாத்திகுளத்தில் அ.தி.மு.க முன்னணி வகிப்பது அவருக்கு அதிர்ச்சியைக் கொடுத்தது.

`2014 ஜெயலலிதா நிலைதான் ஸ்டாலினுக்கும்!' - கனிமொழியைக் கலங்க வைத்த தேர்தல் நிலவரம்

தேர்தல் முடிவுகளால் மிகுந்த இறுக்கத்தில் இருக்கிறார் தி.மு.க மகளிரணி செயலாளர் கனிமொழி. `இவ்வளவு இடங்களை வென்றும் மத்தியில் வர முடியவில்லையே...' என வேதனையை வெளிப்படுத்தியிருக்கிறார். 

தேர்தல் ஆணைய குளறுபடிகள், வாக்குப்பதிவு இயந்திரங்களின் தன்மை ஆகியவற்றை முன்வைத்து குற்றச்சாட்டை எழுப்ப முடியாத நிலைக்குத் தள்ளப்பட்டிருக்கிறது தி.மு.க தலைமை. அந்தளவுக்கு நாடாளுமன்றத் தேர்தலில் பெரும்பான்மையான இடங்களில் முன்னணி வகிக்கிறது தி.மு.க. அதேநேரம், எம்.பி தொகுதிகளில் முன்னணியில் இருந்தாலும் 22 சட்டமன்றத் தொகுதிகளின் வாக்கு எண்ணிக்கை நிலவரங்கள் உடன்பிறப்புகள் மத்தியில் மன வருத்தத்தை ஏற்படுத்தியிருக்கின்றன. தேர்தல் வெற்றி கொண்டாட்ட மனநிலைக்கு வர முடியாமல் தவிக்கின்றனர்.

கனிமொழி

இன்று காலை வாக்கு எண்ணிக்கை தொடங்கியதுமே, சி.ஐ.டி காலனி வீட்டில் இருந்தபடியே வாக்கு நிலவரத்தைப் பார்த்துக் கொண்டிருந்தார் கனிமொழி. கூடவே, அவரது கணவர் அரவிந்தனும் தேர்தல் நிலவரங்களை விவாதித்தபடியே இருந்தார். மக்களவைத் தொகுதிகளில் அதிக இடங்களில் முன்னணி வகித்தாலும், கனிமொழியின் கட்டுப்பாட்டில் விடப்பட்டிருந்த விளாத்திகுளத்தில் அ.தி.மு.க முன்னணி வகிப்பது அவருக்கு அதிர்ச்சியைக் கொடுத்தது. ஓட்டப்பிடாரத்தில் தி.மு.க முன்னணி வகிப்பது மகிழ்ச்சியைக் கொடுத்துள்ளது. அதே விளாத்திகுளத்தில் உள்ள வாக்காளர்கள் எம்.பி. தேர்தலில் கனிமொழிக்கு அதிகப்படியாக வாக்களித்துள்ளனர். ஆனால், சட்டமன்ற இடைத்தேர்தலில் அ.தி.மு.கவை சாய்ஸாக எடுத்திருப்பதை அவரால் புரிந்துகொள்ள முடியவில்லை. 

கனிமொழி

இருப்பினும், சி.ஐ.டி காலனி வீட்டில் இருந்தபடியே தூத்துக்குடி மாவட்டப் பொறுப்பாளர்களிடம் வாக்கு எண்ணிக்கை நிலவரங்களைக் கேட்டபடியே இருந்தார். அனிதா ராதாகிருஷ்ணன், கீதா ஜீவன் உள்ளிட்டவர்களிடம், வாக்கு மையங்களை கூடுதல் விழிப்புடன் கவனிக்குமாறும் அறிவுறுத்தினார். மாநிலம் முழுவதும் தி.மு.க அதிக இடங்களில் முன்னணி வகிப்பதைக் கவனித்தவர், அகில இந்திய அளவில் பா.ஜ.க பிரதான இடத்துக்கு வருவதை அதிர்ச்சியோடு கவனித்துக்கொண்டிருந்தார். முன்னணி நிலவரங்களைக் கவனித்துக் கொண்டிருந்தவர், `சென்ட்ரலில் நாம் வர முடியவில்லையே...' என ஆதங்கத்தை வெளிப்படுத்தியிருக்கிறார். 

ஸ்டாலின்

`கடந்த 2014 நாடாளுமன்றத் தேர்தலில் 37 இடங்களை ஜெயலலிதா வென்றபோதும், நாடாளுமன்றத்தில் எந்தவித தாக்கத்தையும் ஏற்படுத்தவில்லை. அதேநிலைமை தற்போது தி.மு.க.வுக்கும் வாய்த்திருக்கிறது' எனவும் ஆதங்கத்துடன் பேசத் தொடங்கிவிட்டனர் உடன்பிறப்புகள். மோடியின் பிரமாண்ட வெற்றியைக் கொண்டாட முடியாத சோகத்தில் தூத்துக்குடி வேட்பாளர் தமிழிசையும் கன்னியாகுமரி வேட்பாளர் பொன்னாரும் சோகத்தில் ஆழ்ந்துள்ளனர். இறுதிக்கட்ட நிலவரத்துக்காகக் காத்திருக்கிறது தி.மு.க தலைமை.