`நீங்க கவலைப்படாதீங்க... பாத்துக்கலாம்!’ - எடப்பாடி பழனிசாமியைத் தேற்றிய பா.ஜ.க | bjp Consoled edappadi palanisamy

வெளியிடப்பட்ட நேரம்: 13:23 (23/05/2019)

கடைசி தொடர்பு:12:31 (24/05/2019)

`நீங்க கவலைப்படாதீங்க... பாத்துக்கலாம்!’ - எடப்பாடி பழனிசாமியைத் தேற்றிய பா.ஜ.க

எடப்பாடி பழனிசாமி

எடப்பாடி பழனிசாமிக்கு இது வாழ்வா... சாவா பிரச்னை. மக்களவைத் தேர்தலில் எப்படியும் தன் சொந்த ஊரான சேலத்தில் வெற்றி பெற்றாக வேண்டும் என்று பணத்தை வாரியிறைத்தார். ஆனால், அது அவருக்கு கைகொடுக்கவில்லை. தி.மு.க-வின் எஸ்.ஆர்.பார்த்திபன் தான் முன்னிலையில் இருக்கிறார். மக்களவைத் தேர்தலில் 36 இடங்களில் தி.மு.க முன்னிலையிலும், அ.தி.மு.க 3 இடங்களிலும் முன்னிலையில் உள்ளன. இது ஒருவகையில் எடப்பாடி எதிர்பார்த்ததுதான். அவரைப் பொறுத்தவரை இடைத்தேர்தல்தான் டார்கெட். மக்களவைத் தேர்தல் இரண்டாவது பட்சம்தான். நினைத்தபடியே இடைத்தேர்தல் முடிவுகளில் தி.மு.வுக்கு டஃப் கொடுத்திருக்கிறார். 22 சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தலில் 14-08  என்ற நிலையில் உள்ளது.

பழனிசாமி

`ஆட்சிக்கு ஆபத்தில்லை’ என்ற மனநிலையில் இருக்கிறார். ஒருவேளை இடைத்தேர்தலில் குறைவான இடங்களே பிடித்திருந்தாலும்கூட, `பா.ஜ.க-வினர் சொன்ன வார்த்தைகள் அவருக்கு கூடுதல் நம்பிக்கையைக் கொடுத்திருக்கிறது’ என்கிறார்கள். இது தொடர்பாக அ.தி.மு.க வட்டாரத்தில், ``எக்ஸிட் போல் முடிவுகள் வந்த பிறகு பா.ஜ.க வெற்றிக்கான மனநிலைக்குச் சென்றுவிட்டது. அதன் அடிப்படையில்தான், மே 21-ம் தேதி கூட்டணிக் கட்சிகளை அழைத்து அவர் வைத்த விருந்து. தமிழகம் சார்பில், முதல்வர் பழனிசாமி, ஓ.பி.எஸ், தம்பிதுரை, வேலுமணி உள்ளிட்ட கூட்டணிக்கட்சியினர் விருந்துக்குச் சென்றிருந்தனர்.

மோடி

இந்த விருந்தின்போது, மோடி ஒவ்வொரு தலைவராகச் சந்தித்து கைகொடுத்து நன்றி தெரிவித்திருக்கிறார். தமிழக முதல்வரை சந்தித்த மோடி தரப்பினர், `மத்தியில நம்ம ஆட்சிதான் வரப்போகுது. ஒண்ணும் கவலைப்படாதீங்க. அதைத்தான் எக்ஸிட் போல் முடிவுகளும் உறுதிப்படுத்தியுள்ளன. உங்க ஒத்துழைப்புக்கு நன்றி. கவலைப்படாதீங்க நம்ம பாத்துக்கலாம்” என்று கூறியுள்ளார். எடப்பாடி சார்பில் அவரிடம், `தமிழகத்துல இருக்குற நிலைமை உங்களுக்குத் தெரியும். அப்படி ஏதாச்சும் ஆட்சிக்கு ஆபத்து வந்துருச்சுனா என்ன பண்றதுனு தெரியல’ என்று கவலையுடன் பேசியிருக்கிறார். மோடி, `ஒண்ணும் கவலப்படாதீங்க, நம்ம பெரும்பான்மையோட ஆட்சி அமைக்கிறோம். அப்படியிருக்கும்போது, உங்க ஆட்சி 2 ஆண்டுகள் எந்தச் சிக்கலும் இல்லாமல் நடக்கும்’ என்று ஆறுதல் கூறியுள்ளனர்.

அருகிலிருந்த ஓ.பி.எஸ்ஸிடம் எதுவும் பேசவில்லை” என்கின்றனர். இதனால், எடப்பாடி பழனிசாமி நம்பிக்கையோடு தமிழகம் திரும்பினார். அதே நம்பிக்கையோடு காலையில் தேர்தல் முடிவுகளைப் பார்த்த எடப்பாடி, தமிழக நிலவரங்களைக் காட்டிலும் இந்தியா முழுக்க பா.ஜ.க எத்தனை இடங்களில் முன்னிலை வகிக்கிறது என்பதை கவனித்துள்ளார். பின்பே, ஆட்சிக்கு ஆபத்தில்லை என்று நிம்மதியடைந்துள்ளார். அவருக்கு மற்றொரு ஆறுதலாக இருப்பது டி.டி.வி.தினகரனின் அம்மா மக்கள் முன்னேற்றக்கழகம் ஒரு தொகுதியிலும் வெற்றிபெறாததுதான். இதே உற்சாகத்தில் இரண்டு ஆண்டுகளைக் கடந்துவிடுவார் என்கின்றனர், அ.தி.மு.க-வினர்.