ஓங்கிய தி.மு.க; வீழ்ந்த அ.தி.மு.க - தமிழக வாரிசுகளின் நிலை? | Tn political successor election result

வெளியிடப்பட்ட நேரம்: 18:19 (23/05/2019)

கடைசி தொடர்பு:18:19 (23/05/2019)

ஓங்கிய தி.மு.க; வீழ்ந்த அ.தி.மு.க - தமிழக வாரிசுகளின் நிலை?

சுதந்திரம் பெற்ற பிறகு இந்தியா ஜனநாயக அரசியலில் காலடி எடுத்து வைத்து 72 ஆண்டுகள் ஆனாலும் இன்னும் வாரிசு அரசியலிலிருந்து வெளியில் வரவில்லை என்றுதான் கூறவேண்டும். இது தற்போது நடக்கும் நாடாளுமன்றத் தேர்தல் வரை தொடர்ந்துகொண்டே உள்ளது.  தமிழகத்தைப் பொறுத்தவரை, இந்தத் தேர்தலில் அனைத்துக் கட்சிகளிலிருந்தும் பலமான வாரிசுகளே களமிறக்கப்பட்டுள்ளனர். தி.மு.க போட்டியிடும் 19 தொகுதிகள் ஐந்து பேர் வாரிசுகள். அதேபோல் அ.தி.மு.க-வில் நான்கு வாரிசுகளும், காங்கிரஸில் இரண்டு வாரிசுகளும் களத்தில் உள்ளனர். 

கலாநிதி வீராசாமி

ஆற்காடு வீராசாமியின் மகன் கலாநிதி வீராசாமி. இவர் வட சென்னை மக்களவைத் தொகுதியில் தி.மு.க சார்பில் போட்டியிடுகிறார். தண்ணீர் பிரச்னை அதிகம் இருக்கும் அந்தத் தொகுதியில் கலாநிதி வீராசாமி 1,63,496 வாக்குகள் பெற்று தொடர்ந்து முன்னிலை பெற்று வருகிறார். அந்தத் தொகுதியில் அவரை எதிர்த்து அ.தி.மு.க கூட்டணியிலிருந்த தே.மு.தி.க போட்டியிட்டது. 

தமிழச்சி தங்கப்பாண்டியன்

தி.மு.க-வின் மூத்த நிர்வாகியான தங்கபாண்டியனின் மகள் தமிழச்சி தங்கப்பாண்டியன். எழுத்தாளரான இவர் தென் சென்னை தொகுதியில் தி.மு.க வேட்பாளராகக் களமிறங்கியுள்ளார். அந்தத் தொகுதியில் காலை முதல் தமிழச்சி தங்கபாண்டியன்தான் தொடர்ந்து முன்னிலையில் உள்ளார். அங்கு அ.தி.மு.க சார்பில் ஜெயவர்த்தன் போட்டியிடுகிறார். 

கனிமொழி கருணாநிதி

தி.மு.க முன்னாள் தலைவர் கருணாநிதியின் மகள் கனிமொழி. இவர் தூத்துக்குடி தொகுதியில் போட்டியிடுகிறார். ஸ்டெர்லைட், துப்பாக்கிச்சூடு போன்ற பல பிரச்னைகளைச் சந்தித்த அந்தத் தொகுதியில் முதல் சுற்று முதல் கனிமொழியே முன்னிலையில் உள்ளார். அவரை எதிர்த்துப் போட்டியிட்ட தமிழக பா.ஜ.க தலைவர் தமிழிசை கடும் பின்னடைவைச் சந்தித்துள்ளார்.

தயாநிதிமாறன்

கருணாநிதியின் பேரனும், முரசொலி மாறனின் மகனுமான தயாநிதிமாறன் மத்திய சென்னையில் போட்டியிடுகிறார். அந்தத் தொகுதியில் அ.தி.மு.க கூட்டணியில் உள்ள பா.ம.க வேட்பாளர் சாம்பால் களத்தில் உள்ளார். ஆனால், காலை முதல் தயாநிதிமாறனே முன்னிலையில் பெற்று வருகிறார். இதற்கு முன்னதாக இதே தொகுதியில் போட்டியிட்டு இரண்டு முறை தயாநிதிமாறன் எம்.பியாகியுள்ளார். 

கௌதம சிகாமணி 

பொன்முடியின் மகன் கௌதம சிகாமணி கள்ளக்குறிச்சி தொகுதியில் போட்டியிடுகிறார். அங்கு போட்டியிட்டுள்ள தே.மு.தி.க-வின் எல்.கே சுதீஷைவிட ஒரு லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலையில் உள்ளார். 

ரவீந்திரநாத்குமார்

தமிழக துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வதித்தின் மகன் ரவீந்திரநாத்குமார். இந்தத் தேர்தலில் தன் சொந்த தொகுதியிலேயே மகனைக் களமிறக்கியுள்ளார் ஓ.பி.எஸ். தேனியில் எப்படியேனும் மகனை வெற்றி பெறச் செய்ய வேண்டும் என்ற முனைப்பில் பணியாற்றினார். ஆனால், காலை முதல் அ.தி.மு.க-வின் ரவீந்திரநாத்குமாருக்கும், காங்கிரஸின் முன்னாள் தலைவர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவனுக்கும் இடையே கடும் போட்டி நிலவி வருகிறது. குறைந்த வாக்கு வித்தியாசத்தில் இருவருக்கும் இழுபறி நீடித்துவருகிறது. 

ஜெயவர்த்தன்

தமிழக மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமரின் மகன் ஜெயவர்த்தன். இவர் தென் சென்னையில் அ.தி.மு.க சார்பில் போட்டியிடுகிறார். அங்கு தி.மு.க சார்பில் போட்டியிடும் தமிழச்சி தங்க பாண்டியன் காலை முதல் முன்னிலையில் உள்ளார்.

ராஜ் சத்யன் 

அ.தி.மு.க-வின் ராஜன் செல்லப்பாவின் மகன் ராஜ் சத்யன். இவர் மதுரை மக்களவைத் தொகுதியில் போட்டியிடுகிறார். அங்கு தி.மு.க கூட்டணியில் உள்ள கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர் சு.வெங்கடேசன் முன்னிலையில் உள்ளார். சத்யன் கடும் பின்னடைவைச் சந்தித்துள்ளார். 

மனோஜ் பாண்டியன்

பி.ஹெச். பாண்டியனின் மகன் மனோஜ் பாண்டியன். நெல்லை மக்களவைத் தொகுதியில் இவர் போட்டியிடுகிறார். அங்கு வாக்கு எண்ணிக்கை தொடங்கியதிலிருந்தே தி.மு.க வேட்பாளர் ஞானதிரவியம் முன்னிலையில் உள்ளார். இங்கு அ.தி.மு.க-வுக்கு பெரும் பின்னடைவு.

கார்த்தி சிதம்பரம்

நிதித்துறை முன்னாள் அமைச்சர் ப.சிதம்பரத்தின் மகன் கார்த்தி சிதம்பரம். இவர் பா.ஜ.க-வின் ஹெச்.ராஜாவை எதிர்த்து சிவகங்கை தொகுதியில் களமிறங்கினார். அங்கு கார்த்தி சிதம்பரம் 75,000 வாக்கு வித்தியாசத்தில் முன்னிலையில் உள்ளார்.

விஷ்ணு பிரசாத்

கிருஷ்ணசாமியின் மகன் விஷ்ணு பிரசாத். இவர் ஆரணி தொகுதியில் தி.மு.க கூட்டணியில் உள்ள காங்கிரஸ் சார்பாகப் போட்டியிடுகிறார். அந்தத் தொகுதியில் இவரே காலை முதல் முன்னிலையில் உள்ளார்.