Published:Updated:

என்ன செய்தார் எம்.பி.? - ஆரணி

என்ன செய்தார் எம்.பி.? - ஆரணி
##~##

கைக்கும்  இலைக்கும் எப்போதுமே ஏழாம் பொருத்தம்தான். டெல்லி தொடங்கி தமிழ்நாடு வரை கதர் சட்டைகளை வறுத்தெடுப்பது ஜெயலலிதாவின் ஸ்டைல். அப்படிப்பட்ட ஜெயலலிதாவே தேடிப்போய் தமிழக காங்கிரஸ் தலைகள் இருவரை சந்தித்திருக்கிறார்.  ஒருவர் மூப்பனார்.  இன்னொருவர் எம்.கிருஷ்ணசாமி. 

கிருஷ்ணசாமி வேறு யாருமல்ல. தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் முன்னாள் தலைவர். இன்னாள் ஆரணி தொகுதி எம்.பி. டாக்டர் ராம தாஸின் சம்பந்தி. கிருஷ்ணசாமி தீவிர ராமர் பக்தர். ராமர் படம் பொறித்த பெரிய டாலர் ஒன்று கிருஷ்ணசாமியின் கழுத்தில் எப்போதும் தொங்கிக்கொண்டிருக்கும். அந்த டாலரை ஒருநாளும் கிருஷ்ணசாமி கழற்றியது இல்லை. 2007-ம் ஆண்டு... தேவர் நூற்றாண்டு விழாவில் பங்கேற்பதற்காக சென்றபோது, முதுகுளத்தூர் அருகில் வேல்கம்பால் குத்தப்பட்டார். நெஞ்சை நோக்கிப் பாய்ந்த வேல் கம்பு, ராமர் டாலரில் முதலில் பட்டு, வழுக்கி வயிற்றில் பாய்ந்தது. அன்றைக்கு கிருஷ்ணசாமியின் உயிரைக் காத்தது ராமர் டாலர்தான். சிகிச்சைக்காக அப்போலோ மருத்துவனையில் அட்மிட் ஆகியிருந்த கிருஷ்ணசாமியை வலியச்சென்று ஜெயலலிதா பார்த்தது, அன்றைய ஆளும் தி.மு.க. ஆட்சியில் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. ''உங்களுக்கு இது நடந்திருக்கக்

என்ன செய்தார் எம்.பி.? - ஆரணி

கூடாது. உங்க நல்ல மனசுக்கு எதுவுமே ஆகாது... உங்களைக் கடவுள்தான் காப்பாத்தியிருக்காரு'' என்று கிருஷ்ணசாமிக்கு ஜெயலலிதா ஆறுதல் சொல்ல... ''நீங்க வணங்குற கடவுள்தான் என்னைக் காப்பாத்தியிருக்காரு'' என்று ராமரை மனதில் வைத்து சொன்னார் கிருஷ் ணசாமி.

அப்படிப்பட்ட  கிருஷ்ணசாமி, ஆரணி மக்கள் மனதில் இடம்பிடித்து இருக்கிறாரா?  

2009 தேர்தலில் புதிதாக உருவாக்கப்பட்ட ஆரணி தொகுதியின் முதல் எம்.பி. என்ற பெருமையைப் பெற்ற கிருஷ்ணசாமியின் சொந்த ஊர் செய்யாறு அருகே உள்ள மேலப்பட்டு. ஆரணி தொகுதியில்தான் இந்தக் கிராமம் வருகிறது. பக்கா விவசாயி. அடக்கமான தலைவர் என காங்கிரஸில் பெயர் எடுத்த கிருஷ்ணசாமி, தொகுதிக்கு எதுவும் செய்யாமல் அமைதியாகி விட்டார் என்றே தொகுதி முழுக்க பரபவலாக பேச்சு.  

திருவண்ணாமலை மாவட்டத்தில்தான் ஆரணி தொகுதியின் பெரும் பகுதிகள் இருக்கின்றன. இங்கே நெல் சாகுபடி மற்றும் அரிசி ஆலைகள்தான் முக்கியத் தொழில். இரண்டாவது முக்கியத் தொழில் பட்டு நெசவு. விசைத்தறியில் பருத்தி ஆடைகளும் நெய்யப்படுகின்றன. 'ஆரணியில் பட்டுச் சேலைக்கும் அரிசிக்கும் ஏற்றுமதி மையம் அமைக்க வேண்டும்’ என நெசவாளர்களும் விவசாயிகளும் பல வருடங்களாக  கோரிக்கை விடுத்து வருகிறார்கள். அது, இன்னும் கனவாகவே இருக்கிறது.

''காஞ்சிபுரம் பட்டுக்கு இணையாக ஆரணி பட்டுக்கு பெயர் உருவாக்கித் தருவேன். பட்டு நெசவு பூங்கா அமைப்பேன்'' என்று தேர்தல் பிரசாரத்தில் முழங்கினார் கிருஷ்ணசாமி. ''ஆரணி தொகுதியில் மத்திய அரசு பட்டுப் பூங்கா அமைக்க முன்வருமா?'' என நாடாளுமன்றத்தில் கேள்வி எழுப்பியதோடு சரி. 'பட்டு நெசவுப் பூங்காவும் விவசாய ஆராய்ச்சி மையமும் கைத்தறி நெசவாளர் சேவை மையமும் ஆர​ணிக்கு ஒதுக்கப்​பட்டதாக தொகுதிக்குள் தலை காட்டிய​போது எல்லாம் சொல்லிவந்தார். ஆனால், கொண்டுவந்து காட்டவில்லை'' என்கிறார்கள் பொதுநல அமைப்பினர்.

ஆரணிக்கு ரயில் வசதி ஏற்படுத்த வேண்டும் என்பது மூன்று தலை​முறைகளுக்கும் மேலான கோரிக்கை. திண்டிவனத்தில் இருந்து வந்தவாசி, செய்யாறு, ஆரணி, ஆற்காடு, ராணிப்பேட்டை, வாலாஜா​பேட்டை வழியாக  நகரி  வரை 179 கி.மீ. தூரத்துக்கு ரயில் பாதை அமைக்கத்  திட்டம் தயாரிக்கப்பட்டது. இந்த ரயில் பாதைத் திட்டத்தை நிறைவேற்றுவேன் என்பதுதான் தேர்தல் பிரசாரத்தில் கிருஷ்ணசாமி வைத்த பிரதான வாக்குறுதி. அந்தத் திட்டத்​துக்கான பணிகள் மந்தகதியில்தான் நடக்கின்றன என்பது மக்களின் குற்றச்சாட்டு.

என்ன செய்தார் எம்.பி.? - ஆரணி

''பா.ம.க-வைச் சேர்ந்த முன்​னாள் ரயில்வே இணை அமைச்சர் வேலுவின் முயற்சி​யால், திண்டிவனத்தில் இருந்து ஆரணி வழியாக நகரி வரை ரயில் பாதை அமைக்க 2006-07-ம் ஆண்டில், திட்டம் தீட்டப்பட்டது. பிறகு, 2008 ஏப்ரல் மாதம் ஆரணியில் இதற்காக அடிக்கல் நாட்டப்பட்டது. இரண்டு கோடி ரூபாயில் ஆரணியில் ரயில் நிலையம் அமைக்கும் பணியும் நடைபெற்றது. ஆனால், அதன்பிறகு பெரிய முன்னேற்றம் எதுவும் இல்லை. நில ஆர்ஜிதம் பணிகள்கூட முழுமை அடையவில்லை. இப்போது நடந்துவரும் பணிகளைப் பார்த்தால் திட்டம் முடிவ​டைய இன்னும் பல ஆண்டுகள் ஆகும் போல இருக்கிறது'' என்று ஆரணி மக்கள் ஏகக் கடுப்புடன் சொல்கின்றனர்.

ரயில்வே துறையில் விசாரித்தால், ''582.83 கோடி ரூபாய் மதிப்பிலான திட்டம் இது. இது​வரை இந்தத் திட்டத்துக்காக 136 கோடி ரூபாய் செலவிடப்பட்டிருக்கிறது. பாலாற்றின் குறுக்கே பாலத்துக்காகத் தூண்கள் அமைக்கப்பட்டுள்ளன. செய்யாறு ஆற்றில் பாலத்துக்கான தூண்கள் அமைக்கும் பணி நடந்துவருகிறது'' என் கின்றனர்.

''வரலாற்றுச் சின்னமான செஞ்சிக் கோட்​டையை சுற்றுலாத் தலமாக்குவேன்'' என்பதும் தேர்தல் நேரத்தில் கிருஷ்ணசாமி கொடுத்த வாக்குறுதி. ''செஞ்சிக்கோட்டைக்கு வரும் வெளி நாட்டு, உள்நாட்டு சுற்றுலாப் பயணிகளுக்கு அனைத்து அடிப்படை வசதிகளையும் ஏற்படுத்தித் தருவதே என் லட்சியம். செஞ்சிக்கோட்டையில் ராஜா, ராணி கோட்டைக்கு ரோப் கார் அமைப்பேன்'' என்று தேர்தல் வெற்றிக்கு நன்றி சொல்ல வந்தபோது சொன்னார் கிருஷ்ணசாமி. தொல்லியல் துறை கட்டுப்பாட்டில் உள்ள செஞ்சி நகரை சுற்றுலா மையமாக அறிவிக்க வேண்டும் என்று நாடாளுமன்றத்தில் குரல் கொடுத்ததோடு அமைதியாக  இருந்துவிட்டார் கிருஷ்ணசாமி. ரோப் காரும் வரவில்லை. சுற்றுலா தலமும் ஆகவில்லை. மைலம் முருகன் கோயிலை சுற்றுலாத் தலம் ஆக்க வேண்டும் என்ற கோரிக்கையும் நிறைவேறவில்லை.

என்ன செய்தார் எம்.பி.? - ஆரணி

திருவண்ணாமலை மாவட்டத்தில்தான் பால் உற்பத்தி அதிகம். சென்னையின் பால் தேவையை திருவண்ணாமலைதான் பூர்த்திசெய்கிறது. அந்த அளவுக்கு பால் உற்பத்தி அதிகமாக இருக்கும் ஆரணி தொகுதியில் ''பால் சம்பந்தமான பொருட்கள் தயாரிக்கும் தொழிற்​சாலையை கொண்டுவருவேன்'' என்று தேர்தலின் போது சொன்ன வாக்குறுதியும் காற்றில் கரைந்துபோனது. ''நாடாளுமன்றத்தில் கலந்து கொள்ளும் நாட்களைத் தவிர மற்ற நாட்களில் தொகுதியில்தான் இருப்பேன்'' என்று தேர்தல் வெற்றிக்குப் பிறகு சொன்னார். ஆனால், ''தொகுதி பக்கம் அடிக்கடி வருவது இல்லை. அவரைப் பார்க்க வேண்டும் என்றால் சென்னையில் இருக்கும் அவரது வீட்டுக்கோ டெல்லியில் இருக்கும் அவரது அலுவலகத்துக்கோதான் செல்ல வேண்டும். தொகுதியில் ஒரு அலுவலகம்கூட இல்லை'' என்று அலுத்துக்கொள்கிறார்கள் தொகுதிவாசிகள்.

ஆரணி அருகே சேதாரம்பட்டு, நடுக்குப்பம் ஆகிய இரண்டு கிராமங்களுக்கு நடுவே கமண்டல நதி ஓடுகிறது. சேதாரம்பட்டு கிராமத்தைச் சேர்ந்த பள்ளி மாணவர்கள் நடுக்குப்பத்துக்கு வந்துதான் படிக்கின்றனர். பொதுமக்களும் தங்களின் தேவைகளுக்காக நடுக்குப்பத்துக்குதான் வர வேண்டும். இரண்டு கிராமங்களுக்கும் இடையே கமண்டல நதியின் குறுக்கே பாலம் கட்ட வேண்டும் என்பது 30 ஆண்டுகளாக வைக்கப்பட்டு வரும் கோரிக்கை. இதற்காக மாவட்ட ஆட்சியரிடம் பேசியதோடு சரி. அதன்பிறகு பெரிதாக எந்த முயற்சியையும் கிருஷ்ணசாமி எடுக்கவில்லை.

போளூரில் அரசு கலைக் கல்லூரி இல்லாததால், சுற்று வட்டார கிராமத்தினர் திருவண்ணாமலை அல்லது வேலூருக்குதான்  செல்ல வேண்டிய நிலைமை. அங்கு அரசுக் கல்லூரி வேண்டும் என்ற கோரிக்கைக்கும் கிருஷ்ணசாமி குரல் கொடுக்க​வில்லை.

என்ன செய்தார் எம்.பி.? - ஆரணி

சென்னை-திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் கூட்டேரிப்​பட்டு என்ற இடத்தில் மைலம் டு புதுச்சேரி செல்லும் சாலை குறுக்கிடுகிறது. ''இங்கு மேம்பாலம் அமைக்க வேண்டும் என்பது மக்களின் கோரிக்கை. அது இல்லாததால், இதுவரை 30-க்கும் மேற்பட்டோர் சாலை விபத்தில் இறந்துள்ளனர்'' என்று வருத்ததுடன் சொல்கின்றனர் மக்கள்.  

சர்க்கரை ஆலை, சிப்காட் தொழிற்பேட்டை, போளூரில் இரும்புத் தாது தொழிற்சாலை என ஆரணி தொகுதியின் கோரிக்கைகள் நீள்கின்றன.

தொகுதிவாசிகள் மட்டுமல்ல; காங்கிரஸ் கட்சிக்​காரர்களே கிருஷ்ணசாமியின் மீது அதிருப்தியில்தான் இருக்கின்றனர். ''முக்கியமான எந்த நிகழ்ச்சிக்கும் கட்சியின் முக்கிய நபர்களைகூட கிருஷ்ணசாமி அழைப்பது இல்லை'' என்கின்றனர் கடுப்பாக.

அவரது சாதனைகளாக சொல்லப்படுவது என்ன?

''கடலூர் மற்றும் விழுப்புரம் மாவட்டங்கள் 'தானே’ புயலால் பாதிக்கப்பட்டபோது பிரதமரிடம் பேசி, கூடுதல் நிதி பெற்றுத்தந்தார். பிரதமர் நிவாரண நிதியில் இருந்து தொகுதியைச் சேர்ந்த 122 பயனாளிகளுக்கு 66 லட்ச ரூபாய்க்கும் மேல் மருத்துவ செலவுக்காகப் பணம் பெற்றுத் தந்திருக்கிறார். அவரது பரிந்துரையின் பேரில் ஏராளமான மாணவர்கள் கல்விக் கடனும் முதியோர் மற்றும் கணவனை இழந்தோர் உதவித்தொகையும் பெற்றுள்ளனர். செய்யாறு அருகே இருக்கும் ஜடேரி கிராமம் நாமக்கட்டித் தயாரிப்புக்குப் பெயர் பெற்றது. அவர்களின் தொழில் முன்னேற்றத்துக்காக காதி மற்றும் ஊரகத் தொழில்துறை மூலம் 23.50 லட்ச ரூபாய் பெற்றுத்தந்திருக்கிறார்'' என்கின்றனர் அவரது ஆதரவாளர்கள்.  

எம்.பி. கிருஷ்ணசாமி என்ன சொல் கிறார்?

என்ன செய்தார் எம்.பி.? - ஆரணி

''திண்டிவனம் - நகரி ரயில்வே திட்டம் விழுப்புரம், திருவண்ணாமலை, வேலூர், திருவள்ளூர் மற்றும் ஆந்திரப்பிரதேச மாநிலம் ஆகியவற்றின் வழியாகச் செல்கிறது. ரயில்வே பாதைக்காக நிலஆர்ஜிதம் செய்ய வேண்டியது மாநில அரசின் பணி. இது தொடர்பாக மாவட்ட கலெக்டர்களுடன் பேசிவருகிறேன். மாநில அரசு தரப்பில் மந்தமாக இருக்கிறார்கள். அதனால்தான் திட்டம் தாமதம் ஆகிறது.

கூட்டேரிப்பட்டு மேம்பாலம் தொடர்பாக பலமுறை நாடாளுமன்றத்தில் குரல் கொடுத்திருக்கிறேன். மதிப்பீட்டுக் குழுவினரையும் பாலம் அமைய வேண்டிய இடத்துக்கு அழைத்து வந்து காட்டினேன்.

ஆரணி பட்டுப்பூங்கா, அரிசி ஏற்றுமதி மையம், மத்திய வேளாண்மைப் பல்கலைக்கழகம், செஞ்சிக்கோட்டையை சுற்றுலாத் தலமாக்குவது ஆகியவை தொடர்பாகவும் நாடாளுமன்றத்தில் பேசியும், சம்பந்தப்பட்ட அமைச்சர்களுக்கு கடிதம் எழுதியும் தொடர்ந்து முயற்சி செய்துவருகிறேன். பட்டுப்பூங்கா பற்றி நாடாளுமன்றத்தில் பேசியபோது, அதுபற்றி உடனடியாக கவனிக்கும்படி ஜவுளித் துறை அமைச்சரிடம் சபாநாயகர் சொன்னார். வேளாண் பல்கலைக்கழகம் அமைப்பது மத்திய அரசின் பரிசீலனையில் உள்ளது'' என்றார்.

என்ன செய்தார் எம்.பி.? - ஆரணி

பழைய வந்தவாசி தொகுதி காங்கிரஸின் கோட்டை. ஐந்து முறை வந்தவாசி தொகுதியில் காங்கிரஸ் வாகை சூடியிருக்கிறது. அந்த நம்பிக்கையை வைத்துக்கொண்டு அடுத்த தேர்தலில் கிருஷ்ணசாமி போட்டியிட்டால், மீண்டும் ஜெயிப்பது சிரமம்தான் என்பதே கள நிலவரம்!

- ஆர்.லோகநாதன்