Published:Updated:

`டெபாசிட்டை பறிகொடுத்த 63 வேட்பாளர்கள்!' - கணக்கையே தொடங்காத காங்கிரஸ் #DelhiElections

ராகுல் - பிரியங்கா காந்தி
ராகுல் - பிரியங்கா காந்தி ( Twitter )

டெல்லி தேர்தலில், காங்கிரஸ் கட்சி ஒரு இடத்தில்கூட வெற்றிபெறவில்லை. 63 காங்கிரஸ் வேட்பாளர்கள் டெபாசிட்டை இழந்திருக்கின்றனர்.

டெல்லி சட்டப்பேரவைக்கான தேர்தல், கடந்த 8-ம் தேதி நடைபெற்றது. மொத்தமுள்ள 70 இடங்களுக்கும் ஒரே கட்டமாக நடைபெற்ற தேர்தலில் பதிவான வாக்குகள் நேற்று (பிப்ரவரி 11) எண்ணப்பட்டன. இதில், ஆளுங்கட்சியான ஆம் ஆத்மி 62 இடங்களில் வென்று பெரும்பான்மையுடன் ஆட்சியைப் பிடித்தது. டெல்லி முதல்வராக அரவிந்த் கெஜ்ரிவால் மீண்டும் பதவியேற்க இருக்கிறார். அதேபோல், கடந்த தேர்தலில் 3 இடங்களில் வென்ற பா.ஜ.க, தற்போது 8 இடங்களில் வெற்றிபெற்றிருக்கிறது.

காங்கிரஸ்
காங்கிரஸ்

தேர்தல் ஆணையத்தின் தரவுகளின்படி, டெல்லி தேர்தலில் ஆம் ஆத்மி கட்சி, 53.65 சதவிகித வாக்குகளையும் பா.ஜ.க 38.47 சதவிகித வாக்குகளையும் பெற்றிருக்கின்றன. அதேநேரம், காங்கிரஸ் கட்சியால் 4.31 சதவிகித வாக்குகளை மட்டுமே பெற முடிந்தது. இது, அக்கட்சியினரிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. ஆனால், டெல்லியை 15 ஆண்டுகளாக ஆட்சிசெய்த காங்கிரஸ் கட்சி, ஒரு இடத்தில்கூட வெற்றிபெறவில்லை. முன்னாள் முதல்வர் ஷீலா தீட்சித் மறைவுக்குப் பின்னர், டெல்லி அரசியலில் காங்கிரஸ் கட்சியால் மிளிர முடியவில்லை.

டெல்லி தேர்தல் முடிவுகள்: அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு குவியும் வாழ்த்துகள்! #LiveUpdates

குறிப்பாக, காங்கிரஸ் சார்பில் நிறுத்தப்பட்ட வேட்பாளர்களில் 63 பேர் டெபாசிட்டை பறிகொடுத்திருக்கின்றனர். மொத்த வாக்குகளில் ஆறில் ஒரு பங்கு வாக்குகளைப் பெறாவிடில் வேட்பாளர்கள் டெபாசிட் இழந்ததாகக் கருதப்படுவர். காந்தி நகர் தொகுதியில் போட்டியிட்ட அர்விந்தர்சிங் லவ்லி, பத்லி தொகுதியில் நிறுத்தப்பட்ட தேவேந்தர் யாதவ் மற்றும் கஸ்தூரிபா நகர் தொகுதியின் காங்கிரஸ் வேட்பாளர் அபிஷேக் தத் ஆகியோர் மட்டுமே டெபாசிட்டைப் பறிகொடுக்கவில்லை.

சுபாஷ் சோப்ரா - ராகுல் காந்தி
சுபாஷ் சோப்ரா - ராகுல் காந்தி

காங்கிரஸ் கட்சியின் தேர்தல் பிரசாரக் குழுத் தலைவர் கீர்த்தி ஆசாத்தின் மனைவி பூனம் யாதவ், இந்தத் தேர்தலில் 2,064 வாக்குகள் மட்டுமே பெற்றிருக்கிறார். டெல்லி தேர்தல் முடிவுகள் காங்கிரஸ் தலைமையை அதிர்ச்சியடையச் செய்திருக்கின்றன. தோல்விக்குப் பொறுப்பேற்று டெல்லி காங்கிரஸ் தலைவர் சுபாஷ் சோப்ரா, தனது பதவியை ராஜினாமா செய்திருக்கிறார்.

அடுத்த கட்டுரைக்கு