Published:Updated:

`தொடர் போராட்டங்களுக்குக் கிடைத்த பரிசு இது!' -போட்டின்றித் தலைவரான 7 சி.பி.எம் வேட்பாளர்கள்

மிகவும் பின்தங்கிய மாவட்டமாக திருவண்ணாமலை இருக்கிறது. பழங்குடியின மற்றும் அட்டவணைச் சமூக மக்கள் கணிசமாக வசித்து வருகின்றனர்.

போட்டியின்றி தேர்வான ஊராட்சி மன்றத் தலைவர்கள்
போட்டியின்றி தேர்வான ஊராட்சி மன்றத் தலைவர்கள்

தமிழகத்தில் ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கு வரும் 27 மற்றும் 30 ஆகிய இரு தேதிகளில் இரண்டு கட்டங்களாகத் தேர்தல் நடைபெற உள்ளது. இதில் போட்டியிடுவதற்கான வேட்பு மனுத்தாக்கல் முடிவுற்று, இறுதி வேட்பாளர் பட்டியல் வியாழனன்று மாலை வெளியிடப்பட்டது. பல மாவட்டங்களில், தேர்தல் பிரசாரங்கள் அனல் பறக்கின்றன. சில இடங்களில், ஊராட்சிப் பதவிகளுக்கு தலைவர் மற்றும் வார்டு உறுப்பினர்கள் போட்டியின்றித் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.

`ஏலம் இல்லை; மிரட்டல் இல்லை!' - உள்ளாட்சி நிர்வாகிகளைப் போட்டியின்றித் தேர்வுசெய்த தஞ்சை கிராமம்

இந்த நிலையில், திருவண்ணாமலை மாவட்டத்தில் பழங்குடியினர்களுக்கு ஒதுக்கப்பட்ட ஊராட்சிகளில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மலைவாழ் மக்கள் சங்கத்தைச் சேர்ந்த 6 பேர் போட்டியின்றி ஊராட்சி மன்றத் தலைவர்களாகத் தேர்ந்தெடுக்கப் பட்டுள்ளனர். அதேபோன்று, பொதுத்தொகுதியிலும் சி.பி.எம் கட்சியைச் சேர்ந்த வாசுகி என்ற பெண் வேட்பாளரும் போட்டியின்றித் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

திருவண்ணாமலை மாவட்டம், சி.பி.எம் மாவட்டச் செயலாளர் சிவக்குமாரிடம் பேசினோம். ``பெரணமல்லூர் ஒன்றியம் எறும்பூர் ஊராட்சி மன்றத் தலைவர் பதவிக்கு மனுத்தாக்கல் செய்த மஞ்சுளா, தெள்ளார் ஒன்றியம், மழுவாங்கரணை ஊராட்சி மன்றத் தலைவருக்கு விஜயா நடராஜன், வந்தவாசி ஒன்றியம் மங்கநல்லூர் ஊராட்சி மன்றத் தலைவர் பதவிக்கு ராஜாராம் ஆகியோர் வேட்பு மனுத்தாக்கல் செய்திருந்தனர்.

பழங்குடியின மக்களைத் திரட்டி நடத்திய போராட்டத்தின் விளைவாக தற்போது, 7 ஊராட்சிகளில் மார்க்சிஸ்ட் கட்சியைச் சேர்ந்தவர்களை மக்கள் தங்களுடைய தலைவர்களாகத் தேர்வு செய்துள்ளனர்.
சி.பி.எம். மாவட்டச் செயலாளர் சிவக்குமார்

அதேபோல், செய்யார் ஒன்றியம் வடகம்பட்டு ஊராட்சி மன்றத் தலைவர் பதவிக்கு வெங்கடேசன், இருமரம் ஊராட்சி மன்றத் தலைவர் பதவிக்கு மணி, காளசமுத்திரம் ஊராட்சி மன்றத் தலைவர் பதவிக்கு வள்ளியம்மாள் ஆகியோர் மனு செய்திருந்தனர். பழங்குடி இனத்தைச் சேர்ந்த இந்த 6 பேரும் போட்டியின்றி ஏகமானதாகத் தேர்ந்தெடுக்கப்பட்டனர். இவர்கள் அனைவரும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின், தமிழ்நாடு பழங்குடி மக்கள் சங்கத்தைச் சேர்ந்தவர்கள்.

அதேபோன்று, ஆரணி ஒன்றியம் முருகமங்கலம் பொதுத் தொகுதியில், ஊராட்சி மன்றத் தலைவர் பதவிக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த வாசுகி என்ற பெண் தோழர் ஏகமானதாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்" என உற்சாகமாக விவரித்தவர்,

`பின்வாங்கிய அ.தி.மு.க; பட்டாசு வெடித்த தி.மு.க!' - குத்தாலம் உள்ளாட்சி கலாட்டா

மிகவும் பின்தங்கிய மாவட்டமாக திருவண்ணாமலை இருக்கிறது. பழங்குடியின மற்றும் அட்டவணைச் சமூக மக்கள் கணிசமாக வசித்து வருகின்றனர். இம்மக்களின் வாழ்வாதாரத்துக்காகவும் இவர்களின் இருப்பிடங்களில் அடிப்படை வசதிகளுக்காகவும் தொடர்ச்சியாகப் போராடி வருகிறோம். பழங்குடியின மக்களைத் திரட்டி நடத்திய போராட்டத்தின் விளைவாக தற்போது, 7- ஊராட்சிகளில் மார்க்சிஸ்ட் கட்சியைச் சேர்ந்தவர்களை மக்கள் தங்களுடைய தலைவர்களாகத் தேர்வு செய்துள்ளனர்" என்றார் நெகிழ்ச்சியுடன்.