Published:Updated:

`இளைஞர்கள்தான் எனக்கு சப்போர்ட்டா இருந்தாங்க!'- 79 வயதில் ஊராட்சித் தலைவரான வீரம்மாள்

ஓட்டு கேட்கும்போது என்கூட இளைஞர்களும் சேர்ந்து ஒவ்வொரு வீடாக நடந்து போய் ஓட்டு கேட்டோம்.

வீரம்மாள்
வீரம்மாள்

உள்ளாட்சித் தேர்தல் முடிவுகளில் அனைவரையும் பிரமிப்புக்குள்ளாக்கிய விஷயம் மதுரை மாவட்டம் மேலூரை அடுத்த அரிட்டாபட்டி உள்ளாட்சித் தேர்தல் முடிவுதான். தனது 79 வயதில் 195 ஓட்டு வித்தியாசத்தில் பஞ்சாயத்து தலைவராக வெற்றி பெற்றுள்ளார் வீரம்மாள். ஏழு பேர் போட்டியிட்ட நிலையில் அனைவரையும் தோற்கடித்து வெற்றிவாகை சூடியிருக்கிறார் இந்த மூதாட்டி.

வீரம்மாள்
வீரம்மாள்

வீரம்மாளிடம் பேசினோம். ``எனக்கு ஓட்டு போட்ட எல்லாருக்கும் நன்றி சொல்லிக்கிறேன். எங்க ஊரு இளைஞர்கள் எல்லாரும் எனக்கு சப்போர்ட்டா இருந்தாங்க. ஓட்டு கேட்கும்போது என்கூட இளைஞர்களும் சேர்ந்து ஒவ்வொரு வீடாக நடந்து போய் ஓட்டு கேட்டோம். பத்து வருஷத்துக்கு முன்னாடி தேர்தல்ல போட்டியிட்டு ஜெயிக்கல. ஆனா, ஊர் மக்களுக்கு எப்படியாவது நல்லது செய்யணும்னு நினைச்சு இந்த முறை கத்தரிக்காய் சின்னத்தில் போட்டியிட்டேன்.

எங்க ஊருக்கு சரியான தண்ணீர் வசதி கிடையாது. தெருக்களில் கட்டமைப்பு இல்லாததால் தெரு நெட்டுக்க சாக்கடை ஓடுது. இந்தப் பிரச்னைகளை முதல்ல சரி செய்வேன் என்று தேர்தல் வாக்குறுதி கொடுத்தேன். இப்போ வெற்றி பெற்றுவிட்டேன். இனி என் ஊர் மக்களுக்கு நான் கொடுத்த வாக்கை காப்பாற்றுவதற்கான வேலையைத் தொடங்கப் போறேன். இளைஞர்கள் என்கூட இருக்கிறதுனால என்னால என் மக்களுக்கு தேவையான நன்மையைச் செய்ய முடியும்” என்றார்.

வீரம்மாளின் மகன் மோகனசுந்தரம் கூறுகையில், `தேர்தல் குறித்த அறிவிப்பு வந்தவுடன் அம்மா எங்களிடம் கேட்டார், `இந்த முறை நான் போட்டியிடவா’ என்று. கடந்த முறை போட்டியிட்டு தோல்வியடைந்த பின்பும் தளராத அவரது மன தைரியத்தை ஊக்குவிக்கும் வகையில் நாங்களும் அவரை உற்சாகப்படுத்தி தேர்தலில் போட்டியிட உதவி செய்தோம். ஊரில் யாருக்காவது உடம்பு சரியில்லை என்றால் இவர்தான் நாட்டுவைத்தியம் செய்வார். என்னுடன் பிறந்தவர்கள் ஐந்து பேர். இருப்பினும் எங்கள் அம்மா யார் உதவியையும் எதிர்பார்க்காமல் என் அப்பாவுடன் வாழ்ந்த வீட்டில் தற்போது விவசாயம் பார்த்துக்கொண்டு தன் உழைப்பில் வாழ்ந்து வருகிறார்.

வாக்காளர்களுக்கு நன்றி தெரிவிக்கும் மூதாட்டி
வாக்காளர்களுக்கு நன்றி தெரிவிக்கும் மூதாட்டி

யாராவது கஷ்டத்தில் இருந்தால் தன்னிடம் உள்ள பொருளைக் கொடுத்தும் தனது வார்த்தைகளாலும் ஆறுதல்படுத்துவார். எப்போதும் தன்னால் முடிந்த உதவியை மற்றவர்களுக்குச் செய்துகொண்டே இருக்க வேண்டுமென்ற மனப்பக்குவம் கொண்டவர். அரசியல் கட்சிகள் இதுவரை ஊருக்காக எதுவும் செய்ததில்லை. எங்கள் ஊரில் அடிப்படை தேவைகள் கூட சரி செய்யப்படாமல் உள்ளதால் ஊருக்கான மாற்றத்தைக் கொண்டுவர வேண்டுமென நினைத்தார்.

ஆகையால் போட்டியிட்டு இளைஞர்களின் உதவியோடு தற்போது வெற்றி பெற்றுள்ளார். அவரின் செயல் 79 வயதான மூதாட்டியின் செயலாகத் தெரியாது. சுறுசுறுப்பாக எந்த வேலையையும் செய்து முடிப்பார். எங்களுக்கும் இந்த ஊர் மக்களுக்கும் அவர் மீது நம்பிக்கை உள்ளது. அவர் மூலம் இந்த ஊரை ஒருபடி உயர எடுத்துச் செல்ல நினைக்கிறார். கண்டிப்பாகச் செயல்படுத்திக் காட்டுவார்” என்றார்.

வெற்றிச் சான்றிதழுடன் வீரம்மாள்
வெற்றிச் சான்றிதழுடன் வீரம்மாள்

10 வருடத்திற்கு முன்பு போட்டியிட்டு தோல்வியைக் கண்டதும் வயதான காலத்தில் எதற்காக மெனக்கெட வேண்டும் எனப் பின் வாங்காமல் தனது 79 வயதில் போட்டியிட்டு வெற்றி பெற்றுள்ளார் மூதாட்டி வீரம்மாள்.

`ஊர் மக்களுக்கு முடிந்ததைச் செய்துகொண்டே இருப்பேன்’ என்ற முழக்கத்தோடு பஞ்சாயத்து தலைவர் பதவியில் பயணிக்க உள்ளார் வீரம்மாள்.

வாழ்த்துகள் பாட்டி...!