Published:Updated:

எந்தக் கூட்டணி ஜெயிக்கும்... அடுத்த பிரதமர் யார்?

Vikatan Correspondent

ஜூ.வி. டீம்

எந்தக் கூட்டணி ஜெயிக்கும்... அடுத்த பிரதமர் யார்?
##~##

தேர்தல் கவுன்ட்-டவுன் தொடங்கி விட்டது. யாருடன் யார் கூட்டணி என்ற சஸ்பென்ஸ் நீடிக்கிறது. கூட்டணி பேச்சுவார்த்தைகள் பல்ஸைக் கூட்டுகின்றன. அரசியல் கட்சிகளின் மாநாடுகள் பரபரப்பைக் கிளப்புகின்றன. இந்த நிலையில், 'முக்கிய கட்சியான தே.மு.தி.க. எந்த அணியில் இடம்பெறும்? பலமான கூட்டணி எது? அடுத்த பிரதமர் யார்? மக்கள் ஆதரவு யாருக்கு?’ என்ற கேள்விகளுடன் மக்களின் கருத்துகளை அறிய புறப்பட்டது ஜூ.வி. டீம். 90-க்கும் மேற்பட்ட நிருபர் படை தமிழகத்தின் மூலை முடுக்கெல்லாம் சுற்றிச் சுழன்று மக்களின் மனநிலையை அறிந்தது. 3,402 பெண்கள் உட்பட 9,174 பேர் பங்கேற்ற இந்த மெகா சர்வே, தேர்தலுக்கு முந்தைய மக்களின் மனதைத் திறந்து காட்டியிருக்கிறது.

 தேர்தல் கூட்டணி கூத்துகளை முன்வைத்து 'தேர்தல் 2014’ என்ற தலைப்பில் எடுக்கப்பட்ட சர்வேயின் முக்கிய அம்சங்கள்...

எந்தக் கூட்டணி ஜெயிக்கும்... அடுத்த பிரதமர் யார்?

'காங்கிரஸுடன் இனி கூட்டணி இல்லை’ என கருணாநிதி பொதுக்குழுவில் அறிவித்ததை மக்கள் எப்படிப் பார்க்கிறார்கள்? சரியான நடவடிக்கை, சரியில்லை, சந்தர்ப்பவாதம் என்று மூன்று சாய்ஸ்களை மக்கள் முன்வைத்தோம். 'சந்தர்ப்பவாதம்’ என்று 50 சதவிகிதத்துக்கு மேல் கருத்து சொல்லியிருந்தனர். காங்கிரஸுடன் கூட்டணி முறிவு என்ற அறிவிப்பு வந்தபோது பலரும் அதை வரவேற்றதுபோல ஒரு தோற்றம் இருந்ததை தகர்த்துள்ளது சர்வே முடிவு. இந்த சர்வேயில் கேட்கப்பட்ட கேள்விகளிலேயே சந்தர்ப்ப வாதம் என்பதற்குத்தான் மிக அதிகபட்சமாக 52 சதவிகிதம் பேர் கருத்து சொல்லியிருப்பது கவனத்தில் எடுத்துக்கொள்ளப்பட வேண்டிய செய்தி.

தி.மு.க. - தே.மு.தி.க. கூட்டணி அமையுமா என்று பட்டிமன்றம் நடந்துவரும் நிலையில், 'தி.மு.க. - தே.மு.தி.க. கூட்டணி அமைந்தால்?’ என்ற கேள்விக்கு, சந்தர்ப்பவாத கூட்டணியாகத்தான் இருக்கும் என்று அதிகம் பேர் அதாவது, 41 சதவிகிதம் பேர் சொல்லியிருந்தார்கள். 37 சதவிகிதம் பேர் இந்தக் கூட்டணியை மக்கள் ஏற்க மாட்டார்கள் என்றும் கருத்தைப் பதிவு செய்திருந்தார்கள்.

பி.ஜே.பி. கூட்டணியில் தே.மு.தி.க., ம.தி.மு.க., பா.ம.க. ஆகிய கட்சிகள் சேர்ந்தால் அது பெரிய கூட்டணியாக இருக்கும் என்றும் மக்கள் நினைக்கவில்லை. இந்தக் கூட்டணி அமைந்தால் அது 'முரண்பாடாக இருக்கும்’ என்றுதான் 41 சதவிகிதம் பேர் 'டிக்’ அடித்திருக்கிறார்கள்.

எந்தக் கூட்டணி ஜெயிக்கும்... அடுத்த பிரதமர் யார்?

'தி.மு.க. கூட்டணியில் சேருவாரா... இல்லை, பி.ஜே.பி. அணியில் இணைவாரா?’ என்று விஜயகாந்த்தின் முடிவுக்காக அரசியல் அரங்கில் எதிர்பார்ப்பு. இப்படிப்பட்ட நிலையில் 'விஜயகாந்த் எந்தக் கூட்டணியில் இடம்பெற வேண்டும்?’ என்கிற முக்கியமான கேள்வியை முன்வைத்தோம். 'தனித்துப் போட்டியிட வேண்டும்’ என்பதுதான் பெரும்பாலானவர்களின் (33 சதவிகிதம்) கருத்து. பி.ஜே.பி. கூட்டணியில் சேர வேண்டும் என 26 சதவிகிதம் பேரும்,  தி.மு.க. கூட்டணியில் சேர வேண்டும் என்று 21 சதவிகிதம் பேரும் கருத்து சொல்லியிருந்தனர்.

'காங்கிரஸ் யாரை பிரதமராக அறிவிக்க வேண்டும்’ என்ற கேள்விக்கு பல இடங்களில் கடும் எதிர்ப்பு. இந்தக் கேள்விக்கு மன்மோகன் சிங், ராகுல் காந்தி, சோனியா, பிரியங்கா என நான்கு ஆப்ஷன்கள் தரப்பட்டிருந்தன. 'காங்கிரஸையே பிடிக்கவில்லை. அப்படிப்பட்ட நிலையில் அந்தக் கட்சியில் யார் பிரதமராக இருந்தால் எங்களுக்கு என்ன? கருத்து சொல்ல விரும்பவில்லை என்ற ஆப்ஷனை ஏன் வைக்கவில்லை?'' என சர்வே டீமிடம் கோபத்தைக் காட்டினர். ஆனாலும்கூட, ராகுலுக்குதான் சர்வேயில் அதிக மவுசு. ராகுல் காந்தியை காங்கிரஸ் வேட்பாளராக அறிவிக்க வேண்டும் என்று 50 சதவிகிதம் பேர் கருத்து சொல்லியிருக்கிறார்கள்.

'அடுத்து யார் பிரதமராக வர வேண்டும்’ என்ற கேள்விக்கு 'நரேந்திர மோடி’ என்பது 48 சதவிகிதம் பேரின் கருத்து. அடுத்த பிரதமர் ஜெயலலிதா என்கிற கோஷம் தமிழகத்தின் முன்வைக்கப்படும் நிலையில் சர்வேயில், ஜெயலலிதாவுக்கு பெரிய ஆதரவு இல்லை. நரேந்திர மோடிக்கு அடுத்த இடத்தில் ராகுல் காந்தி இருக்கிறார். மூன்றாவது இடத்தில் மற்றவர்கள் இருக்க, நான்காவது இடத்தில் ஜெயலலிதா இருக்கிறார்.

எந்தக் கூட்டணிக்கு வாக்களிப்பீர்கள் என்ற கேள்விக்கு 'பி.ஜே.பி. கூட்டணி’ என 40 சதவிகிதம் பேர் டிக் அடித்திருந்தனர். தி.மு.க. கூட்டணிக்கும் அதி.மு.க. கூட்டணிக்கும் ஆதரவு என்பது ஒரு சதவிகித வித்தியாசத்தில்தான் இருக்கிறது. கிட்டத்தட்ட சரிசமமான செல்வாக்கு. காங்கிரஸ் கூட்டணிக்கு 10 சதவிகிதம் பேர் ஆதரவு தெரிவித்திருக்கின்றனர். டெல்லியில் ஆம் ஆத்மியின் வரவும் அங்கு அந்த அரசு செயல்படுத்தி வரும் திட்டங்களும் பெரும் வரவேற்பை பெற்றுள்ளன. தமிழகத்திலும் ஆம் ஆத்மியின் தாக்கம் அதிகமாக இருந்ததை சர்வேயில் பார்க்க முடிந்தது. யாருக்கு வாக்களிப்போம் என்ற கேள்விக்கு ஆம் ஆத்மி ஆப்ஷன் ஏன் வைக்கவில்லை என்று பரவலாக மக்கள் கேட்டனர். பி.ஜே.பி-க்கு ஆதரவு சொன்ன பலரும், ஆம் ஆத்மிக்கு ஆதரவாக இருந்தவர்கள் என்பது ஆச்சர்யம்!

எந்தக் கூட்டணி ஜெயிக்கும்... அடுத்த பிரதமர் யார்?
எந்தக் கூட்டணி ஜெயிக்கும்... அடுத்த பிரதமர் யார்?
எந்தக் கூட்டணி ஜெயிக்கும்... அடுத்த பிரதமர் யார்?