Published:Updated:

'புரட்சித் தலைவி நாலு அடி முன்னே வந்து வரவேற்றார்!'

Vikatan Correspondent

மகிழ்ச்சியில் துள்ளும் மதுரை ஆதீனம்

'பைப்’பைப்போல வளைந்து ஜெயலலிதாவுக்கு பொக்கே கொடுத்து அ.தி.மு.க. பிரசாரத்துக்கு அமோகமாகக் கிளம்பிவிட்டார் மதுரை ஆதீனம்.

'புரட்சித் தலைவி நாலு அடி முன்னே வந்து வரவேற்றார்!'

பிரசாரப் பயண ஏற்பாடுகளில் பரபரவென இருந்த குருமகா சந்நிதானம் மதுரை ஆதீனத்தை நாம் சந்தித்தோம். ''நித்யானந்தா விவகாரத்தை பற்றியோ மடத்துக்கு எதிரான கேள்விகளையோ கேட்கக் கூடாது! சரியா?'' என்று கண்டிஷனுடன் ஆரம்பித்தார் ஆதீனம்.

''என்ன திடீர்னு அ.தி.மு.க-வுக்கு ஆதரவாகப் பிரசாரம்?''

''மடாதிபதியாக இருந்தாலும், சைவ மதத்தின் பிரதிநிதியாக இருந்தாலும் எமக்கும் வாக்குரிமை உண்டு. கருத்துரிமை உண்டு. அதனால் நாம் கிளம்பிவிட்டோம்! தமிழக முதல்வர், தங்கத்தாரகை, புரட்சித் தலைவி அம்மா அவர்கள் தமிழகத்தில் செய்துவரும் சிறப்பான ஆட்சியால், ஏழை எளிய மககள் பல வகையிலும் பயனடைந்து வருகிறார்கள். எல்லா வகையிலும் தமிழகம் முன்னேறி வருகிறது. அப்படிப்பட்ட கட்சிக்கு ஆதரவாகப் பிரசாரம் செய்வதோ ஆதரவு கொடுப்பதோ தப்பில்லை! அதைதான் ஆதீனமும் செய்கிறோம்!''

''ஜெயலலிதா பிரதமர் ஆவாரா... ஆதீனம் என்ன சொல்கிறது?''

''இப்போது அல்ல... 13 வருடங்களுக்கு முன்பே நான், 'புரட்சித் தலைவி, இந்தியாவின் பிரதமராக வருவார்’ என்று சொல்லியிருந்தேன். அந்தக் காலகட்டத்தில் வந்த பத்திரிகைகளைப் படித்தால் அது உங்களுக்குத் தெரியும். அதற்கான இறையமைப்பு அவருக்குத்தான் உண்டு.  இன்றும் தமிழகத்தில் மட்டும்தான் விலைவாசியை அம்மா கட்டுக்குள் வைத்திருக்கிறார். அப்பாவி ஏழைகளுக்குத் தமிழகத்தில் மட்டும்தான் எல்லாம் கிடைக்கிறது. இது இந்தியா முழுக்க இருக்கும் ஏழைகளுக்கும் சாத்தியப்பட வேண்டுமானால், அம்மா பிரதமர்  ஆகியே தீர வேண்டும். அதற்கு மோடியும் ராகுலும் வழிவிட்டால் நன்றாக இருக்கும் என்பதை அவர்களிடம் அன்போடு கேட்டுக் கொள்கிறது ஆதீனம்.''

''ஜெயலலிதாவை சந்தித்தீர்களே... என்ன பேசினார்?''

''புரட்சித் தலைவி அம்மா அவர்கள் நாலு அடி முன்னோக்கி நடந்துவந்து எம்மை வரவேற்றார். எம்மை நலம் விசாரித்தார். எம்மை சந்தித்ததில் அளவில்லா மகிழ்ச்சி என்றார். 15 ஆண்டுகளுக்கு முன்பே அம்மா பிரதமராக வருவார் என்பதை நாம் சொன்னோம் என்பதை அவருக்கு நினைவுபடுத்தினோம். தேர்தலுக்கு எம்மை முழுமையாகப் பயன்படுத்திக்கொள்ளுமாறு அமைச்சர் ஓ.பி.எஸ்-ஸிடம் சொன்னார். அவரும் அதனைப் பணிவோடு ஏற்றுக்கொண்டார். அதன் பிறகு எழுந்து நின்று எம்மை வழியனுப்பி வைத்தார். இந்தப் பண்பாடு, அம்மாவுக்கு மட்டுமே உரித்தானது ''

''அமைச்சர் செல்லூர் ராஜு சொல்லித்தான் நீங்கள் பிரசாரம் செய்யப்போனீர்களா?''

''யார் சொல்லியும் நாம் செல்ல மாட்டோம். அம்மா பிரதமர் ஆவதற்காக யாம் அனுதினமும் பூஜைகள் நடத்தி வருகிறோம். அம்மா பிரதமர் ஆவார் என்று நான் சொன்னதற்கு நன்றி சொல்ல அமைச்சர் வந்தார். இன்று மதுரையில் யாரென்று யாருக்கும் தெரியாத கோபாலகிருஷ்ணனை வேட்பாளராக அறிவித்திருக்கிறார் புரட்சித் தலைவி.(அவர் மதுரையின் துணை மேயர் என்பதை ஆதீனம் அறியாதது ஏனோ!)  இதுபோலச் சாமானியர்களைக் கோபுரத்துக்குக் கொண்டுவந்து உட்கார வைக்க புரட்சித்தலைவியால் மட்டும்தான் முடியும்!''

''பிரசாரத்தை எப்போ தொடங்கப்போறீங்க சாமீ?''

''பிரசாரத்துக்கான அட்டவணை புரட்சித் தலைவி அம்மாவின் பார்வைக்குச் சென்றிருக்கிறது. அது எமது கைக்கு வந்ததும் அம்மாவை பிரதமராக்கியே தீருவது என்ற லட்சியத்துடன் பிரசாரம் செய்வோம்'' என்ற ஆதீனத்திடம் அடுத்த கேள்விக்குத் தயார் ஆனோம். ''ஆதீனம் சொல்ல வேண்டியது அனைத்தையும் சொல்லியாகிவிட்டது. இதற்கு மேல் நீங்கள் கேள்வி எதுவும் கேட்க வேண்டாம். அப்புறம் கான்ட்ரோவர்ஷியல் ஆகிவிடும். உங்களுக்கும் தமிழ்நாட்டு மக்களுக்கும் ஆசீர்வாதம்! ஆசீர்வாதம்! ஆசீர்வாதம்!''

- மடத்தில் இருந்து எக்கோ எதிரொலிக்கிறது!

-செ.சல்மான், படம்: பா.காளிமுத்து