Published:Updated:

மிஸ்டர் கழுகு: ராமதாஸை விரட்டிய விஜயகாந்த்!

மிஸ்டர் கழுகு: ராமதாஸை விரட்டிய விஜயகாந்த்!

மிஸ்டர் கழுகு: ராமதாஸை விரட்டிய விஜயகாந்த்!

''விட்டுக்கொடுத்தலும் தட்டிப்​பறித்தலுமாக பி.ஜே.பி. கூட்டணி தொகுதிப் பிரிப்புகள் இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளன'' - என்றபடியே உள்ளே வந்தார் கழுகார். சிறகுகளுக்குள் மறைத்துவைத்திருந்த தாளை வெளியில் எடுத்தபடி பேச ஆரம்பித்தார்!

''உங்கள் கூட்டணிக்குள்தான் நாங்கள் இருக்கிறோம் என்ற நம்பிக்கை வார்த்தைகளைச் சொல்லிக்கொண்டே, கறார் தன்மையை தே.மு.தி.க-வும் பா.ம.க-வும் ம.தி.மு.க-வும் காட்டிவருகிறது. இது பி.ஜே.பி. தலைவர்களை நிலைகுலைய வைத்துவருவதை கடந்த முறையே விவரித்திருந்தேன். அதுவே கடந்த மூன்று நாட்களும் தொடர்ந்தது. தொகுதிகளைப் பிரிப்பதற்கு முன்னதாகவே, 14-ம் தேதி மாலை 5 மணிக்கு கும்மிடிப்பூண்டியில் இருந்து பிரசாரம் தொடக்கம் என்று விஜயகாந்த் அறிவித்துவிட்டது பி.ஜே.பி. தலைவர்களுக்கு நெருக்கடியைக் கொடுத்தது!''

''அன்றே ஐந்து வேட்பாளர்களையும் அறிவித்துவிட்டாரே விஜயகாந்த்?''

மிஸ்டர் கழுகு: ராமதாஸை விரட்டிய விஜயகாந்த்!

''சொல்கிறேன்! விஜயகாந்த் பிரசாரத்தை இரண்டு நாட்களுக்குத் தள்ளிவைக்கச் சொன்னது பி.ஜே.பி. ஆனால், அவர் அதனை ஏற்கவில்லை. 'கேப்டனுக்கு ராசி எண் ஐந்து. அதனால்தான் 14-ம் தேதி பிரசாரம் புறப்படுகிறார் நான்கும் ஒன்றும் ஐந்து. இந்த நாளை விட்டுவிட்டால், 23-ம் தேதிதான் ஆரம்பிக்க முடியும்’ என்று  தே.மு.தி.க-வினர் சொல்லிவிட்டார்கள். 'நாங்கள் கும்மிடிப்பூண்டியில் தொடங்குகிறோம். அது திருவள்ளூர் தொகுதிக்குள் வருகிறது. திருவள்ளூரை எங்களுக்குத் தருவதாகச் சொல்லிவிட்டீர்கள். இதை வேறு யாரும் கேட்கவில்லை. அதனால், அங்கு முரசு சின்னத்துக்கு வாக்குக் கேட்டு கேப்டன் பிரசாரம் தொடங்கிவிடுவார். அதற்குள், நீங்கள் தொகுதிகளை முடிவு செய்துவிடுங்கள்’ என்று நல்லபிள்ளையாக தே.மு.தி.க. சொன்னதை, 'நியாயம்தானே’ என்று தலையாட்டி வைத்தது பி.ஜே.பி. அதற்குள் தொகுதிகளை எப்படியாவது பிரித்து தே.மு.தி.க-வுக்குக் கொடுத்துவிட வேண்டும் என்று பி.ஜே.பி. துடித்தது.''

''ம்!''

''ஆனால், தே.மு.தி.க-வுக்கும் பா.ம.க-வுக்கு​மான பிரச்னைதான் அதிகமாக ஓடியது. 10 தொகுதிக்கான வேட்பாளர்களை அறிவித்துவிட்டு, அந்தத் தொகுதிகள் அனைத்தும் எங்களுக்குத்தான் என்ற புது ஃபார்முலாவுடன் கூட்டணிக்குள் வந்தவர் அல்லவா ராமதாஸ்? அதில் உள்ள பெரும்பாலான தொகுதிகளை விஜயகாந்த் கேட்டார். திருவண்ணாமலை, விழுப்புரம், கடலூர் ஆகிய தொகுதிகளை விட்டுத்தர ராமதாஸ் முதலில் இறங்கிவந்தார். ஆனால், ஆரணி அல்லது அரக்கோணம் ஆகிய இரண்டில் ஏதாவது ஒன்றைத் தர வேண்டும் என்பதில் விஜயகாந்த் உறுதியாக இருந்தார். அரக்கோணத்தில் முன்னாள் மத்திய இணை அமைச்சர் அரங்க.வேலுவும், ஆரணியில் முன்னாள் மத்திய இணை அமைச்சர் ஏ.கே.மூர்த்தியும் போட்டியிடப்போவதால் இந்த இரண்டையும் விட்டுத்தர முடியாது என்று ராமதாஸ் சொல்லிவிட்டார். ஆனால், நிச்சயம் இரண்டில் ஒன்று வேண்டும் என்பதில் விஜயகாந்த் உறுதியாக இருந்தார்.

இந்த நிலையில் பி.ஜே.பி-க்கும் பா.ம.க-வுக்கும் மோதல் ஏற்பட்டது. கிருஷ்ணகிரி, சேலம் ஆகிய இரண்டிலுமே போட்டியிட பா.ம.க. தனது வேட்பாளர்களை அறிவித்திருந்தது. ஆனால், இந்த இரண்டுமே தங்களுக்கு வேண்டும் என்று கேட்டது பி.ஜே.பி. அதற்கு ராமதாஸ் மறுத்ததால், இரண்டில் ஏதாவது ஒன்று தேவை என்றார்கள். சேலத்தை விட்டுத்தருவதைத் தவிர வேறு வழியில்லை என்று முடிவுக்கு வந்தவராக ராமதாஸ் லேசாக மனம்மாறி இருந்தார்.''

''ஓஹோ!''

''இப்படிப்பட்ட சூழ்நிலையில்தான் கும்மிடிப்பூண்டியில் பிரசாரம் தொடங்கினார் விஜயகாந்த். அவர் மைக்கைப் பிடிப்பதற்கு முன்னால், கேப்டன் டி.வி-யில் தே.மு.தி.க-வின் முதல்கட்ட வேட்பாளர் பட்டியல் என்று ஐந்து தொகுதிகளை அறிவித்தனர். திருவள்ளூர், வட சென்னை, திருச்சி, நாமக்கல், மதுரை ஆகிய தொகுதிகளுக்கான வேட்பாளர் பட்டியல் அது. பி.ஜே.பி-யுடன் பேசிவிட்டுத்தான் இப்படி அறிவிக்கிறார் என்று பலரும் முதலில் நினைத்தனர். ஆனால், பேச்சுவார்த்தைக் குழுவில் இருந்தவர்களுக்குத்தான் பகீர் என்று இருந்தது.''

''ஏன்?''

மிஸ்டர் கழுகு: ராமதாஸை விரட்டிய விஜயகாந்த்!

''திருச்சி தொகுதியை தே.மு.தி.க-வுக்குத் தருவதாக பி.ஜே.பி. சொல்லவே இல்லை. ஆனால்,  திருச்சிக்கும் சேர்த்து வேட்பாளர் பெயரை விஜயகாந்த் அறிவித்திருந்தார். இந்த அதிர்ச்சியில் அவர்கள் உறைந்திருக்கும்போது, கும்மிடிப்பூண்டியில் விஜயகாந்த் மைக் பிடித்தார். அரை மணி நேரம் பேசினார். ஒருமுறைகூட பி.ஜே.பி. என்றும் சொல்லவில்லை, நரேந்திர மோடி பெயரையும் உச்சரிக்கவில்லை. திருச்சிக்கு வேட்பாளர் அறிவித்ததைவிட, மோடி பெயரைச் சொல்லாததுதான் பி.ஜே.பி-யினருக்கு அதிர்ச்சியை அளித்தது. 'விஜயகாந்த் 40 தொகுதிகளிலும் போட்டியிடப் போகிறார்’, 'பார்த்தீர்களா... அவர் காங்கிரஸைத் திட்டவே இல்லை’ - என்று பலரும் எடுத்துக்கொடுத்து பீதியைக் கூட்டினார்கள். உடனே சுதீஷைப் பிடித்து பி.ஜே.பி-யினர் தங்கள் சந்தேகங்களைக் கேட்டார்கள். சுதீஷ் கூலாகச் சொன்னாராம்... 'திருச்சி எங்களுக்குத்தானே!’ என்று. 'அது முன்பு பி.ஜே.பி. வென்ற தொகுதி. அங்குதான் மோடியை அழைத்துவந்து பிரமாண்டமான கூட்டம் கூட்டினோம். அந்தத் தொகுதியை உங்களுக்கு எப்படி விட்டுத்தர முடியும்?’ என்று இவர்கள் கேட்டார்கள். 'திருச்சி உங்களுக்கு வேண்டும் என்றால், திருப்பூரை எங்களுக்குக் கொடுத்துவிடுங்கள்’ என்று அடுத்த குண்டு தூக்கிப்போட்டார் சுதீஷ். 'திருப்பூர் பி.ஜே.பி-க்கு செல்வாக்கான தொகுதி’ என்றார்கள் இவர்கள். 'இரண்டில் ஏதாவது ஒன்றை எங்களுக்குத் தாருங்கள்’ என்று சொல்லிவிட்டு போனை வைத்துவிட்டார் சுதீஷ்!''

''அப்புறம்?''

''தே.மு.தி.க-வை இந்தக் கூட்டணியில் வைத்திருக்க வேண்டுமா, வேண்டாமா... என்ற  வாதப் பிரதிவாதங்கள் 14-ம் தேதி இரவு தொடங்கி 15-ம் தேதி முழுக்க நடந்தன. 'பி.ஜே.பி. பெயரையோ மோடி பெயரையோ உச்சரிக்காத விஜயகாந்த் பிரசாரத்தால் நமக்கு எந்தப் பயனும் இல்லை. அவர் இந்த மாதிரி பேசிவிட்டுப் போனால், அவரோடு கூட்டணி வைப்பதிலேயே அர்த்தம் இல்லை’ என்று இவர்கள் தங்களுக்குள் சொல்லிக்கொண்டார்கள். 14-ம் தேதி முரளிதர் ராவ் சென்னையில்தான் இருந்தார். பி.ஜே.பி. - பா.ம.க-வுக்கான பேச்சுவார்த்தைகளை இறுதிசெய்வதில் மும்முரமாக இருந்தார் அவர். விஜயகாந்த்தின் திடீர் செயல்பாட்டை அவராலும் புரிந்துகொள்ள முடியவில்லை. டெல்லிக்கு ராஜ்நாத் சிங்கிடம் பேசினார்.''

''என்ன சொன்னாராம் அவர்?''

''ராஜ்நாத் சிங், 'குழப்பமான முடிவுகளை எடுக்கக்கூடியவர்களை ஆரம்பத்திலேயே கூட்டணியில் சேர்க்காதீர்கள். நாளை அவர்கள் ஜெயித்துவந்த பிறகும் நம்மை ஆதரிக்காமல் எதிரிகளை ஆதரிப்பார்கள். இன்னாருடன்தான் கூட்டணி வைக்க வேண்டும், இன்னாருடன் வேண்டாம் என்று நான் உத்தரவிடப்போவது இல்லை. தமிழ்நாட்டின் நிலவரத்தை அறிந்து நீங்களே கூட்டணியை முடிவுசெய்யுங்கள். இறுதிப் பட்டியலோடு வாருங்கள். நான் டெல்லியில் அறிவிக்கிறேன்’ என்று மட்டும் அவர் சொல்லியிருக்கிறார். தே.மு.தி.க-வின் திடீர் குழப்பம் பா.ம.க-வுக்கு உள்ளூர சந்தோஷத்தைக் கொடுத்தது. இந்த குழப்ப நேரத்தில் தங்களுக்கானத் தொகுதிகளை வாங்கிப் போய்விடலாம் என்று பா.ம.க. முடிவெடுத்தது. அந்தக் கட்சியின் தலைவர் ஜி.கே.மணி, பி.ஜே.பி. அலுவலகமான கமலாலயத்தில் இரவு 10 மணி வரைக்கும் தங்கியே விட்டார். பா.ம.க. எட்டு தொகுதிகளுக்கு ஒப்புக்கொண்டுவிட்டது என்பதை முதலிலேயே சொல்லிவிட்டேன் அல்லவா? எந்தெந்தத் தொகுதிகள் என்பதுதான் 14-ம் தேதி இரவில் முடிவானது. தர்மபுரி, சிதம்பரம், மயிலாடுதுறை ஆகிய மூன்று தொகுதிகளை தயக்கம் இல்லாமல் முதலில் கொடுத்தது பி.ஜே.பி. தாங்கள் போட்டியிடலாம் என வைத்திருந்த கிருஷ்ணகிரியை விட்டுத்தந்தது பி.ஜே.பி. அரக்கோணம் அல்லது ஆரணியைக் கேட்டிருந்தது அல்லவா தே.மு.தி.க.? அந்தக் கட்சி ஏற்படுத்தியிருந்த குழப்பத்தின் காரணமாக அந்த இரண்டு தொகுதிகளையுமே பா.ம.க-வுக்குக் கொடுத்தார்கள். இரண்டு மணி நேர வாக்குவாதங்களில் இந்த ஆறு தொகுதிகள் பா.ம.க-வுக்கு என்று முடிவானது. மீதம் இரண்டு தொகுதிகள்தான் பாக்கி. சேலத்தைக் கேட்டது பா.ம.க. ஆனால் பி.ஜே.பி. மறுத்தது. நாகை அல்லது தஞ்சாவூர் இரண்டில் ஏதாவது ஒன்றை எடுத்துக்கொள்ளச் சொன்னது பி.ஜே.பி. உஷாரான ஜி.கே.மணி, ராமதாஸிடம் கேட்டுவிட்டு வருகிறேன் என்று புறப்படத் தயாரானார். 'நாங்கள் ஆறு தொகுதிகளை வாங்கிக்கொண்டோம். மீதி இரண்டு தொகுதிகளை அப்புறம் முடிவுசெய்யலாம்’ என்று சொல்லிவிட்டுக் கிளம்பினார் மணி. பி.ஜே.பி. தலைவர்கள் ஓரளவுக்கு நிம்மதி ஆனார்கள்!''

மிஸ்டர் கழுகு: ராமதாஸை விரட்டிய விஜயகாந்த்!

''அடுத்து தே.மு.தி.க. பற்றிப் பேசினார்களா?''

''ம்! 15-ம் தேதி காலையில் முரளிதர் ராவ் டெல்லிக்குச் செல்ல வேண்டும். அதற்குள் பட்டியலை இறுதிசெய்ய வேண்டும். ஆனால், குழப்பம் தீரவே இல்லை. இரவு முழுவதும் கமலாலயத்தில் விளக்கு அணைக்கப்படவே இல்லை. ஆள் ஆளுக்குக் கூட்டிக் கழித்துக்கொண்டு இருந்தார்கள். விஜயகாந்த் நம்மோடு இருப்பார் என்பதை அவர்களில் யாரும் நம்பத் தயாராக இல்லை. அந்த நிலையில் இரண்டு பட்டியலைத் தயார் செய்தார்கள். தே.மு.தி.க. நம்மோடு இருந்தால் 40 தொகுதிகளை எப்படிப் பிரிப்பது என்ற ஒரு பட்டியலும், தே.மு.தி.க. நம்மோடு இல்லாவிட்டால் 40 தொகுதிகளில் யாருக்கு எது என்ற அடிப்படையில் இரண்டாவது பட்டியலையும் தயார் செய்தார்கள். இதனை எடுத்துக்கொண்டு காலையில் டெல்லி செல்வதாகத் திட்டமிட்டார் முரளிதர் ராவ். இது தே.மு.தி.க. கவனத்துக்குப் போனது. உஷாரான சுதீஷ், 'காலையில் நாங்கள் இறுதி செய்துவிடுவோம். அவசரப்பட வேண்டாம். நாங்கள் உங்கள் கூட்டணியில்தான் இருக்கிறோம்’ என்று சொன்னதால் முரளிதர் ராவ் தனது பயணத் திட்டத்தை மாற்றினார். சொந்த மாநிலமான ஆந்திராவுக்கு அவர் புறப்பட்டுப் போனார். ஆனால் யார் கேட்டாலும் டெல்லி போய்விட்டதாகச் சொல்லச் சொன்னார்.''

''15-ம் தேதி காலையில் என்ன நடந்தது?''

''முந்தைய நாள் தேர்தல் பிரசாரம் முடித்துவிட்டு வந்த விஜயகாந்த், அன்று தாமதமாகத்தான் தூங்கி எழுந்தார். பிரேமலதாவுக்கும் அவருக்கும் இது சம்பந்தமாக பேச்சு நடந்ததாகச் சொல்கிறார்கள். 'ஒன்றிரண்டு தொகுதிகளை விட்டுக்கொடுத்துவிட்டு இந்தக் கூட்டணியில் தொடர்வதே சரியானது’ என்று பிரேமலதா கூறினாராம். 'நானும் இந்தக் கூட்டணி வேண்டாம் என்று சொல்லவில்லை. சேலத்தை பா.ம.க-வுக்கும் காஞ்சிபுரத்தை ம.தி.மு.க-வுக்கும் கள்ளக்குறிச்சியை பச்சமுத்துவுக்கும் திருப்பூரை பி.ஜே.பி-க்கும் பொள்ளாச்சியை 'கொங்கு’ ஈஸ்வரனுக்கும் விட்டுக்கொடுத்துவிட்டு மிச்சம் இருக்கிற தொகுதியில் நாம் நிற்கணுமா?’ என்று கேட்டாராம் விஜயகாந்த். தே.மு.தி.க-வுக்கும் பி.ஜே.பி-க்குமான பேச்சுவார்த்தை நடத்திவரும் சுதீஷை அழைத்து, 'திருச்சியில் நாம்தான் நிற்போம். தராவிட்டால் கூட்டணி வேண்டாம்’ என்றாராம் விஜயகாந்த். 'அப்படியானால் திருப்பூரை எங்களுக்குக் கொடுங்கள்’ என்று கேட்டது பி.ஜே.பி. இந்த டீல் முடிந்தால்தான் இரண்டு கட்சிக்கும் கூட்டணி தொடரும். இல்லையானால், உடைசல் உறுதி என்பதே நிலைமை.

15-ம் தேதி காலையில் இந்த டீல் சொல்லப்பட்டது. மதியம் வரை விஜயகாந்த்திடம் இருந்து எந்தத் தகவலும் இல்லை. 'விஜயகாந்த் அநேகமாக இருக்க மாட்டார். நமக்குக் கூடுதலாக நான்கு தொகுதிகள் கிடைக்கப்போகிறது’ என்று சொல்லி புதிய வேட்பாளர்களை தேர்வுசெய்யத் தொடங்கியும் விட்டார் ராமதாஸ். மாலை 5 மணிக்கு விஜயகாந்த்திடம் இருந்து தகவல். 'திருப்பூரை நாங்கள் விட்டுத்தருகிறோம். திருச்சியை நீங்கள் விட்டுத்தாருங்கள்’ என்றார் சுதீஷ். பி.ஜே.பி. ஏற்றுக்கொண்டது. ஐந்து என்பது விஜயகாந்த்தின் ராசி எண் அல்லவா? அதனால்தான் 5 மணி வரை காத்திருந்து இந்த டீலுக்கு பதில் சொன்னாராம்!''

''விஜயகாந்த்துக்கு அது நல்ல நேரமாக இருந்திருக்கலாம். ஆனால், பி.ஜே.பி-க்கு அதுவரை எமகண்டமாக இருந்திருக்குமே!''

''ஆமாம்! இதைத் தொடர்ந்து இன்னொரு வேண்டுகோளையும் தே.மு.தி.க. வைத்தது. 'சேலத்தில் நான் நிற்கலாம் என்று இருக்கிறேன். சேலத்தை நீங்கள் பா.ம.க-விடம் இருந்து வாங்கிவிட்டீர்களே. அதனை எனக்குத் தரக் கூடாதா?’ என்று சுதீஷ் லேசாகச் சொல்லிப் பார்த்தார். 'இந்தக் கூட்டணி உருவாகவே அவர்தான் காரணம். அவருக்கு இதனைச் செய்யலாம்’ என்று வேறு வழியில்லாமல் ஒப்புக்கொண்டது பி.ஜே.பி. இதோடு கூட்டணிப் பேச்சுவார்த்தை முடிந்தால் போதும் என்ற அவசரத்தில்தான் சேலத்தை விட்டுக்கொடுத்தார்கள். இதனால் சந்தோஷமானார் விஜயகாந்த். உடனே தே.மு.தி.க. மாவட்டச் செயலாளர்களுக்கு தலைமைக் கழகத்தில் இருந்து தகவல் போனது. போஸ்டர் ஒட்டும்போது நரேந்திர மோடி, வைகோ படத்தையும் சேர்த்துப் போடுங்கள், அந்தந்த கட்சியின் மாவட்டப் பொறுப்பாளர்களுடன் சேர்ந்து செயல்படுங்கள் என்பதே அந்த உத்தரவு. இது பி.ஜே.பி-க்கும் தெரிய வந்தது. உடனடியாக ஹைதராபாத்தில் இருந்து முரளிதர் ராவ் சென்னை வந்தார். பட்டியலை இறுதி செய்வதற்கான பணிகள் நடக்க ஆரம்பித்தன.''

மிஸ்டர் கழுகு: ராமதாஸை விரட்டிய விஜயகாந்த்!

''ம்!''

''அப்போது அரக்கோணத்தில் பிரசாரம் செய்துவந்தார் விஜயகாந்த். அது பா.ம.க. போட்டி​யிடும் தொகுதி. குழப்பமான சூழ்நிலை என்பதால் பா.ம.க. வேட்பாளர் அரங்க.வேலு வரவில்லை. ஆனாலும், கூட்டணிக் குழப்பங்களுக்கு முற்றுப்புள்ளி வைப்பதாக விஜயகாந்த் பேச்சு இருந்தது. 'இந்தியா வல்லரசாக நரேந்திர மோடிக்கு வாக்களியுங்கள்’ என்று சொல்லி அனைத்து சர்ச்சைக்கும் 15-ம் தேதி முற்றுப்புள்ளி வைத்தார் விஜயகாந்த். 16-ம் தேதி காலையில் பா.ம.க. முறுக்கிக்கொள்ளத் தொடங்கியது!''

''ஏன்?''

''பி.ஜே.பி. கூட்டணியில் ஒவ்வொரு கட்சியும் என்னென்ன தொகுதியில் போட்டியிடப்போகின்றன என்பதை 16-ம் தேதி காலையில் ஒவ்வொரு நாளிதழும் வேறுவேறு விதமாக வெளியிட்டன. இதனை வைத்துக்கொண்டு பி.ஜே.பி-யிடம் பா.ம.க. பேசியது. கிடைத்த தகவல்கள் ராமதாஸை ஆத்திரம் கொள்ள வைத்தன. சேலம், திருவண்ணாமலை, விழுப்புரம், கடலூர், கள்ளக்குறிச்சி ஆகிய ஐந்து தொகுதிகளில் தே.மு.தி.க. போட்டியிட இருப்பதை ராமதாஸ் ஏற்கவில்லை. 'வேண்டுமென்றே நம்முடைய கோட்டையான தொகுதிகளில் விஜயகாந்த்தைக் கொண்டுவந்து நிறுத்துகிறார்கள். இதன்மூலம் பா.ம.க-வின் வளர்ச்சியைத் தடுக்க பி.ஜே.பி. சதி செய்கிறது. விஜயகாந்த் இந்த வட மாவட்டங்களில் போட்டியிடவே கூடாது. இது பா.ம.க-வின் வளர்ச்சியைத் தடுக்கும். இப்போது தே.மு.தி.க-வை இந்த மாவட்டங்களில் வளரவிட்டால், இனி பா.ம.க-வுக்கு இங்கு எதிர்காலமே இருக்காது. இரண்டு எம்.பி. ஜெயிப்பதற்காக கட்சியை பலியிட முடியாது. இது சட்டமன்றத் தேர்தலைப் பாதிக்கும். விஜயகாந்த்திடம் இருந்து அந்தத் தொகுதிகளைப் பறிக்க வேண்டும்’ என்று கர்ஜிக்க ஆரம்பித்தாராம் ராமதாஸ்.

அவரது கோபம் விஜயகாந்த்தை விட பி.ஜே.பி. தலைவர்கள் மீதுதான் திரும்பியது. 'பி.ஜே.பி. எத்தனைத் தொகுதிகளில் வேண்டுமானாலும் போட்டி போடட்டும். அவர்கள் 15 தொகுதியில் நின்றால்கூட நமக்கு ஆட்சேபனை இல்லை. ஆனால், தே.மு.தி.க-வுக்கு 14 தொகுதிகள் எதற்கு கொடுக்க வேண்டும்? ஒன்பது தொகுதிகளுக்கு நிறுத்தவே ஒழுங்கான வேட்பாளர் இல்லை. பிரபலமான வேட்பாளர் ஒன்றிரண்டு பேர் தவிர, அந்தக் கட்சியில் யார் இருக்கிறார்கள்? வைகோவுக்கு ஏழு சீட் எதற்கு கொடுக்க வேண்டும்? நாலு சீட் கொடுத்தால் போதாதா?’ என்றும் ராம்தாஸ் பேச ஆரம்பித்தார். இதற்கு அவர் இன்னொரு லாஜிக் சொன்னாராம். 'விஜயகாந்த்தையும் வைகோவையும் வளர்த்துவிட்டால், சட்டமன்றத் தேர்தலில் இடைஞ்சலாகப் போகும். எனவே இந்தக் கூட்டணியில் நாம் தொடர்வது நல்லதல்ல’ என்ற முடிவுக்கு வந்தது பா.ம.க.!

அடுத்த கமென்ட் சாதிரீதியாகப் போனது. 'வெங்கய்யா நாயுடு, முரளிதர் ராவ், இல.கணேசன், மோகன்ராஜுலு, சக்கரவர்த்தி ஆகியோர் தெலுங்கு பேசுபவர்கள். அவர்கள் சேர்ந்து விஜயகாந்த்தையும் வைகோவையும் வளர்த்துவிடுகிறார்கள்’ என்றும் சொன்னாராம் ராமதாஸ்.''

''அப்புறம்?''

''பி.ஜே.பி-க்கு 16-ம் தேதி காலையில் ஒரு தகவல் அனுப்பினார்கள். சேலம், விழுப்புரம், திருவண்ணாமலை ஆகிய மூன்று தொகுதிகளும் பா.ம.க-வுக்குத்தான் வேண்டும் என்பதே அது. ஆடிப்போனது பி.ஜே.பி. 'விழுப்புரம், திருவண்ணாமலையை முதலிலேயே நீங்கள் கொடுத்துவிட்டீர்களே. இப்போது திரும்பக் கேட்கிறீர்களே. அது தே.மு.தி.க-வுக்குத் தரப்பட்டுவிட்டதே’ என்று கேட்டது பி.ஜே.பி. 'நீங்கள் செய்வது எதுவுமே நியாயமானதாக இல்லை. உங்களுக்கு வேண்டும் என்று சேலத்தை எங்களிடம் கேட்டு வாங்கிவிட்டு, அதை தே.மு.தி.க-வுக்கு எப்படிக் கொடுக்கலாம்? சேலத்தை நாங்கள் தரலாம் என்று ஒப்புக்கொண்டதே பி.ஜே.பி-க்காகத்தானே தவிர, தே.மு.தி.க-வுக்காக அல்ல. உங்களது நடவடிக்கைகள் நம்பிக்கைக்கு உரியதாக இல்லை’ என்று பா.ம.க. வாதிட்டது. 'இரண்டு வாரங்களுக்கு முன்னதாகவே கொடுத்துவிட்ட திருவண்ணாமலையையும் விழுப்புரத்தையும் திரும்பக் கேட்பது மட்டும் நியாயமா?’ என்று திருப்பிக் கேட்டது பி.ஜே.பி. ஏ.கே.மூர்த்தியின் அலுவலகத்தில் வைத்து மதியம் பத்திரிகையாளர்களைச் சந்திக்கப் போவதாக பீதியைக் கிளப்பினார் ஜி.கே.மணி. பா.ம.க. கேட்டதைக் கொடுக்காவிட்டால் கழன்று விடும் என்ற நிலையில் தே.மு.தி.க-விடம் பி.ஜே.பி-யினர் பேசினார்கள்!''

''என்ன சொன்னார்களாம் அவர்கள்?''

''எகிறி அடித்தார்கள் தே.மு.தி.க-வினர். 'அதைக் கொடுங்க, இதைக் கொடுங்க என்று கேட்டு நாங்கள்தான் பிரச்னை செய்வதாக பத்திரிகைகளுக்கு செய்தி பரப்புகிறார்கள். இப்போது பாருங்கள்... யார் பிரச்னை செய்வது? அவர்கள் கேட்கும் விழுப்புரம், திருவண்ணாமலையை விட்டுக்கொடுத்தால் வட தமிழ்நாட்டில் கடலூர் தவிர வேறு எதுவுமே எங்களுக்குத் தொகுதியே இல்லை. எங்கள் கட்சி வலுவாக இருக்கும் அந்த 10 மாவட்டங்களில் எங்குமே நாங்கள் போட்டியிடவில்லை என்றால், எங்கள் கட்சிக்காரர்களை எப்படிச் சமாதானப்படுத்த முடியும்? அரக்கோணம், ஆரணி ஆகிய இரண்டில் ஒன்றே ஒன்றுதான் கேட்டோம். அதில் எதையுமே விட்டுத்தர முடியாது என்ற ராமதாஸுக்காக, மூன்று தொகுதிகளை நாங்கள் விட்டுத்தர முடியாது’ என்று உறுதியாகச் சொல்லிவிட்டது தே.மு.தி.க. தரப்பு. இறுதியாக ஒன்று சொன்னார்களாம்.

'இனிமேல் இதுபற்றி உங்களிடம் நாங்கள் பேசுவதாக இல்லை. உங்கள் கூட்டணியில் சேர்ந்துவிட்டோம். நீங்கள் 14 தொகுதிகளை எழுதிக் கொடுங்கள். அது எந்தத் தொகுதியாக இருந்தாலும் பரவாயில்லை. அங்கு போட்டி போடுகிறோம். இதற்கு மேல் எங்களுக்கு எதுவுமே சொல்லத் தெரியவில்லை’ என்றது தே.மு.தி.க.''

''பரவாயில்லையே?''

''விஜயகாந்த் அனைத்தையும் சகித்துக்கொள்ளும் மனநிலைக்கு வந்துவிட்டார். 16-ம் தேதி மாலையில் கிருஷ்ணகிரியிலும், அதைத் தொடர்ந்து தர்மபுரியிலும் அவரது பிரசாரம். இரண்டுமே பா.ம.க. போட்டியிடும் தொகுதிகள். அதே நேரத்தில்தான் தர்மபுரியில் ராமதாஸும் பேசுவதாக அறிவிக்கப்பட்டு இருந்தது. மைக் பிடித்த விஜயகாந்த், 'கூட்டணியில் இருக்கும் அனைத்துக் கட்சிகளும் முக்கியமான கட்சிகள்தான். மரியாதைக்குரிய கட்சிகள்தான். மறக்காமல் அவர்களது சின்னத்துக்கு வாக்களியுங்கள்’ என்று நட்பு பாராட்டிவிட்டுச் சென்றார். இந்த இரண்டு தொகுதிகளிலும் வழியெங்கும் விஜயகாந்த்துக்குக் கிடைத்த வரவேற்பும் பா.ம.க-வினரை ஆத்திரப்பட வைத்தது. மைக் பிடித்த ராமதாஸ், 'நாம் சிங்கக் கூட்டம். சிறு நரிகளிடம் பிச்சை கேட்கக் கூடாது. இனி தமிழ்நாட்டு அரசியலே அன்புமணியைச் சுற்றித்தான் இருக்கப்போகிறது’ என்று சொல்லி கடந்த இரண்டு மாத கால பேச்சுவார்த்தையை மொத்தமாகப் போட்டு உடைத்தார்.''

''பி.ஜே.பி. இதை எப்படிப் பார்க்கிறது?''

''16-ம் தேதி காலையில் இருந்தே அவர்கள் எதிர்பார்த்த விஷயம்தானே அது. தே.மு.தி.க-வையும் பா.ம.க-வையும் ஓர் அணியில் வைக்க முடியாது என்ற முடிவுக்கு வந்தார்கள். பா.ம.க. இல்லாத கூட்டணிக் கணக்குகளைப் போட ஆரம்பித்தார்கள். தகவல் ராஜ்நாத் சிங்குக்கு சொல்லப்பட்டது. '19 அல்லது 20-ம் தேதி காலையில் சென்னை வருகிறேன். அதற்குள் முடியுங்கள். முடியாவிட்டால் பி.ஜே.பி. தனித்துப் போட்டி என்று அறிவித்துவிட்டுப் போய்விடுவேன்’ என்று சொல்லிவிட்டார்.''

''ராமதாஸின் அறிவிப்பை அன்புமணி ஏற்றுக்கொண்டாரா?''

''ஏற்கவில்லை என்கிறார்கள். 'கூட்டம் முடிந்து ஹோட்டலுக்கு வந்ததும் ராமதாஸிடன் அன்புமணி கோபப்பட்டார். ஏன் அப்படி பேசினீர்கள் என்று கேட்டார். நம்முடைய தொகுதிகள் அனைத்திலும் தே.மு.தி.க. நிற்பதைப் பார்த்துக்கொண்டு என்னால் இருக்க முடியாது என்று ராமதாஸ் சொல்லிவிட்டார். இதனால் கோபமான அன்புமணி தர்மபுரியில் தங்காமல் சென்னை கிளம்பிவிட்டார். அதன் பிறகு ராமதாஸ் தன்னுடைய ஆலோசனையைத் தொடர்ந்தார். மறுநாள் காலையும் ஆலோசனை நடத்தினார். அப்போது அவரோடு அன்புமணி இல்லை’ என்று சொல்கிறார்கள். 'தனித்துப் போட்டியிடுவோம். தர்மபுரி, ஆரணி இரண்டு தொகுதிகளைக் குறிவைப்போம்’ என்று சொல்லிவிட்டாராம். ஆனாலும் அன்புமணி விடவில்லை. இன்னொரு பக்கமாக பி.ஜே.பி-க்கு சில கோரிக்கைகளை வைத்து வந்தார் அன்புமணி. அதாவது நீங்கள் சேலத்தை கொடுத்துவிடுங்கள், நாங்கள் கள்ளக்குறிச்சி வேட்பாளரை வாபஸ் வாங்குகிறோம் என்பதுதான் அந்த சமாதானம். ஆனால் அதனை முரளிதர் ராவ் ஏற்கவில்லை. 'இவ்வளவு பிரச்னை நடந்து கொண்டு இருக்கும்போது கள்ளக்குறிச்சி வேட்பாளரை அறிவித்தது சரியா? உங்களுக்காக தர்மபுரி தொகுதியை எவ்வளவு பாதுகாத்து வைத்திருந்தோம். யார் கேட்டும் தரவில்லை. ஆனால், நீங்கள் பேச்சுவார்த்தை நடந்துகொண்டு இருக்கும்போதே இப்படி கள்ளக்குறிச்சிக்கு வேட்பாளர் அறிவிக்கிறீர்கள். சேலம் வேட்பாளரை பொதுமேடையில் வைத்து சேலத்தில் வேலையைத் தொடங்கு என்கிறீர்கள். இது நியாயமா? இப்படி ராமதாஸ் பேசினார் என்றதும், கோபமான சுதீஷ், நாங்களும் சேலத்துக்கு வேட்பாளர் அறிவித்தால் என்ன ஆகும் என்று கேட்டார். அவருக்கு எங்களால் எந்த பதிலையும் சொல்ல முடியவில்லை. அந்தளவுக்கு குழப்பத்தை ஏற்படுத்திவிட்டீர்கள்’ என்றாராம் முரளிதர் ராவ். 'ஏற்கெனவே உங்களுக்கு ஆறு தொகுதிகள் தந்தாகிவிட்டது. கூடுதலாக நாகை, வேலூர் தருகிறோம். மற்றபடி சேலம், திருவண்ணாமலை தர முடியாது’ என்று உறுதியாகச் சொல்லிவிட்டார். அன்புமணியால் பதில் சொல்ல முடியவில்லை. இந்தத் தகவல் ராமதாஸுக்குப் போனது.'அப்படியானால் இவர்களோடு கூட்டணி தொடர்வதிலும் அர்த்தம் இல்லை’ என்று ராமதாஸ் சொன்னார். 'நாகையில் நிற்கத் தயங்கினால், 40-ல் எப்படி போட்டியிடுவார்கள்?’ என்று பி.ஜே.பி. பிரமுகர் அடித்த கமென்ட் ராமதாஸை இன்னும் உஷ்ணம் ஆக்கியது. ஓவர் போனில் அத்தனை பேச்சுவார்த்தைகளுக்கும் முற்றுப்புள்ளி வைக்கப்பட்டதாம். மதியம் 2 மணிக்கு ஹைதராபாத் புறப்பட்டுப் போனார் முரளிதர் ராவ். அன்புமணிக்கு அவர் கடைசி போனை போட்டு முற்றுப்புள்ளி வைத்துவிட்டார். இதுதான் 17-ம் தேதி இரவு வரையிலான நிலவரம்!'' என்று சொல்லிவிட்டுப் பறந்தார் கழுகார்!

படம்: சொ.பாலசுப்ரமணியன்

அடுத்த கட்டுரைக்கு