Published:Updated:

மிஸ்டர் கழுகு: அ.தி.மு.க-வுக்கு 19 தொகுதிகள் அபாயம்!

மிஸ்டர் கழுகு: அ.தி.மு.க-வுக்கு 19 தொகுதிகள் அபாயம்!

மிஸ்டர் கழுகு: அ.தி.மு.க-வுக்கு 19 தொகுதிகள் அபாயம்!

அ.தி.மு.க-வுக்கு அபாய எச்சரிக்கை  காட்டும் 19 தொகுதிகள்!

 1. திருவள்ளூர், 2. மத்திய சென்னை,

3. தென் சென்னை, 4. கரூர்,

5. கள்ளக்குறிச்சி, 6.சேலம்,

7. பொள்ளாச்சி, 8. திண்டுக்கல்,

9. வேலூர், 10. திருப்பூர்,

11. கோவை, 12. சிவகங்கை,

13. கன்னியாகுமரி, 14. ஈரோடு,

15. விருதுநகர், 16. தென்காசி,

17. தஞ்சாவூர், 18. தர்மபுரி,

19. நாகப்பட்டினம்

கழுகார் உள்ளே நுழையும்​போது, மு.க.அழகிரி பேட்டி லே-அவுட் ஆகிக்கொண்டு இருந்தது. அதைப் படித்துவிட்டு, சிரித்தபடி தகவல்களைச் சொல்லத் தொடங்கினார் கழுகார்!

''அழகிரிக்கு உண்மையில், என்ன செய்வது என்றே தெரியவில்லை. கருணாநிதியிடம் சரண்டர் ஆவதா, தனிக்கட்சித் தொடங்குவதா, தேர்தலில் தனது ஆட்களை நிறுத்துவதா, எந்தக் கட்சியையாவது வெளிப்படையாக ஆதரிப்பதா... என்று எதுவுமே பிடிபடவில்லை. அதனால்தான், நோக்கமே இல்லாமல் பேசிக்கொண்டு இருக்கிறார். தி.மு.க. பெரும்பாலான இடங்களில் தோற்க வேண்டும், அப்படித் தோற்றால் அது ஸ்டாலின் இமேஜைப் பாதிக்கும், அது தனக்குச் சாதகமாக ஆகும் என்று நினைக்கிறார். அதனால்தான் தேர்தல் வரைக்கும் 'பேட்டிகிரி’யாக ஊர்ந்துகொண்டே இருக்கத் திட்டமிட்டுள்ளார்!''

''தி.மு.க-வின் வெற்றிவாய்ப்பு எப்படி இருக்கிறதாம்?''

''அது சம்பந்தமான சில தகவல்களைத் திரட்டி வந்திருக்கிறேன். அதற்கு முன் ப.சிதம்பரம், அழகிரி சந்திப்பைச் சொல்லிவிடுகிறேன்!''

''மதுரை விமான நிலையத்தில் அவர்கள் இருவரும் சந்தித்ததாகச் செய்தி வந்ததே?''

மிஸ்டர் கழுகு: அ.தி.மு.க-வுக்கு 19 தொகுதிகள் அபாயம்!

''சென்னையில் இருந்து மதுரை வரும் விமானத்திலேயே ப.சிதம்பரம், மு.க.அழகிரி, கார்த்தி சிதம்பரம் ஆகிய மூன்று பேருக்குமான பேச்சுவார்த்தை நடந்தது. விமானத்தில் முன்னமே போய் அமர்ந்துவிட்டாராம் அழகிரி. ப.சி-யும் அவரது மகனும் அப்புறமாகத்தான் வந்துள்ளார்கள். 'நீங்கள் செல்லும் விமானத்தில்தான் அழகிரியும் வருகிறார்’ என்று விமான நிலையத்துக்குள் ப.சிதம்பரம் நுழைந்ததுமே மத்திய உளவுத் துறை அதிகாரிகள் தகவல் தந்துள்ளார்கள். 'அப்படியா?’ என்றபடி உள்ளே நுழைந்தார் ப.சிதம்பரம். விமானத்துக்​குள் பார்த்துக்கொண்ட​துமே மூவரும் சகஜமாக பேச ஆரம்பித்துள்ளனர். அழகிரியின் வாரிசுகளான கயல்விழி, அஞ்சுகச்செல்வி, துரை தயாநிதி ஆகிய மூவரும் என்ன செய்கிறார்கள், அவர்களுக்கு எத்தனை குழந்தைகள், அவர்கள் என்ன படிக்கிறார்கள் என்று பரஸ்பரம் நலம் விசாரித்தாராம் ப.சிதம்பரம். ஒவ்வொருவர் பற்றியும் முழுத் தகவல்களையும் அழகிரி சொல்லியிருக்கிறார்!''

''அரசியல் மேட்டர்..?''

''அது இல்லாமலா? ப.சிதம்பரம்​தான் கூட்டணிகள் பற்றிப் பேசியிருக்கிறார். 'என்னோட அறிக்கையைப் படிச்சீங்களா? தேர்தலுக்குப் பிறகு தி.மு.க. என்ன நிலைப்பாடு எடுக்கும் என்பதைப்பற்றி அதில் கேள்வி எழுப்பியிருந்தேன். பி.ஜே.பி-யை ஆதரிப்பீர்களா, மாட்டீர்களா என்பதைத் தெளிவுப்படுத்த வேண்டும் என்று கலைஞருக்கு கோரிக்கை வைத்திருந்தேன். இதற்கு கலைஞர் நான் மகிழத்தக்க பதிலைத் தந்துள்ளார். மதவாத சக்திகளுக்கு ஆதரவாக நான் போக மாட்டேன் என்று சொல்லியிருக்கிறார். இதை இரண்டு மாதங்களுக்கு முன்பே தெளிவுப்படுத்தி இருந்தால் இந்தத் தேர்தலின் போக்கே மாறி இருக்கும். காங்கிரஸும் தி.மு.க-வும் இணைந்து போட்டியிட்டால், மதவாத சக்திகளுக்கு எச்சரிக்கையாக அது இருந்திருக்கும். இப்போது இதைச் சொல்லியிருக்கிறாரே?’ என்றாராம் ப.சிதம்பரம்.

அதற்கு அழகிரி, 'தி.மு.க. - காங்கிரஸ் கூட்டணிதான் வர வேண்டும் என்று ஆரம்பத்திலேயே நான் சொல்லிவந்தேன். ஆனால் அவங்க காங்கிரஸை மதிக்காம தே.மு.தி.க-வை நம்பிக்கொண்டு இருந்தார்கள். தே.மு.தி.க. நம்மோடு வராது என்று நான் சொன்னேன். என் பேச்சை யாரு கேட்டா? நல்லது சொன்னாலும் நான் சொல்றதைக் கேட்கக் கூடாதுன்னு நினைக்கிறவங்க​கிட்ட என்ன சொல்ல முடியும்? அப்ப தலைவரும் அதைக் கேட்கல. ஆனா, மதச்சார்பற்ற சிந்தனைகளில் உறுதியாக இருந்தால், காங்கிரஸை ஆதரிக்கத் தயார்னு இப்ப தலைவர் சொல்றார். நான் அப்ப சொன்னப்ப தலைவர் கேட்கல. இப்ப அதைத்தான் தலைவரும் சொல்றாரு!’ என்று சொல்லிச் சிரித்தாராம் அழகிரி!''

''ம்!''

மிஸ்டர் கழுகு: அ.தி.மு.க-வுக்கு 19 தொகுதிகள் அபாயம்!

''அதன் பிறகு சிதம்பரம், 'இனி கூட்டணியைப்பற்றிப் பேசி எந்தப் பயனும் இல்லை. நீங்க என்ன பண்ணப்போறீங்க? எல்லாக் கட்சி வேட்பாளர்களும் உங்களை வந்து பார்க்கிறாங்களே?’ என்று கேட்டுள்ளார். 'எல்லா வேட்பாளர்களையும் என் வீட்டுக்கு வரும் விருந்தாளியாகத்தான் நான் பார்க்கிறேன். அவங்க யாரையும் வராதீங்கன்னு என்னால சொல்ல முடியாது. என் ஆதரவை அவங்க கேட்கிறாங்க. நான் என் ஆதரவாளர்களிடம் ஆலோசனை கேட்டுச் சொல்றேன்னு சொல்லியிருக்​கேன்’ என்று அழகிரி பதில் சொல்லியிருக்கிறார். அருகில் இருந்த கார்த்தி சிதம்பரம், 'சிவகங்கை பி.ஜே.பி. வேட்பாளர் ஹெச்.ராஜாவும் உங்களை வந்து பார்த்திருக்காரே?’ என்று கேட்டுள்ளார். 'அவருக்கும் நான் எந்த வாக்குறுதியும் தரலை’ என்றாராம் அழகிரி. 'நீங்க ஏதோ அமெரிக்காவுக்குப் போகப்போறதா சொல்றாங்​களே? தேர்தல் நேரத்துல இங்க இருக்கப்போறது இல்லையா?’ என்று கார்த்தி கேட்க, 'நான் அமெரிக்காவுக்கு எல்லாம் போகப்போறது இல்லை. தி.மு.க-வுல இருந்துதான் யாரோ இதைக் கிளப்பிவிட்டிருக்காங்க. அப்படி எல்லாம் ஓடி ஒளிய மாட்டேன்’ என்றாராம் அழகிரி. 'கார்த்திதான் சிவகங்கை வேட்பாளர்’ என்று ப.சி. சொல்ல, 'படித்தவர், நல்ல இளைஞர், அவர் நிச்சயம் ஜெயிப்பார்’ என்று பட்டும்படாமலும் பதில் சொன்னாராம் அழகிரி. 'நீங்க என்னை ஆதரிப்பீங்களா? அதைச் சொல்லுங்க’ என்று கார்த்தி கிடுக்குப்பிடி போட்டுள்ளார்!''

''என்ன பதில் சொன்னாராம் அழகிரி?''

''அழகிரி, 'என்னோட சோர்ஸ் மூலமா கார்த்திக்கும் நான் ஹெல்ப் பண்ணுவேன். கட்சியை விட்டு நீக்கினாலும் நான் தி.மு.க-தான். அதனால வெளிப்படையாக எதுவும் செய்ய முடியாது. எனக்கு டெல்லியில நிறைய ஹெல்ப் செய்தவர் உங்க அப்பா. ஒரு சகோதரனாக நினைத்து வழிகாட்டினார். அவரு பையனுக்கு நான் உதவி செய்ய மாட்டேனா?’ என்றாராம் அழகிரி. நெகிழ்ந்து போனாராம் ப.சி.!''

''சிவகங்கையில் காங்கிரஸ் வேட்பாளருக்கும் ஆதரவு, பி.ஜே.பி. வேட்பாள​ருக்கும் ஆதரவு என்றால், அழகிரி அரசியல் வித்தியாசமாக இருக்கிறதே?''

''தி.மு.க. வேட்பாளர்கள் யாருமே தன்னைப் பார்க்க வரவில்லையே என்பதுதானே அழகிரியின் வருத்தம்!''

''ம்! இப்போது சொல்லும் தி.மு.க-வின் வெற்றிவாய்ப்பு பற்றி?''

''ஸ்டாலின் நம்பிக்கையோடு இருக்கிறார். '20 தொகுதிகளைக் கைப்பற்றிவிடுவோம்’ என்று சொல்லிக்கொண்டு இருக்கிறார். முதற்கட்ட பிரசாரத்தை வைத்துப் பார்க்கும்போது, நாகப்பட்டினம், தஞ்சாவூர், மத்திய சென்னை, கரூர், காஞ்சிபுரம், திண்டுக்கல், பெரம்பலூர், வேலூர், நீலகிரி, திருச்சி ஆகிய 10 தொகுதிகள் தி.மு.க-வுக்கு ஓரளவு வாய்ப்புள்ள தொகுதிகளாகக் கணிக்கப்படுகின்றன. இவற்றை ஏ என்று வைத்துக்கொண்டால், அடுத்த நிலைமையில் ஸ்ரீபெரும்புதூர், வட சென்னை, நாமக்கல், திருவண்ணாமலை ஆகிய நான்கு தொகுதிகள் சொல்லப்படுகின்றன. இங்கு தேர்தல் வேலைகள் ஓரளவு பரவாயில்லை என்றும் சொல்கிறார்கள்.

மிஸ்டர் கழுகு: அ.தி.மு.க-வுக்கு 19 தொகுதிகள் அபாயம்!

'தலைமைக் கழகத்தில் இருந்து தாராளமாக பணம் வந்து கொட்டும்’ என்று பல வேட்பாளர்​களும் மாவட்டச் செயலாளர்களும் எதிர்பார்த்துக் காத்திருந்தார்கள். ஆனால், அப்படி எதுவும் நடக்கவில்லை. வேட்பாளர்களையே பெரும்பாலும் பார்க்கச் சொல்லிவிட்டார்களாம். 'இப்போதைக்கு தலைமையில் இருந்து பணம் எடுத்துக் கொடுக்க இயலாது. நீங்கள் செலவு செய்துகொள்ளுங்கள். தலைமையில் இருந்து தேர்தலுக்குப் பிறகு பணம் தந்துவிடுவோம்’ என்று சில வேட்பாளர்களுக்கு வாக்குறுதி தரப்பட்டுள்ளதாம். ஆனால், அதனை யாரும் நம்பத் தயாராக இல்லை. தஞ்சாவூர், நீலகிரி, ஸ்ரீபெரும்புதூர், மத்திய சென்னை, திருநெல்வேலி ஆகிய தொகுதிகளில் போட்டியிடும் வேட்பாளர்கள் மட்டும்தான், ஓரளவு பணத்தை இறக்கி வேலை பார்க்கிறார்களாம். மற்ற இடங்களில் எண்ணி எண்ணி செலவு செய்யப்படுவதாகச் சொல்லப்படுகிறது!''

''தலைமையில் இருந்து கொடுப்பதாக வாக்குறுதி அளிக்கப்பட்டதாமே?''

''உண்மைதான்! ஆனால் எதிர்பார்த்த அளவுக்குப் போகவில்லை. சென்னைக்கு பக்கத்தில் இருக்கும் தொகுதியில் போட்டியிட ஒரு வேட்பாளரை தலைமை தேர்வு செய்தது. அவர், 'என்னிடம் பணமே இல்லை’ என்று சொன்னார். 'உங்களுக்கு நாங்களே தருவோம்’ என்று வாக்குறுதி கொடுத்தார்களாம். அவருக்குப் பணம் கொடுக்க இன்னொரு வேட்பாளருக்குக் கட்டளையிடப்பட்டது. 10 தொகுதிகளுக்கு செலவழிக்கும் அளவுக்கு பலம் வாய்ந்தவர் அவர். ஆனால் அவர், 'என்னால் பணத்தைத் திரட்ட முடியவில்லையே’ என்று சொல்லிவிட்டாராம். இந்த வேட்பாளர் என்ன செய்வது என்று தெரியாமல் விழிக்கிறார்.

தென் மாவட்டத்தில் தொழில் அதிபர் ஒருவருக்குத் தொகுதி ஒதுக்கப்பட்டது. ஆரம்ப ஜோரில் ஏராளமாகக் கொண்டுவந்து, மாவட்டச் செயலாளருக்கு அதில் பாதியைக் கொடுத்துவிட்டார். கட்சிப் பதவியில் இருப்பவர்கள் பலருக்கும் வாரி வாரி வழங்கினார். தேர்தல் செலவுக்காக அவர் எவ்வளவு எடுத்து வைத்திருந்தாரோ, அதில் பெருமளவு கட்சிக்காரர்களைத் திருப்திப்படுத்தவே முடிந்துபோனதாம். அதன் பிறகு பெட்டியை இறுக்கிப் பூட்டிவிட்டார். அதேபோல் மதுரைக்கு அருகில் உள்ள தொகுதியில் போட்டியிடும் வேட்பாளரிடமும் அந்தப் பகுதியின் மாவட்டச் செயலாளர் கணிசமாகக் கறந்துவிட்டார். யார் போய் பணம் கேட்டாலும், 'மாவட்டத்துகிட்ட கொடுத்துட்டேன்... அவரு செலவு செய்வார்’ என்று சொல்கிறாராம் வேட்பாளர். 'மாவட்டத்திடம் கொடுத்தால், அது மாவட்டத்துக்கான பங்குன்னு அர்த்தம்’ என்று விளக்கிய பிறகு, வேட்பாளர் வெலவெலத்துப் போனாராம். இதேபோலத்தான் வடக்கு மாவட்டத்திலும் முன்னாள் அமைச்சர் ஒருவர், வேட்பாளரிடம் கணிசமான தொகையை வாங்கி வீட்டுக்கு எடுத்துப் போய்விட்டாராம். வேட்பாளர்கள் செலவு செய்யவில்லை என்ற குற்றச்சாட்டு இதனால்தான் வருகிறது என்கிறார்கள். இப்படி வசூல் செய்த மாவட்டச் செயலாளர்களிடம் திருப்பி எடுத்தாலே, நான்கைந்து தொகுதிகளுக்கு முழுமையாகச் செலவு செய்யலாம் என்கிறார்கள்!''

''இப்படி எல்லாமா நடக்கும்?''

''அதேபோல் கூட்டணிக் கட்சிகளோடும் பல இடங்களில் முரண்பாடுகள் முளைக்கின்றனவாம். தி.மு.க-வில் இருந்து கணிசமான கவனிப்பு இருக்கும் என்று விடுதலைச் சிறுத்தைகள் கட்சி எதிர்பார்த்தது. ஆனால் சிறு கவனிப்பும் இல்லை. சிதம்பரத்தில் ஓரளவாவது திருமாவளவன் சமாளிக்கிறார். திருவள்ளூரில் ரவிக்​குமார் பசையே இல்லாமல் தவிக்கிறார் என்கிறார்கள். அன்றாடச் செலவுக்குக்கூட பணம் இல்லையாம். 'ஸ்டாலின் இந்தப் பகுதிக்கு வந்தார். அப்போது எதிர்பாராத அளவுக்குக் கூட்டம் கூடியது. கொஞ்சம் பணம் செலவுசெய்து கட்சிக்காரர்களை வேலை வாங்கினால் நிச்சயம் ஜெயிக்கலாம். ஆனால், தி.மு.க. தலைமைதான் எங்களைக் கவனிக்கவில்லை’ என்ற வருத்தம் திருவள்ளூர் விடுதலைச் சிறுத்தைகள் கட்சிக்காரர்கள் மத்தியில் இருக்கிறது. 'தேர்தல் நேரத்தில் பூத் செலவுகளை மட்டும் எங்கள் கட்சிக்காரர்களுக்குத் தந்துவிடுவோம். அதுவும் உங்களிடம் தர மாட்டோம்’ என்று சொல்லிவிட்டார்களாம். 'நாங்கள் இரண்டு பேர் வெற்றிபெற்றாலும் அதுவும் தி.மு.க-வுக்கான வெற்றிதானே. அதனைப் பார்க்க மாட்டேன் என்கிறார்கள்’ என்று சொல்லும் வி.சி. ஆட்கள், விழுப்புரம் மாவட்டத்தில் திருமாவளவன் படத்தை தி.மு.க. போஸ்டர்களில் போடுவது இல்லை என்றும் புகார் வாசிக்கிறார்கள். இதனை மாவட்டச் செயலாளர் பொன்முடியிடமே ஒருவர் சொன்னாராம். 'இந்த மாதிரி எல்லாம் பூச்சாண்டி காட்டக் கூடாது’ என்றாராம் அவர். இப்படி வரிசையாக கூட்டணிக் கட்சிக் குழப்பங்களை அடுக்குகிறார்கள்!'' என்ற கழுகாரிடம், அ.தி.மு.க. நிலவரங்களைக் கேட்டோம்.

''ஒரு மாதங்களுக்கு முன்பு வரை அ.தி.மு.க. 36 தொகுதிகளுக்கு மேல் ஜெயிக்கும் என்று மாநில உளவுத் துறை சொல்லிவந்தது. இப்போது அவர்களே 24 தொகுதி வரைக்கும் மட்டும்தான் எதிர்பார்க்கலாம் என்று சொல்ல ஆரம்பித்திருக்கிறார்களாம். 19 தொகுதிகளுக்கு மேல் ஆளுங்கட்சிக்கு அதிகமான நெருக்கடி இருப்பதாகவும் உளவுத் துறை சொல்ல ஆரம்பித்துள்ளது. கடந்த வாரத்தில் உளவுத் துறையின் உயர் அதிகாரியை அழைத்து முதல்வர் ஜெயலலிதா பேசியிருக்கிறார். அப்போது இந்தத் தகவல் பரிமாறப்பட்டுள்ளது. 'அ.தி.மு.க. வேட்பாளர்கள் அனைவருக்குமே எப்படியும் ஜெயித்துவிடுவோம் என்ற மிதப்பு அதிகமாகிவிட்டது, அதனால், சும்மா ஒப்புக்கு வேலை பார்த்தால் போதும் என்று நினைக்கிறார்கள். அமைச்சர்களில் நான்கைந்து பேர் தவிர வேறு யாரும் ஒழுங்காக வேலை பார்க்கவில்லை. பணம் செலவு செய்பவர்களும் நான்கைந்து அமைச்சர்கள்தான். மற்ற அமைச்சர்களும் மாவட்டச் செயலாளர்களும் தொகுதி அலுவலகத்தில் வந்து உட்கார்ந்து சீன் காண்பித்துவிட்டு போய்விடுகிறார்கள். மேலிடத்தில் இருந்து தேர்தல் செலவுக்காகத் தரப்பட்ட பணத்தையும் நிர்வாகிகள் பலர் அமுக்கிவிட்டார்கள்’ என்று உளவுத் துறை அறிக்கை கொடுத்துள்ளது. இவை அனைத்தையும் முகம் சிவக்கக் கேட்டுக்கொண்டாராம் முதல்வர்!''

''ஓஹோ!''

''வெற்றிவாய்ப்பு சரிவதற்​கான காரணமாக உளவுத் துறை முக்கியமாகச் சொல்வது, வேட்பாளர்கள் தேர்வில் இன்னும் அக்கறை செலுத்தப்பட்டிருக்கலாம் என்பது. ஆனால், அறிவிக்கப்பட்ட அனைத்து வேட்பாளர்கள் மீதும் தலைமைக்குப் புகார் வந்துவிட்டது. இது ஜெயலலிதாவைக் குழப்பத்தில் ஆழ்த்தியது. 'எந்த வேட்பாளரையும் மாற்றப்போவது இல்லை’ என்று சொல்லிவிட்டார். 'அறிவிக்கப்பட்ட வேட்பாளர்களை திறமையாக வேலை பார்க்கவைத்து ஜெயிக்கவைக்க வேண்டும்’ என்று நால்வர் அணிக்கு கட்டளை போட்டுள்ளார். உளவுத் துறை கொடுத்துள்ள பட்டியலை வைத்து, அனைத்துத் தொகுதிகளையும் கண்காணிக்க உத்தரவிட்டுள்ளார். யார் யார் வேலை பார்க்கிறார்கள், யாரெல்லாம் ஒப்புக்கு செயல்படுகிறார்கள், சரிவில் இருக்கும் தொகுதிகளில் என்ன செய்தால் வெற்றிபெறலாம், எதிரணிக்குத் தொய்வு ஏற்படுத்த என்ன செய்யலாம் என்று பட்டியல் தரச் சொல்லியிருக்கிறார். ஏப்ரல் முதல் வாரத்தில் இதனைத் திரட்ட இருக்கிறது உளவுத் துறை. அதன் பிறகு சம்பந்தப்பட்ட அமைச்சர்கள், மாவட்டச் செயலாளர்களை அழைத்து ரிவிட் விடப்போகிறாராம் முதல்வர்'' என்று சொல்லிவிட்டுப் பறந்தார் கழுகார்.

அட்டைப் படம்: கே.கார்த்திகேயன்

படங்கள்: சாய்.தர்மராஜ், ஜெ.முருகன், வீ.சக்தி அருணகிரி

 அடுத்த முதல்வர் ஓ.பி.எஸ்.

அதிர வைத்த ஆதினம்!

அ.தி.மு.க-வுக்கு ஆதரவான தனது பிரசாரத்தைத் தொடங்கிவிட்டார் மதுரை ஆதீனம். தேனி வேட்பாளர் ஆர்.பார்த்திபனை ஆதரித்து சின்னமனூரில் பொதுக்கூட்டம். அதற்கான ஏற்பாட்டை அமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்தின் மகன் ரவீந்திரநாத் குமார் செய்திருந்தார்.

மிஸ்டர் கழுகு: அ.தி.மு.க-வுக்கு 19 தொகுதிகள் அபாயம்!

மைக் பிடித்தார் மதுரை ஆதீனம். ''நாடு நன்றாக இருக்க, நாட்டு மக்கள் நன்றாக  இருக்க அம்மா பிரதமராக வரவேண்டும். நம் முதல்வர் இரவையும் பகல் ஆக்கியவர். அவருக்குக் குடும்பம், பெயரன், பெயர்த்தி கிடையாது என்ற முறையில் மக்களுக்காகப் பாடுபடக்கூடிய புரட்சித் தலைவி அம்மா கடவுளை நம்பி, உங்களை நம்பிக் களத்தில் இறங்குகிறார். மம்தா பானர்ஜி, நவீன் பட்நாயக், மாயாவதி, சந்திரபாபு நாயுடு ஆகியோர் ஆதரிக்கக்கூடிய  ஒரே தலைவி நம் புரட்சித் தலைவி அம்மா அவர்கள். அம்மா ஒரு தீர்க்கதரிசி, மனோதத்துத்துவ நிபுணர். வழக்கு இருந்த  காலத்திலே  ஓ.பி.எஸ். முதல்வராக வரவேண்டும் என நினைத்து அவரை கொண்டுவந்தவர். இங்கே அவருடைய மகன் ரவீந்திரநாத் குமார் தந்தையைப் போலவே நல்ல உழைப்பாளி. பண்பாளரும்கூட. அம்மா நன்றாக இருந்தால் நாடு நன்றாக இருக்கும். ஓ.பி.எஸ். நன்றாக இருந்தால் அவருடைய மகன் நன்றாக இருப்பார். இந்தப் பகுதி மக்களும்  நன்றாக இருப்பார்கள்.

நாளைக்கே அம்மா அவர்கள் பிரதமராக வந்துவிட்டால் அடுத்து தமிழ்நாட்டின் முதல்வராக யார் வருவார்? தமிழ்நாட்டின் அடுத்த முதல்வராக ஓ.பன்னீர்செல்வம் வருவார். அவருக்கு அடுத்தபடியாக அவருடைய மகன் ரவீந்திரநாத் குமார் வருவார்'' என்றார். அதிர்ந்துபோனது கூட்டம். அதிகம் அதிர்ந்தவர் ரவீந்திரநாத் குமார்.

 திருமாவுக்கு எதிராக  புதிய வேட்பாளர்!

மிஸ்டர் கழுகு: அ.தி.மு.க-வுக்கு 19 தொகுதிகள் அபாயம்!

சிதம்பரம் தொகுதிக்கு பா.ம.க. வேட்பாளரை மாற்றி விடுதலைச் சிறுத்தைகளுக்கு அதிர்ச்சி கொடுத்துள்ளார் ராமதாஸ். சிதம்பரம் தொகுதியில் திருமாவளவனுக்குப் போட்டியாக பா.ம.க. களமிறக்கியிருந்த வேட்பாளர் கோபாலகிருஷ்ணன், மக்களிடம் அறிமுகம் இல்லாதவராக இருந்தார். இதுபற்றி கட்சித் தலைமைக்குத் தகவல் போனதும், காடுவெட்டி குரு அடையாளம் காட்டிய நபர்தான் கே.ஐ.மணிரத்தினம்.

யார் இந்த மணிரத்தினம்?

காங்கிரஸ் கட்சியில் இந்த முறை சீட் வாங்கியே தீர வேண்டும் என்று கடந்த ஐந்து ஆண்டுகளாக களத்தில் இறங்கி வேலைபார்த்து வந்தவர் கே.ஐ.மணிரத்தினம். சிதம்பரம் தொகுதிக்குள் 'அனுகிரஹா’ என்ற பெயரில் ரியல் எஸ்டேட் தொழில் செய்கிறார். 'அனுகிரஹா’ மணிரத்தினம் என்றால் எல்லோருக்கும் தெரியும். காங்கிரஸ் கட்சியில் போட்டியிட சத்தியமூர்த்தி பவனுக்கு தனது ஆதரவாளர்களுடன் 100 கார்களில் வந்து விருப்பமனுத் தாக்கல் செய்தார் மணிரத்தினம். ஆனால், இவர் வாசன் ஆதரவாளர் என்பதால் சீட் கொடுப்பப்படவில்லை. இந்த சூழலில், 'மணிரத்தினத்தை வேட்பாளராக மாற்றினால் தான் திருமாவளவனை தோற்கடிக்க முடியும்’ என்று  காடுவெட்டி குரு, ராமதாஸிடம் சொல்ல... அவரே வேட்பாளர் ஆனார்!

அடுத்த கட்டுரைக்கு