Published:Updated:

இது தி.மு.க.... அ.தி.மு.க-வுக்கான யுத்தம்!

Vikatan Correspondent

ஏப்ரல்-5 முதல் பிரசாரம் தொடங்குகிறார் கனிமொழி. சுமார் 15 நாட்கள் தமிழகம் முழுக்க சுற்றிவர இருக்கிறார். அதற்காகத் தயாராகிக்கொண்டு இருந்த கனிமொழியை சி.ஐ.டி. காலனியில் உள்ள அவரது அலுவலகத்தில் சந்தித்தோம்.

  ''எப்போதும் வலுவான கட்சிகளுடன் கூட்டணி அமைக்கும் தி.மு.க., இந்த முறை அந்தக் கட்சிகளைத் தவிர்த்தது ஏன்?''

இது தி.மு.க.... அ.தி.மு.க-வுக்கான யுத்தம்!

 ''எது வலுவான கூட்டணி என்று முடிவு செய்வது யார்? தேர்தல் முடிவுகளுக்குப் பிறகே அந்தக் கூட்டணி வலுவாக இருந்ததா, இல்லையா என்பது தெரியும். இப்போது தலைவர் கலைஞரால் அமைக்கப்பட்டுள்ள ஜனநாயக முற்போக்குக் கூட்டணியை வலுவான கூட்டணியாகவே நினைக்கிறோம். இந்தக் கூட்டணி நிச்சயம் பெரிய அளவில் வெற்றியைப் பெற்றுத்தரும். எப்போதும் எண்ணிக்கை மட்டுமே முக்கியம் இல்லை. எப்படிப்பட்ட கூட்டணியை அமைக்கிறோம் என்பதும்தான் முக்கியம். மதச்சார்பற்ற தமிழர்களை முன்னிறுத்தி  தேர்தலைச் சந்திக்கக்கூடிய கூட்டணியை உருவாக்க வேண்டும் என்றுதான் தலைவர் கலைஞர் நினைத்தார். அதைத்தான் இப்போது உருவாக்கியிருக்கிறார்.''

''தி.மு.க. கூட்டணிக்கான வெற்றிவாய்ப்பு எப்படி இருக்கிறது?''

''எந்தக் கட்சியும், போட்டியிடும் அத்தனை இடங்களிலும் ஜெயிக்க வேண்டும் என்றுதான் நினைக்கிறது. நாங்களும் அந்த எண்ணத்துடன்தான் களத்தில் இறங்கியிருக்கிறோம். அதற்கான பணிகளில் எங்கள் கட்சியின் முக்கியத் தலைவர்களும், தி.மு.க. தொண்டர்களும் ஈடுபட்டுள்ளனர். மிகச்சிறந்த வெற்றியை தி.மு.க. கூட்டணிக்கு இந்தத் தேர்தல் தேடித்தரும் என்பதில் எனக்கு எந்த சந்தேகமும் இல்லை. கழகத்தின் பொருளாளர் தளபதி செல்லும் இடங்களில் எல்லாம் கூடும் கூட்டமே அதற்கு சாட்சி. இந்த ஆட்சிக்கு எதிரான கோப அலை மக்கள் மனதில் எழுந்துள்ளதைத்தான் இந்தக் கூட்டம் காட்டுகிறது.''

''தி.மு.க. நிச்சயமாக காங்கிரஸுடன்தான் கூட்டணி அமைக்கும் என்று சொல்லப்பட்டது. அத்தகைய கூட்டணி அமையாமல் போனதற்கு என்ன காரணம்?''

''ஜனநாயகத்தில் கூட்டணிகள் மாறுவது என்பது பெரிய சர்ச்சைக்குரியது இல்லை. அ.தி.மு.க-வுடன் கூட்டணி என்று சொல்லி வந்த கம்யூனிஸ்ட்கள் இப்போது பிரிந்து நிற்கவில்லையா? அதுபோலத்தான் எங்களுக்கும் பல பிரச்னைகளும் சில கருத்து வேறுபாடுகளும் இருந்தன. இணைந்து வேலை செய்ய முடியாத சூழ்நிலையும் இருந்தது. காங்கிரஸ் கட்சியும் இப்போது வேட்பாளர்களை அறிவித்து தேர்தல் பணிகளைத் தொடங்கிவிட்டார்கள். இந்த சூழ்நிலையில் ஏன் கூட்டணி அமையவில்லை என்ற  காரணத்தை இப்போது தேடுவது சரியாக இருக்காது. அது நடக்கவில்லை. அதைப்பற்றிப் பேசி எந்தப் பிரயோஜனமும் இல்லை!''

'' 'பி.ஜே.பி. ஆட்சிக்கு வந்தால் அவர்களுடன் கருணாநிதி சேர்ந்துகொள்வார்’ என்று ப.சிதம்பரம் பேசியிருக்கிறாரே?''

''மதச்சார்பற்ற ஒரு ஆட்சி மத்தியில் உருவாக வேண்டும் என்பதைத் தலைவர் பல இடங்களில் தொடர்ந்து பேசியும் வலியுறுத்தியும் வருகிறார். பி.ஜே.பி-யுடன் கூட்டணி வைக்க வேண்டும் என்ற எண்ணம் இருந்தால், அப்படிப் பேச முடியுமா?''

''ஆனால், தி.மு.க. மேடைகளில் மோடியைப் பற்றிய எந்த விமர்சனமும் வருவதே இல்லையே?''

''இந்தத் தேர்தல் தேசியக் கட்சிகளை முன்னிறுத்தி தமிழகத்தில் நடக்கும் தேர்தலாக நாங்கள் பார்க்கவில்லை. இது தி.மு.க-வுக்கும் அ.தி.மு.க-வுக்கும் இடையே நடக்கும் யுத்தம். அதனால்தான் நாங்கள் அ.தி.மு.க-வைப் பற்றிய விமர்சனங்களை முழுமையாக முன்வைக்கிறோம். இங்கே இருக்கும் தமிழக முதல்வர், தான் பிரதமராக வேண்டும் என்ற எண்ணத்தோடு ஊரெங்கும் பேசிவருகிறார். தமிழகத்தில் இருந்து டெல்லிக்குப் போகும் ஆபத்தை தடுத்து நிறுத்த வேண்டிய கட்டாயத்தில் தி.மு.க. இருக்கிறது. மற்றவர்களைப் பற்றிய விமர்சனங்களையும் நிச்சயமாக முன்வைப்போம். அதில் எங்களுக்கு எவ்வித தயக்கமும் இல்லை!''

''கடந்த காலத்தில் காங்கிரஸ் அரசின் சாதனைகள் என்ன... வேதனைகள் என்ன?''

''தமிழகத்தைப் பொறுத்தவரை மீனவர்களின் பிரச்னையைக்கூட காங்கிரஸ் அரசு தீர்க்கவில்லை. மீனவர்கள் மீதான தாக்குதல் இன்றுவரை தொடர்ந்துகொண்டுதான் இருக்கிறது. அது காங்கிரஸ் அரசு தமிழகத்துக்கு தந்திருக்கும் மிகப்பெரிய வேதனை. சாதனை என்றால், உணவு பாதுகாப்பு மசோதாவை அவர்கள் கொண்டுவந்தார்கள். அது இன்னும் முழுமையாக நிறைவேற்றப்படவில்லை. இருந்தாலும், அது வரவேற்க வேண்டிய விஷயம்தான். ஈழத்தமிழர் பிரச்னையில் நாங்கள் கூட்டணியில் இருந்து வலியுறுத்திய காரணத்தினால்தான் இலங்கைக்கு எதிரான தீர்மானத்தை இந்திய அரசு ஆதரித்தது. நாங்கள் கூட்டணியில் இருந்து விலகியதும், காங்கிரஸ் அரசின் முடிவுகள் மாறிவிட்டன!''

''ஜெயலலிதா தன்னுடைய சாதனைகளுக்கு வாக்களிக்க கோரிக்கை வைத்து வருகிறாரே?''

''அவரது ஆட்சியில் வேதனைகள்தான் அதிகம். இன்று தமிழகத்தில் மின்வெட்டுப் பிரச்னை தலைவிரித்தாடுகிறது. மின்வெட்டுப் பிரச்னையால் சிறுதொழில்கள் பாதிக்கப் படுகின்றன. விவசாயம் பாதிக்கப்படுகிறது. தொழில் உற்பத்தி முடங்கிக்கிடக்கிறது. தமிழகம் அழிவுப்பாதையை நோக்கிப் பயணிக்கிறது. சமீபத்தில் எடுக்கப்பட்ட ஒரு புள்ளிவிவரத்தின் அடிப்படையில் வளர்ச்சியில் பீகாரைவிட குறைவான இடத்தில் இருக்கிறது. 2010-ல் 13.12 சதவிகிதமாக இருந்த தமிழகத்தின் மொத்த உற்பத்தி, இன்று 4.14 சதவிகிதமாக குறைந்திருக்கிறது. இதுவே ஜெயலலிதா ஆட்சியின் அவலம் என்றுதானே சொல்ல வேண்டும். எல்லா மாநிலத்துக்கும் வளர்ச்சி என்பது முக்கியம். தமிழ்நாட்டில் எந்த செயல்பாடும் இல்லாமல் ஒரு ஆட்சி நடந்துகொண்டு இருக்கிறது. மக்களுக்கு ஒரு பிரச்னை என்றால் அதற்கு தீர்வுகாண ஆட்சியாளர்கள் முன்வருவது இல்லை.

தமிழகத்தில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகமாகியிருக்கிறது. பெண்கள் நிம்மதியாக வெளியில் நடமாட முடியாத சூழ்நிலை உருவாகியிருக்கிறது. சட்டம் ஒழுங்கு என்பதே இல்லை. இன்னொரு பக்கம் பார்த்தால் குடிநீர் பஞ்சம் பல இடங்களில் வந்துவிட்டது. இந்த ஆட்சியில் புதிதாக ஒரு தொழிற்சாலையும் தொடங்கப்படவில்லை. விலைவாசி உயர்வுக்கு என்ன பதில் சொல்லப்போகிறார் ஜெயலலிதா? வாழ்வதற்கே வழியில்லாத சூழ்நிலையை நோக்கி தமிழகம் போகிறது. இதற்கெல்லாம் ஆளும் ஜெயலலிதா அரசுதான் முழுப் பொறுப்பு.!''

''கடந்த ஐந்து வருட காங்கிரஸ் - தி.மு.க. ஆட்சியில்தான் நாட்டின் பொருளாதாரமே சீரழிந்துவிட்டதாக ஜெயலலிதா குற்றம்சாட்டுகிறாரே?''

''நாட்டின் பொருளாதாரத்தைத் தீர்மானிக்கும் இடத்தில் தி.மு.க. இருந்தாக எனக்குத் தெரியவில்லை. காங்கிரஸ் மீதான விமர்சனத்துக்கு நான் பதில் சொல்ல வேண்டிய அவசியமும் இல்லை. தமிழகத்தின் பொருளாதாரமே அ.தி.மு.க. ஆட்சியில்தான் வீணாகப் போய்விட்டது என்பதை வேண்டுமானால் என்னால் உறுதியாகச் சொல்ல முடியும்! இதற்கு முதல்வர் ஜெயலலிதா என்ன பதில் சொல்லப்போகிறார்?''

''தமிழகத்தில் எதிர்க்கட்சித் தலைவர் விஜயகாந்த்தின் செயல்பாடு பற்றி?''

''தமிழக சட்டமன்றத்தில் எதிர்க்கட்சிகளை செயல்படவே விடுவதில்லை. சட்டமன்றத்தில் எந்த விவாதத்தையும் முன்வைக்க முடிவதில்லை. விஜயகாந்த்தைப் பொறுத்தவரை அவர் தன் கட்சி எம்.எல்.ஏ-க்களைக் காப்பாற்றிக்கொள்ள வேண்டிய கட்டாயத்திலும், இக்கட்டான சூழ்நிலையிலுமே அவரது நேரம் போய்விட்டது. அதைத்தாண்டி அவரும் எதுவும் செய்யவில்லை!''

- கே.ராஜாதிருவேங்கடம்

படம்: கே.ராஜசேகரன்