Election bannerElection banner
Published:Updated:

'இதுபோதும் எனக்கு!' சந்தோஷத்தில் மோடியின் மனைவி

'இதுபோதும் எனக்கு!' சந்தோஷத்தில் மோடியின் மனைவி

இதுவரை அரசல்புரசலாகவும் யூகங்களாகவும் வந்த செய்தி உண்மைதான் என்று நரேந்திர மோடி ஒப்புக்கொண்டிருக்கிறார். ''ஆம். நான் திருமணம் ஆனவன்தான். என் மனைவியின் பெயர் யசோதா பென்’ என்று வேட்புமனுவில் குறிப்பிட்டிருக்கிறார்.

இதற்கு முன்பும் அவர் தேர்தல்களில் போட்டியிட்டு இருக்கிறார். அப்போதெல்லாம் அந்தக் கேள்விக்கு பதில் சொல்லாமல் வெறுமனே மூன்று புள்ளிகளை மட்டும் வைத்திருந்தார். இந்தத் தேர்தலில் 'வேட்பு மனு முழுமையாக நிரப்பப்பட வேண்டும். எந்தக் கேள்விக்காவது பதில் அளிக்காமல் காலியாக விடப்பட்டிருந்தாலோ, தவறான தகவலை தந்தாலோ, வேட்புமனு நிராகரிக்கப்படும்’ என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளதால், அந்தப் புள்ளியிட்ட இடங்களை நிரப்பியிருக்கிறார்.

'இதுபோதும் எனக்கு!' சந்தோஷத்தில் மோடியின் மனைவி

கடந்த பிப்ரவரி மாதம் இமாசலப்பிரதேசத்தில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பேசிய மோடி, ''நான்

'இதுபோதும் எனக்கு!' சந்தோஷத்தில் மோடியின் மனைவி

தனி ஆள். எனக்கு குடும்பம் இல்லை. நான் யாருக்காக ஊழல் செய்ய வேண்டும்? என் உடல் உயிர் எல்லாமே மக்களுக்கு சேவகம் செய்யத்தான்!'' என்று பேசி, மக்களின் அனுதாபங்களை அள்ளினார். அடுத்த இரண்டே மாதங்களில், தேர்தல் கமிஷனின் கட்டுப்பாடு காரணமாக ஒப்புக்கொள்ள வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது.

'தனக்கு என்று குடும்பம் எதுவும் இல்லாத பிரம்மசாரிகளாக இருப்பவர்களால்தான் இயக்கத்துக்காக கடுமையாக உழைக்க முடியும்’ என்பது ஆர்.எஸ்.எஸ். நிலைப்பாடு. தனக்குத் திருமணமானதை வெளிப்படுத்தினால் இயக்கத்தில் முக்கியப் பொறுப்புகள் கிடைக்காது என்பதால்தான், ஆரம்ப காலத்தில் அவர் தன்னுடைய மனைவி குறித்தோ, திருமணம் குறித்தோ பேசாமல் இருந்திருக்கலாம். ஆனால், முதன்முறையாக குஜராத்தின் முதல்வராக மோடி பொறுப்பேற்றபோது, தன் குடும்பத்தினரைச் சந்தித்து குரூப் போட்டோ எடுத்து பத்திரிகைகளில் வெளியிட்டார். குறைந்தபட்சம் அந்த போட்டோவிலாவது அவர் தன் மனைவியை சேர்த்துக்கொண்டிருக்கலாம். தன் மனைவி தன்னுடைய அந்தஸ்த்துக்குச் சமமானவர் இல்லை என்று முடிவு செய்ததால், அவர் இந்த விஷயத்தை மறைத்துவிட்டார் போலிருக்கிறது!’ என்று அரசியல் விமர்சகர்கள் காட்டமாகக் குற்றச்சாட்டு வைக்கிறார்கள்.

இந்தக் குற்றச்சாட்டுகளில் இருக்கும் உண்மைகளைத் தேடி நாம் குஜராத் பயணப்பட்டோம். மோடி பிறந்து வளர்ந்த வத் நகரில் அவர் வாழ்ந்த வீடு இருக்கும் வீதி, படித்த பள்ளிக்கூடம், நீச்சலடித்து விளையாடிய கோயில் குளம் என்று எல்லா இடங்களுக்கும் சென்று பலரிடமும் பேசினோம். மோடி தனக்கு 18 வயது இருக்கும்போதே, அந்தக் கிராமத்தை விட்டு வெளியேறி, அகமதாபாத் சென்று ஆர்.எஸ்.எஸ். இயக்கத்தில் இணைந்துவிட்டார். அதனால், அந்தக் கிராமத்தில் நாம் சந்தித்த பலரும் மோடியின் சகோதரர்கள் பற்றி பேசிய அளவுக்கு, அவரது மனைவி குறித்து பேசவில்லை. அவரது மனைவியின் பெயர் யசோதா பென். தன் சகோதரதோடு சொந்த ஊரான டோளக்காவில் வசிக்கிறார் என்பதோடு நிறுத்திக்கொண்டார்கள். டோளக்காவிலும் அகமதாபாத்திலும் இருக்கும் பலரிடம் பேசியபோது அவர்கள் சொன்னது இதுதான்... ''மோடி  சமூகத்தில் பின்தங்கிய வகுப்பில் பிறந்தவர். 40 வருடங்களுக்கு முன்பு, இதுபோன்ற கிராமத்தைச் சேர்ந்த பின்தங்கிய சமூகம் எந்த அளவு பழைமையில் இருந்திருக்கும் என்பதையும் நினைத்துப்பாருங்கள். அப்போது அந்த சமூக வழக்கப்படி 17 வயதே ஆன மோடிக்கும் அதைவிட குறைவான வயதுகொண்ட யசோதா பென்னுக்கும் அவர்கள் பெற்றோர்கள் திருமணம் செய்துவிட்டார்கள். திருமணம் ஆனாலும், அந்த ஊர் வழக்கப்படி சிறுவயதில் திருமணமான இருவரும் உடனடியாக சேர்ந்து வாழ அனுமதிக்கப்படவில்லை. யசோதா பென் அப்போது எட்டாம் வகுப்பு வரைதான் படித்திருந்தார் என்பதால், அவர் மேற்கொண்டு படிப்பதற்காக தன் அப்பாவின் கிராமத்துக்கே சென்றுவிட்டார். ஆர்.எஸ்.எஸ். இயக்கத்தால் ஈர்க்கப்பட்ட மோடி, அகமதாபாத் சென்று அந்த அலுவலகத்தையே தன் வீடாக மாற்றிக்கொண்டார்.

ஆர்.எஸ்.எஸ். இயக்கத்துக்குச் சென்ற பிறகு, தன் வீட்டுக்கு வருவதையேகூட மோடி மறந்துவிட்டார். இன்னொருபுறம் யசோதா பென், சொந்த கிராமத்தில் 1972-ம் ஆண்டு எஸ்.எஸ்.எல்.சி. முடித்துவிட்டு, ஆசிரியர் பயிற்சி வகுப்பில் சேர்ந்து அதிலும் தேர்ச்சி பெற்றார். இதையடுத்து அவர் அகமதபாத்தில் இருக்கும் ஒரு ஆரம்பப் பள்ளியில் ஆசிரியராகப் பணிபுரிந்தார். மூன்றே மாதங்களில் பானஸ்கந்தா மாவட்டத்தில் இருக்கும் தேக்வாலி கிராமத்தில் இருக்கும் பள்ளிக்கூடத்துக்கு மாற்றலாகிச் சென்றுவிட்டார்'' என்றார்கள்.

நான்கு ஆண்டுகளுக்கு முன்பு அதாவது யசோதா பென் பணியில் இருந்து ஓய்வு பெறுவதற்கு ஒரு சில மாதங்களுக்கு முன்பு 'ஓபன் மேகஸின்’ பத்திரிகையின் நிருபர் ஒருவர் யசோதா பென் பணியாற்றிவந்த பள்ளிக்கூடத்துக்கே சென்றி​ருக்கிறார். மோடியின் பெயரைச் சொன்னதுமே யசோதா பென்னின் முகத்தில் அப்படி ஒரு பூரிப்பும் மகிழ்ச்சியும் வந்ததாக எழுதி​யிருக்​கிறார் அந்த நிருபர். யசோதா பென்னுடன் மேற்கொண்டு பேசுவதற்கு, பள்ளியின் தலைமை ஆசிரியர் அனுமதி தரவில்லை. அத்துடன் யாருக்கோ அவர் போன் செய்ய, அந்தப் பள்ளிக்கூடத்துக்கு விரைந்த வந்த சிலர், யசோதா பென்னை ஆட்டோவில் வைத்து ஒரு சில கிலோ மீட்டர்கள் தள்ளியிருக்கும் பிரஹமன்வாதா என்ற ஊருக்கு அனுப்பிவிட்டார்களாம். அங்குதான் யசோதாவின் சகோதரர் நடத்தும் மளிகைக் கடை உள்ளது.

இஸ்லாமிய மக்கள் பெரும்பான்மையாக வசிக்கும் அந்த ஊரில், நல்ல ஆசிரியர் என்று பெயர் சம்பாதித்து இருக்கிறார் யசோதா. 'சரி, மோடிதான் இப்போது யசோதா பென்னைத் தன் மனைவி என்று ஊரறிய உலகறிய அறிவித்துவிட்டாரே... இப்போது அவர் எங்கே இருக்கிறார்?’ என்று கேட்டால், பணியில் இருந்து ஓய்வு பெற்றுவிட்ட அவர், தன் கணவர் பிரதமராக வேண்டும் என்ற வேண்டுதலோடு புனிதப் பயணம் மேற்கொண்டிருப்பதாக அந்தக் கிராமத்தைச் சேர்ந்தவர்கள் சொல்கிறார்கள். தன் கணவரிடம் இருந்து யசோதா வேறு எதையும் எதிர்பார்க்கவில்லை. தன்னை அவரது மனைவி என்று மோடி சொல்ல வேண்டும் என்பதுதான் அவரது ஒரே பிரார்த்தனை. 'இதுபோதும் எனக்கு! என் பிரார்த்தனை நிறைவேறிவிட்டது’ என்று மகிழ்ச்சியில் இருக்கிறார் யசோதா பென்.

ஊன்ஜா என்ற கிராமத்தில் மளிகைக் கடை நடத்திவரும் மோடியின் அண்ணனான கம்லேஷ் மோடி, ''இந்தத் திருமணத்தை இந்தக் காலக்கட்டத்தில் இன்றைய கோணத்தில் இருந்து தயவுசெய்து பார்க்காதீர்கள். இந்தத் திருமணம் நடந்து 40 - 45 ஆண்டுகள் ஆகின்றன. நாகரிகம் எட்டிப்பார்க்காத ஒரு காலத்தில், ஒரு கிராமத்தில், பிற்படுத்தப்பட்ட சமூகத்தில் நடந்த திருமணம் இது'' என்று சொல்லியிருக்கிறார்.

நரேந்திர மோடியைப் பற்றி, 'தி மேன் ஆஃப் தி மொமன்ட்’ என்ற புத்தகத்தை எழுதியிருக்கும் காலிந்தி என்ற எழுத்தாளர், இந்தத் திருமணம் குறித்து ஒரு சமயம் மோடியிடமே விவாதித்திருக்கிறார். அப்போது மோடி, ''என்னுடைய சோம்பாயிடம் இதைப்பற்றி கேளுங்கள்!’ என்று சொன்னாராம். அந்த சோம்பாய்தான் இப்போது பேசியிருக்கும் மோடியின் அண்ணன் கம்லேஷ்

'இதற்கு முந்தைய தேர்தல்களில் தனது மனைவியின் பெயரை மோடி மறைத்து இருக்கிறாரே?’ என்று பத்திரிகையாளர்கள் கேள்வி எழுப்ப, 'வேட்புமனுவில் தவறான தகவலைச் சொல்லியது தொடர்பாக தொடரப்பட்ட வழக்கில் சுப்ரீம் கோர்ட் தீர்ப்பு ஒன்றை வழங்கியிருக்கிறது. அதோடு, தேர்தல் சட்ட விதிகளையும் கணக்கில் எடுத்துக்கொண்டு இந்த விவகாரத்தில் தேர்தல் கமிஷன் நடவடிக்கை எடுக்கும்’ என்று சொல்லியிருக்கிறார் தலைமை தேர்தல் கமிஷனர் சம்பத். இந்த விவகாரத்தில் இருந்து எப்படி மீளப்போகிறார் மோடி?

- வேல்ஸ்

Election bannerElection banner
அடுத்த கட்டுரைக்கு