Published:Updated:

விறுவிறு விருதுநகர்!

விறுவிறு விருதுநகர்!

பிரீமியம் ஸ்டோரி

வைகோ போட்டியிடும் தொகுதி என்பதால் ஒட்டுமொத்தமாக அனைவரையும் திரும்பிப் பார்க்க வைத்துள்ளது விருதுநகர். க்ளைமாக்ஸுக்கான நேரம் நெருங்கிவிட்ட நிலையில், விருதுநகர் தொகுதியை விறுவிறு வலம் வந்தோம்.

பி.ஜே.பி. கூட்டணி

தமிழகம் அறிந்த தலைவர் வைகோவுக்கு தொகுதியில் அறிமுகம் தேவையில்லை. அது அவரது முதல் ப்ளஸ். சிவகாசி பட்டாசு தொழிலதிபர்கள், தொழிலாளர்கள் வைகோவுக்கு ஆதரவான நிலையை எடுத்திருப்பதாகச் சொல்கிறார்கள். சிவகாசியைச் சுற்றி 700 பட்டாசு ஆலைகள் இயங்கி வருகின்றன. ஒன்றரை லட்சம் தொழிலாளர்களின் குடும்பங்களுக்கு வாழ்வாதாரமே இந்தப் பட்டாசு தொழில்தான். பட்டாசு ஆலைகளில் நடந்த விபத்துக்கள் காரணமாக மத்திய, மாநில அரசு அதிகாரிகளின் கெடுபிடியால் பட்டாசு தொழில் பாதிப்படைந்துள்ளது. இதுதவிர சீனப் பட்டாசு இறக்குமதியால் நலிவைச் சந்திக்கத் தொடங்கியுள்ளது பட்டாசு தொழில். எனவே மத்திய, மாநில அரசுகளைக் கண்டித்து பட்டாசு ஆலைகள் காலவரையறை இன்றி மூடப்பட்டுள்ளன. ''மத்தியில் பி.ஜே.பி. தலைமையில் ஆட்சி அமைந்து, வைகோ எம்.பி-யானால் பட்டாசு தொழில் பாதுகாக்கப்படும். அதனால், நாங்கள் வைகோவுக்கு ஆதரவு நிலை எடுத்துள்ளோம்'' என்று பட்டாசு ஆலை அதிபர்கள் சொல்கிறார்கள்.

விறுவிறு விருதுநகர்!

வைகோ ஏற்கெனவே எம்.பி-யாக இருந்தபோது இலவச மஞ்சள் காமாலை தடுப்பு ஊசி முகாம், இலவச ஊனமுற்றோர் அறுவை சிகிச்சை முகாம் ஆகியற்றை நடத்தினார். மேலும் பல்வேறு திட்டங்கள் இங்கு கொண்டுவர வி.ஐ.பி. வேட்பாளர் தேவை என்றும் மக்கள் நினைக்கிறார்கள்.

அவருக்காக இணையத்தள நண்பர்கள் என்ற பெயரில் இளைஞர்கள் வலம் வருகிறார்கள். ஒருநாள் முழுக்க விஜயகாந்த் இங்கு வந்து பிரசாரம் செய்தார். சிலருக்குக் குறிப்பிட்ட சமூக ஓட்டு மட்டும் கிடைக்கும். வைகோவுக்கு அனைத்துச் சமூகத்தவர்களின் வாக்குகளும் விழும்.  

அ.தி.மு.க.

அ.தி.மு.க. வேட்பாளர் ராதாகிருஷ்ணன், சிவகாசியைத் தாண்டி வெளியே அறிமுகம் இல்லாதவர். சிவகாசி நகரிலும் ராதாகிருஷ்ணன் மீது நிறையவே அதிருப்தி இருக்கிறது. சிவகாசியைச் சேர்ந்த தொழிலதிபர்கள் மட்டுமே இடம்பெறக் கூடிய சிவகாசி அச்சகத் தொழில் கூட்டுறவு சங்கத் தேர்தலில், கடந்த முறை அ.தி.மு.க-வினர் உள்ளே நுழைந்து அடிதடி நடத்தி, அந்தப் பதவிகளைக் கைப்பற்றியதால், ஆளுங்கட்சியினர் மீதான  கோபம் சிவகாசி பகுதியில் அனலாகக் கொதிக்கிறது. அதுபோல் விருதுநகர் மாவட்டத்தில் நிலவும் அ.தி.மு.க-வின் கோஷ்டிப்பூசல்களும் வேட்பாளருக்கு மைனஸ்தான்.

தி.மு.க. கூட்டணி

தி.மு.க. களமிறக்கி இருக்கும் தொழிலதிபர் ரத்தினவேலு, நாடார் சமுதாயத்தைச் சேர்ந்தவர். இவருக்கு சொந்த ஊர் சிவகாசி என்றாலும், இப்போது இருப்பது மதுரையில். வர்த்தக சங்கத் தலைவரான அவருக்கு விருதுநகரில் தொழிலதிபர்கள் பலரும் நெருக்கம். நாடார் இனத்தைச் சேர்ந்தவர் என்பதால், ரத்தினவேலு வெற்றி பெற்றுவிடுவார் என்று கணக்கு போடுகிறார் மாவட்ட செயலாளரான முன்னாள் அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன்.

ஆனால், பாரம்பரிய தி.மு.க-வினர், வேட்பாளர் ரத்தினவேலுவை இறக்குமதி வேட்பாளராகவே

விறுவிறு விருதுநகர்!

பார்க்கின்றனர். அதேபோல், ராமச்சந்திரனின் தன்னிச்சையான நடவடிக்கைகளால் இவர்கள் கோபத்தை வெளிக்காட்டாமல் அமைதியாக இருக்கிறார்கள். 'பெரிய தொழிலதிபரான இவர் வெற்றிபெற்றால் சமானியர்களால் இவரைப் பார்க்க முடியாது’ என்று எதிர் பிரசாரம் செய்கின்றனர்.

'விருதுநகர் தொகுதியில் ஒரு வியாபாரியை வேட்பாளர் ஆக்கியிருக்கின்றனர் தி.மு.க-வினர். ரெண்டு வியாபாரிகள்தான் கட்சியைக் கெடுத்து வருகின்றனர்’ என்று தி.மு.க-வை சேர்ந்த முன்னாள் அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆரை வசைபாடி இருந்தார் மு.க.அழகிரி. அதோடு விருதுநகர் தொகுதியில் போட்டியிடும் வைகோ, மு.க.அழகிரியைச் சந்தித்தது தி.மு.க. தலைமையைக் கோபப்பட வைத்துள்ளது. எனவே இந்தத் தேர்தலில் வைகோவை எப்படியாவது தோற்கடிக்க வேண்டும் என்ற ஸ்பெஷல் அசைன்மென்ட்டுடன் வேலைசெய்து வருகிறார் அவர். 'அ.தி.மு.க. ஜெயித்தாலும் பரவாயில்லை, வைகோ ஜெயித்துவிடக் கூடாது’ என்று சொல்லிவருகிறார்கள் ராமச்சந்திரனின் ஆட்கள்.

மேலும், ரத்தினவேல் பற்றி ஏரியாவில் நிறைய சந்தேகங்கள் உள்ளன. அனைத்துக் கட்சியினருடனும் நட்பு கொண்ட தொழில் அதிபராக இருந்த ரத்தினவேல், தி.மு.க-வில் சேர்ந்து விருதுநகர் வேட்பாளர் ஆனதை பலரும் ஆச்சர்யத்துடன் பார்க்கிறார்கள்.

''ரத்தினவேலின் தொழில் தொடர்புகள் இலங்கை வரைக்கும் உள்ளது. யாழ்ப்பாணத்தில் நடந்த வர்த்தகக் கண்காட்சியில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவுடன் கலந்துகொண்டார். சுமார் ஒன்றரை ஆண்டுகளுக்கு முன்பு தமிழகத்துக்கு சுற்றுலா பயணிகளாக வந்த ஒரு சிலர் தாக்கப்பட்டதாக செய்திகள் வெளியாகின. அந்த நிலையில் தமிழ்நாடு தொழில் வர்த்தக சங்கத்தைச் சேர்ந்த ரத்தினவேல், 'இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையே மூவாயிரம் கோடி ரூபாய் அளவுக்கு பலமான வர்த்தக உறவு நிலவி வருகிறது. இலங்கையில் முதலீடு செய்திருக்கும் நாடுகளை வரிசைப்படுத்தினால், அதிலும் நமது நாடு நான்காவதாகவே இருக்கிறது. இலங்கை மக்கள் சுற்றுலா செல்லும் நாடுகளை வரிசைப்படுத்தினால், அதிலும் இந்தியாதான் இரண்டாவது   இடத்தில் இருக்கிறது. ஆகையால், இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையேயான வர்த்தகத்தை பாதிக்கும் எந்தவிதமான செயல்களையும் யாரும் செய்யக் கூடாது’ என்று அறிக்கை விட்டார். இப்படிப்பட்டவர் திடீரென இங்கே வேட்பாளராகக் களம் இறக்கப்பட்டதன் பின்னணியில் வேறு யாரோ இருக்கிறார்கள். இது தி.மு.க. தலைமைக்கே தெரியாத ரகசியம்'' என்றும் சிலர் சொல்கிறார்கள்.

'இதை வைத்துத்தான் என்னை வீழ்த்த ராஜபக்ஷே சதி’ என்று வைகோ சொல்லி வருவதாகச் சொல்கிறார்கள்.!

காங்கிரஸ்

கடந்த முறை வைகோவைத் தோற்கடித்த  மாணிக்கம் தாகூர், இந்த முறை இதே தொகுதியில் போட்டியிடுகிறார். கடந்த தேர்தலில் வெளியூர்காரராக இறக்குமதி செய்யப்பட்டவர் இவர். தேர்தல் பிரசாரத்தில், 'மகாத்மா காந்தி ஊரக வேலைவாய்ப்புத் திட்டத்தில் இப்போது 140 ரூபாய் சம்பளம் தருகிறார்கள். காங்கிரஸுக்கு ஓட்டுப்போட்டால் அதை சோனியா அம்மா அந்தச் சம்பளத்தை 200 ரூபாயாக  உயர்த்துவார்கள்’ என்று சொல்லி ஓட்டு கேட்கிறார். 'வேறு யாருக்கும் ஓட்டு போட்டால் அந்தத் திட்டத்தை நிறுத்திவிடுவார்கள்’ என்று அதிர்ச்சி கொடுக்கிறார்.

எம்.பி. என்ற முறையில் விருதுநகர் தொகுதியில் செய்த நலத்திட்ட உதவிகள் மற்றும் மாணவர்களுக்குக் கல்விக்கடன் வழங்கியது ஆகியவற்றைச் சொல்லிவருகிறார். முக்குலத்தோரான இவர், தனது இனத்தில் இருந்து கணிசமான வாக்குகள் வாங்கிவிடலாம் என்றும் தாழ்த்தப்பட்ட மக்களிடையே அவருக்குள்ள நட்பு உறவு இந்த தேர்தலில் கை கொடுக்கும் என்றும் நம்புகிறார்.

காங்கிரஸ் கட்சிக்கு எதிரான அலை, இலங்கை பிரச்னை மற்றும் எம்.பி-யாக இருந்தபோது விருதுநகருக்குப் பெரிய அளவில் தொழில் திட்டங்கள் எதுவும் கொண்டுவராதது போன்றவை இவருக்கு மைனஸ் பாயின்ட்கள். இவர்  வாங்கும் ஓட்டுக்கள் வெற்றி, தோல்வியை நிர்ணயிக்கும் அளவுக்கு இருக்கும் என்று நம்புகின்றனர் அனைத்து கட்சியினரும்.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்.

விருதுநகர் தொகுதியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளராகப் போட்டியிடுபவர் சாமுவேல்ராஜ். தீப்பெட்டி மற்றும் பட்டாசு தொழிற்சாலைகள் நிறைந்த இந்தத் தொகுதியில் கம்யூனிஸ்ட் கட்சிகளுக்கு ஓரளவுக்கு செல்வாக்கு உண்டு. தீண்டாமை ஒழிப்பு உள்பட பல்வேறு சமூகப் பிரச்னைகளை முன்னெடுத்துப் போராடும் கம்யூனிஸ்ட் கட்சி, அதில் தீவிரமாகப் களப்பணி ஆற்றிய சாமுவேல்ராஜை களம் இறக்கியுள்ளது. தாழ்த்தப்பட்ட பிரிவைச் சேர்ந்த சாமுவேல்ராஜுக்கு கம்யூனிஸ்ட் கட்சியினர் மத்தியில் நல்ல அறிமுகம் இருக்கிறது. 'மதுரை- நாகர்கோவில் வரை இரட்டை ரயில் பாதை அமைக்க நடவடிக்கை எடுப்பேன். விருதுநகரில் அரசு மருத்துவக் கல்லு£ரி அமைக்க நடவடிக்கை எடுப்பேன்’ என்று ஓட்டு கேட்கிறார். கம்யூனிஸ்ட்கள், தலித்கள் ஓட்டுக்களை நம்பிக் களம் இறங்கியுள்ளனர்.

- எம்.கார்த்தி

படங்கள்: ஆர்.எம்.முத்துராஜ்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு