Published:Updated:

ஜரூர் கரூர்

வாக்குகளைப் பெற்றுத்தருமா ஜோதிமணியின் எளிமை?

பிரீமியம் ஸ்டோரி

''தேர்தல் செலவுக்கு என் கையில் 2,500 ரூபாய் மட்டுமே இருக்குது. கட்சித் தலைமை என்னை வேட்பாளரா அறிவிச்சுட்டாங்க. அதனால, தேர்தல்ல நிற்கிறேன். இப்போதைக்கு நீங்கதான் காசு செலவு பண்ணி என்னை ஜெயிக்க வைக்கணும்'' - கரன்சியை வாரி இறைக்கும் வேட்பாளர்களுக்கு மத்தியில், வேட்பாளர் அறிமுகக் கூட்டத்திலேயே தடாலடியாக இப்படி அறிவித்தவர், கரூர் காங்கிரஸ் வேட்பாளரும், மகிளா காங்கிரஸ் தேசிய பொதுச்செயலாளருமான ஜோதிமணி!

சுறுசுறுப்பாக சிரித்த முகத்தோடு கரூர் தொகுதிக்குள் வலம்வரும் ஜோதிமணிக்கு,  பல இடங்களில் தேர்தல் செலவுக்காக மக்கள் பணம் கொடுப்பதைப் பார்க்க முடிகிறது. இளைஞர்கள், பெண்கள் உள்ளிட்டோரை மையப்படுத்திய ஜோதிமணியின் பிரசாரம், மக்களிடம் உரிமையை எடுத்துக்கூறும் வகுப்பறையாகவே இருக்கிறது.

ஜரூர் கரூர்

மூத்த காங்கிரஸ் தொண்டர்கள் துணையோடு பிரசாரத்துக்குப் புறப்படுகிறார் ஜோதிமணி. ஊருக்குள் நுழைந்ததும் கண்ணில் தென்படும் இளைஞர்கள், குழந்தைகள், பெண்கள் என தனித்தனியே சந்திக்கிறார். இளைஞர்களிடம் 'என்ன படிக்கிறீங்க? அப்பா, அம்மா என்ன செய்றாங்க?’ என நலம் விசாரிக்கிறார். 'காலேஜ் படிக்கிறேன்’ என்று பதில் வந்தால், 'கல்விக்கடன் வாங்கியிருக்கீங்களா?’ எனக் கேட்கிறார். 'வாங்கியிருக்கேன்’ என்பவர்களை விட்டுவிட்டு, 'பேங்க் மேனேஜர்ஸ் லோன் தர மாட்டேங்குறார்’ எனச் சொல்பவர்களுக்கு, கல்விக்கடன் பெறுவது குறித்த வழிமுறைகளை விளக்குகிறார். அடுத்து குழந்தைகளிடம், 'நீங்க என்ன படிக்கணும்னு ஆசைப்படுறீங்க?’ எனக் கேட்டுத் தெரிந்துகொள்கிறார்.  

அப்படியே பெண்களைச் சந்திக்கும் ஜோதிமணி, '100 நாள் வேலைத்திட்டம்  உங்களுக்குப் பயனுள்ளதா இருக்குதா? 5 கிலோ மீட்டருக்குத் தொலைவா உங்களுக்கு வேலை கொடுத்தா பஸ் சார்ஜ் கொடுக்கணும்னு சட்டம் சொல்லுது’ என 100 நாள் வேலை திட்டத்தைப் பற்றி பேசுகிறார். தொடர்ந்து, 'இந்தத் திட்டத்தை யார் கொடுத்தாங்கன்னு தெரியுமா?’ எனக் கேட்டுவிட்டு, 'சோனியா காந்தியம்மா’ என்று அவரே பதில் சொல்கிறார். 'மீண்டும் உங்களுக்கு இந்தத் திட்டம் வேணும்னு நினைக்கிறீங்களா... இல்லை, வேணாம்னு நினைக்கிறீங்களா?’ எனக் கேட்கிறார். 'வேண்டும்’ என்று மக்களிடம் இருந்து பதில்கள் வருகிறது. பின்னர், மத்திய அரசு கொண்டுவந்த திட்டங்கள் பற்றியும் மக்கள் பிரச்னைகளுக்காகத் தான் நடத்திய போராட்டங்கள் பற்றியும் மைக்கில் விரிவாகப் பேசுகிறார்.

ஊரை விட்டுக் கிளம்பும் முன் குழந்தைகளைப் பார்த்து 'அம்மா, அப்பாகிட்ட ஜோதிமணி அக்கா வந்தேன்னு சொல்லி, கை சின்னத்துக்கு ஓட்டுப் போடச் சொல்லுங்க’ என்று சிரித்த முகத்தோடுச் சொல்லிவிட்டு, சுறுசுறுப்பாக அடுத்த ஊருக்குப் பயணப்படுகிறார்.

ஜோதிமணியின் எளிமையும், சிரித்த முகமும் ஓட்டுக்களாக மாறுமா?

- சி.ஆனந்தகுமார், படம்: என்.ஜி.மணிகண்டன்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு