Published:Updated:

மிஸ்டர் கழுகு: அ.தி.மு.க. Vs பி.ஜே.பி.!

மிஸ்டர் கழுகு: அ.தி.மு.க. Vs பி.ஜே.பி.!

பிரீமியம் ஸ்டோரி

''மோடியா, லேடியா என்ற மோதல் ஆரம்பம் ஆகிவிட்டது!'' என்றபடி கழுகார் உள்ளே வந்தார். நம்மைப் பேசவிடாமல் அவரே ஆரம்பித்தார்.

மிஸ்டர் கழுகு: அ.தி.மு.க. Vs பி.ஜே.பி.!

''பி.ஜே.பி. எதை எதிர்பார்த்ததோ அது நடந்துவிட்டது. ஜெயலலிதாவும் கருணாநிதியும் தங்களை விமர்சித்துப் பேச ஆரம்பித்தால்தான் எதிர் பிரசாரம் செய்ய வசதியாக இருக்கும் என்று பி.ஜே.பி. தலைவர்கள் சொல்லிக்கொண்டார்கள். இதுவரை காங்கிரஸை மட்டுமே விமர்சித்துவந்த ஜெயலலிதா, மோடி- ரஜினி சந்திப்புக்குப் பிறகு பி.ஜே.பி-யையும் திட்ட ஆரம்பித்தார். 'காவிரிப் பிரச்னையில் தமிழகத்துக்கு, கர்நாடகாவை ஆண்ட காங்கிரஸ் அரசும் துரோகம் செய்தது; பி.ஜே.பி. அரசும் துரோகம் செய்தது. பி.ஜே.பி-யின் தேர்தல் அறிக்கையில் காவிரி பிரச்னை பற்றி எதுவும் சொல்லவில்லை. அதுபற்றி வைகோவும் ராமதாஸும் ஏன் கருத்துச் சொல்லவில்லை. தமிழ்நாட்டில் பி.ஜே.பி-யும் காங்கிரஸும் ஆட்சிக்கு வரவே முடியாது. மத்தியில் இந்த இரு கட்சிகளும் ஆட்சிக்கு வந்தாலும் நமக்கு பயன் இல்லை. இந்த இரண்டு கட்சிகளையும் டெபாசிட் இழக்கச் செய்யுங்கள்’ என்று பகிரங்கமாகச் சொல்லியிருக்கிறார். 'தி.மு.க-வும் அ.தி.மு.க-வும் மாறி மாறி ஆட்சிக்கு வந்து ஒருவரை ஒருவர் பழிவாங்கினார்களே தவிர, மக்களுக்கு எதுவும் செய்யவில்லை. அவர்கள் இந்த தீய விளையாட்டை உடனடியாக நிறுத்த வேண்டும்’ என்று மோடி சொன்னதும் முதல்வரைக் கோபப்பட வைத்துள்ளது. 'இந்தியாவுக்கே வழிகாட்டியாக இருப்பது தமிழகம்தான்’ என்று பதில் அளித்த ஜெயலலிதா, பல்வேறு புள்ளிவிவரங்களைச் சொல்லி, குஜராத்தைவிட தமிழகம் முன்னேறிய மாநிலம் என்று சொல்லியிருக்கிறார்!''

''சபாஷ் சரியான போட்டிதான்!''

''மோடி பெயரையே சொல்லாமல், 'குஜராத் முன்னேறி இருப்பதாகச் சொல்வது மாயத்தோற்றம். அது உண்மை அல்ல. குஜராத் விளம்பரப்படுத்திக்கொள்கிறது. தமிழ்நாடு விளம்பரப்படுத்திக்கொள்வது இல்லை. வெற்றுப்பேச்சு, விளம்பர வெளிச்சம் ஆகியவை குஜராத் அரசிடம் உள்ளது. ஆனால், மக்கள் சேவை ஒன்றையே சிந்தனையாகக் கொண்டு செயல்பட்டு வருகிறோம்’ என்று சொல்லிவிட்டார். இப்படி நேருக்கு நேர் மோதலாக இது மாறிவிட்டது!''

''சொல்லும்!''

மிஸ்டர் கழுகு: அ.தி.மு.க. Vs பி.ஜே.பி.!

''இதுவரை அ.தி.மு.க. - தி.மு.க. மோதலாக இருந்த தமிழகத் தேர்தல் களம், கடந்த ஒரு வாரமாக அ.தி.மு.க. - பி.ஜே.பி. மோதலாக மாறிக்கொண்டு இருக்கிறது. இந்தத் தகவல் ஜெயலலிதாவுக்கு வருத்தம் கொடுத்துள்ளது. 'பி.ஜே.பி-க்கு வாக்குகள் கூடுகிறது என்றால், அது அ.தி.மு.க-வில் இருந்து குறையும் வாக்குகள் அல்லது அ.தி.மு.க-வுக்கு வரவேண்டிய வாக்குகள். இதன் மூலமாக தி.மு.க. லாபம் அடையும்’ என்று ஜெயலலிதா நினைக்கிறார்.''

''இப்படி மாறியதற்கு என்ன காரணம்?''

''ரஜினி - மோடி சந்திப்பு, நடிகர் விஜய் - மோடி சந்திப்பு, தமிழகத்துக்கு மூன்று நாட்கள் வந்து ஏழு ஊர்களில் மோடி பேசியது ஆகியவைதான் இதற்குக் காரணம் என்கிறார்கள். வியாழக்கிழமையுடன் ஜெயலலிதாவும் கருணாநிதியும் தங்களது வெளியூர் பிரசாரத்தை முடித்துவிடுகிறார்கள். ஆனால் அத்வானி, ராஜ்நாத் சிங், வெங்கையா நாயுடு, முக்தார் அப்பாஸ் நக்வீ போன்ற பி.ஜே.பி. தலைவர்கள் இனிதான் வரப்போகிறார்கள். இதுவரை தமிழகப் பிரச்னைகளை மட்டும் சொல்லி பிரசாரம் செய்துவந்த கருணாநிதியும் ஜெயலலிதாவும், இப்போதுதான் டெல்லி அரசியலையும் நரேந்திர மோடி பற்றியும் பேச ஆரம்பித்துள்ளார்கள். இது நாடாளுமன்றத் தேர்தல் என்பதை வாக்காளர்கள் மனதில் உருவாக்கி உள்ளது. ஆனாலும், முதல்வர் தைரியமாக இருக்கிறார். 'நிச்சயம் 32 தொகுதிகளை நாம் கைப்பற்றுவோம், எனக்கு நம்பிக்கை இருக்கிறது’ என்று மம்தாவிடம் சொன்னதாகச் சொல்கிறார்கள்.''

''அவர் கணக்கு அதுதானா?''

''ஆமாம்! கட்சிகள் வைத்துள்ள கணக்கைச் சொல்லிவிடுகிறேன். அ.தி.மு.க. 30 தொகுதிகளைக் கைப்பற்றும் என்பது முதல்வரின் நம்பிக்கை. 10 தொகுதிகளைத் தாண்டிவிடுவோம் என்பது ஸ்டாலின் எண்ணம். பி.ஜே.பி. கூட்டணியும், தங்களுக்கு 10 தொகுதிகளுக்கு மேல் கிடைத்துவிடும் என்ற நம்பிக்கையுடன் சொல்கிறது!''

''அவர்கள் சொல்லும் தொகுதிகள் என்னென்ன?''

''கன்னியாகுமரி, கோவை, தென் சென்னை ஆகிய தொகுதிகள் பி.ஜே.பி-க்கும், தர்மபுரி, கிருஷ்ணகிரி, ஆரணி ஆகிய தொகுதிகள் பா.ம.க-வுக்கும் கள்ளக்குறிச்சி, திருப்பூர் ஆகிய தொகுதிகள் தே.மு.தி.க-வுக்கும் விருதுநகர், தென்காசி, ஈரோடு ஆகியவை ம.தி.மு.க-வுக்கும் சாதகமாகச் சொல்லப்படுகின்றன. வேலூரில் ஏ.சி.சண்முகம் நம்பிக்கையுடன் இருக்கிறார். தி.மு.க-வைப் பொறுத்தவரை மத்திய சென்னை, நாகப்பட்டினம், சேலம், கரூர், திண்டுக்கல், திருநெல்வேலி போன்ற தொகுதிகள் வாய்ப்பு உள்ளவையாகச் சொல்லப்படுகின்றன.''

''காங்கிரஸ்?''

''கன்னியாகுமரியையும் புதுச்சேரியையும் காங்கிரஸ் கட்சி அதிகமாக நம்புகிறது. இரண்டு தொகுதிகளில் நிச்சயம் ஜெயிப்போம் என்கிறார்கள். தேனி, சிவகங்கை, மயிலாடுதுறை, திருப்பூர், கிருஷ்ணகிரி, திருச்சி ஆகிய தொகுதிகளில் கணிசமான வாக்குகளை காங்கிரஸ் வேட்பாளர்கள் வாங்குவார்கள் என்கிறார்கள்.''

''ஆனால், ஒரே ஒரு கூட்டம் மட்டும் பேசிவிட்டுப் போய்விட்டாரே சோனியா?''

''ஒரே ஒரு கூட்டம் மட்டும் பேசிவிட்டு சோனியா போய்விட்டது காங்கிரஸ் கட்சியினருக்கு வருத்தம்தான்! டெல்லியில் இருந்து விமானம் மூலம் திருவனந்தபுரத்துக்கு வந்தார் சோனியா. அங்கு இருந்து ஹெலிகாப்டர் மூலம் கன்னியாகுமரி அரசு விருந்தினர் மாளிகைக்கு வந்தார். பின்னர் காரில் பிரசார மேடை அமைக்கப்பட்டுள்ள முருகன்குன்றம் பகுதிக்கு வந்தார். முருகன்குன்றம் பகுதியில் காலையில் இருந்தே காங்கிரஸ் ஆதரவாளர்கள் குவியத் தொடங்கினர். தமிழக காங்கிரஸ் கட்சியின் 39 வேட்பாளர்களும் ஆஜராகி இருந்தனர். பாதுகாப்பு ஏற்பாடுகள் கடுமையாகச் செய்யப்பட்டு இருந்தது!''

''அப்படியா?''

''குமரி, நெல்லை, விருதுநகர், சிவகங்கை மாவட்டத்தைச் சேர்ந்த சுமார் 2,000 போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்தனர். கூட்டம் நடக்க இருந்த முருகன்குன்றம் பகுதிக்கு அருகில் இலங்கைத் தமிழர் அகதிகள் முகாம் உள்ளது. அங்குள்ளவர்கள் இரு நாட்கள் முகாமை விட்டு வெளியேறவும் தடை விதிக்கப்பட்டிருந்தது. குண்டு துளைக்காத மேடை அமைக்கப்பட்டு இருந்தது. சோனியா தமிழகத்தில் பேசும் ஒரே ஒரு கூட்டம் இது. அதில்கூட தமிழகத் தலைவர்களான ப.சிதம்பரம், ஜி.கே.வாசன் ஆகியோரை வர வேண்டாம் என்று சொல்லிவிட்டார்களாம். 'தமிழகத்தில் சரியான கூட்டணி அமைக்க இவர்கள் முயற்சிக்கவில்லை என்பதால் சோனியா இவர்கள் மீது கோபமாக இருக்கிறார். அதனால்தான் அவர்களை அழைக்கவில்லை’ என்கிறார்கள்.''

''ஓஹோ!''

''நடிகர் கார்த்திக் 'சிறப்பு’ அழைப்பாளராகக் கலந்துகொண்டார். அவர் பேசி முடித்ததும் பரிதாபமாக மைக் பிடித்த ஞானதேசிகன், 'காலை 8.30-க்கு தொலைக்காட்சி நண்பர்களை உள்ளே வர அனுமதிச்சோம். அப்போது  கூட்டம் இல்லாத சேர்களைக் காட்டி சோனியா காந்தி மீட்டிங்கில் கூட்டம் இல்லைன்னு நியூஸ் போட்டுருகீங்கன்னு எனக்கு சென்னையில இருந்து போன்ல சொல்றாங்க. இப்போ உங்க பின்னாடி நிற்கிற காங்கிரஸ் கூட்டத்தைக் கொஞ்சம் திரும்பிப் பாருங்க. அந்தக் கூட்டத்தையும் தயவுசெஞ்சு காட்டுங்கப்பா’ என்று கேட்டுக்கொண்டார். ஆனாலும், கூட்டம் குறைவுதான்.

'சகோதர சகோதரிகளே வணக்கம்...’ என்று சோனியாவும் தமிழில் தொடங்கினார். மத்திய அரசு செய்த சாதனைகளைப் பட்டியலிட்டவர், 'தமிழகத்தில் உள்ள சில அரசியல் கட்சிகள், இலங்கை தமிழர் நலனுக்காக காங்கிரஸ் ஒன்றுமே செய்யவில்லை என்று சொல்லிவருகிறார்கள். இலங்கை தமிழருக்காக அதிக நன்மைகளை செய்தது காங்கிரஸ்தான். வேறு எந்த அரசாவது இலங்கை தமிழர்கள் நலனில் அக்கறை கொண்டது உண்டா? இலங்கை தமிழர்களுக்காக ரத்தம் சிந்தியவர் ராஜீவ் காந்தி. அதை யாரும் மறுக்க முடியாது. இன்று வரை இலங்கை தமிழர்கள் நலனுக்குப் பல்வேறு உதவிகளை செய்துவருவது காங்கிரஸ்தான். அதை இனியும் தொடர்ந்து செய்வேன். அந்த உதவி தொடரும்’ என்று சொன்னபோது சோனியா அதிகமாகக் குரலை உயர்த்தினார்!''

''ம்!''

மிஸ்டர் கழுகு: அ.தி.மு.க. Vs பி.ஜே.பி.!

''ஒரே ஒரு இடத்தில் சோனியா பேசிச் சென்றது காங்கிரஸ் தலைவர்களுக்கு வருத்தம் அளித்துள்ளது. 'கன்னியாகுமரித் தொகுதியைக் கைப்பற்றும் கட்சிதான் டெல்லியில் ஆட்சி அமைக்கும் என்பது கடந்த காலங்களில் நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தல்களின் ரிசல்ட்கள் உணர்த்தும் அரசியல் சென்டிமென்ட். அதை நன்கு அறிந்த சோனியா, காங்கிரஸின் வெற்றிக்காக, காங்கிரஸ் தொண்டர்கள் அதிகம் உள்ள கன்னியாகுமரித் தொகுதியில் தனது பிரசாரத்தை மேற்கொண்டார். அதனால், குமரித் தொகுதியையும் மற்ற தொகுதிகளையும் காங்கிரஸ் கைப்பற்றி டெல்லியில் ஆட்சி அமைக்கும்’ என்று சொல்லிவருகிறார் கன்னியாகுமரி தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் வசந்தகுமார்.''

''சோனியா நம்பும் சென்டிமென்ட் கை சின்னத்துக்குக் கைகொடுக்குமா?''

''டெல்லி காங்கிரஸ் பிரமுகர்கள் செய்துள்ள காரியத்தைப் பார்த்தால் அப்படித் தெரியவில்லை. 'தேர்தல் பணிச் செலவுகளுக்காக டெல்லி மேலிடத்தில் இருந்து எல்லாத் தொகுதிகளுக்கும் பணம் கொடுத்தார்கள். தொகுதிகளை ஏ,பி என்ற இரண்டு பிரிவாகப் பிரித்து பணம் ஒதுக்கினார்கள். அதிலும் சில டெல்லி நபர்கள் கை வைத்துவிட்டார்கள். கமிஷன் தொகையாகக் கணிசமான பணத்தை எடுத்துவிட்டுத் தந்துள்ளார்கள். கொடுத்த பணமே குறைவானது. இதிலும் எடுத்தால் என்ன ஆவது?’ என்று வேட்பாளர்கள் புலம்புகிறார்கள். இந்தப் பணம் போதாது என்று டெல்லித் தலைமைக்கு கடிதம் அனுப்பினாராம் மாநிலத் தலைவர் ஞானதேசிகன். ஆனால் அவர்கள் அதனைக் கண்டுகொள்ளவில்லையாம். 'வேண்டா விருந்தாளியாகத்தான் தமிழகக் காங்கிரஸை நினைக்கிறார்கள். அப்புறம் எப்படி கட்சியை வளர்க்க முடியும்?’ என்று காங்கிரஸ் பிரமுகர்கள் புலம்புகிறார்கள். இந்நிலையில், வரும் 21-ம் தேதி ராமநாதபுரத்துக்கு வந்து திருநாவுக்கரசரை ஆதரித்து ராகுல் பிரசாரம் செய்யவிருக்கிறாராம். இது காங்கிரஸாருக்கு ஆறுதல் தருவதாக இருக்கிறது.''

''ரஜினி வாய்ஸ் கொடுப்பாரா?''

''அது ரகசியமான ரகசியம்தான். ரஜினியை எப்படியாவது பி.ஜே.பி-க்குள் கொண்டுவருவதற்கான காரியங்கள் இப்போது தொடங்கிவிட்டன. ஆனால், அவர் எந்தப் பிடியும் கொடுக்கவில்லை. நாடாளுமன்றத் தேர்தல் முடிந்த பிறகு தமிழகத்தைக் கணக்கில் வைத்து பி.ஜே.பி. காய் நகர்த்த இருக்கிறது. அதற்கான முஸ்தீபுகளில் ஒன்றுதான் ரஜினி, விஜய் போன்றவர்களை மோடி சந்தித்தது. ரஜினி - மோடி சந்திப்புக்கு முன்னதாக ரஜினி - வைகோ சந்திப்பு நடந்துள்ளது. கடந்த 5-ம் தேதி விருதுநகர் தேர்தல் பிரசாரத்துக்கு வந்த வழக்கறிஞர் ராம் ஜெத்மலானி, வைகோவிடம் ரஜினியைப் பற்றி பேசியிருக்கிறார். 'அவரை பி.ஜே.பி-க்கு ஆதரவாகப் பிரசாரம் செய்யச் சொல்லுங்கள்’ என்று சொல்லியிருக்கிறார். 'இதனை நீங்கள்தான் சொல்ல வேண்டும். அவரைச் சந்தியுங்கள்’ என்று ஜெத்மலானியிடம் வைகோ சொல்ல... 'நான் அவசரமாக டெல்லி செல்ல வேண்டும், கடிதமாக எழுதித் தருகிறேன், அவரிடம் கொடுத்துவிடுங்கள்’ என்று அவர் சொல்லியிருக்கிறார். ராம் ஜெத்மலானியின் சுயசரிதை சமீபத்தில் வெளியாகி உள்ளது. அந்தப் புத்தகத்தையும் தனது கடிதத்தையும் கொடுத்து அனுப்பினார். கடந்த 6-ம் தேதி காலை இந்த சந்திப்பு நடந்துள்ளது. அடுத்து நடந்த மோடி சந்திப்புக்கு இதுவும் ஒரு காரணம் என்கிறார்கள்!''

''விஜய்...?''

''ரஜினியை சந்திக்க வந்த அன்றே விஜய் சந்திப்புக்கும் ஏற்பாடு ஆனது. ஆனால், அன்று ஹைதராபாத்தில் 'கத்தி’ பட ஷூட்டிங்கில் இருந்தார். இரண்டு சந்திப்புகளும் வேறு வேறு நாட்களில் இருந்தால் நல்லது என்று பி.ஜே.பி. நினைத்தது. அதனால், தேதியை மாற்றி கோவைக்கு விஜய்யை வரச் சொன்னார்கள். மோடி தங்கி இருந்த ஹோட்டலில் பக்கத்து அறையிலேயே விஜய்க்கும் அறை போடப்பட்டது. இருவரும் ஏற்கெனவே அறிமுகம் ஆனவர்கள்போலப் பேசிக்கொண்டு இருந்தார்களாம். 'உங்களைப் போன்ற யங் மேன் எங்களுக்குத் தேவை’ என்றாராம் மோடி. விஜய் தனது இறுதி முடிவைச் சொல்லவில்லை. ஏற்கெனவே ராகுலை சந்தித்தவர் விஜய். டெல்லி சென்று அண்ணா ஹஜாரே உண்ணாவிரத்தை வாழ்த்தியவர். இப்போது மோடியைச் சந்தித்துள்ளார். அரசியல் ஆசை விஜய்க்கு வந்துவிட்டது என்பதற்கான சமிக்ஞை இது என்கிறார்கள். ஜெயலலிதாவை எரிச்சல் ஏற்படுத்துவதற்காகவே பார்த்ததுபோல இருக்கிறது'' என்று கிளம்பத் தயாரான கழுகாரிடம், ''அடுத்த இதழ், தேர்தலை முன்னிட்டு செவ்வாய்கிழமையே வெளியாகிறது... தெரியும்தானே?'' என்றோம். தலையாட்டியபடி பறந்தார்!

படங்கள்: சு.குமரேசன்,

க.தனசேகரன், ரா.ராம்குமார்

வைகோவின் வீரபாண்டி பாசம்!

மிஸ்டர் கழுகு: அ.தி.மு.க. Vs பி.ஜே.பி.!

கடந்த 13-ம் தேதி சேலம் தே.மு.தி.க. வேட்பாளர் சுதீஷை ஆதரித்து பிரசாரம் செய்ய வந்தார் வைகோ. அப்போது, 'வீரபாண்டியார் இறப்புக்குப் பிறகு இங்கு அரசியல் நிலை எப்படி இருக்கிறது?’ என்று தனக்கு வேண்டப்பட்டவர்களிடம் விசாரித்தாராம் வைகோ. அதற்கு அவர்கள், ''வீரபாண்டியார் இருக்கும் வரை அவரை மையமாக வைத்தே அரசியல் சுழன்றது. யார் ஆட்சியாக இருந்தாலும், சேலத்தில் அவர் வைப்பதுதான் சட்டம். அதனால், சேலம் தி.மு.க. வலுவாக இருந்தது. ஆனால், இன்று அவர் பெயரைச் சொல்லக்கூட ஸ்டாலின் தயங்குகிறார். ஏற்காடு இடைத்தேர்தலுக்கு நான்கு நாட்கள் சூறாவளி பிரசாரம் செய்தார் ஸ்டாலின். 75 இடங்களில் பேசினார். ஆனால், வீரபாண்டியார் பெயரை ஒருசில இடங்களில் மட்டுமே சொன்னார். இப்போது சேலத்தில் பிரசாரத்துக்கு வந்தபோதும், வீரபாண்டியார் பெயரை ஒரு இடத்தில்கூட ஸ்டாலின் உச்சரிக்கவில்லை. அதனால், வீரபாண்டியாரின் ஆதரவாளர்கள் அதிருப்தியில் இருக்கிறார்கள். சேலம் மாவட்ட தி.மு.க. அலுவலகத்துக்கு வெளியே இருக்கும் வீரபாண்டியார் சிலைக்குக்கூட யாரும் சரியாக மாலை போடுவது இல்லை'' என்று வைகோவிடம் வருத்தத்துடன் சொன்னார்களாம்.

''அதனால் என்ன... நாம போட்டா போச்சு'' என்று சொன்ன வைகோ, மாலையில் பொதுக்கூட்டத்துக்குச் செல்லும் வழியில் வீரபாண்டி ஆறுமுகத்தின் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்திவிட்டுக் கிளம்பினார். பொதுக்கூட்டத்திலும் வீரபாண்டி ஆறுமுகத்தை ஏகத்துக்கும் புகழ்ந்தார் வைகோ.

வைகோவின் இந்த வீரபாண்டி பாசம், சேலம் தி.மு.க-வினரைத் திகைக்க வைத்திருக்கிறது.

மிஸ்டர் கழுகு: அ.தி.மு.க. Vs பி.ஜே.பி.!

பறிபோகும் செல்வகணபதி பதவி!

'ஊழல் வழக்குகளில் தண்டிக்கப்பட்ட எம்.பி., எம்.எல்.ஏ-க்கள் பதவி பறிக்கப்படும்’ என்று ஜூலை 2013-ல் உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்தது. அந்தத் தீர்ப்பில், 'கிரிமினல் மற்றும் ஊழல் வழக்குகளில் தண்டனை பெற்றவர்கள், தேர்தலில் போட்டியிடத் தடை என்று மக்கள் பிரதிநிதித்துவச் சட்டம் சொல்கிறது. அவர்கள் பதவியில் இருக்கும் நேரத்தில், அவர்கள் மீதான குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டு அவர்கள் தண்டிக்கப்பட்டால், உடனடியாக அவர்கள் பதவி பறிக்கப்பட வேண்டும்’ என்று தீர்ப்பளித்தது. அதன்படி, இப்போது, சுடுகாட்டுக் கூரை ஊழல் வழக்கில் சி.பி.ஐ. நீதிமன்றத்தால் இரண்டாண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்ட முன்னாள் அமைச்சர் செல்வகணபதிக்கு சிக்கல். தி.மு.க. சார்பில் ராஜ்யசபா உறுப்பினராக இருக்கும் அவரது பதவி பறிபோய்விடும்.

கடந்த தி.மு.க. ஆட்சிக் காலங்களில் அமைச்சர்களாக இருந்தபோது, வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்தது, முறைகேடான வழிகளில் பணம் ஈட்டியது போன்ற குற்றச்சாட்டுகளுடன் பொன்முடி, சுரேஷ்ராஜன், எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம், கே.என்.நேரு, முன்னாள் மதுரை மாநகர மேயர் பெ.குழந்தைவேலு ஆகியோர் மீதான வழக்குகள் உச்ச நீதிமன்றத்தில் இப்போது நடந்துவருகிறது. அந்த வழக்குகளில் இவர்களுக்கு எதிராகத் தீர்ப்பு வந்தால், அவர்கள் இனிமேல் தேர்தலில் போட்டியிடவே முடியாது.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு