Published:Updated:

குஜராத்தில் ஜூ.வி.!

குஜராத்தில் ஜூ.வி.!

பிரீமியம் ஸ்டோரி
குஜராத்தில் ஜூ.வி.!

உலகம் முழுக்க குஜராத்திகள் பரவி, தொழில் அதிபர்களாக வலம் வந்து பொருளாதார வளர்ச்சிக்கு அடித்தளம் அமைத்து வருகிறார்கள். இந்திய மக்கள் தொகையில் 4.9 சதவிகிதம் பேர்தான் குஜராத்திகள் என்றாலும், இந்தியாவில் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் குஜராத்திகளின் பங்களிப்பு என்பது 7.9 சதவிகிதம் என்பதை வைத்தே குஜராத் மாநில மக்களின் தவிர்க்க முடியாத இடத்தை உணரலாம். தொழில், வர்த்தக முக்கியத்துவம் உள்ள மாநிலமாக அறியப்பட்ட குஜராத்தை அரசியல் முக்கியத்துவம் வாய்ந்த மாநிலமாக மாற்றி அமைத்தவர் நரேந்திர மோடி!

 இந்த மாநிலத்தின் முதல் அமைச்சராக 2001-ம் ஆண்டு அக்டோபர் மாதம் 7-ம் தேதி மோடி பதவி ஏற்றார். இவர் முதல் அமைச்சராகப் பதவி ஏற்ற மூன்றாவது மாதம் நடந்ததுதான் கோத்ரா கோரம். இதில் இருந்து தன் முகத்தை மாற்றுவதற்காக 'கௌரவ் யாத்ரா’ என்ற பயணத்தைத் தொடங்கினார். குஜராத் மக்களைச் சந்திப்பதற்கான பயணம் இது என்று அறிவித்தார்.

குஜராத்தில் ஜூ.வி.!

மீண்டும் மீண்டும் வெற்றி!

'கௌரவ் யாத்ரா’ போய்க்கொண்டு இருந்த காலகட்டத்தில்தான் அக்ஷ்த்ராம் கோயிலில் இரண்டு தீவிரவாதிகள் நுழைந்து தாக்குதல் நடத்தினர். 'இங்கிருந்தபடி பாகிஸ்தான் அதிபர் முஷ்ரஃப்-க்கு சொல்கிறேன். கோழையாக யாரையும் அனுப்பி அப்பாவிகள் மீது தாக்குதல் நடத்தாதே. என்னைக் கொல்வதற்கு அனுப்பு. நான் தைரியமாக எதிர்கொள்வேன்’ என்று மோடி சவால்விட்டு பரபரப்பைக் கிளப்பினார். அந்தத் தேர்தலில், பி.ஜே.பி. கடுமையாகத் தோற்கும் என்று கருத்துக் கணிப்புகள் சொன்னது. ஆனால், மொத்தமுள்ள 182 சட்டமன்றத் தொகுதிகளில் 126 தொகுதிகளை மோடி கைப்பற்றினார். அதன் பிறகு, 'வைபரன்ட் குஜராத்’ என்ற தொழில் முயற்சிகள் தொடங்கப்பட்டன. வெளிநாடு வாழ் இந்தியர்கள், குஜராத்திகளை வலியப் போய் அழைத்தார். 'கோத்ரா முகம்’ தொழில் முகமாக அதன் பிறகு மாற ஆரம்பித்தது. 2007 சட்டமன்றத் தேர்தலில் வெற்றியைப் பெற்றார். அந்தத் தேர்தலில்தான் மோடியை, 'மரண வியாபாரி’ என்று சோனியா சொன்னார். அதன் பிறகு அகில இந்திய பி.ஜே.பி. தலைமையில் மோடிக்கு முக்கியத்துவம் கிடைத்தது. 2012-ல் மீண்டும் குஜராத்தில் சட்டமன்றத் தேர்தல். இந்த முறை மோடி போட்டியிட மாட்டார், அவர் அகில இந்திய அரசியலுக்குத் தாவி விடுவார் என்று சொல்லப்பட்டது. ஆனால், அவரே மீண்டும் நின்றார். வென்றார். நான்காவது முறையாக முதல் அமைச்சராக இப்போதுவரை இருக்கிறார்.

குஜராத்தில் ஜூ.வி.!

அடுத்து யார்?

'மோடி பிரதமராக டெல்லிக்கு போய்விட்டால், அடுத்த குஜராத் முதல் அமைச்சர் யார்?’ என்ற கேள்விக்கு சரியாக அங்கு யாராலும் பதில் சொல்ல முடியவில்லை. ''மோடி தான் குஜராத்; குஜராத் தான் மோடி'' என்பதுதான் அங்குள்ள பி.ஜே.பி. அரசியலாக இருக்கிறது. நம்மூர் அ.தி.மு.க-வைப் போல. மோடி வைத்ததுதான் சட்டம். அவர் சொன்னது மட்டுமே அங்கு வேதம். மோடியால் ஓரளவு ஏற்றுக் கொள்ளத்தக்கவர் என்று அமித்ஷாவைச் சொல்கிறார்கள். மோடிக்காக உத்தரப்பிரதேசம் மாநிலம் சென்று கடந்த இரண்டு ஆண்டு காலமாக அங்குள்ள அரசியலைத் தன் வசப்படுத்தியவர் அமித்ஷா. மோடி மீதான குற்றச்சாட்டுகள் அனைத்திலும் அமித்ஷா பெயர் அடிபடும். 'மோடி நினைப்பதைச் செயல்படுத்திக் காட்டும் திறமை உள்ளவர் அமித்ஷா மட்டும்தான். எனவே, அமித்ஷாவுக்கு அந்த இடத்துக்கு வரலாம்’ என்று சொல்கிறார்கள்.

இன்றைய குஜராத் அரசில், மூன்று பேர் முக்கியமானவர்களாக வலம் வருகிறார்கள்.

அம்பானிகளுக்கு மைத்துனரான சௌரவ் பட்டேல், மோடியின் அமைச்சரவையில் தொழில் துறை அமைச்சராக இருக்கிறார். இவர் தொழில் அதிபர் அதானிக்கும் வேண்டப்பட்டவர்.  மோடியின் அமைச்சரவையில் நம்பர் டூ ஆக இருக்கும் வருவாய்த் துறை அமைச்சர் ஆனந்திபென் பட்டேல் மற்றும் நிதி அமைச்சர் நித்தின் பட்டேல் பெயர்களும் அடுத்த முதல்வர் பதவிக்கான யூகப் பெயர் பட்டியலில் இடம்பெற்றிருக்கின்றன. மோடி இப்போது மேற்கொண்டுவரும் பிரசாரத் திட்டங்களை இந்த மூவர் குழுதான் வகுத்துக்கொடுக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது. மோடியின் இடத்தை இவர்களால் நிரப்ப முடியுமா என்பது சந்தேகமே!

குஜராத்தில் ஜூ.வி.!

சத்தம் இல்லாத எதிர்க்கட்சிகள்!

கடந்த 10 ஆண்டுகளாக மோடிக்கு எதிராக குஜராத்தில் எதிர்க்கட்சிகளால் எதுவுமே செய்ய முடியவில்லை. காங்கிரஸ் கட்சிக்கு குஜராத்தில் நல்ல செல்வாக்கு உண்டு. பி.ஜே.பி. வாங்கிய வாக்குகளைவிட மூன்று சதவிகிதம் குறைவான வாக்குகளைத்தான் கடந்த சட்டமன்றத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி வாங்கி இருக்கிறது. ஆனால், அங்கு மோடியுடன் மோதக்கூடிய தைரியமான தலைவர் மாநில காங்கிரஸில் இல்லை. சோனியாவின் அரசியல் ஆலோசகராக இருக்கும் அகமது படேல் குஜராத் மாநிலத்தைச் சேர்ந்தவர். அவர் நேரடியாக இந்த மாநில அரசியலைக் கவனித்தாலும், மோடியின் இமேஜுக்கு முன்னதாக அந்தக் கட்சியால் எதுவும் செய்ய முடியவில்லை. கம்யூனிஸ்ட் கட்சி இந்த மாநிலத்தில் இல்லவே இல்லை. தொழிற்சங்க இயக்கமும் கிடையாது. பெரும்பாலும் அமைப்புசாரா தொழிலாளர்களே குஜராத்தில் அதிகம் என்பதால், அவர்களுக்கான ஒருங்கிணைப்பும் இல்லை. இப்போதுதான் ஆம் ஆத்மி கட்சி, மோடிக்கு எதிராக இறங்கி கருத்துச் சொல்லிவருகிறது. குஜராத் வந்து மோடியை பார்க்கப் போகிறேன் என்று அரவிந்த் கெஜ்ரிவால் கிளம்பியதுதான், சமீப காலத்தில் நடந்த எதிர்க்கட்சிகளின் குறிப்பிடத்தக்க சம்பவம்!

''ஊழல் இங்கும் உண்டு!''

ஆம் ஆத்மி கட்சியின் மாநிலத் தலைவர்களில் ஒருவரான சுக்தேவ் பட்டேலை அவரது அலுவலகத்தில் சந்தித்தோம்.  ''மோடியின் ஆட்சியில் ஊழலே இல்லை என்பதைப்போல சித்திரித்து வருகிறார்கள். தேர்தலுக்கு வெகு முன்பிருந்தே பல்வேறு மாநிலங்களிலும் பிரமாண்டமான பொதுக்கூட்டங்களை மோடி நடத்திவருகிறாரே... இப்படி அவர் நடத்தும் ஒவ்வொரு திருவிழாவுக்கும் எத்தனை கோடி செலவாகிறது.? இதற்கெல்லாம் மோடிக்கு எங்கிருந்து பணம்  கிடைக்கிறது? கணக்கு வழக்கே இல்லாமல் விவசாயிகளின் பல ஆயிரம் ஏக்கர் நிலங்களை குஜராத் அரசிடம் இருந்து பெற்ற அதானிகளுக்கும் டாடாகளுக்கும்தானே மோடியின் ஹெலிகாப்டர் செலவு முதற்கொண்டு அத்தனைச் செலவுகளையும் பார்த்துக் கொள்கிறார்கள். இதற்கு பெயர் லஞ்சம் இல்லையா?

மோடியின் அமைச்சரவையில் மீன்வளத் துறை அமைச்சராக இருந்த புருஷோத்தம் சோலங்கி மீன்பிடி ஒப் பந்தங்கள் வழங்கும்போது, முறையான வழிகாட்டுதல்கள் எதையும் பின்பற்றாமல் செயல்பட்ட விவகாரம் இப்போதுதான் வெளிச்சத்துக்கு வந்துள்ளது. இதில் 400 கோடி ரூபாய் அளவுக்கு ஊழல் நடந்துள்ளது. இந்த விவகாரத்தில் சோலங்கியைக் காப்பற்ற மோடி உயர் நீதிமன்றம் வரை போராடி தோற்றுப் போய்விட்டார். மோடி பரிசுத்தமானவர் என்றால், சோலங்கியை அவர் ஏன் காப்பாற்ற முயற்சி எடுத்தார்?

குஜராத்தில் ஜூ.வி.!

சமீபத்தில் உச்ச நீதிமன்றம் இந்த மாநிலத்தின் வருவாய்த் துறை அமைச்சராக இருக்கும்

குஜராத்தில் ஜூ.வி.!

ஆனந்திபென் பட்டேலுக்கு கண்டனம் தெரிவித்துள்ளது. 'ஆணவத்தோடு செயல்படாதீர்கள்! நீங்கள் எவ்வளவுதான் உயர்ந்தவராக இருந்தாலும் சட்டம் உங்களைவிட மேலானது’ என்று சொல்லி கண்டனம் தெரிவித்திருக்கிறது. மோடியின் தனிச் செயலாளர், குறிப்பிட்ட நிறுவனத்துக்கு நிலம் ஒதுக்கக் கட்டளை போட்டார். ஆனால்  துறை சம்பந்தப்பட்ட அரசு செயலாளர்கள் இப்படி ஒதுக்கீடு செய்வது விதிமுறை மீறல் என்று ஆலோசனை சொன்னார்கள். ஆனால்  அமைச்சர் ஆனந்திபென் இதனை ஏற்கவில்லை. மாறாக,  புஜ் மாவட்ட கலெக்டருக்கு தன்னிச்சையாக உத்தரவு போட்டு, நில ஒதுக்கீடு செய்ய கட்டளைப் பிறப்பித்துள்ளார். இதுதான் உச்ச நீதிமன்றம் வரை போய் கண்டனம் வாங்கிக் கொடுத்தது.

பி.ஜே.பி. எம்.எல்.ஏ-வான கணுப்பாய் கல்சாரியா கடுமையான எதிர்ப்பு தெரிவித்தும், பாவ் நகரில் சிமென்ட் தொழிற்சாலை தொடங்க 268 ஏக்கர் நிலத்தை தாரைவார்த்தார்கள். அது தரிசு நிலம் என்றார்கள். ஆனால், அது வளமான விவசாய நிலம் என்கிறார் பி.ஜே.பி. எம்.எல்.ஏ. நீதிமன்றம் இதில் தலையிட்டு, நடக்க இருந்த தவறைத் தடுத்துள்ளது. இப்படி பல விஷயங்களைச் சொல்லிக்கொண்டே போகலாம்!'' என்று சொல்கிறார் அவர்!

ஏன் இல்லை எதிர்ப்பு?

இவ்வளவு புகார் சொல்லப்படும் பி.ஜே.பி. அரசுக்கு எதிராக ஏன் எந்தவிதமான போராட்டங்களும் அங்கு கிளம்பவில்லை?

சுமார் 11 நாட்கள் குஜராத்தில் பல்வேறு பகுதிகளுக்குச் சுற்றி வந்தபோதும் எங்கும் அரசியல் கட்சிக் கொடிகளைப் பார்க்க முடியவில்லை. அரசியல் ஊர்வலங்களும் இல்லை. பி.ஜே.பி. கொடிகள்கூட எங்கும் இல்லை.

அகமதாபாத் நகரில் ஒன்றிரண்டு அரசு விளம்பரங்களில் மோடி படம் இருந்தது. சாலை ஓரங்களில் இருக்கும் கோயில்களில் காவிக் கொடி பறக்கிறது. மசூதிகளில் பச்சைக் கொடியைப் பார்க்க முடிகிறது.

''நம்முடைய மாநிலத்தைப்போல இங்கு தினமும் அரசியல் முழக்கங்கள் கேட்காது. தேர்தலுக்கு ஒரு வாரத்துக்கு முன்னால்தான் எங்காவது மைக் சத்தம் கேட்கும். மற்றபடி அரசியல் கட்சியின் அடையாளங்களை எங்கும் பார்க்க முடியாது'' என்கிறார் வந்தவாசியில் இருந்து 40 ஆண்டுகளுக்கு முன்பே குஜராத் சென்று அங்கு வாழ்ந்துவரும் முருகேசன். 'இவர்கள் அனைவரும் பிசினஸ் பற்றி பேசுவார்கள் அல்லது சினிமா பற்றி பேசுவார்கள். அரசியல் பேசுவது இல்லை'' என்றும் இவர் சொல்கிறார்.

இதுபற்றி பேராசிரியர் ஹேமந்த் குமாரிடம் கேட்டபோது, ''மோடியின் அரசால் லாபம் பெறும் வர்த்தகர்கள், ரியல் எஸ்டேட் வியாபாரிகள் அவரை ஆதரிப்பது இயல்புதான். இவர்களை 'லாபார்தி’ அதாவது லாபம் அடைபவர்கள் என்று சொல்லலாம். மோடியின் விளம்பரங்களாலும் பேச்சினாலும் மயக்கிகிடப்பவர்களும் இங்கே உண்டு.

அவர்களை, 'அபிபூத்’ அதாவது அப்பாவிகள் என்று சொல்வேன். 12 வருடங்கள் ஆகிவிட்டாலும், 2002 கலவரங்களை நேரில் பார்த்த எவருமே மோடிக்கு எதிராக கருத்து சொல்ல இப்போதும் அஞ்சுகிறார்கள். இவர்களை, 'பயபீத்’ அதாவது பயத்திலேயே இருப்பவர்கள் என்று சொல்வேன். இந்த மூன்று வகையான மக்கள்தான் இப்போது குஜராத்தில் இருக்கிறார்கள். இவர்கள் எந்தவிதமான அரசியல் கோரிக்கைக்காகவும் அணிதிரள மாட்டார்கள். அமைதியாக வேடிக்கை பார்த்துக் கொண்டுதான் இருப்பார்கள்!'' என்கிறார் அவர்.

குஜராத்தில் ஜூ.வி.!

மோடியின் பிம்பம்!

தொழில்ரீதியாக குஜராத்தை வளர்த்து​விட்டார், குஜராத் மாநிலத்தை அமைதிப்படுத்திவிட்டார் என்பதுதான் அந்த மாநில எல்லையைத் தாண்டி நரேந்திர மோடியின் பெயரை இந்தியா முழுக்கக் கொண்டுவந்து சேர்த்தது. வென்றாலும் தோற்றாலும் மோடியின் எல்லை குஜராத்தைத் தாண்டிவிட்டது. வளர்ச்சியின் சின்னமாக, தைரியத்தின் சின்னமாக நரேந்திர மோடி இன்று கட்டமைக்கப்பட்டு உள்ளார். ''என்னைப் பார்த்து சிறுபான்மை மக்களுக்கு என்ன செய்தாய் என்று பலர் கேட்கின்றனர். நான் சிறுபான்மை மக்களுக்கு ஒன்றும் செய்யவில்லை. 6 கோடி குஜராத்திகளுக்குத்தான் சேவை செய்துள்ளேன். இவர்களுக்கு நல்ல தண்ணீர் கிடைக்கிறது. மின்சாரம் கிடைக்கிறது. சாலை வசதி உள்ளது. இந்த வசதிகள் அனைத்தும் குஜராத்தில் உள்ள 10 சதவிகித முஸ்லிம்களையும் சென்றடைகின்றன. வசதிகள் செய்து தரும்போது அது இந்துக்களுக்கு மட்டுமான வசதி, முஸ்லிம்களுக்கு இல்லை என்று பிரித்துப் பார்ப்பது இல்லை. ஏழை இந்துக்களும் முஸ்லிம்களும் வறுமையை எதிர்த்துத்தான் போராட வேண்டும். ஒருவரை ஒருவர் எதிர்த்து அல்ல.  காங்கிரஸ்தான் பிரிவினைவாத சக்தியாக இருக்கிறது. வாக்குகளுக்காக ஒவ்வொருவரையும் பிரித்து வைத்துள்ளது. வளர்ச்சி என்ற தளத்தில் இந்தியாவை ஒன்றுபடுத்த விரும்புகிறேன். என் முழக்கம் இந்தியாவுக்கே முன்னுரிமை'' என்று பிரசாரம் செய்து வருகிறார் நரேந்திர மோடி. அதை இந்தியா ஏற்றுக்கொள்கிறதா என்பது தேர்தல் முடிவில் மட்டுமே தெரியும்!

 வத் நகர் முதல் டெல்லி கோட்டை வரை!

குஜராத்தில் ஜூ.வி.!

 குஜராத் மாநிலத்தின் வறுமையான குக்கிராமங்களில் ஒன்று வத் நகர். இங்கு தாமோதர் மூன்சந்த் மோடி - ஹிராபா தம்பதியினருக்கு மகனாக 1950-ம் ஆண்டு செப்டம்பர் 17-ம் தேதி மோடி பிறந்தார். வத் நகர் ரயில் நிலையத்தில் இவரது அப்பா டீக்கடை வைத்திருந்தார். பள்ளி செல்லும் நேரம் தவிர மற்ற நேரங்களில் அப்பாவுடன் டீக்கடையில் மோடி இருந்துள்ளார். பள்ளிப் படிப்பு முடிந்த பிறகு திடீரென வீட்டை விட்டு வெளியேறிய மோடி, இமயமலை பகுதிக்குச் சென்றுவிட்டார். இரண்டு ஆண்டுகள் கழித்து குஜராத் திரும்பினார். அதன் பிறகு வத் நகர் செல்லாமல் குஜராத் பல்கலைக்கழகத்தில் அரசியல் அறிவியல் பட்டம் பெற சேர்ந்துள்ளார். அப்போதுதான் ஜனசங்கத்தில் சேர்ந்தார். அந்த அரசியல் கட்சியின் நடவடிக்கைகள் அவருக்குப் பிடிக்கவில்லை. அதனால் ஆர்.எஸ்.எஸ். இயக்கத்துடன் தன்னை இணைத்துக் கொண்டார். ஆன்மிகம், அரசியல் என மகன் அலைவதைப் பார்த்து, வீட்டினர் சேர்ந்து 1968-ல் யசோதா பென் என்பவருடன் திருமணம் செய்துவைத்தார்கள். ஆனால், அந்த வாழ்க்கையில் அவருக்கு ஈடுபாடு இல்லை. அதனால் வீட்டை விட்டு வெளியேறினார். அகில பாரதிய வித்தியார்த்தி பரிஷத், லோக் சங்கர் சமிதி போன்ற அமைப்புகளுடன் இணைந்து செயல்பட்டார். ஆர்.எஸ்.எஸ். தொடர்புகளையும் விடவில்லை. 1969 முதல் 1974 வரைக்கும் குஜராத் ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் பல்வேறு கிளைகளில் இருந்தார். 1975 எமர்ஜென்சி காலகட்டத்தில் ஆர்.எஸ்.எஸ். நாடு முழுவதும் தடைசெய்யப்பட்டது. அதனால், தலைமறைவாகி செயல்பட்டார். அப்போதுதான் சங்கர்லால் வகேலா நட்பு கிடைத்தது. அதுவரை அரசியல் கட்சி ஈடுபாடு இல்லாமல் இருந்த மோடிக்கு, அரசியல் ஆசையை உருவாக்கியவர் வகேலாதான்.

1980-ல் பி.ஜே.பி. உருவானபோது குஜராத்தில் மாநிலத் தலைவராக வகேலாவும், பொதுச்செயலாளராக மோடியும் இருந்தார்கள். முதல் 10 ஆண்டு காலம் குஜராத் என்றால் வகேலா, மோடி ஆகிய இருவர் பெயர் பிரபலம் ஆனது. இதற்கு மேல் மோடியை இங்கு வைத்திருந்தால் தனது பதவிக்கு ஆபத்து என்று நினைத்த வகேலா, மோடியை டெல்லி அலுவலகத்துக்கு அனுப்பினார். அது மோடிக்கு வசதி ஆனது. மூத்த தலைவர்கள் அனைவர் நட்பும் அவருக்குக் கிடைத்தது. முரளிமனோகர் ஜோஷி, அத்வானி ஆகியோர் நடத்திய ரத யாத்திரைகளை நடத்தும் பொறுப்பு மோடிக்குக் கிடைத்தது. 95-ம் ஆண்டு தேர்தலில் குஜராத் மாநில ஆட்சியை பி.ஜே.பி. கைப்பற்றியது. கட்சியின் மூத்த தலைவராக இருந்த கேஷ§பாய் படேல் முதல்வர் ஆனார். மோடிக்கு கட்சியின் தேசியச் செயலாளர் பதவி கிடைத்தது.ஆனாலும் குஜராத் அரசியல் மீது ஒரு கண் வைத்துக் கொண்டே இருந்தார் மோடி.

முதல்வர் கேஷ§பாய் படேலுக்கு கடுமையான எதிர்ப்பு கிளம்பியது. சுரேஷ் மேத்தா முதல்வர் ஆனார். சங்கர் சிங் வகேலா முதல்வராக முயற்சித்தார். முடியவில்லை. அதனால் பி.ஜே.பி-யை விட்டு விலகி தனிக்கட்சி ஆரம்பித்து காங்கிரஸுடன் சேர்ந்து ஆட்சி அமைத்தார். அதிலும் குழப்பம். பி.ஜே.பி. கைக்கு மீண்டும் ஆட்சி வந்தது. கேஷ§பாய் படேல் முதல்வர் ஆனார். அவராலும் கட்சியைக் கட்டுப்படுத்த முடியவில்லை. அடுத்த முதல்வர் யார் என்ற வாதப்பிரதிவாதங்கள் நடந்துகொண்டு இருக்கும்போது டெல்லியில் இருந்து நரேந்திர மோடி வந்து குதித்தார்.

2001 அக்டோபர் 7-ம் தேதி முதல்வராக பதவிப் பிரமாணம் எடுத்துக்கொண்டார் மோடி. 2002, 2007, 2012 ஆகிய மூன்று சட்டமன்றத் தேர்தலிலும் பி.ஜே.பி-யே குஜராத் ஆட்சியைக் கைப்பற்றியது. மோடியே முதல்வராகத் தொடர்கிறார். 2013-ம் ஆண்டு ஜூன் 9-ம் தேதி நாடாளுமன்றப் பிரசார கமிட்டித் தலைவராக அறிவிக்கப்பட்ட மோடி, செப்டம்பர் 13-ம் தேதி பி.ஜே.பி-யின் பிரதமர் வேட்பாளராக மகுடம் சூட்டப்பட்டார்!

குஜராத்தில் ஜூ.வி.!
தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு