Published:Updated:

மோடிக்கே ஜே என்றான பிறகு ஜெ. எதற்கு?

இல.கணேசன் தெளிவு!

பிரீமியம் ஸ்டோரி

''நாட்கள் நெருங்கிக்கொண்டு இருக்கிறது. நாளுக்கு நாள் நாங்களும் பிரசாரத்தை வேகப்படுத்தி வருகிறோம். செல்லும் இடங்களில் எல்லாம் மக்கள் வரவேற்பு. நடப்பது நாடாளுமன்றத் தேர்தல் என்பதை எல்லோரும் மனதில் வைக்க வேண்டும். மத்தியில் ஊழல் மலிந்த, நிர்வாகத் திறமையற்ற காங்கிரஸ் அரசு நீடிக்க வேண்டுமா...  அல்லது நரேந்திர மோடி தலைமையில் மாற்று அரசு அமைய

மோடிக்கே ஜே என்றான பிறகு ஜெ. எதற்கு?

வேண்டுமா என்பதை முடிவுசெய்ய வேண்டிய தேர்தல் இது. தி.மு.க-வா... அ.தி.மு.க-வா என்பதை முடிவுசெய்ய வேண்டிய தேர்தல் அல்ல இது. திட்டமிட்ட தங்களது பிரசாரத்தால் மக்களை திசை திருப்பும் காரியத்தை இரண்டு கட்சிகளும் செய்கிறார்கள்.''- தேர்தல் பிரசாரத்தில் இருந்த பி.ஜே.பி-யின் மூத்த தலைவர் இல.கணேசனை சந்தித்ததும் இப்படித்தான் வெடிக்க ஆரம்பித்தார். அவரிடம் சில கேள்விகளை முன்வைத்தோம்.

''காவிரிப் பிரச்னையில் பி.ஜே.பி-யை விமர்சித்துள்ளாரே ஜெயலலிதா?''

''காவிரி பிரச்னை குறித்து ஜெயலலிதா சொன்ன கருத்து உண்மைக்கு மாறானது. இரு மாநிலங்களுக்கு இடையே நதிநீர் பிரச்னை வரும்போது, அதை சுமுகமாகத் தீர்த்துவைக்க முயல வேண்டியது மத்திய அரசின் கடமை. குறிப்பாக, பிரதமருக்கு பொறுப்பு இருக்கிறது. ஆனால், இரு மாநில அரசுகளையும் மோதவிட்டு வேடிக்கை பார்த்துகொண்டு இருப்பது மன்மோகன் சிங் வழக்கம். வாஜ்பாய் பிரதமராக இருந்தபோது கர்நாடகாவிலும் தமிழகத்திலும் பி.ஜே.பி. ஆட்சி இல்லை. ஆனாலும், இந்த இரு மாநில முதல்வர்களையும் அழைத்து ஏழு மணி நேரம் உடன் இருந்து பேச்சுவார்த்தை நடத்தி அன்றைய காலகட்டத்தில் சுமுக வழிவகை கண்டார். அந்த முயற்சியில் உண்மையான, உள்ளார்ந்த ஈடுபாடு வாஜ்பாய்க்கு இருந்தது. காவிரி பிரச்னைக்கு நிரந்தரத் தீர்வு என்பது தென்னக நதிகளை இணைப்பது மட்டுமே. வாஜ்பாய் கொண்டு வந்த நதிகள் இணைப்புத் திட்டத்தை மோடி பிரதமரான பிறகு நாங்கள் அமல்படுத்துவோம். நீதிமன்ற த்தீர்ப்புக்கு முன்னதாகவே மகாநதி, கோதாவரி, கிருஷ்ணா நதிகள் இணைக்கப்பட்டு காவிரியில் பாயத் தொடங்கிவிடும். எனவே, ஜெயலலிதா அவசரப்பட வேண்டாம்!''

''ஒரு வாரமாக பி.ஜே.பி-யை ஜெயலலிதா கடுமையாக விமர்சிக்க ஆரம்பித்துள்ளாரே?''

''நாங்கள் நாட்டின் வளர்ச்சியை மையப்படுத்தி பிரசாரம் செய்கிறோம். குஜராத்தில் மோடி செய்த நல்ல

மோடிக்கே ஜே என்றான பிறகு ஜெ. எதற்கு?

திட்டங்கள், நற்செயல்கள் நாடு முழுவதும் விஸ்தரிக்கப்பட வேண்டும் என்று பேசி வருகிறோம். மோடியை விமர்சனம் செய்வதற்கு தி.மு.க-வும் அ.தி.மு.க-வும் தயாராக இல்லை என்பதற்குக் காரணம், விமர்சிக்க எதுவும் இல்லை. ஆனால், தேர்தல் பிரசாரத்தைத் தொடங்கி 40 நாட்கள் கழித்து, கரூர் பொதுக்கூட்டத்தில் அ.தி.மு.க. தரப்பில் இருந்து பி.ஜே.பி. குறித்து முதல் முறையாக விமர்சனம் வந்திருக்கிறது. தமிழகத்தில் நாங்கள் அமைத்துள்ள தேசிய ஜனநாயகக் கூட்டணியை அ.தி.மு.க. ஆரம்பத்தில் உதாசீனம் செய்தது. எங்களுக்கு ஆதரவு பெருகி வருகிறது என்பதை உணர்ந்து இப்போது விமர்சனம் செய்ய ஆரம்பித்து உள்ளார் ஜெயலலிதா.

மேடையில் எங்களை இப்படி விமர்சிப்பவர்கள், பொதுமக்களிடம் போலியான அருவருக்கத்தக்க பொய் பிரசாரத்தைச் செய்து வருவதாகக் கேள்விப்படுகிறோம். அ.தி.மு.க-வைச் சேர்ந்தவர்கள் வீடு வீடாக பிரசாரத்துக்குப் போகும்போது, 'மோடி பிரதமர் ஆக வேண்டும் என்றால், அ.தி.மு.க-வுக்கு வாக்களியுங்கள்’ என்று சொல்லி வருகிறார்களாம். இது வாக்காளர்களைக் குழப்பும், தர்மத்துக்கு விரோதமான பிரசாரம். ஏப்ரல் 13-ம் தேதி, சென்னையில் மோடி பேசிய பேச்சு எல்லா சந்தேகங்களுக்கும் முற்றுப்புள்ளி வைத்துவிட்டது. 'தி.மு.க., அ.தி.மு.க. ஆகிய இரண்டு கட்சிகளும் ஒருவரை ஒருவர் பழிவாங்க நினைத்தார்களே தவிர, நாட்டின் வளர்ச்சிக்கு எதையும் செய்யவில்லை’ என்றார் மோடி. ஜெயலலிதா இதற்கான பதிலைச் சொல்லட்டும். மோடியா... லேடியா என்ற குழப்பம் முதலில் இருந்தது. அது இப்போது இல்லை. மோடிக்கே ஜே என்றான பிறகு ஜெ. எதற்கு?''

'' 'அ.தி.மு.க., தி.மு.க-வுக்கு தமிழக மக்களைப் பற்றி அக்கறையில்லை என்று மோடி பேசியதற்கு, 'தமிழக மக்கள் வருத்தத்தை சம்பாதிக்க வேறு காரணம் தேவையில்லை’ என்று கருணாநிதி கூறியுள்ளாரே?''

''மோடியின் பேச்சு, தமிழக மக்களுக்கு வருத்தத்தை, ஆத்திரத்தை ஏற்படுத்தாது. தமிழக மக்களின் உண்மையான உள்ளத்து உணர்வுகளை இவர் புரிந்துள்ளாரே என்ற ஆச்சர்யத்தைத்தான் ஏற்படுத்தும். 1967-ம் ஆண்டுக்குப் பிறகு தொடர்ந்து தமிழகத்தில் தி.மு.க. அல்லது அ.தி.மு.க. மாறி மாறி ஆட்சி நடத்தும் நிலையை மாற்ற வேண்டும் என்பது தமிழக மக்களின் விருப்பம். இதுவரை அத்தகைய சக்தி வாய்ந்த அணி அமையவில்லை. இப்போது அமைந்துள்ளது. அ.தி.மு.க., தி.மு.க-வுக்கு விழும் ஓட்டு, அவர்கள் பேரம் பேசுவதற்குத்தான் பயன்படும். ஆனால், பி.ஜே.பி. கூட்டணிக்கு விழும் ஓட்டு மோடியைப் பிரதமராக்கும்.''

- எஸ்.முத்துகிருஷ்ணன்

படம்: கே.கார்த்திகேயன்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு