Published:Updated:

''தமிழகத்தில் ஷிப்ட் ஆட்சி நடக்கிறது!''

நமோ நச் விமர்சனம்

நாடு முழுவதும் பம்பரமாகச் சுழன்று வருகிறார் பி.ஜே.பி-யின் பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடி. 295 தொகுதி வேட்பாளர்களை ஆதரித்து 185 பொதுக்கூட்டங்களில் பேசுவது என்ற திட்டத்துடன் கடந்த வருடம் ஏப்ரல் 26-ம் தேதி தொடங்கிய 'பாரத் விஜய்’ என்ற நரேந்திர மோடியின் பிரசாரப் பயணம், நிறைவடையும் நிலையில் இருக்கிறது. ஏற்கெனவே இரண்டு முறை சென்னையில் தேர்தல் பிரசாரத்தை மேற்கொண்ட நரேந்திர மோடி, கடந்த இரண்டு  நாட்களில் ஆறு கூட்டங்கள் என, தமிழகத்தின் மற்ற பகுதிகளில் பேசினார்.

''தமிழகத்தில் ஷிப்ட் ஆட்சி நடக்கிறது!''

கூட்டணிக் கட்சிகளுக்கு முக்கியத்துவம்!

பா.ம.க-வுக்கு கிருஷ்ணகிரி, தே.மு.தி.க-வுக்கு சேலம், ம.தி.மு.க-வுக்கு ஈரோடு, பி.ஜே.பி-க்கு  கோவை என சரிசம மரியாதை கொடுத்துப் பேசினார் மோடி.  16-ம் தேதி மாலை கிருஷ்ணகிரி, சேலம், கோவையில் பிரசாரம் செய்த அவர், மறுநாள் காலை ஈரோடு, மதியம் ராமநாதபுரம், கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் பேசினார். பொதுக்கூட்டம் நடக்கும் இடங்களில் ஏக கெடுபிடி. பாதுகாப்பு கருதி பொதுக்கூட்ட மேடைகளை ஒரு நாளுக்கு முன்னதாகவே தங்கள் கட்டுப்பாட்டுக்குள் எடுத்துக்கொண்டது காவல் துறை. குஜராத்தில் இருந்து வந்திருந்த உளவுப் பிரிவு போலீஸாரும், பாதுகாப்புப் பிரிவு போலீஸாரும் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனர்.

ராமதாஸ் ஆப்சென்ட்... அன்புமணி அப்செட்!

கடந்த சில தினங்களாக கிருஷ்ணகிரியில் தங்கி, தர்மபுரி தொகுதியில் போட்டியிடும் தனது மகன் அன்புமணியை ஆதரித்துப் பிரசாரம் மேற்கொள்ளும் ராமதாஸ், மோடி கூட்டத்தில் பங்கேற்பார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், 15-ம் தேதி திடீரென திருவண்ணாமலை கிளம்பிச் சென்றார் ராமதாஸ்.

மோடியுடன் பிரசார மேடை ஏறுவதைத் தவிர்க்கவே ராமதாஸ் திருவண்ணாமலை சென்றுவிட்டதாக பேச்சு எழ, பி.ஜே.பி-யினர் அதிருப்தியடைந்தனர். ராமதாஸின் இந்த முடிவு அன்புமணி ராமதாஸ், ஜி.கே.மணி உள்ளிட்ட பா.ம.க. வேட்பாளர்களையும் எரிச்சலடையச் செய்துள்ளது.

''கிருஷ்ணகிரியில் தங்கியி ருந்தாலும், கடந்த 13 நாட்களாக தர்மபுரி தொகுதியில் மட்டும்தான் ராமதாஸ் பிரசாரம் செய்துவருகிறார். கட்சியின் தலைவர் ஜி.கே.மணியை ஆதரித்து கிருஷ்ணகிரியில்கூட இன்னும் ராமதாஸ் பிரசாரம் மேற்கொள்ளவில்லை. இந்த நிலையில் மோடி வரும்போது திடீரென திருவண்ணாமலை சென்று பிரசாரம் செய்ய வேண்டிய அவசியம் என்ன? மோடி கூட்டத்தில் பங்கேற்க விரும்பவில்லை என்பதைத்தான் அவர் இப்படி வெளிப்படுத்துகிறார். இது சரியல்ல'' எனப் புலம்பத் தொடங்கியுள்ளனர் கூட்டணிக் கட்சியினர்.

குஜராத்தில் தடையில்லா மின்சாரம்!

''அனைவருக்கும் வணக்கம். புத்தாண்டு வாழ்த்துக்கள்'' என்று தனது பேச்சை தமிழில் தொடங்கிய நரேந்திர மோடி, பின்னர் ஆங்கிலம், இந்தி என கலந்துகட்டிப் பேசினார்.

''இந்தத் தேர்தல் கட்சிகளுக்கான தேர்தல் இல்லை. வேட்பாளர்களுக்கான தேர்தல் இல்லை.

''தமிழகத்தில் ஷிப்ட் ஆட்சி நடக்கிறது!''

கோடிக்கணக்கான மக்களுக்காக நடக்கும் தேர்தல் என்பதைப் புரிந்துகொள்ளுங்கள். டெல்லியில் இந்த ஆட்சி இனிமேல் நிலைக்காது. காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால், கரியைக்கூட லாக்கரில் வைக்க வேண்டிய நிலை வரும்.

தமிழகத்தில் அனைத்துப் பகுதிகளிலும் மின்சாரம் கிடைப்பதில்லை. மின்சாரப் பற்றாக்குறை தலைவிரித்தாடுகிறது. குஜராத்தில் நான் முதன்முதலாக முதல்வராகப் பொறுப்பேற்றபோது, 'இரவு நேரத்தில் சாப்பிடும்போது மின்தடை ஏற்படுகிறது. அதைப் போக்க வேண்டும்’ என என்னிடம் கோரிக்கை வைத்தனர். அடுத்து மூன்றாவது ஆண்டில் இருந்து வருடத்தின் 365 நாட்களும் 24 மணி நேரமும் தடையில்லா மின்சாரம் வழங்கி வருகிறேன். தமிழகம் முன்னேற வேண்டுமானால், தடையில்லா மின்சாரம் அவசியம்.

உங்களுக்கெல்லாம் சுத்தமான குடிநீர் கிடைக்கிறதா? இல்லை. குஜராத்தில் குடிநீர் பிரச்னை இருந்தது. இதனை மாற்ற நர்மதை நதியில் இருந்து மிகப்பெரிய பைப் அமைத்து, ஒன்பது ஆயிரம் கிராமங்கள் பயன்பெறும் வகையில் அந்தத் திட்டத்தை நிறைவேற்றினோம். அந்தக் குழாய் எவ்வளவு பெரியது என்றால், அதில் காங்கிரஸ் தலைவர்கள் காரில் பயணம் செய்யலாம்.

இத்தனை ஆண்டு ஆட்சியில் இந்தப் பகுதிகள் எல்லாம் வளர்ச்சி அடைந்திருக்க வேண்டும். இவர்கள் நினைத்தால் நிச்சயமாகச் செயல்படுத்தலாம். ஆனால், செய்ய மாட்டார்கள். ஏனென்றால் இவர்களுக்கு பதவிதான் குறிக்கோள்!'' என்ற மோடி, கிண்டலாக ஒரு உதாரணம் சொன்னார்.

''தமிழகத்தில் ஷிஃப்ட் ஆட்சி நடைபெறுகிறது. தி.மு.க. ஐந்து ஆண்டு, அ.தி.மு.க. ஐந்து ஆண்டு என ஆட்சி நடக்கிறது. இவர்கள் ஆட்சிக்கு வந்தால், அவர்களை கைது செய்கிறார்கள்... அவர்கள் ஆட்சிக்கு வந்தால், இவர்களை கைது செய்கிறார்கள். அதற்குத்தான் இவர்களுக்கு நேரம் சரியாக இருக்கிறது. மக்களைப் பற்றி சிந்திக்க மாட்டார்கள். இப்போது நாங்கள் எல்லாம் சேர்ந்து வலுவான கூட்டணியை அமைத்திருக்கிறோம். இந்தக் கூட்டணியை யாராலும் அசைக்க முடியாது. இந்தக் கூட்டணி வரும் காலங்களிலும் தொடரும். நிச்சயமாக இந்தக் கூட்டணி வெற்றிபெறும்'' எனப் பேசி முடித்தார் மோடி.

மோடியுடன் விஜயகாந்த், பிரேமலதா...

கிருஷ்ணகிரியில் இருந்து ஹெலிகாப்டரில் பறந்தவர், அடுத்து சேலத்தில் இரும்பாலை அருகே லேண்ட் ஆனார். அங்கு, தே.மு.தி.க. வேட்பாளர் சுதீஷை ஆதரித்து பிரசாரம். சுதீஷ§டன் தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த், அவரது மனைவி பிரேமலதா ஆகியோரும் கூட்டத்தில் பங்கேற்றனர். மோடியை விஜயகாந்த் வரவேற்க, இருவரும் கரம்கோத்து மேடையேறினார்கள். மறைந்த பி.ஜே.பி. மாநிலச் செயலாளர் சேலம் ஆடிட்டர் ரமேஷின் படத்துக்கு மலர் தூவி மாலை அணிவித்தார் மோடி.

மைக் பிடித்த மோடி, ''இரும்பு மனிதன் என்று அழைக்கப்படும் வல்லப பாய் பட்டேல் வழிவந்தவன் நான். இரும்பு நகரான சேலத்தில் பேசுவது மகிழ்ச்சியாக இருக்கிறது. சேலம் இரும்பாலையில் இருந்துதான் மலேசியாவில் உள்ள இரட்டை கோபுரமும் ஆஸ்திரேலியாவில் உள்ள மெல்பர்ன் ஸ்டேடியமும் கட்டுவதற்கு ஸ்டீல் கொண்டுசெல்லப்பட்டுள்ளது. எதிர்காலத்தில் உலக நாடுகளுக்கு ஸ்டீல் ஏற்றுமதி செய்யும் நிலையை உருவாக்குவோம். அதற்காக, புதிய தொழில்நுட்பத்தைப் புகுத்துவோம். இரும்பைப் போன்று சேலம் மக்களும் கடுமையாக உழைக்கக் கூடியவர்கள். ஆனால் அவர்களுடைய பிரதிநிதியாகப் பேசுவதற்கு சென்னையிலும் டெல்லியிலும் ஆட்சியாளர்கள் இல்லை. மாநிலங்களிடையே மின்சாரம், குடிநீர், மொழி பிரச்னையை மையப்படுத்தி, காங்கிரஸ் அரசு வேடிக்கை பார்க்கிறது.

இந்தியாவில் வாஜ்பாய் ஆட்சிக் காலத்தில் நதிகள் இணைப்புத் திட்டம் கொண்டுவரப்பட்டது. காங்கிரஸ் ஆட்சி வந்ததும் அது கைவிடப்பட்டது. தமிழகத்தில் குடிநீர் பிரச்னை, மின்சாரத் தட்டுப்பாடு அதிகரித்துள்ளது. நதிகள் இணைப்புத் திட்டம் நிறைவேற்றப்பட்டு இருந்தால், அதற்கான தீர்வு காணப்பட்டிருக்கும். சிறு குறு மற்றும் நடுத்தர தொழில்கள் ஊக்குவிக்கப்பட்டு தடையில்லா மின்சாரம் வழங்கப்படும். அவர்களுக்குத் தேவையான கடன் உதவிகளும் செய்யப்படும். காங்கிரஸ் 60 வருடங்களில் செய்யாததை 60 மாதங்களில் செய்து காட்டுவோம்'' என்றார்.

மார்க்சிஸ்ட்கள் மீது தாக்கு!

இரவு 8 மணிக்கு கோவையில் மேடையேறினார் நரேந்திர மோடி.

''பொதுவாக தேர்தல் என்றால், மக்களுக்கு செய்யும் வளர்ச்சித் திட்டங்களைத் தெரிவித்து, தேர்தல் அறிக்கையை வெளியிடுவார்கள். ஆனால், மோடி பிரதமர் பதவிக்கு வந்துவிடக் கூடாது என்ற எண்ணத்தில் மட்டும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தேர்தல் அறிக்கையை வெளியிட்டுள்ளது. பி.ஜே.பி. தேர்தல் அறிக்கையைவிட அதிகமாக, மோடி என்ற பெயர் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தேர்தல் அறிக்கையில் இடம்பெற்றுள்ளது. காரணம், அவர்களுக்குப் பயம் வந்துவிட்டது.

இந்தியாவில் சிறு, குறு, நடுத்தர தொழில்கள் வளர்ச்சி விகிதம் 19 சதவிகிதம் மட்டுமே. இது குஜராத்தில் 85 சதவிகிதம். கோவை, திருப்பூரில் உள்ள தொழில் துறைகளை மத்திய, மாநில அரசுகள் பாதுகாக்கவில்லை. தொழில் வளர்ச்சிக்கு எந்தத் திட்டங்களும் செயலாக்கவில்லை. வேலைவாய்ப்பைப் பெருக்கவில்லை. மாறாக தொழில் துறையை முடக்கி, வேலைவாய்ப்பை இழக்கச் செய்துள்ளனர்.

தமிழகத்தில் எல்லா வளமும் இருக்கின்றன. காற்றாலை, சூரிய சக்தி, நிலக்கரி ஆகியவை மூலம் தேவையான அளவு மின் உற்பத்தி செய்ய முடியும். ஆனால், ஆட்சியில் இருப்பவர்கள் கொள்ளையடிப்பதையும் பதவி நாற்காலியையும் குறிக்கோளாகக் கொண்டிருப்பது நாட்டின் துர்பாக்கியம்.

இந்தியாவில் 65 சதவிகிதம் பேர் 35 வயதுக்குட்பட்ட இளைஞர்கள். இந்த இளைஞர்கள்தான் இந்தியாவின் சொத்து. இளைஞர்களுக்கு எதிர்காலம் ஏற்படுத்தாமல் போனால், இந்தியாவுக்கே எதிர்காலம் இல்லை. நீங்கள் ஒவ்வொருவரும் ஏப்ரல் 24-ம் தேதி, எவ்வளவு சோதனைகள் வந்தாலும் வாக்குச்சாவடிக்குச் சென்று, கட்டாயம் வாக்களிக்க வேண்டும். வலிமையான ஆட்சி அமைவதற்காக, நான் விடுக்கும் வேண்டுகோள் இதுதான்'' என பேச்சை முடித்தார்.

கூட்டணிக் கட்சியினருக்கு மோடியின் பேச்சு ஒரு உற்சாக டானிக்காக இருந்தது என்பது மறுக்க முடியாத உண்மை!

- வீ.கே.ரமேஷ், ச.ஜெ.ரவி, எம்.புண்ணியமூர்த்தி

படம்: எம்.விஜயகுமார்

'தைரியமா பேசுங்க!’

''தமிழகத்தில் ஷிப்ட் ஆட்சி நடக்கிறது!''

கிருஷ்ணகிரி கூட்டத்தில் மோடியின் பேச்சை மொழிபெயர்த்தவர் முஸ்லிம் சமுதாயத்தைச் சேர்ந்த முனவரி பேகம். பி.ஜே.பி-யின் மாநில துணைத் தலைவரான அவரிடம் பேசினோம். ''பயத்துடன்தான் மோடிஜிக்கு முன்னாடி நின்னேன். அவரு என்னைப் பக்கத்துல கூப்பிட்டு, 'பதற்றம் வேண்டாம். உங்களால் முடியும். தைரியமா பேசுங்கன்!’னு சொன்னாரு. உள்ளுக்குள் உதறல் இருந்தாலும் பேசிட்டேன். இதை என் வாழ்க்கையில் மறக்கவே முடியாது!'' என்று நெகிழ்ந்தார். ஈரோட்டில் மோடியின் பேச்சை மொழிபெயர்த்தவர், கிறிஸ்துவ மத பிரசங் கத்தைப்போல ஆரம்பிக்க... மோடியே சின்னப் புன்னகையுடன் அவரைத் திரும்பிப்பார்த்தார். அவர் பெயர், சண்முகநாதன்ஜி. இவர் டெல்லி பி.ஜே.பி. நாடாளுமன்றக் குழு அலுவலகத் துணைச் செயலாளர்.

- எஸ்.முத்துகிருஷ்ணன், படம்: வி.ராஜேஷ்

கடிகாரம் கொடுக்கும் சிதம்பரம்!

ராமநாதபுரத்தில் பேசிய மோடி, ''இந்தியாவில் உள்ள இந்துக்கள் ஒரு முறையாவது வந்து தரிசித்துவிட்டு செல்ல நினைக்கும் புண்ணிய பூமி இது. பக்கத்து தொகுதியான சிவகங்கையில் கடிகாரத்தை லஞ்சமாகக் கொடுத்து வாக்கு கேட்டு வருகிறார் ப.சிதம்பரம். அவர் மீது தேர்தல் கமிஷன் நடவடிக்கை எடுக்க வேண்டும். எங்கு எவ்வளவு மீன் கிடைக்கும் என்ற தகவல் சாட்டிலைட் மூலம் கண்டுபிடிக்கப்பட்டு, குஜராத் மீனவர்களுக்குத் தகவல் சொல்லப்படுகிறது. நான் ஆட்சிக்கு வந்தால், இந்த நடைமுறை இந்தியா முழுக்க செயல்படுத்தப்படும். பாரம்பரியமான முறையில் மீன் பிடிக்கும் முறையில் இருந்து மாற்றி, மீனவர்கள் வண்ண மீன்கள் வளர்த்து வெளிநாட்டுக்கு அனுப்ப ஏற்பாடு செய்யப்படும்!'' என்று அறிவித்தார்.

- செ.சல்மான்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு