Published:Updated:

எடக்கு மடக்கு வடக்கு

எடக்கு மடக்கு வடக்கு

பிரீமியம் ஸ்டோரி

மகளுடன் அத்வானி!

எடக்கு மடக்கு வடக்கு

 பி.ஜே.பி-யில் பிரதமர் வேட்பாளராக நரேந்திர மோடியை தேர்வு செய்ததில் இருந்தே கட்சிக்குள் ஒரே முட்டல் மோதல்தான். அத்வானிக்கு குஜராத் மாநிலத்தில் காந்தி நகர் தொகுதி ஒதுக்கப்பட்டது. மோடி ஆதரவாளர்களால் சதி வேலைகள் நடைபெறுமோ என்று பயந்து, மத்தியப்பிரதேச மாநிலம் போபாலில்தான் போட்டியிடுவேன் என அத்வானி பிடிவாதம் செய்தார். ஆனால், க்ளைமாக்ஸில் கட்சியின் முடிவை ஏற்பதாக சொன்னவர், தொகுதி முழுவதும் தனது அன்பு மகள் பிரதிபாவுடன் கொளுத்தும் வெயிலில் பிரசாரம் செய்துவருகிறார் 86 வயதான அத்வானி. 'அடுத்த தேர்தலில் பிரதிபா தேர்தலில் நிற்பார்’ என்கிறார்கள்!

 ஓட்டு போட்ட பச்சன் குடும்பம்!

எடக்கு மடக்கு வடக்கு

மும்பையில் உள்ள வாக்குச்சாவடிக்கு குடும்பத்தினருடன் வந்து அமிதாப் பச்சன் ஓட்டு போட்டதே வட இந்தியா மீடியாவால் பரபரப்பாகப் பேசப்படுகிறது. வாக்களித்துவிட்டு வெளியே வந்த பச்சனிடம், மீடியா கேள்வி எழுப்ப, சட்டென சிரித்த பச்சன் ''என்னுடைய இங்க் விரலால் என் ஐனநாயகக் கடமையை நிறைவேற்றிவிட்டேன்'' எனச் சொல்லி குடும்பத்துடன் போஸ் கொடுத்தார். ஐஸ்வர்யா ராய் வெகு நாட்கள் கழித்து மீடியா முன் வந்ததால், அவரைப் பற்றி ஏதாவது எழுதாமல் இருந்தால் எப்படி என எண்ணினார்களோ... தெரியவில்லை. 'மீண்டும் ஐஸ்வர்யா மாசமாக இருக்கிறார்’ என பற்ற வைத்துவிட்டன மீடியாக்கள். இதை அவசர அவசரமாக அவர்களே மறுத்து இருக்கிறார்கள்.

 மீண்டும் மீண்டும் முட்டை!

எடக்கு மடக்கு வடக்கு

கடந்த தேர்தலின்போது, ஜெகன்மோகன் ரெட்டியை தாக்கிப்பேசி முட்டை, செருப்பு வீச்சை எதிர்கொண்ட சிரஞ்சீவி, இந்த முறை மோடியைத் தாக்கிப் பேசி முட்டை தாக்குதலை எதிர்கொண்டுள்ளார்.  ஆந்திர மாநிலத்தில் உள்ள மசூலிப்பட்டினத்தில் பிரசாரம் மேற்கொண்ட நடிகர் சிரஞ்சீவி... பி.ஜே.பி., தெலுங்கு தேசம், ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சிகளை விமர்சித்துப் பேசினார். தொடர்ந்து, ''வாஜ்பாய், அத்வானி போன்ற மூத்த தலைவர்களை ஓரங்கட்டியவர்; கொடுங்கோலன்; ஹிட்லர்'' என மோடியை விமர்சித்துப் பேச... ஆத்திரமடைந்த சிலர், சிரஞ்சீவி மீது முட்டைகளை வீசி தாக்குதல் நடத்தினர். இதனால் அதிர்ச்சி அடைந்த சிரஞ்சீவி, 'நடுவுல கொஞ்சம் பக்கத்தைக் காணோம்’ போல அவசர அவசரமாகப் பேச்சை முடித்துவிட்டு மூட்டை கட்டினார்.

உரிமையில் கேட்கிறேன்!

எடக்கு மடக்கு வடக்கு

உ.பி-யில் நான்கு முனை போட்டி உள்ள சூழலில், பகுஜன் சமாஜ் கட்சியின் தலைவரான மாயாவதி தனது கட்சியின் சார்பில் வேறு எந்த கட்சியிலும் இல்லாத வகையில் 19 முஸ்லிம்களுக்கும் 21 பிராமணர்களுக்கும் சீட் கொடுத்து இருக்கிறார். இது தலித் சமுதாயத்தினரிடம் அதிருப்தியை உருவாக்கி இருக்கிறது. தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் இதுபற்றி பேசும் அவர், ''பிற கட்சியினர் உங்களிடம் வந்து மாற்று சமுதாயத்துக்கு வாக்களிக்காதீர்கள் எனச் சொல்வார்கள். அதைக் கேட்காதீர்கள். நான் உங்களின் சகோதரி... தலித்களின் மகள்.. அந்த உரிமையில் கேட்கிறேன். எனது வேட்பாளர்களை யார் என்று பார்க்காதீர்கள். நானே போட்டியிடுவதாக நினைத்துக்கொண்டு எனக்காக வாக்களியுங்கள்’ என கெஞ்சும் குரலில் வாக்கு கேட்கிறார். அவரது பேச்சை மற்ற கட்சியினர் கிண்டலடிக்க... அடிக்கடி டென்ஷனின் உச்சத்துக்கே சென்றுவிடுகிறார் மாயாவதி!

'சக்தி கொடு! சக்தி கொடு... இறைவா..!’

அமிர்தசரஸ் தொகுதியில் பி.ஜே.பி. சார்பாக அருண் ஜெட்லி போட்டியிடுகிறார். அவர் பங்கேற்ற தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் பேசிய மாநில வருவாய் துறை அமைச்சர் விக்ரம் சிங் மஜிதியா, சீக்கியர்களின் 10-வது மத குருவான குரு கோவிந்த் சிங் எழுதிய புத்தகத்தில் இருந்து ஒரு பாடலைப் பாடினார். கூட்டத்துக்கு வந்திருந்த பொதுமக்களை எழுந்து கைகளை உயர்த்தச் சொன்னவர், அந்தப் பாடலை அனைவரையும் திருப்பிப் பாடவைத்தார். 'கடவுளே... எனக்கு சக்திகொடு. நல்ல விஷயங்களைச் செய்வதற்கு பலம் கொடு. எனது எதிரியை எதிர்கொள்ள அச்சப்படாமல் இருக்கச் செய். நியாயமான வெற்றி என் பக்கமாகவே இருக்கட்டும்’ என்ற பாடலில், 'நிச்சயமான வெற்றி அருண்ஜெட்லி பக்கமாவே இருக்கட்டும்’ என மாற்றிச் சொன்னார். இந்த விவகாரத்தால் சீக்கியர்களை இழிவுபடுத்துவிட்டதாகச் சர்ச்சை கிளம்பியிருக்கிறது.

''அங்கே போனா அவங்க.. இங்கே வந்தா இவங்க!''

எடக்கு மடக்கு வடக்கு

தேர்தல் பிரசாரத்தில் அடுத்தடுத்து தாக்குதல்களை எதிர்கொண்டு வருகிறார் ஆம் ஆத்மி ஒருங்கிணைப்பாளர் அரவிந்த் கெஜ்ரிவால். தன் மீது நடத்தப்படும் தாக்குதல்களின் பின்னணியில் பி.ஜே.பி. இருப்பதாக, வாரணாசியில் பிரசாரம் மேற்கொண்ட கெஜ்ரிவால் குற்றம்சாட்டியிருந்தார். அடுத்து, அமேதி தொகுதியில் பிரசாரம் மேற்கொண்ட அவர், ''நான் செல்லும் இடங்களில் எல்லாம் என் மீது தாக்குதல் நடத்தப்படுகிறது. இது காங்கிரஸாரின் திட்டமிட்ட செயல். எந்த ஊரிலும் மோடி மீது காங்கிரஸார் தாக்குதல் நடத்தவில்லை. இது ஏன் தெரியுமா? மோடிக்கும் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்திக்கும் ரகசிய உடன்பாடு உள்ளது'' என்று விளாசியிருக்கிறார்.

மோடி போட்டியிடும் தொகுதியில் தன்மீது பி.ஜே.பி-யினர் தாக்குதல் நடத்துவதாகவும், ராகுல் காந்தி போட்டியிடும் அமேதி தொகுதியில் தன்மீது காங்கிரஸார் தாக்குதல் நடத்துவதாக கைப்புள்ள ரேஞ்சுக்கு கதறுகிறார் கெஜ்ரிவால்.

சர்ச்சைப் பேச்சு

உத்தரப்பிரதேச மாநிலம், சகாரான்பூர் தொகுதியில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளர் இம்ரான் மசூத், மோடியைத் துண்டு துண்டாக வெட்டிக் கூறுபோடுவேன்  எனப் பேசிய வீடியோ காட்சிகள் சமீபத்தில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்த நிலையில், பீகார் மாநிலம், பகல்பூரில் ஐக்கிய ஜனதா தள கட்சியின் தேர்தல் பிரசாரக் கூட்டத்தில், பேசிய பகல்பூர் ஐஜத வேட்பாளர் சகுனி சவுத்ரி, ''மோடிக்கு எதிராக நாம் அனைவருமே ஒரே சக்தியாக ஒன்றிணைந்தால், அந்த மோடியை பகல்பூர் பூமியிலேயே அடக்கம் செய்துவிடலாம்'' எனக் கூறினார். முதல்வர் நிதிஷ் குமார் அமர்ந்திருக்கும் மேடையிலேயே அவரது வேட்பாளர், இப்படி பேசியிருப்பதால், அரசியல் வட்டாரத்தில் ஏக பரபரப்பு.

சைக்கிள் பிசினஸ் அமோகம்!

எடக்கு மடக்கு வடக்கு

உத்தரப்பிரதேசத்தில் முலாயம் சிங் யாதவ் தேர்தல் பிரசாரம் செய்த செய்தியைவிட, அவரது ஆதரவாளர்கள் பிரசாரத்தில் செய்த அலப்பறைகள்தான் ஹாட் டாபிக்.  

முலாயம் சிங்கின் சின்னம் சைக்கிள் என்பதால், பலரும் பிரசாரத்துக்கு சைக்கிளிலேயே வந்தனர். இன்னும் சிலர் ஹெல்மெட் போட்டு சைக்கிளை ஓட்டி முலாயமுக்கு ஆதரவு திரட்டினர். குழந்தைகள் விளையாடும் சைக்கிள் பொம்மைகளையும் சிலர் பிரசாரத்தில் பயன்படுத்தினார்கள். இன்னும் சிலர் வாக்குப்பதிவின்போதுகூட சைக்கிளில் வந்து எதிர்க்கட்சிகளை கோபத்தின் உச்சத்துக்கே போகவைத்தனர். எது எப்படியோ... உத்தரப்பிரதேசத்தில் சைக்கிள் பிசினஸ் அமோகம்!

பி.ஜே.பி-யில் மன்மோகன் சகோதரர்!

எடக்கு மடக்கு வடக்கு

திரைப்பட நடிகர்கள், தொழில் துறையினர் என்று முக்கிய பிரமுகர்களுடன் நடக்கும் மோடியின் அடுத்தடுத்த சந்திப்புகள்தான் பி.ஜே.பி-க்கு மிகப்பெரிய ஊக்கமாக இருக்கிறது. பிரதமர் மன்மோகன் சிங்கின் ஒன்றுவிட்ட சகோதரர் தல்ஜித்சிங் கோஹ்லி, பஞ்சாப் மாநிலம் அமிர்தசரஸில் நடந்த தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் மோடியின் முன்னிலையில் பி.ஜே.பி-யில் இணைந்தார். அந்தக் கூட்டத்தில், ''இன்று பிரதமர் மன்மோகன் சிங்கின் சகோதரர் பி.ஜே.பி-யில் இணைந்துள்ளார். இது நமக்குக் கூடுதல் பலத்தை அளிக்கும்'' என நரேந்திர மோடி வரவேற்க... அதிர்ச்சியில் உறைந்துள்ளது காங்கிரஸ். ''தல்ஜித்சிங் நடத்திவரும் ஆயத்த ஆடை தொழிலில் போதுமான லாபம் இல்லை. அவருக்குப் பணம், பதவி தருவதாகச் சொல்லவே, அவர் பி.ஜே.பி-யில் இணைந்துவிட்டார்'' என அவரது குடும்பத்தினர் விளக்கம் அளித்துள்ளனர். ''சகோதரர் என் கட்டுப்பாட்டில் இல்லை'' என மன்மோகன் வெள்ளந்தியாக விளக்கம் சொல்லியிருக்கிறார்.

தொகுப்பு: ஆண்டனி, ரவி, சிபி

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு