Published:Updated:

பணம் கொடுப்பதைத் தடுக்க இரண்டு தேர்தல்கள் ஆகும்!

பரபரக்கும் பிரவீன்குமார்

பிரீமியம் ஸ்டோரி

கல்வீச்சுக்கள் இல்லை... கலவரங்கள் இல்லை... கள்ள ஓட்டுக்கள் குறைவு... என கட்டுப்பாடாக, தமிழகத்தில் நடந்து முடிந்துள்ளது 16-வது மக்களவைத் தேர்தல். அதே வேளையில், கனஜோராக நடந்த பணப் பட்டுவாடா, நகரங்களில் பதிவான குறைந்த வாக்குகள், இந்தத் தேர்தலின் தலையெழுத்தை நிர்ணயிக்கப் போகிறவர்கள் என்று பெரிதாக நம்பப்பட்ட புதிய வாக்காளர்கள் கொடுத்த ஏமாற்றம் போன்றவை நாம் கற்றுக்கொள்ள இன்னும் நிறையவே இருக்கிறது என்பதையும் உணர்த்தியுள்ளது.

பணம் கொடுப்பதைத் தடுக்க இரண்டு தேர்தல்கள் ஆகும்!

புதிய பிரசார யுக்தியாக வடிவெடுத்துள்ள ஃபேஸ்புக், ட்விட்டர் பிரசாரம் இனிவரும் தேர்தல்களில் இன்னும் தீவிரமாக பங்காற்றும். தேர்தலுக்கு முதல் நாள் போடப்பட்ட 144 தடை உத்தரவும் தமிழகத்துக்குப் புதிது. இனிவரும் தேர்தல்கள் அனைத்திலும் இந்த நடைமுறை பின்பற்றப்படலாம்.

தேர்தல் ஆணையத்தின் விதிமுறைகளைக் கடைப்பிடித்து கண்ணியம் காட்டிய அரசியல் கட்சிகளும் பாராட்டுக்கு உரியவையே. 'ஆணையத்தின் நடவடிக்கைகளால், என் கட்சியின் வேட்பாளர் பெயரைக்கூட சொல்ல முடியவில்லை’ என்று ஆரம்பத்தில் மல்லுக்கு நின்ற ஜெயலலிதாகூட அதன் பிறகு, தேர்தல் ஆணையத்தின் நடவடிக்கைகளுக்கு ஒத்துழைப்பு தர வேண்டும் என்று பேசியது அதிசயம்.

கட்டுக்கோப்பாகத் திட்டமிட்டும், பண விநியோகத்தைக் கட்டுப்படுத்த முடியவில்லை என்று தமிழகத் தலைமைத் தேர்தல் ஆணையர் பிரவீன்குமார் வருந்தியிருக்கிறார்.. அதுபோல, கோடிக்கணக்கில் பணத்தைக் கொட்டி, ஸ்டார் நடிகர்களை வைத்து விளம்பரம் செய்து, கல்லூரிகளில் முகாம் நடத்தி... வாக்குப்பதிவு சதவிகிதத்தைக் கூட்டவும், தேர்தல் ஜனநாயகத்தில் இளம் வாக்காளர்களின் பங்களிப்பை அதிகரிக்கவும் அவர்கள் செய்த முயற்சி எதுவும் பலனளித்ததுபோல் தெரியவில்லை. ஆனால், குறைந்த வாக்காளர்கள் இருந்த தொகுதிகளில், அவர்களின் எண்ணிக்கையைவிட அதிகமான வாக்குகள் பதிவானது. தர்மபுரியில் பல இடங்களில் இந்தத் கூத்து நடைபெற்றது. ஆறு மணிக்கு மேல் சில இடங்களில் பூத்கள் கைப்பற்றப்பட்டு, கள்ள ஓட்டுகள் போடப்பட்டுள்ளன. அதனால்தான், வாக்காளர் எண்ணிக்கையைவிட அதிகமாக வாக்குகள் பதிவான தொகுதிகளில் மறுதேர்தல் நடத்த வாய்ப்புள்ளது என்று பிரவீன்குமார் பேட்டியளித்தார்.

தேர்தல் ஆணையம் தொடங்கி அரசியல் கட்சிகள் வரை இந்தத் தேர்தலில் அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்திய இளம் வாக்காளர்கள், பாதிக்கும் குறைவானவர்களே வாக்களித்தனர். அதிகாலையிலேயே பொறுப்பாக வாக்களித்த மாற்றுத் திறனாளிகள், ஆம்புலன்ஸில் வந்து வாக்களித்த மூதாட்டி போன்றவர்களுக்கு மத்தியில் இளம் வாக்களர்களின் இந்த அலட்சியம், தேர்தல் ஆணையத்தையும் தேர்தல் ஜனநாயகத்தில் நம்பிக்கை வைத்துள்ளவர்களையும் மிகப்பெரிய அதிர்ச்சிக்குள்ளாக்கி உள்ளது. எந்தத் தேர்தலிலும் இல்லாத வகையில் முஸ்லிம் மற்றும் கிறிஸ்துவர்கள் மெஜாரிட்டியாக உள்ள தொகுதிகளில் அதிக வாக்குகள் பதிவாகின.

படித்தவர்கள் நிரம்பிய, மாநகராட்சி அந்தஸ்து பெற்ற தென் சென்னை, மத்திய சென்னை, வட சென்னை, மதுரை, கோவை, கன்னியாகுமரி என முக்கியமான நகரங்களில் பதிவான வாக்கு சதவிகிதம் 60 சொச்சம். வறட்சியும், ஏழ்மையும், குறைந்த கல்வியறிவும் நிலவும் மாவட்டங்களில் பதிவான வாக்கு சதவிகிதம் 80-ஐ நெருங்கி உள்ளது. அனைத்தையும் குறை சொல்லியே பழகிய மத்தியதர வர்க்கம் தன் கடமை என்று வரும்போது அதை சரியாகச் செய்வது இல்லை.

இதுபற்றி தமிழகத் தலைமைத் தேர்தல் அதிகாரி பிரவீன்குமாரிடம் பேசினோம். ''பணம் கொடுப்பதைத் தடுப்பதுதான் சவாலாக இருந்தது. 144 தடை உத்தரவு காரணமாக, வெளிப்படையாகப் பணம் கொடுப்பது கட்டுப்படுத்தப்பட்டது. இது தேர்தல் ஆணையத்துக்குக் கிடைத்த முழு வெற்றி. இதே நிலை தொடரும்போது, இன்னும் இரண்டு தேர்தல்களில் முற்றிலுமாகப் பண விநியோகம் தடுக்கப்படும். வாக்கு சதவிகிதம் அதிகரிக்காமல் போனதற்குக் காரணத்தை  ஆராயப் போகிறோம். ஒருசில தொகுதிகளில் மறு வாக்குப்பதிவு நடத்தலாமா எனத் தேர்தல் பார்வையாளர்கள் ஆய்வில் ஈடுபட்டுள்ளனர். அதுபற்றி இதுவரை எந்த முடிவும் எடுக்கவில்லை!'' என்றார்.

தேர்தல் ஜனநாயகத்தில் நம்பிக்கை வைத்து, தங்களின் கடமையைச் சரியாக நிறைவேற்றுவது பாமர மக்களும் உடல் உழைப்புத் தொழிலாளர்களும்தான் என்பதை உரக்கச் சொல்லியிருக்கிறது நடந்து முடிந்த தேர்தல்!

- ஜோ.ஸ்டாலின்

படம்: சு.குமரேசன், எம்.உசேன்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு