Published:Updated:

தலைவர்கள் தேர்தல் பிரசாரம்

தலைவர்கள் தேர்தல் பிரசாரம்

பிரீமியம் ஸ்டோரி

தொகுதிகளில் பதிவான வாக்கு சதவிகிதத்தை கையில் வைத்துக்கொண்டு யாருக்கு வெற்றிவாய்ப்பு என்று கட்சித் தொண்டர்கள் கூட்டல் கழித்தல் கணக்குகளை போட்டுக்கொண்டிருக்கும் நிலையில், அரசியல் கட்சித் தலைவர்கள் எத்தனை நாட்கள், எத்தனை கிலோ மீட்டர் பயணம் செய்து தேர்தல் பிரசாரம் செய்தார்கள் என்ற புள்ளிவிவரங்களைப் பார்ப்போம்.

முதல்வர் ஜெயலலிதா: அ.தி.மு.க. வேட்பாளர்களை ஆதரித்து காஞ்சிபுரத்தில் மார்ச் 3-ம் தேதி தேர்தல் பிரசாரத்தை தொடங்கிய ஜெயலலிதா, ஏப்ரல் 21-ம் தேதி மத்திய சென்னைக்கு உட்பட்ட தி.நகரில் பிரசாரத்தை முடித்தார். ஸ்ரீபெரும்புதூர், தென் சென்னை, மத்திய சென்னை, வட சென்னை தொகுதிகளில் மட்டும் 150 கிலோ மீட்டர் தூரம் வேனில் சென்று ஒரு பொதுக்கூட்டம் மற்றும் 20 பாயின்ட்களில் வாக்கு சேகரித்தார். ஹெலிகாப்டர், தனி விமானத்தில் பறந்து சென்று 36 நாடாளுமன்றத் தொகுதிகளுக்கு 36 பொதுக்கூட்டங்களில் பேசினார். ஹெலிகாப்டர் மற்றும் தனி விமானத்தில் பயணித்த மொத்த தூரம் 19 ஆயிரம் கிலோ மீட்டர்.

தி.மு.க. பொருளாளர் மு.க.ஸ்டாலின்: 8,109 கிலோ மீட்டர் தூரம் சாலை மார்க்கமாக வாகனத்தில் சென்று புதுச்சேரி, திண்டுக்கல், தேனி தவிர்த்து 37 தொகுதிகளில் 37 பொதுக்கூட்டங்களில் பேசினார். 40 நாடாளுமன்றத் தொகுதிகளுக்கு உட்பட்ட 229 சட்டமன்றத் தொகுதிகளில் பொதுமக்களை சந்தித்தார். 448 இடங்களில் திறந்த வேனில் நின்று பேசினார். பிரசார பயணத்தில் அறிவிக்கப்படாத 156 இடங்களில், பொதுமக்களின் வரவேற்பைப் பெற்றுக்கொண்டார். மார்ச் 14-ம் தேதி கன்னியாகுமரியில் பிரசாரத்தைத் தொடங்கியவர், ஏப்ரல் 22-ம் தேதி திருச்சி தொகுதிக்கு உட்பட்ட புதுக்கோட்டையில் பிரசாரத்தை நிறைவு செய்தார்.

தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த்: தேசிய ஜனநாயகக் கூட்டணி வேட்பாளர்களுக்கு ஆதரவாக 5,496 கிலோ மீட்டர் தூரம் வேனில் சென்று பிரசாரம் செய்தார். மார்ச் 14-ம் தேதி திருவள்ளூர் தொகுதியில் தேர்தல் பிரசாரத்தைத் தொடங்கிய அவர், ஏப்ரல் 22-ம் தேதி இடைத்தேர்தல் நடைபெறும் ஆலந்தூர் தொகுதி நங்கநல்லூரில் பிரசாரத்தை முடித்தார். தொண்டை வலி, பிரசார வேன் பழுது காரணமாக

தலைவர்கள் தேர்தல் பிரசாரம்

இடையில் மூன்று நாட்கள் மட்டும் பிரசாரம் செய்யவில்லை. மொத்தம் 89 இடங்களில் பேசியுள்ளார் கேப்டன்.

மத்திய அமைச்சர் ஜி.கே.வாசன்: காங்கிரஸ் வேட்பாளர்கள் போட்டியிட்ட 40 தொகுதிகளிலும் வாக்கு சேகரித்தார். 25 நாட்களில் மொத்தம் 6,991 கிலோ மீட்டர் தூரம் சாலை வழியாக காரில் சென்று வாக்காளர்களைச் சந்தித்தார். 19 பொதுக்கூட்டங்களில் பேசினார். திறந்த வேனில் நின்று 311 இடங்களில் வாக்கு சேகரித்தார். 29 தொகுதிகளில் 2,337 கிலோ மீட்டர் தூரத்துக்கு வாகனப் பேரணியில் கலந்துகொண்டார்.

மதிமுக பொதுச்செயலாளர் வைகோ: விருதுநகரில் போட்டியிட்ட வைகோ, ம.தி.மு.க. மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்களுக்காகவும் பிரசாரம் செய்தார். கன்னியாகுமரி, பெரம்பலூர், சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி, தென் சென்னை என்று மொத்தம் 17 தொகுதிகளில் பிரசாரம் மேற்கொண்டார். மொத்தம் 33 நாட்கள், 10,358 கிலோ மீட்டர் தூரம் காரில் பயணம் சென்று வாக்காளர்களைச் சந்தித்தார். 25 பொதுக்கூட்டங்களில் பேசினார். வேன் பிரசாரங்கள் பாயின்ட்கள் 1,002. தமிழகத் தலைவர்களில் அதிக தூரம் காரில் சென்று வாக்கு சேகரித்தவர் வைகோதான்.

திராவிடர் கழகத் தலைவர் வீரமணி: மார்ச் 31-ம் தேதி கன்னியாகுமரி தொகுதி மார்த்தாண்டத்தில் பிரசாரத்தைத் தொடங்கி, ஏப்ரல் 22-ம் தேதி தஞ்சையில் பிரசாரத்தை முடித்தார். மொத்தம் 22 நாட்கள், 30 தொகுதிகள், 45 பொதுக்கூட்டங்களில் அவர் பேசினார். வாகனம் மூலம் தமிழகத்தை அவர் சுற்றிவந்த மொத்த தூரம் 5,140 கிலோ மீட்டர்.

கனிமொழி எம்.பி. (தி.மு.க.): தென் சென்னையில் ஏப்ரல் 5-ம் தேதி பிரசாரத்தைத் தொடங்கி 22-ம் தேதி கன்னியாகுமரியில் முடித்தார். மொத்தம் 18 நாள் பிரசாரத்தில் 20 நாடாளுமன்றத் தொகுதிகளில் 170 இடங்களில் திறந்த வேனில் பேசினார். பிரசாரம் செய்த வழிகளில் அறிவிக்கப்படாத 70 இடங்களில் திரண்டிருந்த கட்சியினரின் வரவேற்பை பெற்றுக்கொண்டார். 7 பொதுகூட்டங்களில் பேசினார். தமிழகம் முழுவதும் மொத்தம் 6,200 கிலோ மீட்டர் தூரம் காரில் சென்று வாக்கு சேகரித்தார்.

- எஸ்.முத்துகிருஷ்ணன்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு