Election bannerElection banner
Published:Updated:

அங்கு மோடி அலை...

அங்கு மோடி அலை...

அங்கு மோடி அலை...

உலகின் மிகப்பெரிய ஜன​​நாயக நாட்டில் ஒன்பது கட்டங்களாக நடத்தப்பட்டு 87 கோடி மக்கள் வாக்களித்து வெளியான முடிவுகள், மோடி ஒன் மேன் ஆர்மி என்பதை நிரூபித்து இருக்கிறது.

ஒட்டுமொத்த இந்தியாவும் ஆர்வத்துடன் எதிர்பார்த்துக்​கொண்டிருக்க, மே 16-ம் தேதி காலையில் 8 மணிக்கு வாக்கு எண்ணிக்கைத் தொடங்கியது. சில நிமிடங்களுக்குள் ஒரு தொகுதியில் பி.ஜே.பி முன்னிலை என்று மெதுவாக வந்த வெற்றிச் செய்தி, அதன் பிறகு உ.பி., ம.பி., மகாராஷ்டிரம், அசாம், பீகார், ஜார்கண்ட், குஜராத், சத்தீஸ்கர், ராஜஸ்தான் என்று அசுர வேகத்தில் பரவி, டெல்லி​யில் அசைக்க முடியாத விஸ்வரூபம் எடுத்து நின்றது. தேர்தல் முடிவுகள் வெளிவரும் சில நாட்களுக்கு முன்பு, 'கடந்த 25 ஆண்டுகளில் எந்தக் கட்சிக்கும் கிடைக்காத அளவில் வரலாற்று வெற்றி கிடைக்கும்’ என்று மோடி சொன்ன ஆரூடம் பலித்தது. கேரளா, ஆந்திரா என்ற இரண்டு மாநிலங்களைத் தவிர்த்து, மற்ற அனைத்து மாநிலங்களிலும் காங்கிரஸ் மண்ணைக் கவ்வியது.

இடதுசாரிகளின் நிலைமை யும் பரிதாபம்தான். இடதுசாரி களின் கோட்டைகள் என்று வர்ணிக்கப்படும் வங்கத்திலும், கேரளாவிலும்கூட அந்தக் கட்சியினரால் கணிசமான வெற்றியைப் பெற முடியவில்லை. தமிழகத்தில் அ.தி.மு.க., மேற்கு வங்கத்தில் மம்தா பானர்ஜி, தெலங்கானாவில் தெலுங்கான ராஷ்டிரிய சமிதி என்று சில மாநிலங்களில் மாநிலக் கட்சிகள் மிகப்பெரிய வெற்றி பெற்றிருந்தாலும்கூட, மோடிக்கு அவர்களின் ஆதரவு தேவைப்படாது. அதனால், அடுத்த ஐந்து ஆண்டுகளுக்கு மோடியின் ராஜாங்கம்தான் டெல்லியில் நடக்கப்போகிறது.

இரண்டு ஆண்டுகளுக்கு முன்பே நாடாளுமன்றத் தேர்தலில் வெற்றிக்கனியைப் பறிக்க திட்டம் வகுத்து, அதன்படி செயல்பட்டு பாரதிய ஜனதா பெற்ற வெற்றி இது. ஒன்றரை வருடத்துக்கு முன்பே அந்தத் திட்டம் செயல்பாட்டுக்கு வந்தது. மோடி பிரதமர் வேட்பாளர் என்று அறிவிக்கப்பட்டதில் தொடங்கி, இந்தியா முழுவதையும் பி.ஜே.பி-யினர் மோடி மயமாக்கினர். செய்திகள், நாளிதழ்கள், தொலைக்காட்சிகள், விளம்பரங்கள், ஃபேஸ்புக், ட்விட்டர் உள்ளிட்ட சமூக வலைதளங்கள் மூலம் மோடி புகழ் பரப்​பினார்கள். சேலைகள், கேக்குகள், ஆட்டோக்கள் என எதையும் அவர்கள் விட்டுவைக்கவில்லை. அனைத்திலும் மோடிதான் இருந்தார். அந்தத் திட்டமிட்ட வியூகத்தின் பலனால் கடந்த மூன்று மாதங்களுக்கு முன்பே மோடிதான் பிரதமர் என்பது மக்கள் மனதில் பதிய வைக்கப்பட்டது.

அங்கு மோடி அலை...

அதனால்தான் தேர்தல் முடிவுகள் வருவதற்கு முன்பே வெற்றிக் கொண்​டாட்டத்துக்கு பி.ஜே.பி உற்சாகமாகத் தயார் ஆனது. ஓட்டுக்கள் எண்ணப்​படுவதற்கு முதல் நாளே 5 லட்சம் லட்டுகள் டெல்லி அசோக் சாலையில் உள்ள பி.ஜே.பி அலுவலகத்துக்கு வரவழைக்கப்பட்டன. அனைத்து மாநிலங்களிலும் உள்ள பி.ஜே.பி அலுவலகங்கள் வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டன. மாலைகள், தோரணங்கள் என அனைத்தும் முன்​பதிவு செய்து தயாராக வைக்கப்​பட்டன.

மோடி போட்டியிட்ட குஜராத் வதோதரா மற்றும் உத்தரப்பிரதேசம் வாரணாசியிலும் கொண்​டாட்டங்கள் இரண்டு நாளைக்கு முன்பே கரைபுரண்டன. குஜராத்தில் மோடியின் சொந்த ஊரான வத் நகரம் அல்லோலகல்​லோலப்பட்டது. இந்தக் கொண்டாட்ட ஏற்பாடுகளுக்கு மத்தியில்  வெற்றிக்குப் பிறகு செய்ய வேண்டிய வேலைகளும் திட்டமிடப்பட்டது. அமைக்கப்படும் அமைச்சரவையில் யார்? யாருக்கு

அங்கு மோடி அலை...

இடம்? யாருக்கு என்ன துறை? உள்கட்சி அதிருப்தி கோஷ்டிகளை எப்படி சமாளிப்பது? கிடைத்த பிரமாண்ட வெற்றிக்குக் காரணமான மோடியின் நெற்றிக்கண் அனலில் இருந்து அதிருப்தி கோஷ்டியை எப்படி காப்பது? இவ்வாறெல்லாம் ஒரு பக்கம் ஆலோசனைகள் நடத்தப்பட்டுக்கொண்டே இருந்தது.

அனைத்து மாநிலங்களிலும் வாக்குப் பதிவு முடிந்த மறுநாளே பி.ஜே.பி தலைவர்கள் பரபரப்பானார்கள். ராஜ்நாத் சிங்கும், நிதின் கட்கரியும், அருண் ஜெட்லியும் டெல்லி ஜன்டேவாவில் உள்ள ஆர்.எஸ்.எஸ் அலுவலகத்துக்கு நடையாய் நடந்தனர். சுரேஷ் சோனி, ராஜ்நாத் சிங் வீட்டுக்கு ஓடினார். மோகன் பாகவத்தைச் சந்தித்து மொத்தமாக கொட்டித் தீர்த்தனர். 'ஆர்.எஸ்.எஸ்-ஸின் கண்காணிப்பில் மோடியின் ஆட்சி பரிபாலனம் நடக்கும். தேவையற்ற அச்சம் உங்களுக்குத் தேவையில்லை’ என்று மோகன் பாகவத் வாக்குறுதி அளித்ததாகத் தகவல்.

இதற்கிடையில், அதிகாரப்பூர்வமாகவும் ஆர்.எஸ்.எஸ் மற்றும் பாரதிய ஜனதா  தலைவர்களின் ஆலோசனைக் கூட்டம் நடந்தது. மூத்தத் தலைவர் அத்வானி, முரளி மனோகர் ஜோஷி, சுஷ்மா ஸ்வராஜ், உமா பாரதி ஆகியோர் தங்களுக்குள் தனி ஆவர்த்தனம் நடத்திக்கொண்டிருக்கின்றனர். ஒட்டுமொத்தமாக முக்கியமான முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளன. அதை தேர்வு முடிவுகள் வெளியானதற்குப் பின் கூடும் 12 நபர் கூட்டத்தில் வெளியிடுவோம் என்று சொல்லியுள்ளனர். அதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

இனி ஜனாதிபதி அழைப்பு, முறையான பதவியேற்பு, மந்திரி சபை உருவாக்கம் என நிகழ்ச்சி நிரல்கள் வரிசையாக காத்திருக்கின்றன. மோடியை எதிர்த்தவர்கள் வைத்த குற்றச்சாட்டுகள், மோடியைப் புகழ்ந்தவர்கள் முன்னிறுத்திய நம்பிக்கைகள், உட்கட்சிக்குள் இருக்கும் எதிர்ப்பாளர்களின் சலசலப்புகள், முணுமுணுப்புகள் எல்லாம் மோடியின் முன்னால் இமயம்போல் உயர்ந்து நிற்கிறது. இவர்களில் யாரை அவர் ஏமாற்றப் போகிறார்? யார் சொன்னது உண்மை என்று நிரூபிக்கப்போகிறார்? இதையெல்லாம் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

- சரோஜ் கண்பத், ஜோ.ஸ்டாலின்

தாய் பாசம்!

நரேந்தர மோடி பிறந்து ஒரு வயது இருக்கும்போதுதான் இந்தியாவில் முதன்முதலில் பொதுத்தேர்தல் நடந்தது. இந்த முதல் தேர்தல் 1951 அக்டோபர் மாதம் தொடங்கி 1952 பிப்ரவரி மாதம் வரை இந்தியாவில் நடைபெற்றது. இந்த 16-வது பொதுத்தேர்தலில் ஜனநாயக புல்டோசர் மோடியை இழுத்து வந்துவிட்டது.

அங்கு மோடி அலை...

குஜராத் மாநிலத்தில் வாக்குப்பதிவு நடந்த அன்று மோடியின் வயதான தாயார் ஹிரா பேன், சாதாரணமாக ஒரு ஆட்டோவில் சென்று வாக்களித்துவிட்டு வந்தார். இந்தக் காட்சியை அப்போது யாரும் பெரிதாக நினைக்கவில்லை. ஆனால், தேர்தல் முடிவுகள் வந்து கொண்டு இருக்க... வெற்றிக்கனியோடு மோடி தனது வயதான தாயாரை சந்திக்கச் சென்றபோது, 'மோடிஜி... மோடிஜி!’ என்று கூறி அவரது தீவிர ஆதரவாளர்கள் முழங்கியதோடு ஆனந்த கண்ணீர் விடும் காட்சியும் நடந்தது.

மோடி முதன்முதலில் முதல்வராக ஆனபோது, அவரது அம்மாவைச் சந்திக்கப் போனார். 'ஊழல் இல்லாத ஆட்சியைக் கொடுப்பா’ என்று சொன்னாராம். அதேபோல் இந்த முறை அவர் என்ன சொல்லி அனுப்பினாரோ?!

மோடிக்கு ஆர்.எஸ்.எஸ். பச்சைக்கொடி!

நரேந்திர மோடியை பிரதமர் வேட்பாளர் ஆக்கும் ஆர்.எஸ்.எஸ் முயற்சியில் ஒரு மீடியேட்டராக இருந்து செயல்பட்டவர் கட்சியின் தலைவர் ராஜ்நாத் சிங். அவர் இந்தத் தேர்தல் முடிவுக்குப் பின்னரும் கட்சித் தலைவர்களை ஒன்றுபடுத்தும் காரியங்களில் ஈடுபட்டு வருகிறார். ஆர்.எஸ்.எஸ் தலைவர்களையும் தனது கட்சித் தலைவர்களையும் கடந்த வாரமே சந்திக்க தொடங்கினார் ராஜ்நாத் சிங். இதன்படி யார் யாருக்கு என்ன பொறுப்புகள் என்று நோட்டம் விடத் தொடங்கினார். இந்தத் தேர்தலில் நரேந்திர மோடிக்கு உள்ளேயே இருக்கும் எதிரிகளை உணரத் தொடங்கிவிட்டார் ராஜ்நாத் சிங். ''எனக்கு வெளியே எதிரிகள் யாரும் இல்லை. உள்ளே இருக்கின்றனர். எனக்கு முழு சுதந்திரம் வேண்டும்'' என்று மோடியும் இவரிடம் கூறி வந்தார். இந்த வரத்தை நிறைவேற்றத்தான் ராஜ்நாத் சிங்கும் ஆர்.எஸ்.எஸ் பிரமுகர்களும் அடிக்கடி சந்தித்து பேசிக்கொண்டு இருந்தனர். நரேந்திர மோடியை ஒரு மனதாக கட்சி மக்களவைத் தலைவராகத் தேர்ந்தெடுக்கும் அடுத்த நிமிடத்தில் அவர் ஜனாதிபதியைச் சந்தித்து ஆட்சி அமைக்கக் கோருவார். ஆனால் கூட்டணிக் கட்சியில் இருப்பவர்களுக்கும் மட்டுமல்ல... தன்னுடைய பி.ஜே.பி-யில் இருப்பவர்களுக்குக்கூட யார் யாருக்கு என்ன பதவி என்பதை கட்சியோ ஆர்.எஸ்.எஸ் அமைப்போ தலையிடக் கூடாது என்பதில் மோடி கண்டிப்பாக இருக்கிறார்.

அங்கு மோடி அலை...

இந்த வெற்றிக்குப் பின்னர் ஆர்.எஸ்.எஸ் பிரமுகர்கள்,  ராஜ்நாத் மூலமாக, 'மோடிக்கு ஆட்சியில் மட்டுமல்ல... கட்சியிலும் முடிவு செய்யும் அதிகாரம் முழுமையாக கொடுக்கப்படும்’ என்று உறுதி சொல்லப்பட்டுவிட்டதாம். இதன்படி அத்வானிக்கு மட்டுமல்ல... சுஷ்மா ஸ்வராஜின் தலைவிதியையும் மோடியே நிர்ணயிப்பார் என்கின்றனர். பிரதமர் பதவி மட்டுமல்லாது, சோனியா காந்திக்கு கொடுக்கப்பட்ட பதவியையும் மோடிதான் (என்.டி.ஏ சேர்மன் பதவி) வைத்துக்கொள்வார் என்கின்றனர். இதனால், அத்வானிக்கு இந்தப் பதவியும் கிடைப்பது அரிது என்று சொல்லப்படுகிறது. அத்வானிக்கு மரியாதை கொடுக்கும் விதமாக ஒரு கேபினெட் அமைச்சருக்கு சமமான பதவி வழங்கப்படும் என்றும் கூறப்படுகிறது. இப்படி மோடியின் டெல்லி ராஜ்ஜியம் தொடங்கிவிட்டது.

Election bannerElection banner
அடுத்த கட்டுரைக்கு