Published:Updated:

நாளை நடைபெறுகிறது குடியரசுத் துணைத் தலைவர் தேர்தல்!

நாளை நடைபெறுகிறது குடியரசுத் துணைத் தலைவர் தேர்தல்!
நாளை நடைபெறுகிறது குடியரசுத் துணைத் தலைவர் தேர்தல்!

குடியரசுத் துணைத் தலைவர் தேர்தல் நாளை நடைபெறவிருப்பதால், மீண்டும் டெல்லி அரசியல் களம் விறுவிறுப்படைந்துள்ளது.

கடந்த மாதம் 17-ம் தேதி நடைபெற்ற குடியரசுத்தலைவர் தேர்தலில், பாரதிய ஜனதா கூட்டணிக் கட்சிகளின் சார்பில் வேட்பாளராக நிறுத்தப்பட்ட ராம்நாத் கோவிந்த் வெற்றிபெற்றார். கடந்த மாதம் 25-ம் தேதி, ராம்நாத் கோவிந்த் குடியரசுத்தலைவராகப் பதவியேற்றார். இந்நிலையில், தற்போதைய குடியரசுத் துணைத் தலைவர் ஹமீத் அன்சாரியின் பதவிக்காலம் வரும் ஆகஸ்ட் 10-ம் தேதியுடன் முடிவடைகிறது. இதையொட்டி, புதிய குடியரசுத் துணைத் தலைவரைத் தேர்ந்தெடுக்கும் வகையில் வேட்புமனுத்தாக்கல் உள்ளிட்ட அனைத்து நடைமுறைகளையும் இந்தியத் தேர்தல் ஆணையம் நடந்திமுடித்து, நாளை வாக்குப்பதிவையும் நடத்துகிறது.

பாரதிய ஜனதா கூட்டணிக் கட்சிகளின் சார்பில் வெங்கைய நாயுடுவும் காங்கிரஸ் கூட்டணி எதிர்க்கட்சிகளின் சார்பில், கோபாலகிருஷ்ண காந்தியும் வேட்பாளர்களாகக் களத்தில் உள்ளனர். நாடாளுமன்ற மாநிலங்களவையில் 58 எம்.பி-க்கள் பலத்துடன் காங்கிரஸ் கட்சி முதலிடத்திலும், பா.ஜ.க. 56 எம்.பி-க்களுடன் 2 வது இடத்திலும் உள்ளன. இருப்பினும் பாரதிய ஜனதா வேட்பாளருக்கு, அதன் பல கூட்டணிக் கட்சிகளின் ஆதரவால் பலம் கூடும் என்பதால், அவருக்கே அதிக ஓட்டுகள் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில், சமீபத்தில் நடந்து முடிந்த குடியரசுத் தலைவர் தேர்தலில் பதிவான வாக்குகளில், 77 வாக்குகள் செல்லாததாக அறிவிக்கப்பட்டன. குடியரசுத் தலைவர் தேர்தலைப்போல, அதிக வாக்கு சதவிகிதத்துடன் குடியரசுத் துணைத் தலைவர் தேர்தலில் வெற்றிபெறுவது கடினமானதாக இருக்கும் என்பதால், தங்கள் மற்றும் கூட்டணிக் கட்சிகளின் எம்.பி-க்கள் அளிக்கும் வாக்குகள் செல்லாததாக இருந்துவிடக் கூடாது என பா.ஜ.க நினைக்கிறது. தற்போதைய நிலவரப்படி, பா.ஜ.க கூட்டணி வேட்பாளரான வெங்கைய நாயுடுவுக்கு, மக்களவையில் 337 உறுப்பினர்கள் மற்றும் மாநிலங்களவையில் 80 உறுப்பினர்களின் ஆதரவு இருக்கிறது. இவர்கள் அனைவருக்கும், தங்கள் வேட்பாளர்கள் எப்படி வாக்களிக்க வேண்டும் என பா.ஜ.க மாதிரி வாக்குப்பதிவை இன்று நடத்த உள்ளது.