Published:Updated:

2 மணி நேரம் நிறுத்திவைப்பு!- வேலூர் வேட்புமனு தாக்கலில் நடந்தது என்ன?

லோகேஸ்வரன்.கோ
ச.வெங்கடேசன்

வேலூர் மக்களவைத் தொகுதியில் போட்டியிட்ட அ.தி.மு.க. கூட்டணி கட்சி வேட்பாளர் ஏ.சி.சண்முகம் மற்றும் துரைமுருகன் மகனின் வேட்புமனுக்கள் திடீரென நிறுத்திவைக்கப்பட்டன.

ஏ.சி.சண்முகம்-துரைமுருகன் மகன் கதிர் ஆனந்த்
ஏ.சி.சண்முகம்-துரைமுருகன் மகன் கதிர் ஆனந்த்

வேலூர் மக்களவைத் தொகுதி தேர்தலில் போட்டியிடுவதற்காக தாக்கல் செய்யப்பட்ட வேட்புமனுக்கள் மீதான பரிசீலனை கலெக்டர் அலுவலகத்தில் இன்று நடைபெற்றுவருகிறது. இதில், அ.தி.மு.க. கூட்டணி கட்சி வேட்பாளர் ஏ.சி.சண்முகம் கலந்துகொள்ளவில்லை. அவரது சார்பில் அ.தி.மு.க. பிரதிநிதிகள், வழக்கறிஞர்கள் பங்கேற்றிருந்தனர். 

துரைமுருகன் மகன் கதிர் ஆனந்த்
துரைமுருகன் மகன் கதிர் ஆனந்த்

தி.மு.க. பொருளாளர் துரைமுருகன் மற்றும் அவரது மகனும் வேட்பாளருமான கதிர் ஆனந்த் உட்பட அனைத்துக்கட்சி பிரதிநிதிகள் பலர் கலந்துகொண்டனர். கலெக்டர் சண்முகசுந்தரம் வேட்புமனுக்களைப் பரிசீலனை செய்தார். அ.தி.மு.க. கூட்டணி கட்சி வேட்பாளர் ஏ.சி.சண்முகத்தின் மனு மீதான பரிசீலனையின்போது தேசிய மக்கள் சக்தி கட்சி சார்பில் ஆட்சேபனை தெரிவிக்கப்பட்டது.

‘‘ஏ.சி.சண்முகம் அ.தி.மு.க-வை சேர்ந்தவரில்லை. புதிய நீதிக்கட்சியின் நிறுவனத் தலைவர். இரட்டை இலைச் சின்னத்தில் அவர் போட்டியிடக் கூடாது. அவரின் மனுவை நிராகரிக்கவேண்டும்’’ என்றனர். இதனால் ஏ.சி.சண்முகத்தின் வேட்புமனு தற்காலிகமாக நிறுத்திவைக்கப்பட்டது. அதைத்தொடர்ந்து, தி.மு.க. வேட்பாளர் கதிர் ஆனந்தின் வேட்புமனு மீதான பரிசீலனையிலும் தேசிய மக்கள் சக்தி கட்சி சார்பில் ஆட்சேபனை தெரிவிக்கப்பட்டது.

‘‘பிற்பகல் 11.30 மணியளவில் நிறுத்திவைக்கப்பட்ட ஏ.சி.சண்முகம் மற்றும் கதிர் ஆனந்தின் வேட்புமனுக்கள் மதியம் 1.30 மணியளவில் ஏற்கப்பட்டன.’’
கலெக்டர் தகவல்

‘‘நடந்துமுடிந்த பொதுத்தேர்தலின்போது பணப் பட்டுவாடா புகாரில் வருமானவரித் துறையினர் அவர்களிடமிருந்து மூட்டை மூட்டையாகப் பணத்தை கைப்பற்றினர். கதிர் ஆனந்த் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த நிலையில், அவர் மீண்டும் தேர்தலில் போட்டியிடுகிறார். அவரது மனுவையும் ஏற்கக்கூடாது’’ என்றனர். இதனால் கதிர் ஆனந்தின் மனுவும் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டது.

மதியம் 1 மணிக்குப் பிறகு ஏ.சி.சண்முகம் அ.தி.மு.க-வில் இணைந்ததற்கான உறுப்பினர் அட்டையைத் தேர்தல் அதிகாரியிடம் அ.தி.மு.க. பிரதிநிதிகள் ஒப்படைத்தனர். பிறகு, ஏ.சி.சண்முகத்தின் வேட்புமனு ஏற்றுக்கொள்ளப்பட்டது. அதேபோல், தி.மு.க. தரப்பில் வழக்கறிஞர் குழு உரிய ஆவணங்களைச் சமர்ப்பித்ததையடுத்து, கதிர் ஆனந்தின் மனுவும் ஏற்கப்பட்டது. 

ஏ.சி.சண்முகம்
ஏ.சி.சண்முகம்

இதுபற்றி கலெக்டர் சண்முகசுந்தரம் கூறுகையில், ‘‘சரியான காரணங்கள் இல்லாததால் ஏ.சி.சண்முகம் மற்றும் கதிர் ஆனந்தின் வேட்புமனுக்கள் இறுதியாக ஏற்றுக்கொள்ளப்பட்டன’’ என்றார். இரண்டு வேட்பாளர்களின் வேட்புமனுக்கள் நிறுத்திவைக்கப்பட்டு பின்னர் ஏற்கப்பட்டதால் கலெக்டர் அலுவலகமே பரபரப்புடன் காணப்பட்டது.