Published:Updated:

துல்லியமாக சொல்லி அடித்த ஜூ.வி!

அச்சுக்கு அனுப்பும் கடைசி நிமிடம் வரையிலான அப்டேட்களைவைத்து சில தொகுதிகளின் முடிவுகள் மாற்றப்பட்டன.

பிரீமியம் ஸ்டோரி

தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் அறுதிப் பெரும்பான்மை பெற்று முதல்வர் அரியணையில் அமர்ந்துவிட்டார் ஸ்டாலின். 2021 சட்டமன்றத் தேர்தலையொட்டி ஜூ.வி நடத்திய மெகா கருத்துக்கணிப்பில் கணிக்கப்பட்டதைப்போலவே அமைந்திருக்கிறது தி.மு.க கூட்டணியின் வெற்றி.

துல்லியமாக சொல்லி அடித்த ஜூ.வி!

கருத்துக்கணிப்பு பணிகளுக்காக 117 நிருபர்களும், அவர்களுடன் தொகுதிக்கு இரண்டு பேர் என 468 தன்னார்வலர்களும் களமிறக்கப்பட்டனர். பல்வேறு சவால்களுக்கிடையே கருத்துக்கணிப்பு நடத்தி முடிக்கப்பட்டது. இந்திய அளவில் நடத்தப்படும் தேர்தல் கருத்துக்கணிப்புகளிலேயே 15,000 முதல் 30,000 பேர் வரை மட்டுமே பங்குபெறுவதாகத் தரவுகள் சொல்கின்றன. ஆனால், தமிழ்நாடு அளவில் ஜூ.வி எடுத்த கருத்துக்கணிப்பில் 50,000 வாக்காளர்கள் பங்குகொண்டனர். கருத்துக்கணிப்பு முடிவுகளை மட்டும் கணக்கில் கொள்ளாமல், கடந்த தேர்தலில் தொகுதிவாரியாகக் கட்சிகள் பெற்ற வாக்குகளின் தரவுகளையும், கள நிலவரத்தையும் கொண்டு முடிவுகள் எடுக்கப்பட்டன. அதுமட்டுமல்லாமல் அச்சுக்கு அனுப்பும் கடைசி நிமிடம் வரையிலான அப்டேட்களைவைத்து சில தொகுதிகளின் முடிவுகள் மாற்றப்பட்டன.

ஜூ.வி கருத்துக்கணிப்பில் 163 இடங்களில் தி.மு.க கூட்டணி வெற்றிபெறும் என்று சொல்லியிருந்தோம். தேர்தல் முடிவுகளின்படி 159 இடங்களில் வெற்றிவாகை சூடியிருக்கிறது தி.மு.க கூட்டணி. இதில் தி.மு.க வேட்பாளர்கள் மட்டும் 125 இடங்களைக் கைப்பற்றுவார்கள் என ஜூ.வி கருத்துக்கணிப்பில் சொல்லியிருந்தோம். அதேபோல மிகச் சரியாக 125 இடங்களில் தி.மு.க வேட்பாளர்கள் வெற்றிபெற்றிருந்தனர்.

துல்லியமாக சொல்லி அடித்த ஜூ.வி!

அ.தி.மு.க கூட்டணி 52 இடங்களைக் கைப்பற்றும் என்றும், கடும் போட்டி நிலவும் 18 தொகுதிகளில் இழுபறி நிலவுகிறது என்றும் கணித்திருந்தோம். இழுபறி என்று நாம் கணித்த பெரும்பாலான தொகுதிகளில் அ.தி.மு.க வேட்பாளர்கள் வெற்றிபெற்றிருக்கின்றனர்.

கோவை தெற்குத் தொகுதியில் மக்கள் நீதி மய்யத் தலைவர் கமல்ஹாசன் வெற்றிபெறுவார் என கணித்திருந்தோம். 1,728 வாக்குகள் வித்தியாசத்தில்தான் வெற்றி வாய்ப்பைத் தவறவிட்டிருக்கிறார் அவர். அ.தி.மு.க அமைச்சர்களில் 17 பேர் வெற்றிபெறுவார்கள் எனக் கணித்திருந்தோம் அதில் 11 பேர் வெற்றிபெற்றிருந்தனர். அதேபோல ஏழு அமைச்சர்கள் தோல்வி யடைவார்கள் என கணித்திருந்தோம், அவர்களில் நான்கு அமைச்சர்கள் தோல்வியைத் தழுவினர். கருத்துக்கணிப்பில், இழுபறி நிலையில் வைக்கப்பட்டிருந்த மூன்று அ.தி.மு.க அமைச்சர் களில் இரண்டு பேர் வெற்றிபெற்றிருக்கின்றனர்.

தி.மு.க கூட்டணிக் கட்சியான காங்கிரஸ், போட்டியிட்ட 25 தொகுதிகளில் 19 தொகுதிகளைக் கைப்பற்றுமென ஜூ.வி கருத்துக்கணிப்பில் சொல்லியிருந்தோம். நம் கணிப்பிலிருந்து ஒரு தொகுதி குறையப் பெற்று, 18 தொகுதிகளைக் கைப்பற்றியிருக்கிறது காங்கிரஸ். அதேபோல் ம.தி.மு.க 5 இடங்களில் வெற்றிபெறும் எனக் கணித்திருந்தோம். அதில் 4 இடங்களில் வெற்றியடைந்திருக்கிறது அந்தக் கட்சி. கே.வி.குப்பம் தொகுதியில் போட்டியிட்ட அ.தி.மு.க-வின் கூட்டணிக் கட்சியான புரட்சி பாரதம் நிச்சயம் வெற்றிபெறும் என கணித்திருந்தோம். அதேபோல கே.வி.குப்பத்தில் தி.மு.க-வைப் பின்னுக்குத் தள்ளி வெற்றிபெற்றிருக்கிறது புரட்சி பாரதம்.

துல்லியமாக சொல்லி அடித்த ஜூ.வி!

தன்னார்வலர்களை ஒருங்கிணைப்பது, கள நிலவரத்தை ஆராய்வது என நிருபர்களும், புகைப்படக்காரர்களும் இந்தக் கருத்துக்கணிப்பு பணிக்குக் கொடுத்த உழைப்பு அபரிமிதமானது. அந்த உழைப்பின் பலனாகத்தான் ஜூ.வி கருத்துக்கணிப்பு முடிவுகள், தேர்தல் முடிவுகளோடு பெருமளவு ஒத்துப்போயிருக்கின்றன. இந்தத் தேர்தலில் மக்களின் நாடித்துடிப்பை 83.4 சதவிகித அளவுக்குச் சரியாகக் கணித்திருக்கிறது ஜூ.வி.

துல்லியமாகக் கணிக்கப்படும் கருத்துக் கணிப்புகளின் உலக சராசரியே 75 சதவிகிதம்தான். கருத்துக்கணிப்பில் கிடைத்த வெற்றி ஜூ.வி குழுவின் வெற்றி மட்டுமல்ல, வாசகர்களின் வெற்றியும்கூட. வாசகர்கள் தரும் உத்வேகத்தாலும், உந்துதலாலும்தான் இந்த வெற்றி சாத்தியமானது!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு